நேற்று (29.12.2025) நான்கு இளைஞர்கள் ஒடிசாவை சேர்ந்த இளைஞரை ஆயுதம் கொண்டு கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த சுராஜ் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறிய நான்கு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஆயுதங்களை கழுத்தில் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனை எதிர்த்த அந்த புலம்பெயர் தொழிலாளியை ரயிலில் இருந்து இறக்கி, திருத்தணி ரயில் நிலையம் நிலையம் அருகே வைத்து கொடூரமான ஆயுதங்களால் மனிதாபிமானமின்றி தாக்கியுள்ளார்கள். அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

பயணிகளின் புகாரின் பேரில் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார், 17 வயதானவர்கள் என்பதால் சிறுவர் சீர்த்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளனர். ஒருவரை மட்டும் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் காணொளி வழியாக பார்த்தவர்களுக்கு இந்த சமூகத்தின் மீதான பயத்தையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளது. சிறுவர்களாக இருந்தாலும் இவ்வளவு மோசமான மிருகத்தனமான செயலை செய்யத் தூண்டியுள்ளது கஞ்சா போதையும், சமூக வலைதள நுகர்வு போதையும்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் போதை பல குடும்பங்களை சீரழித்து அவர்கள் வாழ்வாதாரத்தை நாசம் செய்து வருகிறது. இதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்தாலும் தமிழக அரசு பணியவில்லை. அதே நேரத்தில் சாராயம் இல்லாமல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழ்நாட்டில் புழங்கி வருவதை பார்க்க முடிகிறது.

நகர் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்கள் வரை சகஜமாக புழங்குகிறது கஞ்சா போதை பொருள். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தில் இல்லை என்கிறார். இந்த இளைஞர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்று அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

திருத்தணி சம்பவத்தை கண்டித்த பலரும் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் எனவும் ரிலீஸ் மோகம் தான் காரணம் எனவும், பெற்றோர்களும் சுற்றத்தாரும் தான் காரணம் எனவும் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது. இவை மட்டும் தான் காரணமா?

முதலில் கஞ்சா போதை இளைஞர்களை கொடூரமானவனாக மாற்றுவதற்கு காரணம் என்ன என்று பார்ப்போம். சாராய போதை போல் அல்லாமல் கஞ்சா மூளையின் கட்டுப்பாட்டு பகுதியை பாதிக்கிறது. கஞ்சாவில் உள்ள THC என்ற ரசாயனம், மூளையின் Decision making self control பகுதிகளை தற்காலிகமாக பாதிக்கும். மேலும் சிலருக்கு கஞ்சா எடுத்தவுடன் “யாரோ தாக்கப் போகிறார்கள்”, “என்னை யாராவது மிரட்டுகிறார்” என்ற தவறான எண்ணங்கள் தோன்றுவதனாலும் கொடூரமாக தாக்குகிறார்கள். இப்போது கிடைக்கும் கஞ்சாவில் மிக அதிக THC இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்சொன்னவற்றிலிருந்து கஞ்சா போதை குற்றம் செய்ய தூண்டுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பல கூலிப்படைகள் இளைஞர்களுக்கு கஞ்சா போதை கொடுத்து குற்றச்செயல்கள்களில் ஈடுபட வைக்கின்றன. இதில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து திசை மாறி அழிந்து போகும் சூழலும் ஏற்படுகிறது. இவை அனைத்தும் கஞ்சா ஏற்படுத்தும் போதையினாலும் இதை பயன்படுத்திக் காசு பார்க்கும் கூலிப்படைகளாலும் நிகழ்பவை.

இதைவிட முக்கியமான பிரச்சனை ஒன்று உள்ளது. இளைஞர்களை இது போன்ற மோசமான பழக்கவழக்கங்களை நோக்கி தள்ளியது எது? இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகளும், அதனால் ஏற்பட்ட வேலையின்மை, வறுமை, அதிகரித்து வரும் சமூக ஏற்றத்தாழ்வு இவை அனைத்துமே இன்றைய இளம் சமுதாயத்தை தவறான திசைவழியை நோக்கி தள்ளியுள்ளது.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களும் பள்ளி படிப்பை தொடராதவர்கள். அதற்கான காரணம் என்ன என்ற பின்புலத்தை ஆராய்வது மிகவும் அவசியமானது.

15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் வேலையின்மையால் தவித்து வருகின்றனர். முதலாளித்துவம் உருவாக்கிய நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கியவர்கள் அதற்கான செலவுகளுக்காக குறைந்தபட்ச வருமானத்தை பெற முடியாமல் வேறு வழி எதுவுமின்றி தவறான திசைகளில் வழிநடத்தப்படுகிறார்கள். ஒரு இந்திய அளவிலான ஆய்வு பதினெட்டு வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சுமார் 9.5 சதவீதம் பேர் கஞ்சா உட்பட பல்வேறு போதை பழக்கங்களில் சிக்கியுள்ளதாக கூறுகிறது.

படிக்க:

 படித்த இளைஞர்களை பயங்கரவாத வழிக்குள் நெட்டித் தள்ளும் காவி பயங்கரவாதம்! 

 காட்சி போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறை!

இந்தியாவில் நிலவும் மோசமான வேலையின்மை, ஏற்றத்தாழ்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இளைஞர்கள் களமாட விடாமல் தடுப்பதில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கள்ளத்தனமாக அனுமதித்து இளைஞர்களின் போராட்ட பண்பை காயடிக்கின்றன அரசும், ஆளும் வர்க்கமும்.

தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போன்றவை எந்த தடையும் இல்லாமல் கிடைக்கிறது. இவையெல்லாம் காவல்துறைக்கும் அரசுக்கும் தெரியாமல் இல்லை. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் காலை நேரங்களில் சரக்கு விற்பனை ஜோராக நடைபெறுகிறது. போதைப் பொருட்கள் பல்வேறு பகுதிகளில் விற்பனையாவதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் நேரங்களில் சோதனை நேரத்தில் கஞ்சா இத்தனை கிலோ கிடைத்ததாக அறிக்கை வெளியிடுவார்கள்.

மற்றொரு புறம் சினிமாக்கள் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை சர்வசாதாரணமாக படமாக்குகின்றன. ஹீரோ 100 நபர்களை தனியாளாக வெட்டி வீழ்த்தி பந்தாடுகிறார்கள். இது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு வெறியூட்டுகின்றன. சமூகத்திற்கு கேடான இப்படங்கள் எவ்வித தடையும் இல்லாமல் அனைவரின் பார்வைக்கும் Smart Phone மூலம் செல்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவர்கிறது. அதனாலேயே குப்பை படங்களில் நடிக்கும் மாஸ் ஹீரோக்களை எவ்வித காரணமும் இன்றி தூக்கிப்பிடிக்கிறார்கள்.

வேலையின்மை, வறுமை அதனால் சமூகத்தில் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஒரு பக்கம், ரசிக போதை, மனிதனின் மூளையை மழுங்கடிக்க கூடிய கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் மூலம் இளைஞர் சமுதாயம் சீரழிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் போதைப் பொருட்களின் அளவு கூடி இருக்கிறதே ஒழிய குறையவில்லை. ஆகையால் ஆளும் வர்க்கமோ அல்லது அதிகாரம் வர்க்கமோ இவற்றை தானாக முன்வந்து கட்டுப்படுத்துவார்கள் என்று கனவு காண தேவையில்லை.

உடனடியாக கஞ்சா டாஸ்மாக் உள்ளிட்ட போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் திரைப்படங்களில் வரும் வன்முறை கலாச்சாரத்திற்கு எதிராகவும் பெரும் இயக்கங்களை கட்டி அமைக்க வேண்டி உள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்காமல் பள்ளியிலிருந்து வெளியேறுபவர்கள் குறித்த பட்டியலை அரசு தயாரித்து அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றைத் தீர்க்க ஒரு திட்டமிட்ட முயற்சி எடுக்க வேண்டும். கல்லூரிக்கு வந்த பிறகும் அவர்களை பொதுவான படிப்போடு மட்டுமல்லாமல் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க செய்ய வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக உழைக்கும் மக்களை அவர்களது பிள்ளைகளை எந்தவித அடையாளமுமற்ற, நிரந்தரமற்ற சூழலுக்குத் தள்ளும் இந்த சமூக அமைப்பில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டி உள்ளது.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here