கடந்த மாதம் தூய்மைப் பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டு ரிப்பன் பில்டிங் வாயிலில் போராடினார்கள். நீதிமன்றம் போலிசு கொண்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். “ஒப்பந்தப்படி பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என 06.09.25 தேதியில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்தினர். எம்ஆர்எப் தொழிலாளர்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் புதிய ஒப்பந்தம் போடாமல் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர்ந்து போராடி வருகிறார்கள், எஸ்.ஆர்.எப் தொழிலாளர்கள். சிபிசிஎல் ஆலையில் ஷட் டவுன் வேலையில் உள்ளூர் மக்களுக்கு 40 சதவீத பணி வழங்க மறுப்பதாகவும் வடமாநில தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் குவித்து வேலை வாங்கி வருவதாகவும் கண்டித்து பகுதி இளைஞர்கள் வேலை கேட்டு போராடி வருகிறார்கள். பெரியபாளையம் அருகில் உள்ள மஞ்சன்காரனை என்கிற கிராமத்தில் இயங்கி வரும் ஹைதரபாத் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் (HIL) ஆலையிலும், 25 ஆண்டுகளாக பணியாற்றும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், அவர்களுக்கு சீருடையும் வழங்காமல், பணிச்சுமையை அதிகரித்து, அவர்களை அரை நிர்வாண போராட்டத்துக்கு தள்ளியிருக்கிறது நிர்வாகம்.
இது தற்காலத்தில் நடந்து வரும் போராட்டங்களின் நிலவரம் மட்டுமே. கோத்தாரி ஆலையில் சங்க நிர்வாகிகள் பழி வாங்குதல், வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராட்டம் என போராட்ட சூழலில் வாழ்ந்து வருபவர்கள் தான் வட சென்னை தொழிலாளர்கள். மேற்சொன்ன மற்றும் இதுவரை நடந்துள்ள போராட்டம் அனைத்தும் சட்டமீறல் மற்றும் ஒப்பந்த மீறலில் ஈடுபடும் ஆலை முதலாளிகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டம் தான். சட்டப்படி தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிவிட்டு, அதை கேட்டு போராடும் தொழிலாளர்களை வன்முறையாளர்களைப் போல சித்தரிப்பது எல்லா காலத்திலும் நடப்பதைப் போலவே இப்போதும் நடந்து வருகிறது.
வடசென்னையில் 80 வருடங்களாக இயங்கி வரும் எம்ஆர்எப் ஆலை, இவ்வருடம் மட்டும் 1800 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதிகப்படியான வெப்பத்திலும், காற்று மாசிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உடலுழைப்பை உறிஞ்சும் எம்ஆர்எப் நிர்வாகம், NAPS தொழிலாளர்களை அனுமதித்தால் தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்துவேன் என சொல்லி, தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி கதவடைப்பு செய்துள்ளது. தொழிற்சங்கமும் நிர்வாகமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை நிர்வாகம் மீறி நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டியும் கடிதம் அளித்தும் எதுவும் பதில் இல்லை என்பதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராடும் தொழிலாளர்களுக்கு உணவு போக்குவரத்து வசதிகளை மறுத்ததோடு போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது, எம்ஆர்எப் நிர்வாகம்.
அதேபோல் எஸ்ஆர்எப் நிர்வாகத்தில் கடந்த 2024 மார்ச் மாதம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தம் உருவாக்க வேண்டி 2024 ஜனவரியிலேயே எஸ்ஆர்எப் தோழர்கள் கடிதம் மூலம் தங்கள் கோரிக்கையை கொடுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஒரே ஒரு பேச்சு வார்த்தையும் 2025 இல் ஆறு பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள சூழலில் இதுவரை நிர்வாகம் கடந்த ஆண்ட விட அதிகமான ஊதிய உயர்வு அறிவிக்காமல் சொற்பத்தொகையை பேசி நாட்களை கடத்தி தொழிற்சங்கத்தை மதிக்காமல் தொழிலாளிகளை சீண்டி வருகிறது. தாய்லாந்தில் ஆலை மூடல், துபாயில் ஆலைமூடல், மணலியில் உற்பத்தி பிரிவு மூடல் என பஞ்சப்பாட்டு பாடுகிறது நிர்வாகம். 1974-ல் மணலியில் முதல் ஆலை துவங்கிய பின்னர் எத்தனை ஆலைகள் துவங்கப்பட்டுள்ளன, எத்தனை துறைகளில் முதலீடுகள் போடப்பட்டுள்ளன, எத்தனை ஆலையில் உற்பத்தி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன? லாப கணக்கு என்ன என்பது குறித்து SRF ஆலை விவரங்களை வெளியிட தயாரா?
தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளது? எத்தனை செலவுகளை குறைத்துக் கொள்கிறார்கள். எத்தனை பேர் கடனாளியாக மாற்றப்பட்டிருக்கின்றனர், எத்தனை தொழிலாளர்கள் பகுதி நேர வேலை பார்க்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என எல்லா விவரமும் தொழிலாளர்களால் தர முடியும். நிர்வாகத்தால் தனது லாபத்தை பற்றி வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? நஷ்டக் கணக்கு காட்டி தொழிலாளிகளிடத்தில் ஒப்பாரி வைப்பது, லாபத்தை சுருட்டிக் கொள்ளும் கதைகள் தொழிலாளர்கள் அறியாமலில்லை.
படிக்க:
♦ சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது! போராட்டத்தை சிதைக்கும் திமுகவின் துரோக செயல்!
♦ தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!
எஸ்.ஆர்.எஃப் ஆலையில் நிரந்தர தொழிலாளிகளுக்கு இணையான எண்ணிக்கையில் NAPS பயிற்சியாளர்களை வைத்து உற்பத்தியை நடத்தி வருகிறது. 50 ஆண்டுகளாக வடசென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எஃப் ஆலை தொடர்ந்து உற்பத்தி விரிவாக்கம் செய்து வருவதும், அதில் பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதும், ஆலை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிகப்படியான ஊதிய உயர்வை தந்து, நிரந்தர தொழிலாளர்களை ஊதிய உயர்வு, சட்டப்பூர்வ போனஸ் என அனைத்திலும் வஞ்சித்து வருகிறது.
போராட்டக் களத்தில் நின்று தடியடி, சிறை என அடக்குமுறைகளை சந்தித்த முதுபெரும் தொழிற்சங்க தலைவர் தோழர் ஆர் குசேலன் தான் எஸ்ஆர்எஃப் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். எம்ஆர்எப் தொழிலாளர் சங்கத்திலும் தொழிற்சங்க அனுபவம் கொண்ட தோழர் எழில் கரோலின் தொழிற்சங்க தலைவராக பொறுப்பில் இருக்கிறார். இடதுசாரி சிந்தனை கொண்ட, தொழில்முறை தலைவர்களாகவே தொழிற்சங்கவாதிகள் இருக்கின்ற போதிலும் முதலாளிகள் அப்பட்டமான சட்ட மீறல்களிலும் ஒப்பந்தம் மீறல்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்ட பாரம்பரியத்தில் சங்கத்தை கட்டி வளர்த்து முன்னுதாரணம் மிக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட வரலாறு கொண்டது வடசென்னை தொழிலாளி வர்க்கம். தனது பொருளாதாரக் கோரிக்கைகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் போராட்டங்களிலும் உணர்வுபூர்வமான பங்களிப்பை செலுத்தி பல சாதனைகளை செய்துள்ளது. இத்தனை போராட்ட பாரம்பரியமும் வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்கங்களையும் போராட்டம் மரபில் வளர்த்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களையும் எதிர்த்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முதலாளிகளிக்கு துணிவு வந்தது எப்படி?
திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கு!
சமத்துவம், சமூக நீதி, பாசிச எதிர்ப்பு என்கிற புள்ளியில் இடதுசாரிகள் ஜனநாயக, முற்போக்கு சக்திகள் உடன் அணிசேர்ந்தும், தொழில் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம் என்கிற பார்வையில் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையம், எட்டு வழி சாலை, சாம்சங் தொழிலாளர்களுக்கு சங்க உரிமை மறுப்பு, இப்பொழுது வரை போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தர கோரிக்கை வரை அனைத்து முக்கிய விவசாய-தொழிலாளர் வாழ்வாதார பிரச்சனைகளில் திமுக அரசு மக்கள் விரோதமாகவே செயல்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது. திமுக அரசின் இந்த பக்கச் சார்பான நடவடிக்கைகள் தான் முதலாளிகளுக்கு தனி தைரியத்தை கொடுக்கின்றது. இந்த கட்டுரை எழுதப்படும் நேரத்தில், ஹூண்டாய் ஆலை வாயிலில் போலிசு தொழிலாளர் ரத்தம் குடிக்க காத்து கிடக்கிறது. (ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பிரச்சனையில் தொழிலாளர்கள் போராடாமல் தடுக்க ஹூண்டாய் ஆலை வாயிலில் போலிசு குவிக்கப்பட்டுள்ளது).
வெளிநாடுகளில் சென்று முதலீட்டை ஈர்ப்பது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது, டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது, இந்தியாவில் பொருளாதார ரீதியில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக தக்கவைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே மாநிலத்தை முன்னேற்றுவது என தவறான பார்வையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுகிறது. ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் முன்னேற்றம் என்பது அங்கு வாழும் விவசாயிகள் தொழிலாளர்கள் வளர்ச்சியை அளவிடுவதா? முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு அளவிடுவதா? எது சரியானது? நிரந்தர தொழிலாளர்களை அறவே ஒழித்து, ஒப்பந்த பணியாளர்களையும், பயிற்சியாளர்களையும் வைத்து தொழில் நடத்தினால் நாடு பொருளாதார முன்னேற்றம் அடையும் என்பது என்ன பார்வை? அனைத்து தொழிலாளர்களையும் கொத்தடிமைகளாக்க தொழிலாளர் நலச் சட்டங்களைக் காவு கொடுத்தது, பாசிச மோடி அரசு. பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டே அதை நடைமுறைப்படுத்துகிறது திமுக அரசு.
அரசே அந்த கண்ணோட்டத்தில் தான் தூய்மைப் பணியாளர் போராட்டத்தை அனுகுகிறது. ராம்கி நிறுவனம் செய்யும் வேலையை அரசால் செய்ய முடியாதா? அதை விடவும் போலிசை அனுப்பி போராடும் தொழிலாளர்களை களைப்பது முதன்மை வேலையாக செய்கிறது அரசு. இது கொள்கை சம்மந்தமான பிரச்சனை. தனியார்மயக் கொள்கை தான் அரசைப் பிடித்து ஆட்டுவிக்கிறது. அதிலிருந்து விடுவித்துக் கொள்ளாமல் எத்தனை மேடைகளில் சமூகநீதி சமத்துவம் பேசியும் பயனில்லை. தொழிலாளர் – விவசாயிகள் நலனை உள்ளடக்காத திராவிட மாடல் என்பது வெற்று அலங்காரச் சொல்லாக தான் இருக்கும்.
முதலாளிகள் தாங்களாகவே CII, FICCI, ASSOCHAM போன்ற முதலாளிகள் சங்கங்களை ஏற்படுத்தி கொண்டு, இந்திய பொருளாதாரத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளி வர்க்கமும் நாடு தழுவிய அளவில் தனக்கான அமைப்பை நிறுவிக் கொண்டு போராட வேண்டிய சூழல் கனிந்து வருகிறது. தனியொரு ஆலைப் பிரச்சனைக்காக அந்த பகுதி தொழிற்சங்கங்களும், இதர பிரிவு தொழிலாளர்களும், தனியார்மயக் கொள்கை போன்ற தேசிய அளவிலான பிரச்சனைகளுக்கு நாடு தழுவிய அளவிலான தீரமிக்க போராட்டங்களும் தான் உடனடி தேவை. அதை வடசென்னை தொழிலாளர்கள் துவங்கி வைக்க, போராடும் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்!
- இளமதி