னித குலம் நீண்ட காலமாக பகல் – இரவு, நேரம்-காலம் பார்க்காமல் உழைத்து உழைத்து உருக்குலைந்த காலகட்டத்தில் தனது உழைப்பு சக்தியை விற்பதை பற்றி புரிந்து கொள்ளவில்லை. அதாவது அடிமையாகவும், பண்ணையடிமையாகவும் இருந்த காலகட்டத்தில் தனது உழைப்பு சக்தியை விற்கப்படுவதை புரிந்து கொள்ளாத மனித குலம், முதலாளித்துவ சமூகம் தோன்றிய போது கூலி அடிமையாக்கப்பட்ட காலகட்டத்தில் தான் தனது உழைப்பு சக்தியை விற்பதற்கு எதிராக போராட்டத் துவங்கியது.

“காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் வேலைக்கு செல்ல வேண்டும். சூரியன் மறைந்த பிறகு தான் வீட்டுக்கு திரும்ப வேண்டும்” என்பது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களில் ஒரு விதியாகவே விதிக்கப்பட்டிருந்தது.

அடிமையாகவும், பண்ணையடிமையாகவும் வாழ்ந்த காலகட்டத்தில் கூலி என்பது அவர்களுக்கு வேலையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதில்லை. மாறாக உயிர் வாழ்வதற்கு கூலி என்ற அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில் கூலி கொடுக்காமல் பல்வேறு வேலைகளை வாங்கிக் கொண்டது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாய அமைப்புகள்.

அடிமைகளின் உழைப்பை சுரண்டிய ஆண்டைகளும், நிலமற்ற கூலி விவசாயிகளின் உழைப்பை கொள்ளையடித்த நிலப்பிரபுகளும் முதலாளித்துவம் தோன்றிய பிறகு உழைப்பு சக்தியை கொள்ளையடிப்பதற்கு நேரம்-காலம் பார்க்காமல் ஆலைகளில் வேலை செய்ய வேண்டும் என்பதை நிபந்தனையாக முன் வைத்தனர்.

உழைப்பு சக்தியை கரும்பு சக்கையாக பிழிந்து எடுத்துக் கொண்டு பழைய சமூக அமைப்புகளில் எவ்வாறு கூலியை குறைத்துக் கொடுத்தார்களோ, அதே போல கூலி கொடுக்க முயற்சித்தனர். இதனை எதிர்த்துப் போராடியதன் மூலம் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் பிற அம்சங்களில், தன்னை வளர்த்துக் கொள்வது தலையிடுவது என்பது மே தினத்தின் முழக்கமாக மாறி பின்பு உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் முதலாளிகளுடன் 8 மணி நேர வேலை ஒப்பந்தத்துடன் வேலை செய்ய துவங்கினர்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்து தற்போது உலகை சூறையாடுகின்ற நிகழ்ச்சி போக்கில் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமின்றி, “லாபம் லாபம் மேலும் லாபம்” என்ற கொடூரமான நிதி மூலதனத்தை அதிகரித்துக் கொண்டே செல்வது பற்றி தற்போது தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டுள்ளது.

எந்தவிதமான விழுமியங்களுக்கும் கட்டுப்படாமல் சொத்து சேர்த்த மிகப்பெரும் தொழிலதிபர்கள் தனது வாழ்நாளின் இறுதி காலத்தில் “பணம், பணம் என்று அலைந்தது தவறு” என்று ஒப்பாரி வைக்கின்ற அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.

எனினும் லாப வெறி கொண்ட முதலாளித்துவம் தனது உழைப்பு சுரண்டலை, கூலி அடிமைத்தனத்தை லாப வேட்டையை நிறுத்தவில்லை இதனால் 8 மணி நேர வேலை இயல்பாகவே தற்போது 12 மணியிலிருந்து 15 மணி நேர வேலையாக மாறிவிட்டது.

இந்திய முதலாளிகளான இன்போசிஸ் நாராயணமூர்த்தி முதல் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் சார்பாக பேசும் எல்&டி சுப்பிரமணியன் வரை வெளிப்படையாகவே 12- 15 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க துவங்கிவிட்டனர். வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு சென்று மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி உழைப்பு சக்தியை சுரண்டுவதற்கு புதிய வழிமுறைகளை கையாளுகின்றனர்.

இத்தகைய சூழலில் சமூகத்தில் தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வு குறிப்பாக உணவுப் பொருள்கள்; சமையல் எண்ணெய் முதல் எரிசக்திக்கு பயன்படுத்துகின்ற எண்ணெய் வரையிலான விலையேற்றம்; கட்டுமான பொருட்களான இரும்பு முதல் சிமெண்ட் மற்றும் பெயிண்ட் விலையேற்றம்; இறுதியாக பல்வேறு நுகர்வு பொருட்களின் விலையேற்றம் என்று விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் பாட்டாளி வர்க்கமானது தனது உழைப்பு சக்தியை விற்பதற்கேற்ப கூலி உயர்வுக்காக போராட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் வழிகாட்டுதலை புறக்கணிக்க கோருகின்றன முதலாளித்துவ சந்தை பத்திரிகைகள்.

இந்து தமிழ் திசை முதலாளித்துவ பொருளாதார அறிஞரான சோம.வள்ளியப்பன் என்பவர் மூலம் பகுதி நேர வேலை என்பதை பற்றி தொடர் கட்டுரையாக வெளியிடத் தொடங்கிவிட்டது.

படிக்க:

♦️ அதிகரிக்கும் வேலையின்மை; அதிகரிக்கப்போகும் சமூக குற்றங்கள்!

♦️ வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!

“இன்றைய உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டதால், ஆன்லைன் வேலைகளுக்கு அதிகமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்களுக்கு சமூக ஊடகங்களில் நல்ல ஆர்வம் இருந்தால், சிறிய நிறுவனங்களுக்காக அவர்களின் சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் வேலையைச் செய்யலாம். சொந்தமாக எழுதும் திறமை இருந்தால், ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக பல்வேறு இணையதளங்களுக்கும், நிறுவனங்களுக்கும் கட்டுரைகள் எழுதி வருமானம் பெறலாம். கிராஃபிக் டிசைனிங், வீடியோ எடிட்டிங் போன்ற திறமைகள் இருந்தால், அதிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே இந்த வேலைகளைச் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு” என்கிறது கல்கி.

படிக்கின்ற காலத்திலேயே வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்ற உபதேசங்கள்; சமூகத்திற்கு தொண்டாற்றினாலும் கூட அதற்கு குறைந்தபட்ச ஊதியத்தை பெற வேண்டும் என்ற கீழ்த்தரமான போதனைகள்; வேலை கிடைப்பதற்கு முன்பாகவே படிக்கும்போதே குறிப்பிட்ட துறையில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் ஆகியவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பகுதி நேர வேலைக்கு செல்வது சரிதான் என்ற கருத்தை மாணவர்கள்- இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

அதற்கு நிகராகவே ஒரு சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாது என்ற சூழலில், கணவன்& மனைவி இருவரும் வேலைக்கு செல்வது; தொழில் செய்வதாக இருந்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இரவு 10 மணி வரை வேலை செய்வது என்று சமூகத்தின் நிலைமையாக மாறியுள்ளது.

எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இனி கானல் நீராக மாற்றப்படும் என்பதுதான் நிலைமை. இதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூகம் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துக் கொண்டே வருகிறது. பகுதி நேர வேலை என்ற கான்செப்ட் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருவதைப் போலவே இந்தியாவிலும் டிரெண்டாக தொடங்கிவிட்டது.

நீண்ட நெடும் காலம் வேலை நேரத்திற்கு ஏற்ப அதாவது கொடுக்கின்ற ஊதியம் அல்லது கொடுக்கப்படாத ஊதியம் ஆகியவற்றை சேர்த்து இரவு, பகல் பாராமல் வேலை செய்த நிலைமையில் இருந்து போராடி பெற்ற உரிமைகள் முக்கியமாக 8 மணி நேர வேலை என்பதை நிராகரிக்கின்ற இந்த பகுதி நேர வேலை கான்செப்ட் மிக, மிக அபாயகரமானது என்பது மட்டுமின்றி போராடுகின்ற உணர்வை முளையிலேயே கிள்ளி எரிகின்ற அபாயம் கொண்டது.

எனவே, “பகுதிநேர வேலை பார்த்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்ற உபதேசங்களை தூர வீசி எறியுங்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் என்று முதலாளிகளுக்கு எதிராக கலகத்தில் இறங்குங்கள். படித்தவுடன், படித்து முடித்தவுடன் பொருத்தமான வேலை கொடுங்கள் என்று அரசாங்கத்தை நிர்பந்தியுங்கள்! இதற்கு பதிலாக பகுதி நேர வேலை அதன் மூலமாக வருவாய் ஈட்டுவது என்ற கேடுகெட்ட வழிகாட்டுதல்களை தூக்கி எறியுங்கள்!” என்று அறைகூவுகிறோம்.

ஆல்பர்ட்

1 COMMENT

  1. பகுதி நேர வேலை என்ற முதலாளித்துவத்தின் சூழ்ச்சியை விழ்த்துவோம்

    ஆண்டான் அடிமை சமூகத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழிலாளர்கள் தனது உழைப்பின் மீதான சுரண்டலை உணர வில்லை

    முதலாளித்துவம் தோன்றிய பிறகு சுரண்டலின் தாக்கத்தை புரிந்து கொண்ட தொழிலாளி வர்க்கம் 8 மணி நேர வேலைக்காக போராடினார்கள்

    லாபம் லாபம் என்று முதலாளிகள் பேராசை குறித்தும் அவர்கள் வாழ்நாளில் நிம்மதி இல்லாமல் போனதையும் பற்றி கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்

    ஏகாதிபத்திய முதலாளிகள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி /எல் & டி சுப்ரமணியன் 12 முதல் 15 மணி நேரம் கட்டாய வேலையை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்

    விலைவாசி உயர்வு தொழிலாளர்களின் வாழ்நிலை தொழிற்சங்கங்களின் வழிகாட்டுதலை கார்ப்பரேட் ஊடகங்கள் புறக்கணிப்பது குறித்து அம்பலப்படுத்துகிறார்

    இந்து தமிழ் திசை பத்திரிகையின் பொருளாதார ஆலோசகரான ஆசிரியர் சோம. வள்ளியப்பன் பகுதி நேர வேலை குறித்து முதலாளிகளுக்கு ஆதரவாக தொடர் கட்டுரையை தனது விசுவாசத்தை காட்டுகிறார்

    பகுதி நேர வேலை என்பது அபாயகரமானது அதை தொழிலாளி வர்க்கம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என கட்டுரை எழுதிய ஆசிரியர் தோழர் ஆல்பர்ட் எச்சரிக்கை விடுக்கிறார்

    கட்டுரை ஆசிரியருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here