சேலம் தீவட்டிப்பட்டி நேரடி கள‌ ஆய்வு – புமாஇமு அறிக்கை


சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதின் பேரில் நடந்த கலவரம் குறித்தான கள ஆய்வு செய்யப்பட்டது.

மக்களிடையே நேரடியாக சந்தித்து கலந்துரையாடிய போது அவர்கள் பட்ட இன்னல்களையும், அந்த கலவரத்தின் தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

வயதான முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அங்கு நடந்த கலவரம் குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். முதியோர்கள் கூறும் பொழுது அவர்களுக்கு விவரம் தெரிந்த நாள் முதலேயே தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில், தாங்களும் வழிபாடு செய்து வருவதாகவும், மேலும் அந்த கோவிலானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல எனவும், அங்கு பல்வேறு சமூகத்தை சார்ந்த மக்கள் வழிபட்டு வந்ததாகவும், தாங்களும் அவர்களோடு இணைந்து கோவிலில் நுழைந்து வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

கலவரத்திற்கு முந்தைய நாள் (01.05.2024) இரவு எப்போதும் போல தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களது பகுதியில் இருந்து அலகு குத்திக்கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த பூசாரி அவர்களை கோவிலுக்குள் நுழைவிடாமல் தடுத்தும், அலகினை நாங்கள் அகற்ற மாட்டோம்! நீங்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டு விட்டு அப்படியே திரும்பி செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

களத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள்

மேலும் அங்கிருந்த கோவில் நிர்வாகத்தினை சார்ந்த இருவர் கோயில் கதவினை வேகமாக இழுத்து சாத்தி, சாதிய பெயரைச் சொல்லி அவர்களை மிக இழிவாக பேசி அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்படவே, காவல்துறையினர் வந்து தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, இங்கு கோவில் விசேஷங்கள் எதுவும் யாருடைய பங்கேற்பும் இல்லாமல் நடக்காது! எனவே தற்போது கலைந்து செல்லுங்கள். நாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அதில் சுமூகமாக தீர்வு கண்டு அதன் பிறகு விழாவினை நடத்தலாம் என்று வாக்குறுதி அளித்தனர்.

மக்களிடம் உண்மையை கேட்டறிந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் அங்கிருந்து மக்களை கலைந்து செல்ல வைப்பதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரதிநிதியாக “விஜயன்” என்பவரை காவல் துறையினரே அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவரிடம் பேசினர்.

விஜயன் அவர்களும் அங்கிருந்து சுமூகமாக பேசி அங்கிருந்த மக்களையும் இளைஞர்களையும் அழைத்து வந்து விட்டார்.

மறுநாள் காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வன்னியர் மற்றும் இதர சமூகத்தை சார்ந்த தரப்பிலிருந்து 10 பேரும், தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து 10 பேரும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டவர்கள், எப்போதும் இருந்தது போல எங்களை கோவிலுக்குள் நுழைய அனுமதித்தும், வழிபாட்டு உரிமையை நிலை நாட்டுவதற்கான உத்தரவாதத்தை அளிக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி பேசினர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் “பறையன் சொல்லி கேட்பதா” என்று சாதிய பெயரைச் சொல்லி திட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினர்.

போலீஸ் தாக்கியதால் காயமடைந்த பெண்கள்

மாரியம்மன் கோவில் தெற்கே உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியானது வடக்கு பக்கம் உள்ளது. வடக்கிலிருந்து கோவில் இருக்கும் திசையில் உள்ள கடைக்கு சென்ற ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் மீது வன்னியர் மற்றும் இதர சாதி வெறியினர் ஒன்று திரண்டு, தாங்கள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கற்களை வீசி உள்ளனர்.

வன்னியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களும் மக்களும் முன் தயாரிப்பாக கற்களை ஏற்கனவே வைத்திருந்து இருக்கின்றனர். இதற்கு பா.ம.க வை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் மணி என்பவர்கள் முக்கிய காரணமாய் இருந்துள்ளனர். காவல்துறை வந்து தாக்குதல் நடத்தியவர்களை கட்டுப்படுத்தாமல், அவர்களுடன் இணைந்து கொண்டு அங்கு அவர்கள் கல் வீசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை கேள்விப்பட்டு ,பதட்டமடைந்த அந்த பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் சம்பவ பகுதிக்கு விரைவாக சென்றனர். ஓமலூர் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை அருகே மக்கள் குழுமினர்.

போலீஸ் தாக்கியதால் காயமடைந்த பெண்கள்

பதட்டமான சூழல் நிலவிய வேளையில் சரமாரியாக வன்னியர் மற்றும் இதர சமூகத்தைச் சார்ந்த மக்கள், கற்களை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வேகமாக வீசியுள்ளனர்.

தொடர்ந்து கற்களை வீசியும், கட்டைகளைக் கொண்டு அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கியும், முன்னேறி வந்ததால் எதிரில் நின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் கையறு நிலையில், தங்களை தற்காத்துக் கொள்ள வேறு வழியும் இல்லாமல் நிராயுத பாணியாக நின்றுள்ளனர்.

போலீஸ் தாக்கியதால் காயமடைந்த பெண்கள்

திருப்பி தாக்குவதற்கு கூட வழியில்லாமல் வன்னியர் மற்றும் இதர சமூகத்தை சார்ந்தவர்கள் எறிந்த கற்களை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசத் தொடங்கியுள்ளனர்.

ஓமலூர் தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தியும், போக்குவரத்திற்கு இடையூராகவும், பாலத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, அங்கிருந்து சரமாரியாக கற்களை வீசி தாக்கியும் ஆட்களை குறி வைத்தும் பலமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெண்களை குறிவைத்து தாக்கிய காவல்துறை

இந்த தாக்குதலில் பல பேருக்கு கை கால்கள் மற்றும் மண்டை உடைந்ததனால், பதட்டமான சூழல் நிலவியதன் அடிப்படையில் அங்கிருந்த நெடுஞ்சாலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மக்களும் மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

உடனடியாக அங்கு காவல்துறையினரின் படை இறக்கப்பட்டது. அங்கு படையாக இறக்கப்பட்ட காவல்துறையானது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், கட்டுப்படுத்த தவறியும், அவர்களை அடக்கியும் வைக்காமல், மாறாக தாக்குதலுக்கு உள்ளான மக்களை நோக்கி சரமாரியாக அடிக்க தொடங்கினர்.

சிகிச்சையில் வயது முதிர்ந்த தாய்

காவல்துறையினருடன் சேர்ந்து கொண்டு , வன்னியர் மற்றும் இதர சமூகத்தை சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் வரை வந்து, அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் செய்வதறியாது, திகைத்து தங்கள் வாழ் பகுதிக்கு சென்றபோது, அங்கேயும் விடாமல், காவல்துறையினர் ஊருக்குள் புகுந்து அங்கிருந்த சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் அங்கு குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை வெளியில் இழுத்து ரோட்டில் போட்டு அடித்துள்ளனர்.

கொலைவெறியோடு தாக்கிய காவல்துறை

வன்னிய சமூகத்தைச் சார்ந்த சாதி வெறியர்களின் தாக்குதல் மட்டுமல்லாமல், அவர்களோடு சேர்ந்து காவல்துறையினர் நடத்திய தாக்குதலானது கொடுமைகளில் மிகக் கொடுமையாக இருந்துள்ளது. அதனையும் அந்த பகுதியினைச் சார்ந்த மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த காவல்துறை விசாரணை எதுவும் இல்லாமல், கண்ணுக்கு தென்பட்ட அனைத்து இளைஞர்களையும் பெரியோர்களையும் உடனடியாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அங்கு கடையில் தீப்பிடித்து இருந்ததே எவ்வாறு ?என்று அவர்களிடம் கேட்ட பொழுது,

அதற்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முதலில் கற்களை வீசி தாக்கியும், கையோடு பெட்ரோல் குண்டை வீசி எறிந்தும் இருக்கின்றனர். அது அங்கிருந்த ஒரு காவலரின் காலின் மீதும் பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் எல்லா கடைகளிலுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையில் பெட்ரோல் குண்டு வீசி இருந்தால், யார் வீசி இருப்பார்கள் என்ற footage எடுக்க முடியும். ஆனால் அது எதனையும் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால் தற்காப்புக்காக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் வண்டிகளில் பெட்ரோல் பிடித்ததை மட்டும் சிசிடிவி கேமராவில் பதிவானதை எடுத்து, காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

வேண்டுமென்றே தாங்களாகவே அந்த கடையில் தீ வைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பழியை போடுவதற்காக இந்த சதி வேலையையும் செய்துள்ளனர்.

மேலும் சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பாக, நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்று எரிந்த கடையின் மேல் தளத்தில் சலூன் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்படியிருக்க, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞரின் கடை மீது நாங்களே தீ வைப்போமா? என்ற கேள்வியையும் நம்மை பார்த்து முன் வைக்கின்றனர்.

வன்னிய சாதி வெறியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களை கண்டித்து இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அந்த பகுதி மக்கள் முயன்றுள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து, மேலும் காவல்துறையினர் அவர்களை ஒடுக்கி அதனை நடத்த விடாமல் தடுத்து விட்டனர்.

மேலும் காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை பார்க்கும் பொழுது, விஜயன் என்பவர் தனது தலைமையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த இளைஞர்களை, மக்களை தூண்டிவிட்டு வேண்டுமென்றே கலவரம் நடத்த முயன்றதாகவும், முதலில் அவர்கள்தான் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பொய்யான FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் நடந்தது என்னவென்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுதே, வன்னிய மாற்றும் இதர சமூகத்தை சேர்ந்தவர்கள், ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டபடி கற்களை கொட்டி வைத்து, எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு மாணவரின் மண்டை உடைந்ததினால் தான் அதில் பதட்டம் அடைந்து அங்கிருந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தேசிய நெடுஞ்சாலை அருகே குழுமினர். மேலும் மறியலும் செய்திருக்கின்றனர்.

மேலும் விஜயன் என்பவரை காவல்துறையினரே, இதில் வேண்டுமென்றே இழுத்து விட்டு ஒரு காரணம் தேவைப்படுகிறது என்பதனால், அவர் தலைமையில் தான் இதெல்லாம் நடந்து முடிந்தது. கலவரம் நடந்தது என்று பொய்யான ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட்டனர்.

இந்த பிரச்சனையின் தொடக்கம் தான் என்ன? என்று அவர்களிடம் கேட்ட பொழுது,

சென்ற வருடம் வழக்கம் போல அலகு குத்திக்கொண்டு அந்த கோவில் வழிபாட்டிற்கு சென்ற பொழுது, அந்த வருடம் நடத்திய கலை நிகழ்ச்சியில், வன்னிய சமூகத்தை குறிப்பிடுகின்ற பாடல் ஒன்றினை போட்டு அலப்பறை செய்து கொண்டிருந்தனர்.

இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்த மக்கள், இங்கு எல்லா சமூகத்தினரும் வந்து போகின்ற ஒரு பொதுவான கோவில்! இங்கு எதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை சார்ந்த பாடலை ஒலிபரப்புகிறீர்கள்? என்று கேட்ட பொழுது இது பிரச்சினையாக வெடித்துள்ளது. அந்த சமயம் காவல்துறையினர் தலையிட்டு அந்த பிரச்சனையை அப்போது சுமூகமாக முடித்து வைத்திருக்கின்றனர்.

எனவே இந்த முறை பண்டிகை தொடங்குவதற்கு முன்பே வன்னிய சாதி வெறியர்கள், இம்முறை தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள்ளே அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டனர்.

மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும், கங்கணம் கட்டுவது என்பது வழக்கம! கங்கணம் எல்லோரும் கட்டுவார்கள். அப்படி கட்டினால் அந்த பண்டிகைக்காக விரதம் இருந்து, வேண்டுதல் வைத்து, அதில் நேர்த்திக்கடன் செலுத்துவது என்பது வழக்கம்.

அதேபோன்று இந்த வருடம் தாழ்த்தப்பட்டவர்கள் சென்று கங்கணம் கட்டுமாறு கேட்டபொழுது, கோவில் நிர்வாகத்தினர் அதனை மறுத்துவிட்டனர். அதனால் தாங்களே கோவில் முன் நின்று, கங்கணம் கட்டிக்கொண்டு தங்கள் பகுதிக்கு வந்து, விரதம் இருக்கத் தொடங்கினர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் அந்த நாள் இரவு, நாக்கு அலகு குத்தி கொண்டு சென்றிருக்கின்றனர். இந்த முறை எப்படியும் கோவிலுக்குள்ளே அனுமதிக்க கூடாது என்று முன்கூட்டியே ஒரு முன் முடிவு எடுத்து வைத்துக்கொண்டு அதில் உறுதியாகவும் இருந்துள்ளனர் வன்னிய சாதி வெறியினர். அலகு குத்திக் கொண்டு கோவிலுக்கு சென்ற பொழுது, வெளியிலேயே நிறுத்தி வைத்து கோவில் கதவையும் அடைத்து விட்டு, “இனிமேல் நீங்கள் யாரும் கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது” என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். காலம் காலமாக நடந்து வந்த ஒரு நடைமுறையை தற்போது ஏன் மறுக்கிறீர்கள்? ஏன் கோவிலுக்குள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கிறீர்கள்? என்று கேட்டதின் விளைவு தான் தற்போது நடந்த கலவரத்திற்கான காரணம்.

தாக்குதல் நடத்திய சமூகத்தைச் சார்ந்த யார் ஒருவரும் பாதிக்கப்பட்டவர்களாகவோ, அல்லது உடல் ரீதியாக காயம் ஏதேனும் அடைந்தவராகவோ இல்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் தான் மண்டை உடைக்கப்பட்டும், முதுகில், கை கால்களில் அடி வாங்கியும், சிறு குழந்தைகளுக்கு பல் உடைந்தும், மிக கொடூரமாக தாக்கப்பட்டு பாதிப்பினை சந்தித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தற்போது தான் இளைஞர்கள் கல்வி கற்று ஒவ்வொரு துறைக்கு வரத் தொடங்கியுள்ளார்கள். இந்த சமயத்தில் அவர்களை விசாரணை இன்றி கைது செய்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பது என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான ஒரு வெறுப்புணர்வை காட்டுகிறது.

தற்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அளவில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சந்திக்கும் இன்னல்களும், துன்பங்களும், ஏராளம். அதில் எப்போதுமே தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு பொது புத்தியாக வைத்திருக்கிறது காவல்துறை. வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்களின் தாக்குதல் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உறுதுணையாக நின்று, மேலும் அவர்களுக்கு கூலியாள் படையாக ஊருக்குள்ளேயே நுழைந்து சரமாரியாக, கண்மூடித்தனமாக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது சிறியோர் முதல் பெரியோர் வரை தாக்குதல் நடத்தியிருப்பது என்பது கொடூரத்தின் மிக உச்சம்!

இவ்வளவு விஷயங்களையும் அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட போது கண்களில் கண்ணீர் தழும்பாமல் இல்லை.

அவர்களிடம் மகன்களை, சகோதரர்களை பறிகொடுத்த அந்த பரிதவிப்பும், ஏக்கமும், பயமும் கண்களில் அந்த கண்ணீர் துளிகளோடு கலந்திருந்தது. தங்களுக்கு எப்போது தான் விடுதலை? என்னதான் தீர்வு? எங்கேதான் நீதி என்ற கேள்வியே சுற்றி சுற்றி வந்வந்தது

தோழர். அன்பு, மாநில பொது செயலாளர்,

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

வழக்கறிஞர். பாலமுரளி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை

அரிகரன்,

சட்ட கல்லூரி மாணவர், சென்னை

அருகாமை பகுதி இளைஞர்கள், புமாஇமு உறுப்பினர்க்ள் மாரியப்பன், சதிஸ்.பழனிவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here