பல்வேறு கட்சிகளில், பல்வேறு தருணங்களில், பல்வேறு கருத்துக்களை உளறிக் கொட்டி மாதத்திற்கு ஒரு கட்சி மாறி பச்சோந்தியாய் உருமாறிப் போனவர்தான் நாட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பழ.கருப்பையா எனும் பிராணி. ஏறத்தாழ சீமான் எனும் பிராணி வகையைச் சேர்ந்தவரே இவரும்.

இந்தப் பழ. கருப்பையா, 2025 டிசம்பர் 24-ஆம் நாள் பார்ப்பன நாளேடான ‘தினமணி’யில் நடுப்பக்க ‘கட்டுரை’ ஒன்றை எழுதி இருக்கிறார். ‘தினமணி’, சனாதனப் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் நாளேடு என்பதால் இவரது கட்டுரையை முக்கியத்துவப் படுத்தி வெளியிட்டுள்ளது. இப்படிப்பட்ட கலவர மற்றும் பொய்க் கருத்துக்களை எந்நாளும் முதன்மைப்படுத்தி வெளியிடுவது தானே தினமணி, தின மலர்(ம்) போன்ற குப்பை ஏடுகளின் ‘பிரதானப் பணி!’

அக்கட்டுரையில், தான், ஒரு ஆர்எஸ்எஸ்- காரன் தான் என்பதனை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் பழ. கருப்பையா. ‘அரசு போய்விடும்! பிளவு போகுமா’ என்ற தலைப்பிலான அக்கட்டுரையில், அவர் பலவற்றை விரித்து இழிவான தன்மையில் எழுதி இருந்தாலும், அதன் சாரம் இதுதான்:

“திருப்பரங்குன்றத்தில் முருகனின் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற ராம.ரவிக்குமார்‌ என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது முற்றிலும் சரியானது; அதனை ஏற்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதியரசர் சாமிநாதன் அதற்கு இசைவாக ஒரு தீர்ப்புரைத்தார்;

அவ்வாறு தீர்ப்புரைத்த நீதியரசரை நாடாளுமன்ற பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர் மதவாதி என்று பலப்படப் பழியுரைத்தனர்!

அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக ஒரு விண்ணப்பம் வைத்து, இதற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று திரண்டன! ஒவ்வொரு தீர்ப்புக்கும் ஒவ்வொரு நீதியரசரை பதவி நீக்கம் செய்வதென்றால் கடைசியில் நீதிமன்றங்கள் எல்லாம் கழுதைகள் மேயும் பாழ் நிலமாகிவிடாவா!

அது முருகனின் மலை; அவன் ‘பரங்குன்றத்து முருகன்’ என்றே அழைக்கப்படுகிறான்! அவனைக் குறிஞ்சி நில கடவுள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது! சங்க இலக்கியங்கள் அவனை பாடுகின்றன! கார்த்திகை தீபம் அவனுக்கு உரியது!

அன்றைக்கு எல்லா வீடுகளிலும் வீடு முழுவதும் விளக்கேற்றப்படுகிறது. வீடு முழுவதும் விளக்கேற்றிவிட்டு, மலையில் ஏற்றுவதில்லை என்றால் அந்தப் பண்டிகைக்கே பொருள் இல்லையே!

இது நூறாண்டு காலமாக வழக்கத்தில் இல்லை என்பது ஒரு வாதமாகாது! முருகன் மலைக் கடவுள் என்பதும், கார்த்திகை தீபம் அவனுக்குரிய விழா என்பதும், ஈராயிரம் ஆண்டு ஒழுக்கலாறுகள்! விட்டுப் போன ஒன்றைப் புதுப்பிப்பது புதிய வழக்கமாக ஆகாது!….”

இவ்வாறாக ‘தினமணி’யில் சுமார் அரைப்பக்க அளவில் மிகவும் நீட்டிப் புலம்பித் தள்ளி இருக்கிறார் பழ. கருப்பையா.

அதாவது, இந்து மத வெறியனும், சாதி வெறியனுமான ராம ரவிக்குமார் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது நியாயம்; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கார்த்திகை தீபம் தர்காவிற்கு அருகில் உள்ள எல்லைக் கல்லில் ஏற்ற அனுமதித்து தீர்ப்புரை வழங்கியது நியாயம்; தமிழ்நாடு அரசாங்கம் நீதிபதி உத்தரவை மறுதளித்து 144 தடை உத்தரவு (இவரது மொழியில் ஊரடங்கு) பிறப்பித்தது தவறு; பாராளுமன்றத்தில் திமுக முன்னெடுப்பில் 110-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவாமிநாதன் மீது தகுதி நீக்கம் (impeachment) நோட்டீஸ் அளித்தது தவறு; தீர்ப்புரைத்த நீதிபதியையே மதவாதி என்று பழிப்பது கேடானது!

எனவே, எப்பாடுபட்டாகினும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ராம ரவிக்குமாரும், ஜி.ஆர். சுவாமிநாதனும் இவர்களுக்கு பின்னால் திரண்டு உள்ள ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ சங் பரிவார் கலவரக் கும்பலும் எண்ணியவாறு கார்த்திகை தீபம் ஏற்றியே தீர வேண்டும் என்ற கும்பலோடு இந்தப் புது சங்கி பழ.கருப்பையாவும் இணைந்து நின்று ஓலமிடத் துவங்கி விட்டார்.

பழ.கருப்பையாவின் முட்டாள்தனமான வாதங்கள்! 

கார்த்திகை நாளன்று அனைவரது வீடுகளிலும் தீபம் ஏற்றும் பொழுது, திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றாமல் இருப்பது அல்லது நீதி அரசர் உத்தரவு பிறப்பித்த பின்பும் 144 தடை உத்தரவின் மூலம் அரசாங்கம் அதனை முடக்குவது எவ்வகையில் நியாயம்?- என்பதே பழ. கருப்பையாவின் வாதம்.

திருப்பரங்குன்றம் மலை மீது ஆண்டுதோறும் ஏற்றப்படுவது போல இந்த ஆண்டும் மலைமீது இருக்கக்கூடிய உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீபத்தூணில் கோவில் நிர்வாகத்தால் அர்ச்சகர் பட்டர் தலைமையில் பக்தர்கள் முன்னிலையில் 2025 லும் ஜெகஜோதியாக தீபம் ஏற்றப்பட்டு விட்டது.

இதுவரை மற்ற ஐந்து படை வீடுகளிலும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையிலும் எவ்விதப் பிரச்சனையும் இன்றி கோவில்களின் நிர்வாகத்தால் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாகவே நடந்தேறி உள்ளன. அதில் தடை ஏதும் அரசாங்கமோ அதிகாரிகளோ மேற்கொள்ளவில்லை.

படிக்க:

 கலவர நெருப்பைப் பற்ற வைக்க திருப்பரங்குன்றத்தைச் சுற்றும் காவிக் கும்பல்!

 திருப்பரங்குன்றம் விவகாரம்: GR. சுவாமிநாதன் நீதிபதியா?  RSS ரவுடியா?

அவ்வாறு இருக்கும் பொழுது திருப்பரங்குன்றத்தில் மட்டும் பிரச்சனை உருவானது ஏன் என்பதனை இந்தப் பழ. கருப்பையா சிந்திக்க முனையவில்லை. காரணம் ‘காவி’த்துணி அவரது கண்களை இறுக்கி விட்டது.

கோவில் நிர்வாகம் மலையில் வழக்கம்போல் தீபம் ஏற்றிய பிறகு தனிநபரான பிழைப்புவாதி, மதவெறியன் மற்றும் சாதி வெறியன் ராம. ரவிக்குமார், தமிழ்நாட்டின் வழக்கத்திற்கு மாறாக தீபம் ஏற்றத் துடிப்பது ஏன்?

அதனை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்தது எப்படி சட்டபூர்வமானதாகும்?

அதுவும் எதிர்த்தரப்பினருக்கு உரிய அவகாசம் கொடுத்து விசாரணை மேற்கொள்ளாமல் அவசர கதியில் தீர்ப்பளிக்க நீதிபதி சுவாமிநாதன் முனைந்து நின்றது ஏன்?

மேலும் நீதி பரிபாலன முறையை விதந்தோதி ‘நீதியரசர்’ சுவாமிநாதனைக் காப்பாற்ற வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பழ. கருப்பையா, இதே நீதிமன்றத்தில், இதே பிரச்சனைக்காக 2017 ஆம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் அமர்வான கல்யாணசுந்தரம் – பவானி சுப்பராயன் அளித்த தீர்ப்பில் சங்கிகளின் கோரிக்கை நியாயமற்றது என்பதனைத் தெளிவுபடுத்தி தள்ளுபடி செய்ததை மட்டும் ஏன் ‘கெட்டிக்காரத்தனமாக’ மறைத்து விடுகிறார்?

அப்படியானால் அந்த இரண்டு நீதியரசர்கள் மதிக்கத்தக்கவர்கள் அல்லர்; ஒற்றை நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பும், அவருமே மதிக்கத் தகுந்தவர்கள் – காரணம் இவர் ஆர்எஸ்எஸ்- காரர்; பார்ப்பனர் எனக் கூற வருகிறாரா பழ.கருப்பையா.

சட்டப்படியும்கூடஇரு நீதிபதிகள் ஒரே பிரச்சனையில் ஒரே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய பிறகு, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வேண்டுமானால் மேல்முறையீடு செய்யலாம்; இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்புக்கு மாறாக, ஒற்றை நீதிபதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்ததே மாபெரும் தவறு. மேலும் ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்த தருணத்திலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து வழக்கை எடுத்தது மட்டுமல்லாமல், தனக்கு மட்டுமே வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்ற இறுமாப்பில் அவசர அவசரமாக தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கிறார் சுவாமிநாதன்.

அதுவும் எப்படி? அந்த எல்லைக் கல்லை அடைய வேறு பாதையே இல்லை. அதனால் தர்காவிற்கு சொந்தமான படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று தீபம் ஏற்றுங்கள் என்று உத்தரவு பிறப்பிப்பதற்கு இந்தப் பார்ப்பன நீதிபதி சுவாமிநாதனுக்கு அதிகாரம் வழங்கியது யார்? எந்தச் சட்டத்தில் இப்படி கூறியிருக்கிறது?

கற்பனையாக இருந்தாலும் உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

தர்காவோ, பள்ளிவாசலோ, தேவாலயமோ அமைந்திருக்கக் கூடிய இடங்களுக்குச் செல்ல வழியே இல்லாத ஒரு சூழல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அதற்குப் போவதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

அது என்ன வழி என்றால் அந்த இஸ்லாமிய கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இந்து கோயிலுக்குள் நுழைந்து சென்றால் அந்த இஸ்லாமிய கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை அடைய முடியும்.

அப்படிப்பட்ட தருணத்தில் சந்தனக்கூடு நடத்துவதற்கோ, கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வழிபாடு மேற்கொள்வதற்கோ இந்து கோவில் வழியாக செல்ல அனுமதி கோரினால் இந்த சுவாமிநாதன் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்குவாரா?

நிச்சயமாக வழங்க மாட்டார். ஏனென்றால் ஒவ்வொரு தருணத்திலும் அவர் பழ. கருப்பையாவைப் போலவே தான் ஒரு சங்கி என்பதனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் குறிப்பிடத்தக்கது. மேலும் அடிப்படையிலேயே தர்காவிற்கு அருகில் அமையப்பெற்றுள்ளது தீபத் தூணுமல்ல.

எச்.ராஜா ஊளையிட்டதற்கு பழ.கருப்பையாவின் பதில் என்ன? 

சட்ட நியாயங்களைப் பொளந்து தள்ளுவதாக பீற்றிக் கொள்ளும் பழ. கருப்பையா, ஆர் எஸ் எஸ்- காரன் எச்ச. ராஜா, ‘ஹை கோர்ட்டாவது; மசுராவது!’ என்று ‘முழங்கியது’ பற்றியோ, பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் மட்டும் அமைதியாக நடத்துகிறோம் என்று உயர் நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக, திருப்பரங்குன்றம் கோவிலின் உள்ளே, பாஜக மற்றும் காவிக் கொடிகளை ஏந்திக்கொண்டு

‘ஜெய் ஸ்ரீ ராம்’, ‘பாரத் மாதா கி ஜே’ கோஷங்களைப் போட்ட காவி(லி)க் கூட்டங்கள் பற்றியோ, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான தர்காவை ‘Relocate'(அகற்ற) செய்ய வேண்டும்; டிசம்பர் 6 பாபர் மசூதிக்கு மட்டுமல்ல; திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கும்தான்’ – என்று பார்ப்பனக் கொழுப்பெடுத்து தமிழ் மண்ணில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊளையிட்டானே எச்ச. ராஜா,இது பற்றியெல்லாம் வாய் திறந்து இருப்பாரா இந்த பழ. கருப்பையா?

இந்த லட்சணத்தில்தான் தர்காவிற்குச் சொந்தமான இடத்தில், ஒரு காலிக் கூட்டம் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே, மத நல்லிணக்கத்திற்கு ‘மூடு விழா’ நடத்துவதற்காகவே, கார்த்திகை தீபம் ஏற்றப் போகிறோம் என்று நாடகம் ஆடுகின்ற நயவஞ்சக கூட்டத்திற்கு லாலி பாடுகிறார் பழ. கருப்பையா. ஆம், சீமான் பாணியில் இவரும் சங்கியாகி பாசிசக் ‘காவி’யில் கரைந்து விட்டார். அப்பட்டமான பிழைப்புவாதி ஆகிவிட்டார்.

பழ கருப்பையா போற்றிப் புகழும் ‘நீதி பரிபாலனம்’ சந்தி சிரிக்கிறது! 

அண்மைக்கால ஓரிரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். தமிழ்நாடு அரசாங்கத்தின் அனைத்துவித செயல்பாடுகளையும் முடக்குவதற்காகவே ஒன்றிய அரசால் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் தான் சங்கி ஆர்.என்.ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்கம், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை வருட கணக்கில் மூட்டை கட்டி வைத்துக் கொண்டிருப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவர் தான் இந்த ரவி. இவரது செய்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழ்நாடு அரசாங்கம். அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் இருந்த திருவாளர்கள் பர்திவாலா – மகாதேவன் இருவரும் இவ்வழக்கினை நன்கு விசாரித்து ஆரியன் ஆர்.என்.ரவியின் செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர் முடக்கி வைத்திருந்த பத்து மசோதாக்களுக்கும் முன் தேதியிட்டு ஒப்புதல் வழங்கினார்கள். அது மட்டுமல்லாமல், இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மன்றங்களில் இருந்து வரும் மசோதாக்களுக்கு எந்த கால அளவிற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டார்கள். பிறகு என்ன ஆனது? அன்றைய உதவி ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமாயிருந்த ஜக்தீப் தன்கர் வானத்திற்கும் பூமிக்குமாக இப்படிக் குதித்துக் கும்மாளம் அடித்தார்: ‘நீதிபதிகள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களோ? மக்கள் மன்றத்தை விட மேம்பட்டவர்களோ? இவர்கள் ஆளுநருக்கு, ஜனாதிபதிக்கு உத்தரவிடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்… வந்தேனா பார்…’ -என்ற பாணியில் மூச்சிறைக்கப் பேசினார். காவிக் கூட்டமும் அவரோடு சேர்ந்து கரைந்தது. ஊளையிட்டது.

பின்பு ஒன்றிய அரசு நேரடியாக பர்திவாலா- மகாதேவன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வக்கற்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மூலமாக 14 கேள்விகள் கேட்டு தீர்ப்புரையை முடக்கினார்களே, அப்பொழுது எங்கே போனார் இந்த பழ. கருப்பையா?

மேற்கண்ட இரண்டு நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, தமிழ்நாட்டின் வேந்தராக பொறுப்பேற்று கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் சில பல்கலைக் கழகங்களில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் துணைவேந்தர்கள் பணியிடங்கள் நிரப்ப தேர்வுக் குழுக்களை அமைப்பதற்கான முன்னெடுப்புக் களை மேற்கொண்டார். அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத காவிக் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடேசன் என்பவர் மூலமாக தமிழ்நாடு அரசாங்கத்தின் துணைவேந்தர்கள் நியமன நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவிற்கு தடையாணை பெற முயன்றனர்.

ஆம், அந்த வெங்கடேசன் விடுப்பு கால அமர்விற்கு அவசரம் அற்ற இந்த வழக்கினை எடுத்துச் செல்கிறார். அவர் வசிக்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வழக்கை கொண்டு செல்ல வேண்டிய நீதிமன்றமோ மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகும்.

ஆனால் அதனை விடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள விடுப்பு கால அமர்வில் வீற்றிருந்த சாத்…சாத்… ‘நம்ம’ ஜி‌.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வில் தடையாணை கோரி மனுச்செய்கிறார். இம்மனு விடுப்பு கால அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு வழக்கே அல்ல. அப்படி இருந்தும் ஜி.ஆர். சுவாமிநாதன், அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசாங்கத்திற்குக் கால அவகாசமே அளிக்காமல் ஒரே நாளில் விசாரணை முடித்து அரசின் உத்தரவிற்கு, இன்னும் சொல்லப் போனால் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கே தடையானை பிறப்பித்தார் வானளாவிய அதிகாரம் படைத்த ஜி.ஆர். சுவாமிநாதன்.

இத்தருணத்தில் எல்லாம் பழ. கருப்பையா என்ன செய்து கொண்டிருந்தார்?

தகுதி படைத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாங்கம் சட்டம் இயற்றியும், பார்ப்பனர்கள் தொடுத்த வழக்கின் பேரில் ‘நானே ஸ்மார்த்த பிராமணன்; நானே நினைத்தால் கூட அர்ச்சகராக முடியாது. மனுதாரர் ரெங்கநாதன் வகையறா எப்படி அப்படிப் பட்ட அர்ச்சகராகும் உரிமைக் கோரிக்கையை வைக்க முடியும்?’ என்று சொல்லி இதே சுவாமிநாதன் வழக்கை தள்ளுபடி செய்தாரே, அப்போது எங்கே போனார் இந்த பழ. கருப்பையா?

கரூர் அருகிலுள்ள நெரூர் கிராமத்தில் ஒரு பார்ப்பனர் முன்னொரு காலத்தில் இறந்து போன சமாதியில் ஆண்டு தோறும் நடைபெறும் வழிப்பாட்டு நிகழ்வில், பல நூற்றுக்கணக்கான பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலைகளில், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உருண்டு புரள்வதை சகிக்க முடியாத சிலர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் அந்நிகழ்வைத் தடை செய்யக்கோரி வழக்காகத் தாக்கல் செய்கின்றனர்.

இந்த விஞ்ஞான யுகத்தில் இப்படிப்பட்ட மூடநம்பிக்கையா? என்று கொதித்தெழுந்த இரு நீதிபதிகள் அமர்வு பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் புரளும் நெரூர் நிகழ்ச்சிக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

பின்பு அந்த உத்தரவை எதிர்த்து சாத்..சாத்…’நம்ம’ ஜி.ஆர். சுவாமிநாதன் ஒற்றை நீதிபதி அமர்வில் எச்சில் இலையில் சூத்திர பஞ்சம மக்கள் உருள்வதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்கிறான். ‘இவ்வாறு எச்சில் இலையில் உருளுவது கடவுள் மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம்; அப்படி உருளுவதால் அம்மக்களுக்கு மோட்சம் கிடைக்கிறது என்று நம்புகிறார்கள்; இதில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை; எனவே தாராளமாக எச்சில் இலையில் உருளுங்கள்…:என்று ‘மகத்தான’ தீர்ப்பினை வழங்கினார் இதே சுவாமிநாதன்.

சூத்திர – பஞ்சம – மக்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளில் பூணூல் போட்ட சுவாமிநாதன் உட்பட பார்ப்பன கூட்டம் உருளுவதற்கு முன்வருமா என்று கேட்பதற்கு துப்பிருந்ததா இந்தப் பழ கருப்பையாவுக்கு?

மாறாக சுவாமிநாதன் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவர் மீது இரண்டு கொட்டு கொட்டிய நீதிபதிகள் அவரது உத்தரவை ரத்து செய்து முந்தைய உத்தரவை நடைமுறைப்படுத்தி தீர்ப்பளித்து விட்டார்கள். இதுதான் உண்மை.

இவ்விதம் எண்ணற்ற உதாரணங்களை கூற முடியும். இதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். ‘டெல்லியில் உள்ளது உச்சநீதிமன்றம் அல்ல; அது உச்சிக் குடுமி நீதிமன்றம்’-என்று.

பழ கருப்பையா கூறியது போல் நீதிமன்றங்கள் கழுதைகள் மேயும் பாழ் நிலங்கள்தான்!

‘ ஒவ்வொரு தீர்ப்புக்கும் ஒவ்வொரு நீதி அரசரை நீக்கம் செய்வதென்றால், கடைசியில் நீதிமன்றங்களெல்லாம் கழுதைகள் மேயும் பாழ் நிலமாகிவிடாவா! ‘ -என்று மிகவும் ‘சமூகப் பொறுப்புணர்ச்சியோடு’ அங்கலாய்த்துக் கொள்கிறார் பழ கருப்பையா.

கூடப்பிறந்த தம்பி மகன் திரைத்துறை இயக்குனரும், திராவிட இயக்க உணர்வாளருமான கரு. பழனியப்பன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காகவே, தன் சாதியில் இருந்தே அவரைத் துண்டித்து விட்டக் கொடியநோக்கம் உடையவரிடம் எத்தகைய சமூகப் பொறுப்புணர்ச்சியை எதிர்பார்க்க முடியும்?

அடுத்து, சுவாமி நாதனின் எண்ணற்ற தீர்ப்புக்கள், சாதி- மத அடையாளங்கள் சார்ந்ததாக உள்ளன. ஒரு இந்திய – அமெரிக்க வாழ் பார்ப்பனப் பெண்மணி சென்னை வந்திருந்த பொழுது ஒருவரை காரேற்றி கொன்றுவிட்டு அமெரிக்கா ஓடிவிட்டார். அண்ணன் அந்த குற்றத்தை ஏற்றுக் கொள்கிறார். அதற்காக 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெறுகிறார். அந்த மேல் முறையீட்டு வழக்கினை அப்பொழுது வழக்கறிஞராக இருந்த இதே சாத்… சாத்…சுவாமிநாதன் எடுத்து வாதிட முன் வருகிறார். தண்டனை வழங்கிய நீதிபதியின்தீர்ப்புரையின் – சாட்சியங்களின் – ஓட்டை உடைசல்களை கண்டறிந்து வேதம் அறிந்த பிராமணன் தண்டனையையே அனுபவிக்க கூடாது என்று விடுதலை பெற்று தந்ததை பூணூல் அணிந்த பார்ப்பனர்கள் கூட்டத்தில் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு துளியும் வெட்கமின்றி பேசுகிறார் என்றால், இவரை ‘நீதி அரசர்’ என்று பழ. கருப்பையா போன்ற பிராணிகள் போற்றுகிறார்கள் என்றால் என்னவென்று கூறுவது?

மேலே ஒட்டுமொத்தமாக நீதி பரிபாலன முறையில் உள்ள குறைந்தபட்ச குறைபாடுகளைத் தொகுத்துக் கூற முனைவோமேயானால், பழ கருப்பையா அச்சப்பட்டது போல ‘நீதிமன்றங்கள் கழுதைகள் மேயும் பாழ் நிலங்கள்தான்’ -என்பதில் அய்யமில்லை.

  • எழில்மாறன்

1 COMMENT

  1. திருப்பரங்குன்றம் விவகாரம் ஆர் எஸ் எஸ் காரனாக அம்பலப்பட்ட பச்சோந்தி பழய கருப்பையா !

    கட்டுரை ஆசிரியர் தோழர் எழில் மாறன் அவர்கள் பழைய கருப்பையா நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும் திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற வழக்கு போட்ட ராம ரவிக்குமார்க்கு எடுபுடியாகவும் பழைய கருப்பையா தினமணி கட்டுரை நடுப்பக்கத்தில் எழுதி உள்ளார் பச்சோந்தி கருப்பையா குறித்து ஆர் எஸ் எஸ் இன் ஏஜெண்டாக ஆர் என் ரவி செயல்படுவது குறித்தும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்ப்பனர்களுடைய எச்சில் இலையில் உருள வேண்டும் என தீர்ப்பளித்த போது பழைய கருப்பையா கோமாவில் இருந்தாரா ? சீமான் கருப்பையா போன்ற வகையறாக்கள் பாசிச கோமாளிகளுக்கு ஜால்ரா அடிப்பதை தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் பலவற்றை குறிப்பிட்டு இந்த கோமாளிகளுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் கட்டுரையாளர் தோழர் எழில் மாறன்.

    தோழருக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here