டந்த ஒருவார காலமாக ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா  இந்தியாவின் இறையாண்மை மீதும் ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வந்த இந்தியாவை, ‘அப்படி இறக்குமதி செய்யக் கூடாது’ என்று சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆணையிட்டு தடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவின் உத்தரவை பணிந்து ஏற்றுக் கொண்டார் இந்திய பிரதமர் திருவாளர் மோடி.

இப்பொழுது, கடந்த வியாழக்கிழமை அன்று, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) “இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதிக்கும் தற்காலிக 30 நாட்கள் விலக்கு வழங்கப்படுகிறது,” என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக உலக நாடுகளின் எண்ணை தேவைக்கு  தட்டுப்பாடு ஏற்படும் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில், வேறுவழியின்றி,  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று இந்தியாவிற்கு 30 நாட்களுக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

அதுவும் கிழக்கு அமெரிக்கா (நியூயார்க் வாஷிங்டன் போன்ற நகரங்களின்) நேரப்படி மார்ச் 5, 2026 ஆம் தேதி 12:01 AM  நேரத்திலிருந்து ஏப்ரல் 4, 2026 ஆம் தேதி 12:01 AM நேரம் வரை மட்டுமே இந்தியாவானது ரஷ்ய நாட்டின் எண்ணையை வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு என்பது இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்; இந்தியாவின் இந்தியாவின் இறையாண்மையின் மீதும், சுயமரியாதையின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று பலரும் கொதித்து வரும் நிலையில் இந்திய நாட்டின் பிரதமரும், 56 இன்ச் மார்பு கொண்ட தெய்வக் குழந்தையுமான மோடி ஜீ முன்வாயையும் பின்வாயையும் இறுகப் பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க:

 இந்திய விவசாயிகளை ஒழிக்க வரும் இந்திய அமெரிக்க வணிக ஒப்பந்தம்!

 அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து போரை நிறுத்திய இந்தியா பாகிஸ்தான்

எளிமைப்படுத்திக் கூறவேண்டுமெனில், ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்துக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்; அதற்கான பொருளை எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதையெல்லாம் பக்கத்து வீட்டுக்காரரின் உத்தரவுப்படி செய்தார் என்றால் … அது எவ்வளவு பெரிய அவமானகரமான இழிவான செயலோ அதைப் போன்று தான் அமெரிக்காவின் இந்த உத்தரவுகளை ஏற்று இந்தியா நடந்து கொள்வது என்பதும் இழிவான செயல்தான் என்பதை ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மோடிக்கு முன்பு பிரதமராக இருந்த எவரும் இந்த அளவிற்கு கேவலமாக ஏகாதிபத்திய நாட்டின் காலடியில் விழுந்து இந்திய நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுத்ததில்லை என்னும் அளவிற்கு திருவாளர் மோடியின் செயல்பாடு அமைந்துள்ளது.

ஒவ்வொரு ‘சுதந்திர’ தினத்தன்றும் செங்கோட்டையில் நின்று கொண்டு  “2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவோம்… வல்லரசாக்குவோம்… (Viksit Bharat 2047) ….” என்றுதொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறார். விஸ்வகுருவே தொடர்ந்து இப்படி கூறுவதால் சங்கிகள் அனைவரும் Viksit Bharat 2047.., Viksit Bharat 2047…, என்று நாடு முழுக்க கூவிக் கொண்டிருக்கின்றனர்.

உயிரியல் ரீதியாக பிறக்காத, தெய்வக் குழந்தையான மோடி தனக்கு 56 இன்ச் மார்பு இருப்பதால்தான் தன்னால் துடிப்புமிக்க, வளர்ந்த மாநிலமாக குஜராத்தை மாற்ற முடிந்ததாக கூறியிருந்தார். இதை நம்பும் சங்கிகளின் ஆதரவாளர்கள் இப்பொழுதும் (மோடியின் மார்பளவு  காரணமாகவோ என்னவோ) மோடியின் பேச்சை அதாவது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கி விடுவார் என்று நம்புகின்றனர்.

இப்படி குருட்டுத்தனமான நம்பிக்கையில் உள்ள மக்களுக்கு உண்மையைப் புரியவைக்கும் வகையில் நாம் நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகத்தான் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களை, நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கின்ற கார்ப்பரேட் – காவிப் பாசிச சக்திகளின் செல்வாக்கில் இருந்து வென்றெடுக்க முடியும்; பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக குடியரசை அமைக்க முடியும். இதன் மூலமாகத்தான் இந்தியா வெளிநாடுகளுடன் செய்து கொண்டுள்ள அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ரத்து செய்து இந்தியாவை இறையாண்மை உள்ள நாடாக உருவாக்க முடியும்.

  • குமரன்

1 COMMENT

  1. இந்திய நாட்டின் இறையான்மையை அமெரிக்காவின் காலடியில் வைத்த மோடி அரசு !

    ரஷ்யாவிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள ட்ரம்ப் மோடியிடம் உத்தரவு போடுகிறார் அதை மோடியும் ஆமாம் சாமி என்று ட்ரம்பின் காலைத் தொட்டு வணங்குகிறார்
    கடந்த சில மாதங்களாக மோடி சுதேசி வேஷத்தை போட்டுக் கொண்டிருந்தார் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இந்திய பொருளை வாங்குவோம் என்று மூச்சுமுட்ட பேசிக் கொண்டிருந்தார் ஆனால் இன்று கச்சா என்னைக்காக டிரம்ப்பின் காலடியில் மண்டியிட்டு இருக்கிறார்
    நீங்கள் சொல்வது உண்மைதான் ஒரு குடும்பத் தலைவன் தன் குடும்பத்திற்கு என்ன தேவை எதிரில் தேவை எங்கே வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரமிக்க குடும்பத் தலைவனாக இருப்பான் ஆனால் மோடியோ அண்டை நாட்டு ட்ரம்பு மாமாவிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கேட்டுக் கூத்தாடி தைரியம் இல்லாத தன்மானத்தை இழந்த 56 இன்ச் மார்பு கொண்ட ஒரு Dகோமாளி மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here