ஜென் சி என்று அழைக்கப்படும் இளைய தலைமுறையினர் இயல்பாகவே தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை உடைத்து முன்னேறுவதில், சொந்த முறையில் முயற்சி மேற்கொள்வதில் வல்லவர்களாக உள்ளனர்.

இன்றைய தலைமுறை இளைஞர்களை 2000- க்கு முன்பு பிறந்தவர்கள், 2000- த்துக்கு பின்பு பிறந்தவர்கள் என்று வேறுபடுத்தி பார்த்தால் பல்வேறு துறைகளில் சாதனை ஈட்டுகின்ற நபர்கள் இளைஞர்கள் அனைவரும் 2000ல் பிறந்த ஜென் சி இளைஞர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய வழிகாட்டுதலும், அவர்களுக்கு விருப்பமான துறையில் பரிணமிக்கின்ற சுதந்திரமும் கொடுக்கப்பட்டால் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை ஈட்டுவார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் நமது கண்ணகி நகர் கார்த்திகா.

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் பைசன் என்ற காளமாடன் கபடி விளையாட்டை முன்வைத்து சமகால அரசியல் மற்றும் கடந்த கால அரசியல் மீது குறிப்பாக சாதியை முன்வைத்து களமாடுகின்ற அரசியலின் மீது எதிர் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில் கபடி வீராங்கனை ஒருவர் ஒதுக்கி வைக்கப்பட்ட கண்ணகி நகரில் இருந்து சென்று சர்வதேச விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும்.

சென்னை என்றாலே கோடம்பாக்கமும், மயிலாப்பூரும், தியாகராய நகரும் நினைவுக்கு வருகின்ற காலத்தில் சென்னையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, தனது ரத்த வியர்வையும், எலும்பு மற்றும் நரம்பையும் ஒன்றிணைத்து உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து தூக்கி எறியப்பட்டது தான் வரலாறு.

நகரத்திலிருந்து வீசி எறியப்பட்ட எமதருமை உழைக்கும் மக்கள்!

“பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள், மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகள், ஓங்கி உயர்ந்து நிற்கும் பளபளப்பான மென்பொருள் நிறுவனங்கள், புதிய புதிய பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், அவற்றின் ஆயிரக்கணக்கான ஏ.டி.எம் நிலையங்கள், சர்வதேச ரக ஆடை நிறுவனங்களின் ஷோ ரூம்கள், பீட்சா கடைகள், கே.எஃப்.சி, காபி டே, மெக்டொனால்ட்ஸ், ஐந்து நட்சத்திர விடுதிகள், மற்றும் வகைவகையான வெளிநாட்டு கார்கள், குளிரூட்டப்பட்ட வால்வோ பேருந்துகள், மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், புதிது புதிதாக எழும் பல்லடுக்கு குடியுருப்புகள். இந்த ஜடப் பொருட்களோடு சேர்ந்து, ‘சாவதற்குள் சொந்த வீட்டில் படுத்து உறங்க வேண்டும்’ என்பதை லட்சியமாகக் கொண்ட மனிதர்கள்.

மாநகரங்கள் என்றால் பலருக்கும் தோன்றும் சித்திரம் இதுதான். உலகமயம் உருவாக்கிய இந்த நகரங்கள் தோன்றுவதற்காக மறைந்து போனவற்றை யாரும் காண்பதில்லை. சென்னையை அலங்கரிக்கும் இந்த கட்டிடங்கள் எல்லாம் இப்போது எழுந்தவை தான். இதற்கு முன்பும் அங்கே மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அகற்றப்பட்டதால் தான் இவை தோன்றியுள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கை நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை கொன்றிருக்கிறது, நூற்றுக்கணக்கான கைத்தொழில்களை ஒழித்திருக்கிறது. கோடிக்கணக்கானவர்களை பிச்சைக்காரர்களாக்கியிருக்கிறது. நகரங்களில் வாழ்ந்தவர்களை எல்லாம் கூட்டம் கூட்டமாக குப்பைக் கூளங்களை போல நகரத்திற்கு வெளியே விரட்டி, ஓரிடத்தில் குவித்துப் போட்டிருக்கிறது.

மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படும் இந்த மக்களாட்சி முதலாளிகளுக்காக முதலாளிகளின் விருப்பப்படி சென்னைக்குள் வாழ்ந்த ஏழை மக்களை சிறிது சிறிதாக நகரத்தை விட்டு நைச்சியமாக ஆசைகாட்டி ஏமாற்றியும், கட்டாயப்படுத்தி மிரட்டியும் வெளியேற்றி வருகிறது. உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையின் தரத்தை உயர்த்துவதற்காக வேண்டாத கழிவுகளைப் போல வெளியேற்றப்படும் இவர்களை புறநகர்ப் பகுதிகளான செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், ஒக்கியம், கண்ணகி நகர், நொச்சிக்குப்பம், பெரும்பாக்கம், எண்ணூர் ஆகிய இடங்களில் மொத்தமாகக் கொட்டி குவித்து வருகிறது”. என்று சென்னையின் பூர்வகுடி மக்களான உழைக்கும் மக்களை சென்னையில் இருந்து கண்ணகி நகருக்கும் செம்மஞ்சேரிக்கும் தூக்கி எறிந்த வரலாற்றை எமது தோழமை ஏடான புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013, இதழானது வெளியிட்டிருந்தது.

படிக்க:

 கொட்டி தீர்த்த மிக்ஜாம் புயல்: நிராதரவாக வட சென்னை மக்கள்!

 மணத்தி கணேசன்- மாரி செல்வராஜ்: பைசன்களைக் கொண்டாடுவோம்!

இவ்வாறு ஊருக்கு குறிப்பாக சென்னைக்கு வெளியில் தூக்கி வீசப்பட்ட கண்ணகி நகரில் இருந்து நாட்டின் பெருமையை காப்பதற்கு வெளிவந்துள்ளார் அருமை சகோதரி கார்த்திகா.

ஜென் சி இளைஞர்களின் போராட்ட குணத்தை வரவேற்போம்!

3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று, கபடி. அது இந்திய அளவில் கவனம் பெற்று, 1982ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கண்காட்சி ஆட்டமாக ஆடப்பட்டது. 1990 முதல் ஆண்கள் கபடியும், 2010 முதல் பெண்கள் கபடியும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முறையாக இடம்பெற்ற நிலையில், ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கபடி போட்டிகள் நடைபெறுகின்றன.

அதுபோலவே பக்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.. ஆண்கள் பிரிவில் லீக் சுற்றில் வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஈரான், பக்ரைன், தாய்லாந்து அணிகளை போட்டியில் தோற்கடித்து இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 35-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இதேபோல் இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் 75-21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை எளிதில் தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

பெண்கள் அணியில் மிகச் சிறப்பாக விளையாடி அதிகப் புள்ளிகளை ஈட்டியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகா. இவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசு நடத்துகின்ற முதல்வர் கோப்பை போட்டிகள் முதல் பல போட்டிகளிலும் தன் தனித்திறமையை வெளிப்படுத்தி தான் பங்குபெறும் அணியை வெற்றி பெற செய்தவர்தான்.

இளம் கபடி வீராங்கனை கார்த்திகா. தற்போது பக்ரைனில் நடந்த ஆசிய விளையாட்டு கபடி போட்டி இறுதி ஆட்டத்தில் ஈரானை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று இந்திய இளைஞர் கபடியிலும் அதே பெருமையைச் சேர்த்திருக்கிறார்.

தனது லட்சியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஒவ்வொருவரும் அதற்கு தடையாக உள்ள சாதி, மத, இன அடையாளங்களை தகர்த்தெறிந்து போராட வேண்டும் என்ற கண்ணோட்டத்தை, வர்க்கம் என்ற அடையாளத்தின் கீழ் செயல்படும் கண்ணோட்டத்தை வேறொரு மொழியில் நமக்கு முன் வைக்கின்றார் கார்த்திகா.

இந்திய சமூக அமைப்பில் விளையாட்டுத் துறையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் திறமையுள்ள வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக பல்வேறு லாபிகளின் மூலம் இடம் பிடிக்கும் திறமையற்றவர்கள்; பணம் படைத்தவர்கள்; அரசியல் மற்றும் செல்வாக்கு பின்னணி கொண்டவர்கள்; சாதியப் பின்னணி கொண்டவர்கள் ஆகியவர்கள் தான் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

விளையாட்டில் கூட உடல் நோகாமல் கோடிக்கணக்கில் பணத்தை குவிக்கின்ற கிரிக்கெட் போன்ற சோம்பேறி விளையாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்ற பார்ப்பன கும்பல் அவர்கள் விளையாடுவதை வியந்து ஓதுகின்ற ஊடக துதிபாடுகள் இந்தியாவின் முக்கியமான விளையாட்டு கிரிக்கெட்டை முன்னிறுத்துகின்றனர்.

படிக்க:

 மாணவர்களே! இளைஞர்களே! பகத்சிங் பாதை அழைக்கிறது! நாடு நமது பேரழுச்சிக்குக் காத்திருக்கிறது!

GEN Z இளைஞர்களின் போராட்டத் தீயில் பற்றியெரியும் நேபாளம்!

இந்த விளையாட்டில் பல லட்சம் கோடி ரூபாய் புரள்வதால் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் கிரிக்கெட் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. இந்த கிரிக்கெட்டிலும் அணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் பார்ப்பன கும்பலாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று சொல்லப்படுகின்ற ஹாக்கிக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது கபடி போன்ற விளையாட்டுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கப்படும் என்பதை நாம் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

விளையாட்டுத் துறையில் கபடியை ஒதுக்குவது என்பது மட்டுமின்றி கபடியில் குறிப்பிட்ட சாதியினரை ஒதுக்குவது என்ற சூழ்நிலைகளை தகர்த்தெறிந்து கண்ணகி நகரில் இருந்து கார்த்திகா சென்று சாதனை படைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இந்த இடத்தில்தான் ஜென் சி தலைமுறை தனது போராட்ட குணத்தை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்துகிறது. தனக்கு கிடைத்துள்ள அல்லது கிடைக்க பெறும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு தான் சார்ந்துள்ள துறையில் முன்னேறுவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் கடுமையான உழைப்பையும் செலுத்தி முன்னேறுகிறது என்பதை கண்ணகி நகர் கார்த்திகாவின் வெற்றியில் நாம் பார்க்க முடிகிறது.

அரசியல் பொருளாதாரம் மட்டுமின்றி பண்பாட்டுத்தளத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டுள்ள அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னேறுவோம்.

கண்ணகி நகர் கார்த்திகாவை போல் சாதனை புரிந்துள்ள புதிய தலைமுறை இளைஞர்களை நாம் முன் உதாரணமாக உருவாக்குவோம். விளையாட்டுத் துறையில் போராடி வெற்றி பெறுவதைப் போலவே அரசியல் துறையிலும் சமகாலத்தில் நிகழ்கின்ற கொடூரமான பாசிச அடக்குமுறைகளையும் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தையும் வீழ்த்துவதற்கு ஜென் சி தலைமுறையையும் இணைத்துக் கொள்வோம்.

சித்தார்த்

நன்றி புதிய ஜனநாயகம் தினசரி 

2 COMMENTS

  1. பக்ரைனில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டு தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவை மேலும் மேலும் உற்சாகப்படுத்துவோம்! வெற்றிகள் பல ஈட்டிட வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்!
    கிரிக்கெட் போன்ற சோம்பேறி விளையாட்டுக்கு மாற்றாக கபடி போன்ற வீர விளையாட்டுக்களில் பெண்கள் தமது வீர முத்திரையை பதிக்கும் விதமும், அந்த இடத்தை ஈட்டிட தடைகள் பலவற்றைக் கடந்து பயணித்து வெற்றிவாகை சூடுவதை நடப்பு பைசன் (களமாடன் – மன்னத்திக் கணேசன்)திரைப்படத்தோடு ஒப்பிட்டு நிஜமாக்கி இருக்கின்ற கட்டுரையாளரின் கருத்துப் பதிவுகள் சிறப்படைத்து. வாழ்த்துக்கள்!

  2. பக்ரைனில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியில் பழக்கம் என்ற கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வாழ்த்துக்கள் பைசன் திரைப்படத்தை ஞாபகப்படுத்தும் விதமாக சாதித்து காட்டியுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த பெண் துணிச்சலாகவும் சிறப்பாகவும் தன்னம்பிக்கையோடு உறுதியோடு போராடி கோப்பையை பெற்றுள்ளார் என்பது உடைக்கும் பார்க்கும் கொண்டாட கூடிய ஒரு வீராங்கனியாக நிஜத்தில் ஹீரோவாக இடம் பிடித்திருக்கிறார் கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா கார்த்திகாவை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here