தந்தை பெரியார் அவர்களின் 147- வது பிறந்த நாள் 17-09-2025.
அனைவருக்கும் “மக்கள் அதிகாரம்” சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதி தீண்டாமை ஒழிப்புக்காகவும், சனாதன பார்ப்பனீய ‘வர்ணாஸ்ரதர்ம’ இழிந்த ‘கோட்பாடு’களுக்கு எதிராகவும், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, இரு மொழிக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்தியை எதிர்த்து களமாடியது, தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட- பழங்குடியின மக்களின் உயர்வுக்காக பாடுபட்டது…என எண்ணற்ற கடும் பிரச்சனைகளுக்காக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை – போராட்டங்களை- தியாகங்களை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இன்று சென்னை எழும்பூரில் ‘பெரியார் திடல்: அமைந்துள்ள திராவிடர் கழகத்திற்கு சொந்தமான இடமும், அதற்கு அருகில் உள்ள ‘தினத்தந்தி’ அலுவலகம் அமைந்துள்ள இடமும், ஒரு காலத்தில் ரயில்வே துறையின் அக்காலத்தைய ட்ராம்ஸ் வகை ரயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடமாக இருந்தவையாகும். பிற்காலத்தில் ரயில்வே துறை மேம்பட்டவுடன் அதனை விற்பதற்கு நிர்வாகம் முடிவு எடுத்தது.
அதனைத் தந்தை பெரியார் அவர்கள் ஒரு வழியாக மொத்தத்தையும் அமைப்பின்
நலன் பொருட்டு விலைக்கு வாங்கினார். அதன் பின் ஆதித்தனார் குழுமம் பெரியாரை அணுகி, ‘ தமிழர் நலனுக்காக தமது குழுமத்தின் சார்பாக ஒரு தமிழ் பத்திரிக்கை நடத்தப் போவதாகவும், எனவே இந்த இடம் முழுவதும் தாங்கள் எங்களுக்கு விலைக்குத் தர வேண்டும் ‘ – எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘பரவாயில்லை; தம்மைத் தவிர, தமிழர் நலனுக்கான ஒரு பத்திரிக்கையும் தற்போது இல்லாமல் உள்ளது; தமிழர்களுக்காக ஒருவர் பத்திரிக்கை நடத்த முன் வருகிறார்; ஒரு தமிழன் பிழைத்துப் போவதற்கு வழிவகை செய்து கொடுத்ததாக
வும் அமையும் ‘ – என்ற நோக்கில் முழு இடத்தையும் ஆதித்தனார் குழுமத்திற்கு அடிமாட்டு விலைக்கு வழங்கிட தந்தை பெரியார் முன் வந்தார்.
அத்தருணத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள், தந்தை பெரியாரிடம், ‘தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னையில் நமக்கு ஒரு இடம் வேண்டாமா? முழுவதையும் விற்றால் எப்படின்சரியாக இருக்க முடியும்?’ – என்று வாதிட, அதன் பின்பு இன்றைய சென்னை எழும்பூரில் பெரியார் திடலாக இருக்கக்கூடிய
பகுதி இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சிய மிக முக்கிய இடத்தைத் தாராள மனதோடு அடிமாட்டு விலைக்கு (பெயருக்கு குறைந்தபட்ச தொகையை பெற்றுக்கொண்டு) ஆதித்தனார் குழுமத்திற்கு பத்திரிக்கை நடத்த தந்தை பெரியார் ஒப்படைப்பு செய்தார்.
அதிலும் குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட பகுதிகளில் சனாதன பார்ப்பனக் கொடுமை என்பது நாடார் சமுதாயத்தின் மீது கடுமையாக ஏவப்பட்டிருந்த சூழலில், அப்படிப்பட்ட நாடார் சமூகத்தினர் முன்னுக்கு வர வேண்டும் என்ற கண்ணோட்டத்தையும் இது விடயத்தில் பெரியார் கொண்டிருந்தார் என்பதையும் நாம் கணக்கிற் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ‘தினத்தந்தி’ பத்திரிக்கையும், தந்தி டிவியும் தான் இன்று முழு சங்கி மயமாகி தமிழர் விரோத செய்திகளை பரப்புவதில் தினமலர் பத்திரிக்கைக்கு சற்றும் குறையாமல் முன்னணி பாத்திரம் வகிக்கிறது.
மேலும் படிக்க:
பெரியார் பிறந்த நாளான இன்று (17-09-2025) எதிர்பாரா விதமாக ‘தினத்தந்தி’ இதழைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
என் கண் பார்வையை வைத்துக் கொண்டு, ஒரு பக்கம் விடாமல் அனைத்து பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டேன். இன்றைய பெரியார் அவர்களின் 147- வது பிறந்த நாளை யொட்டி, ஒரு வரிச் செய்தியைக் கூட வெளியிட முன்வராமல் இருந்திருக்கிறது இந்த துரோகப் பத்திரிக்கைத் தினத்தந்தி.
‘பிழைப்பு வாதமே’ முழு முதற் கொள்கை என வரித்துக் கொண்ட பிறகு, லாபம் ஈட்டுவதற்கு யாருடைய ஆதரவு தேவை; எப்படிப்பட்ட கொள்கைகளை சார்ந்து நிற்க வேண்டும் என்பன போன்றவற்றில் ‘தினத்தந்தி’ இழிவான தன்மையில் – பார்வையில் உயர்ந்து நிற்கிறது!
ஆனால் இதழில் குப்பைச் செய்திகள் மட்டும் வழக்கம் போல நிரம்பி வழிகின்றன.
துரோகத்தின் விலை நிலமாம்…
நன்றி மறந்த ‘தினத்தந்தி’யே, இது…
கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு!
– எழில்மாறன்,
மக்கள் அதிகாரம்.
17-09-2025.