அரசின் நலத்திட்டங்களில் ஊழல் நடப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முற்றுமுழுதாக ஒரு நலத்திட்ட முழுவதும் ஊழல் செய்வதற்காகவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பது இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.
இப்படிப்பட்ட மாபெரும் சாதனையை ஒன்றிய பாசிச பாஜக அரசு செய்துள்ளது.
பாசிச பாஜக முதல்முறை ஆட்சிக்கு வந்தவுடன் 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கப் போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான செலவை இந்த மையங்களுக்கு மத்திய அரசே வழங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் சேரும் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு பயிற்சியின் முடிவில் ஊக்கத் தொகையாக ரூ.500 முதல் ரூ.8,000 வரை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் மூன்று கட்டங்களில் (PMKVY 1.0 ; PMKVY 2.0; PMKVY 3.0) ஒரு கோடியே 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
அதேசமயம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் (PMKVY 2.0; PMKVY 3.0) மட்டும் மொத்தம் 95,90,801 நபர்கள் பயிற்சி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி சான்றிதழ் அளிக்கப்பட்டவர்களில் 91,30,767 பேர் போலியானவர்கள் என்ற விவரம் பாசிச பாஜக அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் (CAG) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது, இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று பயன் பெற்றதாக கூறப்படும் நபர்களில் 95.2% பேர் போலியானவர்கள் என்று ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசே ஒப்புக் கொள்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றதாக கூறப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகள் மோசடியானவை, போலியானவை அல்லது வங்கி கணக்கு எண்ணே தரப்படவில்லை என்றும் தற்பொழுது தெரிய வந்துள்ளது. மேலும், ஒரே வங்கி கணக்கு எண்ணை இரண்டு பேருக்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் பெயர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சில நபர்களின் வங்கிக் கணக்கு எண்கள் 11111111 என்றும் 123456… என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வங்கியும் இப்படிப்பட்ட எண்களை வங்கிக் கணக்கு எண்களாக பயன்படுத்தப்படுவதே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்ற.
மேலும், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் என்று கூறப்படும் பயனர்களில் 36.51% பேரின் இமெயில் முகவரிகள் போலியானவை என்றும் சிஏஜி அறிக்கை கூறுகிறது. இந்த பயிற்சி மையங்களை ஆய்வு செய்த பொழுது பல பயிற்சி மையங்கள் செயல்படாமல் மூடப்பட்டு இருப்பதும், மூடப்பட்டுள்ள பயிற்சி நிலையங்களில் பலருக்கு பயிற்சி அளித்ததாக மோசடி செய்து இந்தத் திட்டத்தின் நிதியை தின்று செரித்ததும் சி ஏ ஜி அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
படிக்க:
♦ மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!
♦ மின்சார கொள்முதல் ஏலம்: பாஜக ஆளும் மாநிலங்களின் ஊழல் அம்பலம்!
அது மட்டுமின்றி இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட வேண்டிய இடத்தில் பல பயனாளர்களுக்கு ஒரே நபரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் புகைப்பட மோசடி உத்தரபிரதேசம், பீகார், மகாஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஆகா, பாஜகவின் இரட்டை எஞ்சின் சர்க்கார் எந்த அளவிற்கு திறம்பட வேலை செய்துள்ளது என்பதை இந்தத் திட்டத்தைப் பற்றிய சிஏஜி -யின் அறிக்கை புட்டு புட்டு வைத்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வதை போலவே ஒரே புகைப்படத்தை பலருக்கு பயன்படுத்தியுள்ளனர். மேலும் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வீட்டுக் கதவு எண் என்ற இடத்தில் 0 என்று குறிப்பிடுவதைப் போலவே இந்த திட்டத்தின் பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்ணை (111111111; 123456…) என்று கைக்கு வந்தபடி தட்டச்சு செய்து கணக்கு காட்டியுள்ளனர்.
ஒன்றியத்தில் பாசிச பாஜக ஆட்சியில் இருப்பதால், இவ்வளவு வெளிப்படையாக திட்டத்தில் சுமார் 95% நிதியை ஊழல் செய்து தின்று செரித்தாலும் நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று மிக தைரியமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முறைகேடு நடந்துள்ளது என்பதை பாசிச பாஜகவால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பாஜக அரசு ஊழல் அரசுதான் என்று தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகிறது என்று கூறினாலும் அதை நம்பாமல் பாசிச மோடியின் அரசு இந்திய நாட்டை முன்னேற்றுவதற்காகத்தான் பாடுபட்டுக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் நபர்களை நாம் என்ன செய்ய முடியும்?
– குமரன்






