ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு!
5.11.2025
இடம்: மக்கள் கண்காணிப்பகம் அலுவலகம்
மதுரை.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குரிமை – குடியுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நிறுத்திவைத்திடுக!
மக்களாட்சிக்கான அடிப்படை அலகாக வாக்குரிமை திகழ்கிறது. இதனடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இந்திய ஒன்றிய குடிமக்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்துள்ளது. எனவே தான் எதன்பொருட்டும் வயதுவந்தோர் வாக்குரிமைப் பறிக்கப்படக்கூடாது என்பதை அரசியலமைப்பின் கூறு 324 திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. ஆனால் அரசியலமைப்புக்கொடுத்துள்ள உரிமைகளைத் தலைகீழாக்கும் நோக்கில் ஒன்றிய பா.ஜ.க அரசும் அதன் கைப்பாவையாக இயங்கும் தேர்தல் ஆணையமும் குடிமக்களின் வாக்குரிமை, அதனோடு இணைந்த குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பீகாரில் கடந்த சூன் மாதம் 4 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) வாக்குரிமை தொடர்பான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுவரைத் தேர்தல் ஆணையம் கடைபிடித்து வந்த வாக்காளர் பட்டியல் திருத்த முறையில் இருந்து விலகியிருக்கிறது. வாக்குரிமையோடு குடியுரிமையைச் சோதனை செய்கிற அதிகாரத்தை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து தேர்தல் ஆணையம் கையிலெடுத்திருக்கிறது. இந்த உண்மை பீகாரின் SIR ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தேர்தல் ஆணையத்திற்குக் குடியுரிமையைத் தீர்மானிக்கிற அதிகாரம் உண்டு என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ததில் இருந்து தெரிய வந்தது. பீகார் SIR க்காக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணைகளில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை நிலைநாட்டிக்கொள்ள 11 ஆவணங்களைக் காட்ட வேண்டும் என அறிவித்ததிலிருந்து அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. SIR ன் அறிவிப்பாணைகளில் ஆதார், குடும்ப அட்டை, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பிறகே ஆதார் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறையில் 2002 வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெற்றோரில் ஒருவரின் பிறப்பு இருப்பிடச் சான்றிதழும் 2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர் இருவரின் இருப்பிட பிறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது என்பது கொள்ளைப்புறமாகக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதேயாகும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய SIR நடவடிக்கை நாட்டு மக்களின் குடியுரிமை என்பது தேர்தல் ஆணையத்தின் தயவுக்குட்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அம்பலமாக்கியுள்ளது. SIR எனும் பெயரில் ஒன்றிய பா.ஜ.க
அரசமைப்பு வழங்கிய வாக்குரிமையை மக்களிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குடிமக்களின் வாக்குரிமையை மெய்பிக்கும் பொறுப்பைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து மக்களின் பொறுப்புக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துகிறோம் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட பீகார் SIR இசுலாமியர்கள், பெண்கள், பட்டியல் வகுப்பினர். விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் வாக்குரிமையை பறித்துள்ளது. SIR முடிவில் அறிவிக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மட்டும் 1.32 கோடி வாக்காளர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக The Reporters Collective நடத்திய ஆய்வுச் செய்தி கூறுகிறது. மேலும் 14 இலட்சத்திற்கும் அதிகமானோர் போலி வாக்காளர்களாக ஒரே பெயரில், ஒரே வயதில் வெவ்வேறு வாக்காளர் அட்டைகளுடன் இருப்பதாக அவ்வாய்வு கூறுகிறது. 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்களர் பட்டியல் அறிவித்தவுடனே தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் வாக்குரிமையை இழந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேரும் வாய்ப்பும் பறிபோயுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல தேர்தல் ஆணையம் பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகள் வெற்றிபெறுவதைத் தடுக்கும் நோக்கில் சார்புடன் செயல்படுவதைக் காட்டுகிறது.
படிக்க:
♦ பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!
பீகார் SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பீகாரைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற தமிழ்நாடு மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தற்போது SIR அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பா.ஜ.க அரசின் வஞ்சக நோக்கங்களுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதை நமக்கு உணர்த்துகிறது.
ஏற்கனவே தேர்தல் பத்திரங்கள், தேர்தல் ஆணையர் நியமனம், வாக்குத் திருட்டு (Vote chor) ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. சுதந்திரமான, நம்பகமான, வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பா.ஜ.க அரசின் கீழ் தனது தன்னாட்சியை இழந்து வருவதோடு ஏனைய அரசியல் சட்ட அமைப்புகளைப் போல் ஒன்றிய அரசின் தாக்குதலுக்கும் கீழ்படிதலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அரசியல் சட்டத்திற்குப் புறம்பான வாக்குரிமை, குடியுரிமையைப் பறிக்கும் SIR அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும். வழக்கமான முறையில் SSR (Special Summary Revision) முறையிலேயே வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். மேலும் பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டும. எக்காரணம் கொண்டும் பீகார் SIR ல் நீக்கப்பட்ட வாக்காளர்களை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைக்கக் கூடாது. அதேபோல வாக்குரிமைக்குத் தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என அனைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம், மதுரை.
8428108721, 94431 84051, 98940 25859, 9942546468, 90926 93373, 99528 44749, 94439 52662, 80725 72994, 98423 81830, 99422 77676
பங்கேற்கும் அமைப்புகள்:
1. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி
2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்
3.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.மக்கள் கண்காணிப்பகம்
5மனிதநேய மக்கள் கட்சி
6.இந்திய தேசிய லீக்
7.தமிழ்ப்புலிகள் கட்சி
3.மக்கள் சிவில் உரிமைகள் கழகம்
9.ஆதித்தமிழர் பேரவை
10. மக்கள் தமிழகம் கட்சி
11. மக்கள் அதிகாரம்
12 ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக்கழகம்
13. தந்தைபெரியார் திராவிடர் கழகம்
14. திராவிடர் விடுதலைக் கழகம்
15. SDPI கட்சி
16.மே -17 இயக்கம்
17. தமிழக வாழ்வுரிமைக் கட்சி
18. தமிழ்த்தேச மக்கள் முன்னணி
19. தமிழர் முற்போக்குக் கழகம்
20. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
21. தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்
22. சிபிஐ எம்.எல் (ரெட் ஸ்டார்)
23. இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி
24. அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்
25. மக்கள் அதிகாரக் கழகம்
26. தமிழ்நாடு சமதர்மக் கட்சி
27. தமிழக வாழ்வுரிமைப்
பாதுகாப்பு கட்சி
28.வனவேங்கைகள் கட்சி
29. ஐடியாஸ் மதுரை
30. தேசிய வீட்டுவேலைப் பணியாளர் சங்கம்
31. திராவிடத் தமிழர் கட்சி
32. மக்கள் பாதை பேரியக்கம்
33.புரட்சிகர இளைஞர் முன்னணி






