“இந்தியாவை எனது தேசம் என்று நான் ஒருபோதும் அழைக்க மாட்டேன் ஏனென்றால் இந்தியாவில் நாய், பூனைகளுக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதை கூட பட்டியலின மக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதால் இந்தியாவை எனது தேசம் என்று கூறுவதற்கு எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை” என்று சாதிப் பெருமிதத்தால் தடித்துப் போன தோலை சவுக்கால் உரித்தார் டாக்டர் அம்பேத்கர்.

அவர் இதனை முன்வைத்து ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது என்ற போதிலும் இன்று வரை சக மனிதனை மனிதனாக மதிக்கின்ற மனப்பக்குவமும் சமத்துவமாக நடத்துகின்ற மனப்பக்குவமும் இந்திய தேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வரவில்லை.

குறிப்பாக பட்டியலின மக்கள் மீதான அக்கறையோ சமத்துவ உணர்வோ வளரவில்லை.ஆனால் நாய் மற்றும் பூனைகளின் மீது அவர்களின் அக்கறை வண்டி வண்டியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் நாய்கடி பிரச்சனை அதிகரித்து வருகின்றன. அதேபோல், நாய் கடியால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே, சாலைகளிலும் தெருக்களிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே கவலையையும், அச்சத்தையும் எழுப்பியுள்ளது. நாய்க் கடித்தால், சரியான நேரத்தில் ஊசி போடப்படாவிட்டால், ரேபிஸ் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2024 ஆம் ஆண்டில் 37 லட்சத்திற்கும் அதிகமான நாய்க் கடி வழக்குகளும், 54 சந்தேகத்திற்கிடமான மனித ரேபிஸ் இறப்புகளும் பதிவாகியுள்ளதாக இந்திய ஒன்றிய அரசாங்கம் ஜூலை 22, 2025 அன்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் பேர் ராபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இறந்து போனவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று கேட்பாரற்று அலைந்து திரிகின்ற தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

“டெல்லி மற்றும் அதை ஒட்டிய நான்கு மாவட்டங்களில் உள்ள குடிமை அதிகாரிகள் அனைத்து தெருநாய்களையும் பிடித்து ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் தங்குமிடங்களில் அடைத்து வைக்க வேண்டும்” என்று தானாக முன்வந்து உத்தரவிட்டது.

உடனே நாய் மீதான ஆர்வம் கொண்டவர்கள், அக்கறை கொண்டவர்கள், சுருக்கமாக சொன்னால் நாய் பிரியர்கள் கொதித்து எழுந்தனர். நாய்களைக் காப்பகங்களில் அடைப்பது தவறானது என்று பல மொழிகளில் ‘ ஊளையிட’ துவங்கினர்.

படிக்க: பங்களா நாய்க்கு உரிய விலை உண்டு! விளைபொருளுக்குத் தான் உரிய விலை இல்லை! – தோழர்.ஜெயராமன் || புஜதொமு

நாய் வளர்ப்பு என்பது மேட்டுக்குடிகளின் பொழுதுபோக்கு என்ற விமர்சனத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே வேட்டையாடும் சமூகத்தில் இருந்து விவசாயிகள் வாழ்க்கை வரை நாய்களை பயன்படுத்தியே வந்துள்ளனர் என்று வரலாற்றுக்கு திரும்பி பொதுமக்களுக்கு பாடம் எடுக்க துவங்கி விட்டனர்.

நாட்டிற்காக விவசாய பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்து அதற்கு விலை நிர்ணயிக்கின்ற அதிகாரம் வேண்டும் விவசாயத்தை நாசமாக்குகின்ற மூன்று வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஓராண்டுக்கு மேல் போராடிய போது மனமிரங்காத, நீதிபதிகளின் அப்பழுக்கற்ற மனம் நாய் பிரியர்களின் போராட்டத்திற்கு உடனே செவி சாய்த்தது.

நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அழைக்க வேண்டும் என்று தானே போட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22, 2025) மாற்றியது . ஆகஸ்ட் 11, 2025 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை “மிகவும் கடுமையானது” என்று கூறி, கருத்தடை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட பிறகு, விலங்குகளை அவை பிடிக்கப்பட்ட இடங்களுக்குள் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவை ஆதரித்து நாய் பிரியர்கள் முதல் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

படிக்க: எது அழகு என்று புரியாமல்  பலியாகும் நடுத்தர வர்க்க- மேட்டுக்குடி பெண்கள்!

நாடு முழுவதும் நாய்கடிகளுக்கு பெரும்பான்மை மக்கள் அதாவது உழைக்கும் மக்கள், குறிப்பாக வீட்டிலிருந்து தான் செல்கின்ற வேலைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள்; பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்ல வேண்டிய மாணவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக சாலையில் நடந்து செல்லக் கூடியவர்கள் ஆகியோர் தான் முதல் குறியாக உள்ளனர்.

விதிவிலக்காக வெறி நாய்கள் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது, பாய்ந்து குதறுவது போன்றவையும் நடந்துக் கொண்டுள்ளது.

வீட்டிலிருந்து காரிலேயே பயணித்து, குளிர் சாதன அறைகளில் பணியாற்றி விட்டு, மீண்டும் காரிலேயே வீட்டுக்கு திரும்புகின்ற மேட்டுக்குடிகள், ‘ பெட் அனிமல்’ என்ற பெயரில் நாய்களை வளர்ப்பது ஒரு பொழுதுபோக்காக உள்ளது. சிலர் நாய்களின் மீது பாசத்துடன் உள்ளனர் என்பதும், சமீபத்தில் நாய்க்கு சீர்வரிசையுடன் ஒருவர் திருமணம் செய்து வைத்தார் என்பதும் விதிவிலக்கான நிகழ்வுகள் தான்.

வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக கட்டி வைத்து, ‘ பெட் அனிமல்களாக’ வளர்க்கின்ற நாய்களானாலும் சரி அல்லது யாராலும் வளர்க்கப்படாமல் போகின்ற இடங்களில் எல்லாம் சோத்தை தின்றுவிட்டு தெருக்களில் திரிகின்ற நாயாக இருந்தாலும் சரி, சிறுநீர் உள்ளிட்ட அதன் கழிவுகள் பொதுமக்கள் நடமாடுகின்ற சாலைகள் மற்றும் தெருக்களில் தான் இறக்கப்படுகிறது.

“நாங்கள் நாயை செல்லப் பிராணியாக வளர்ப்பது மட்டுமில்லை. அவை எங்கள் குடும்பத்தில் ஒருவன்” என்று முட்டுக் கொடுக்கின்ற மேட்டுக்குடிகள், தங்கள் குழந்தைகளை பாத்ரூமுக்கு அழைத்து சென்று காலைக்கடன் முடிப்பது போல் நாய்களை தனியே பாத்ரூமில் வைத்தா பழக்குகிறார்கள். இல்லையே? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரு சங்கிலியில் கட்டிக்கொண்டு வாக்கிங் என்ற பெயரில் பொது இடத்தை அசுத்தம் செய்கின்ற, ‘ கைங்கரியத்தில்’ ஈடுபடுகிறார்கள்.

இந்த லட்சணத்தில் நாய்களின் மீது அவர்களுக்குத்தான் பாசம் அதிகம் என்பதைப் போல காட்டுவதற்கு நாயை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக ஆத்திரமடைகிறார்கள்.

ராபிஸ் உள்ளிட்ட கொடூரமான நோய்களால் தாக்கப்படுகின்ற மக்களுக்கு உரிய மருந்துகளை தயாரிக்கின்ற அதாவது நாய்க்கடி மருந்து தயாரிக்கின்ற கார்ப்பரேட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை சுருட்டி உள்ளது. இந்த இலக்கு 2032 வாக்கில் அதிகரிக்க கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனோஃபி, கிளாக்சோஸ்மித்க்லைன் மற்றும் மெர்க் & கோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இந்த நிறுவனங்களே நாய்க்கடிக்கு மருந்து தயாரித்து பல கோடிகளை சுருட்டுகிறது.

நாய் விலங்கினங்களில் ஒன்றுதானே அதனை முறையாக வளர்த்தால் என்ன தவறு என்று சப்பு கொட்டுகிறவர்களுக்கு நாம் சொல்கின்ற செய்தி இது தான்.

பாசிச பாஜகவின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் சாதி தீண்டாமை கொடுமைகளும், பட்டியலின மக்களின் மீதான தாக்குதல்களும் மிக அதிகமாக அதிகரித்துள்ள நிலையில் சக மனிதர்களை நேசிக்கின்ற மனப்பக்குவத்தையும், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக போராடுகின்ற சமத்துவ உணர்வையும் முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு ஆறறிவுக்கு கீழான விலங்குகள் மீதான அக்கறையையும், அதன் மீது பிரியத்தையும் காட்டலாம்.

  • செட்டில்டு சண்முகம்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here