2026 புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சமூக ஊடகங்கள் தொடங்கி இந்து கோவில்கள், கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் முதல் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக துவங்கி நடந்து வருகிறது.
உலகம் அமைதியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. அதில் உள்ள இந்தியாவும் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அவ்வப்போது சில வன்முறைகள், கலவரங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக மோடி கும்பலின் ஆட்சியின் கீழ் இந்தியா அமைதியாக தான் இருந்து கொண்டிருக்கிறது என்று செய்திகளை பரப்புகின்ற ஊடகங்களும், நடுத்தர வர்க்க அறிவாளிகளும் பொய் தோற்றத்தை பரப்பிக் கொண்டுள்ளனர்.
அன்றாடம் இரவுகளில் ‘பாதுகாப்பான உறைவிடங்களுக்கு’ சென்று தங்கும் ஒவ்வொரு தினமும் சமகால இந்தியாவில் சிறைக் கொடுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற உண்மையான ஜனநாயக இந்தியாவிற்காக போராடி சிறை கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலைமை வதைக்கிறது. அத்தகைய போராளிகளை நினைக்கும் பொழுதும் அல்லது போராளிகளின் வாழ்க்கையை பற்றி சிந்திக்கின்ற தருணங்களில் இரவுகள் உறக்கமற்று, உறைந்து போவதாய் இருக்கிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பார்ப்பன இந்திய தேசியத்தின் அடக்குமுறைகளின் கீழ் பல்வேறு மாநிலங்களில் போராடுகின்ற பல்வேறு அரசியல் போராளிகள் சிறை கைதிகளாக வாடிக் கொண்டுள்ளனர் என்ற போதிலும் அவ்வப்போது விவாதிக்கப்படுகின்ற முக்கியமான நபர்களில் ஒருவர்தான் ஜே என் யூ முன்னாள் மாணவர் டாக்டர் உமர் காலித்.
ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் 2015- 16 ஆண்டுகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே இடதுசாரி சிந்தனையுடன் இந்தியாவில் நடக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு சிக்கல்களுக்கு எதிராக போராடுகின்ற மிகச்சிறந்த போராளிகளாக உருவெடுத்த கன்னையா குமார், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா உள்ளிட்ட பத்து மாணவர்கள் அப்போதே குறிவைக்கப்பட்டு விட்டனர்.
பாசிச பாஜகவிற்கு எதிராக துணிச்சலாக கருத்து ரீதியாக பேசி வந்த, எழுதி வந்த பலரையும் பாசிச குண்டர் படையின் மூலமாக சுட்டுப் பொசுக்கியதை போலவே உமர் காலித்தையும் ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு தோல்வி அடைந்தனர்.
“கூட்டத்தில் பேச வந்திருந்த உமர், கடையில் தேநீர் குடித்து விட்டு நகர்ந்திருக்கறார். அவரை பிடறியில் கைவைத்து கீழே தள்ளி, கைத்துப்பாக்கியால் வயிற்றில் சுட முனைந்திருக்கிறான் கொலையாளி. அவன் கையைப் பிடித்து தள்ளியிருக்கிறார் உமர். உமருடன் வந்திருந்த பனோஜ்யோத்ஸ்னா லாகிரி என்ற இளைஞரும் ஷாரிக் உசேன் என்பவரும் கொலையாளியைப் பிடித்து தள்ளியிருக்கின்றனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் ஒரு தோட்டா வெடித்திருக்கிறது. அவன் துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.
“நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று கூறுகிறார் உமர் காலித்.
2016 பிப்ரவரியில் கண்ணையாகுமார், அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித் ஆகியோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளும் தாக்குதல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின்னரே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும், அதன் முற்போக்கான மாணவர் சமூகத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் குறிவைக்கத் தொடங்கி விட்டனர்.” என்று உமர் காலித் மீதான துப்பாக்கி தாக்குதல் பற்றி எமது இணையதளத்தில் எழுதியிருந்தோம்.
அதன் பிறகு போலி ஜனநாயகம் மற்றும் அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியான பாசிச பயங்கரவாதம் இரண்டுக்கும் எதிரான உண்மையான ஜனநாயகத்தை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்த உமர் காலித் 2020 இல் நடைபெற்ற டெல்லி கலவரங்களை ஒட்டி அரசு பயங்கரவாத, ஆள்தூக்கி சட்டமான UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றளவும் விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களின் போது வெடித்த கலவரத்தில், 53 பேர் கொல்லப்பட்டனர். இதில் உமர் காலித் முக்கிய சதிகாரர் என்று டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
படிக்க:
♦ சமூக செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு பிணை மனு நிகாரிப்பு!
♦ JNU மாணவர் உமர் காலித்தை விடுதலை செய்!
மேற்கண்ட வழக்குகளில் தீவைப்பு மற்றும் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும் வேறொரு வழக்கில் அவரை குற்றவாளியாக குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து வதைத்து வருகிறது பாசிச மோடி அரசு.
சமீபத்தில் அவரது தங்கையின் திருமணத்திற்காக 14 நாட்கள் பரோலில் வெளியில் வந்துவிட்டு மீண்டும் சில தினங்களுக்கு முன்பாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் உமர் காலித் உட்பட அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் வாழ்க்கை அன்றாடம் நரக வேதனையுடன் நடந்து கொண்டிருக்கும் சூழலில் 2026 பிறக்கிறது.
ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும்போது நாள்களில் ஒன்று கழிகிறது என்ற உண்மையைத் தாண்டி இந்த புத்தாண்டிலாவது ஏதாவது மாற்றம் நிகழ்ந்து விடாதா என்று ஏங்கித் தவிக்கின்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையில் இருந்து பார்க்கும்போது இந்தியாவை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்ற பாசிச பயங்கரவாத ஆட்சியை தூக்கி எறிந்து உண்மையான ஜனநாயகத்தை அதாவது ஒரு ஜனநாயக கூட்டரசு ஒன்றை உருவாக்கக்கூடிய வேலையை தீவிர படுத்த வேண்டியது தான் தற்போது தேவையாக உள்ளது.
பிறப்பால் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக தேசத்துரோக பட்டம் சுமத்தப்பட்டு எந்த விசாரணையும் இன்றி கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டுள்ள உமர் காலித் உள்ளிட்ட அரசியல் கைதிகளில் விடுதலைக்காக நாடு தழுவிய எழுச்சியை உருவாக்க வேண்டும்.
இல்லையென்றால் பிரிட்டன் காலணி ஆதிக்கத்தின்போது விடுதலைக்காக போராடிய பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் உயிரைப் பறிப்பதற்கு காலனியாதிக்க அரசு செய்த சதி திட்டங்களைப் போல தற்போதும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பயங்கரவாத அரசாங்கம் இறங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
வடமாநிலங்களில் சனாதன் சன்ஸ்தா என்ற பெயரில் இயங்குகின்ற இந்த குண்டர் படை தமிழகத்திலோ நாம் தமிழர் என்ற பெயரிலும், தமிழினப் பிழைப்புவாதிகள் சிலரது பெயரிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவற்றையெல்லாம் அவ்வப்போது கூர்மையான முழக்கங்களின் கீழ் அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்ற மகத்தான பொறுப்பு மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கும், புதிய ஜனநாயகம் இதழுக்கும் உண்டு.
இத்தகைய கடமைகளின் ஊடாக துப்பாக்கி தோட்டா அல்லது சிறைச்சாலை கதவு ஆகிய இரண்டில் ஒன்றை எதிர்நோக்கி புரட்சிகர, ஜனநாயக சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் புத்தாண்டின் துவக்கமாக உள்ளது.
- முகம்மது அலி.
புதிய ஜனநாயகம் தினசரி






