13 நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி மழை – வெயில் பாராமல் நீதிக் கேட்டு போராடி வந்த துப்புரவுத் தொழிலாளர்களை இன்று நீதிமன்றத்தின் துணையுடன் ஏவல்படையான காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாக கைது செய்து ‘அப்புறப்படுத்தியுள்ளது’ திமுக அரசு!
நூற்றுக்கணக்கான கோடி ஊதியம் பெறும் நடிகரின் “கூலி” திரைப்படத்தைப் பார்த்து வாழ்த்து சொல்ல நேரமிருந்த ஸ்டாலின் அவர்களுக்கு அற்ப கூலிக்கு வேலை பார்க்கும், தங்கள் வாழ்க்கைக்காக போராடிய தூய்மை பணியாளர்களை சந்திக்க நேரமில்லை.
நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்வார்கள். அந்த சுதந்திரம் உழைக்கும் மக்களுக்கு இல்லை என்பதை இன்றைய நள்ளிரவு தூய்மைப் பணியாளர்களை திமுக அரசும் காவல்துறையும் நடத்திய விதமே சாட்சி.
நாளை(ஆகஸ்ட் 15) சுதந்திர தினம். ரிப்பன் மாளிகை வண்ணவிளக்குகளுடன் ஜொலிப்பதற்கு தூய்மைப் பணியாளர்கள் தடையாக இருப்பதாக அவர்களை அப்புறப்படுத்தி அவர்கள் குடும்ப விளக்கை அணைத்துள்ளது திமுக அரசும், நீதிமன்றமும்.
சென்னையின் மையப்பகுதியில் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களைக் கைது செய்து 6, 7 ஆக பிரித்து புறநகர் பகுதிகளில் அடைத்து வைத்துள்ளது காவல்துறை.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துப்பில்லாமல் போராடியவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுவது தான் சமூக நீதி என்றால் அப்படியான சமூகநீதியை மக்கள் தூக்கியெறியவும் தயங்க மாட்டார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உணர வேண்டும்.
காவி பாசிசக் கும்பல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை ஒருபுறம் ‘எதிர்த்துக்’ கொண்டு மறுபுறம் மாநகராட்சி பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை செய்துள்ளது திமுக அரசு.
படிக்க: தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!
பதிமூன்று நாட்களாக தங்கள் வாழ்வாதாரம் பறிப்போவதை தடுக்க தூய்மைப் பணியாளர்கள் போராடினார்கள். போராட்டக் களத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள தொலைவு 1 கிலோ மீட்டர் தான். அந்த வழியாக போராட்டத்தை பார்த்துச் செல்லும் நீதிபதிகளுக்கு வறியவர்களின் வலி புரியவில்லை.
யாரோ தேன்மொழி என்ற ஒருவர் பொதுநல வழக்கு பதிவு செய்ததை விசாரித்த நீதிமன்றம், பிரச்சினையை களத்திற்கு சென்று பார்க்காமல் குறைந்தபட்சம் என்ன என்று கூட ஆராயாமல் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இது மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள் உழைக்கும் மக்களுக்கு இழைக்கும் துரோகம்.
தனியார் மயம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. மக்களின் உழைப்பைச் சுரண்டி தன் வயிற்றை வளர்க்கும் தனியார்மயத்தை நடைமுறைத்தும் ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தின் படி நடக்க முடியாது. தனியார்மயத்தை நடைமுறைப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக தூய்மை பணியாளர்களை நடத்திய விதமே அதற்கு சான்று.
போராடிய தொழிலாளர்களை ‘அப்புறப்படுத்தி’ விட்டால் போராட்ட உணர்வு குன்றாது என்பதை கடந்த கால போராட்ட அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அனுபவங்களின் மூலம் கார்ப்பரேட் ஆதரவு திமுக அரசுக்கு பாடம் கற்பிப்போம். தனியார்மயக் கொள்கைக்கு முடிவுகட்டுவோம்.
கூலிகளுக்காக நிற்காத ஸ்டாலின்? பேசாத ஸ்டாலின்?
கூலி படத்திற்காக பேசுகிறார்,கலாநிதி மாறனோடு நிற்கிறார் …
மக்களுக்காக சமூக நீதி அரசு இல்லை ?கார்ப்பரேட்டுகளுக்கும் கலை கூத்தாடிகளுக்குமான அரசு திமுக என்பதை நிரூபித்துள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் அருகில் அமைதியாக போராடிய தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு போராடியவர்களை காவல்துறை மூலம் அடக்குமுறை செலுத்தி அவர்களை திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளது திமுக அரசு
சென்னை உயர் நீதிமன்றம் தேன்மொழி என்கின்ற ஒரு பெண் கொடுத்த புகார் அடிப்படையில் தூய்மை பணியாளர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்ட நீதிபதி தூய்மை பணியாளருடைய வலியை புரிந்து கொள்ளலாமல் ஒரு அநீதியான தீர்ப்பு கொடுத்துள்ளார் என்று கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்