
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்!
திருச்சியில் மாலைக்கோட்டை NSB சாலையில் தரைக்கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து அனைத்து தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இன்று 01.12.2025 காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியிடம் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி தன்னால் எதுவும் செய்ய முடியாது உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கினார்.
அதை தொடர்ந்து அனைவரும் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். பேரணியில் வெண்டிங் கமிட்டியை கலைத்திடவும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாரும் முழக்க அட்டைகளை ஏந்தியவாரும் வியாபாரிகள் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 5 பேருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என கூற அனைவரும் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து ஊடகங்களும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை பதிவு செய்தனர். ஊடகங்களுக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் பேட்டி அளித்தனர். பிறகு போரட்டத்தின் நோக்கத்தை விளக்கியும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் அனைத்து வியாபாரிகளுக்கும் இருவரும் விளக்கி பேசினர்.
உடனடியாக காவல்துறை அதிகாரி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே சென்றவுடன் ஐந்து ஐந்து நபர்களாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிக்கலாம் என அதிகாரி கூறி வியாபாரிகளை உள்ளே செல்ல அனுமதி அளித்தார். வியாபாரிகள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் தங்களது மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதன் பிறகு தரைக்கடை வியாபாரிகள் அனைவரையும் அழைத்த தரைக்கடை கூட்டமைப்பின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வர்த்தக அணி ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருச்சி மாவட்டம் தொடர்புக்கு : 809860 4347.







