கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமையன்று கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருப்பதை நன்கு அறிந்தது இருந்த பொழுதும் விஜய் கரூரில் இருந்து ஓட்டம் பிடித்தார். திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் இவரிடம் பேட்டி எடுக்க முயன்ற போது எதுவுமே பேசாமல் சென்னைக்கு வந்து பதுங்கிய விஜய் இரண்டு நாள் கழித்து, மூன்றாவது நாளில் திருவாய் மலர்ந்து இருக்கிறார். அவர் பேசிய விஷயங்களை ஒவ்வொன்றாக பார்த்து விடலாம்.
“நானும் மனுஷன் தானே அந்த நேரத்துல அத்தனை பேரு பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது அந்த ஊரை விட்டுட்டு என்னால எப்படி கிளம்பி வர முடியும்? நான் திரும்ப போகணும்னு இருந்துச்சுன்னா…ஒரு காரணங்காட்டி அங்கே வேற சில பதட்டமான சிச்சுவேஷன்ஸ்… வேற சில அசம்பாவிதங்கள் நடந்திடக் கூடாது என்பதற்காக… அத நான் அவாய்ட் பண்ணினேன்” என்று அந்த வீடியோவில் விஜய் பேசியிருக்கிறார்.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது மற்றும் 50 பேர் படுகாயம் அடைந்தது குறித்து சீன அரசு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நடந்துள்ள விபத்தைக் கண்டு சீன அரசே வருத்தமுற்று வீடியோ வெளியிட்ட பிறதான் இந்தக் கோர விபத்தின் சூத்திரதாரி – கதாநாயகன் விஜயின் வீடியோ வெளி வந்திருக்கிறது.
நேரில் சென்றால்தான் “வேற சில அசம்பாவிதங்கள்” நடந்துரும்முண்ணு பயந்தீங்க… சம்பவம் நடந்த மறுநாளே, வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடுவதற்கு உங்களுக்கு என்ன கேடு? 40 பேரு செத்ததுனால துக்கம் உங்க தொண்டையை அடைச்சிருச்சோ? இந்த நாலு நிமிஷம் வீடியோ பேசறதுக்கு மூணு நாள் ஆயிருக்கு. ரெண்டு நாள் நல்லா வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு மூணாவது நாள் எவனோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்ட பேசுறதுக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா? கிரிமினல்கள் வெட்கப்பட்டதாக சரித்திரம் இல்லை.
விஜய்யை கிரிமினல் என்று அவரது பேச்சிலிருந்து தான் கூறுகிறோம். விஜய் நடந்த தவறுக்கு வருந்துவது மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது என்ற சிந்தனை சிறிது இல்லாத, தான் ஒரு கிரிமினல் என்பதை விஜய் அடுத்து கூறிய வார்த்தைகளில் நிரூபிக்கிறார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட மக்கள் மரணங்களுக்கு மட்டுமல்ல, அவரது கட்சியின் முதல் மாநாட்டில் இறந்தவர்கள் தொடங்கி, அவரது கூட்டத்துக்கு வரும் போது இறந்த தொண்டர்கள் வரை யாருக்கும் அவர் வருத்துமுற்று அஞ்சலி செலுத்தியதில்லை. அதிகாரம் கிடைத்தால் மோடி, ஜெயலலிதாவையே முந்திடுவார்.
“கிட்டத்தட்ட அஞ்சு மாவட்டத்துக்கு பிரச்சாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல. ஆனா கரூர்ல மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காங்க. கரூர சேர்ந்த மக்கள் அந்த உண்மை எல்லாம் வெளியில சொல்லும் போது எனக்கு கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மை எல்லாம் சொல்ற மாதிரி தோணுச்சு. எல்லா உண்மைகளும் வெளியில வரும்” என்று பேசி இருக்கிறார். நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாம். நடத்தியது யார் என மக்களுக்கு தெரியுமாம். குற்றச்சாட்டை இவர் வைப்பாராம், ஆதாரத்தை நாம் தேட வேண்டும் என சீமான்தனமாக பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் கிட்டத்தட்ட 400 பேர் மயங்கி விழுந்துள்ளனர். அதேபோல மதுரை மாநாட்டிலும் பல மயக்கமுற்று இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சேர்களை விஜய் ரசிகர்கள் உடைத்துள்ளனர். ஒருவர் இறந்திருக்கிறார். அடுத்தடுத்து திருச்சி, அரியலூர் போன்ற இடங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் அராஜகங்களில் ஈடுபட்டுள்ளதை கண்டு தமிழக மக்கள் காரி துப்பியுள்ளனர்.
கரூருக்கு திட்டமிட்டே மிகமிக தாமதமாக வந்த விஜயை, குறிப்பிட்ட இடத்திற்கு முன்பாகவே நின்று கொண்டு பேசுமாறு காவல்துறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போதும் அதை ஒப்புக் கொள்ளாமல் மக்கள் கூட்டத்திற்கு இடையில் அவ்வளவு பெரிய பேருந்தை செலுத்திக் கொண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கி கீழே விழுந்தவர்கள் மற்றவர்களின் காலடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவ்வளவு நடந்து கொண்டிருந்த பொழுதும் விஜய் தனது பிரச்சாரத்தை நடத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.
மரத்தின் மீது நின்றிருந்த ரசிகர்கள் மரத்தின் கிளை ஒடிந்து கீழே இருந்தவர்களின் மீது விழுந்ததில் பலர் இறந்துள்ளனர். வீட்டின் கூரையின் மீதும் ஏறி நின்ற ரசிகர்கள் கூரை பிரிந்து விழுந்ததால் கீழே இருந்த மக்கள் இறந்துள்ளனர். இதில் எங்கே செந்தில் பாலாஜியின் சதி இருக்கிறது?
கரூரைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக இவற்றையெல்லாம் அந்த கூட்டத்தில் நேரடியாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள், இப்பொழுதும், விஜய் மற்றும் அவரது கட்சியினரை எப்படி எல்லாம் திட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பது தினம்தோறும் செய்திகளை கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் ஏதோ திமுகவின் – செந்தில் பாலாஜியின் சதிச்செயல் காரணமாகத்தான் இவ்வளவு பெரிய கோர சம்பவம் நடந்துவிட்டது போல சமூக ஊடகங்களில் சிலர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஜய் இப்படிப்பட்ட ஒரு கருத்தை கூறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.
அடுத்து “எங்களுக்கு தரப்பட்ட இடத்தில நாங்க போய் அந்த ஸ்பாட்ல நின்னு நாங்க பேசிட்டு வந்ததை தாண்டி எந்த தவறும் நாங்க செய்யல” என்று பேசியிருக்கிறார்.
இவ்வளவு கொடூர துயரம் நிகழ்ந்ததற்கு விஜய் அறிவித்திருந்தபடி (தவெக அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிவித்திருந்தபடி) விஜய் கரூரில் மதியம் 12 மணிக்கு வராமல் மாலை 6:30 மணிக்கு தாமதமாக வந்ததுதான் முதன்மையான காரணம் என்று தவெக தவிர்த்த பெரும்பாலான கட்சிகளும் அனைத்து செய்தித்தாள்களும் தொலைக்காட்சி சேனல்களும் திரும்பத் திரும்ப கூறுகின்றன.
நாமக்கல்லில் விஜய் காலை 8:30 மணிக்கு பேசுவார் என்று தவெக -வால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை விமான நிலையத்திற்கு விஜய் வந்ததே காலை 8:45 மணிக்குத்தான். இப்படித் தாமதமாக புறப்பட்டதற்கான எந்த விளக்கத்தையும் தனது பேச்சில் விஜய் கூறவில்லை.
முதல் நாள் இரவில் அடித்த சரக்கின் போதை தெளிய நேரமானதால்தான் தாமதமாக புறப்பட்டார் என்று நாம் கூற தயாராக இல்லை. காரணம் அப்படி கூறினால் விஜய் ஒரு வகையில் நல்லவர் என்று ஆகிவிடும்.
அதாவது, அதிகாலையிலேயே புறப்பட்டு நாமக்கல்லிற்கு சரியான நேரத்தில் சென்று மக்களிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் விஜய் என்று அவரது பண்பிலே இல்லாத ஒன்றை கூறுவதாக அமைந்துவிடும்.
நாமக்கல்லிற்கு விஜய் தாமதமாக வந்ததன் காரணமாக வெயிலில் நெடுநேரம் நின்றிருந்த மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு 40 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்ட பிறகாவது உரிய நேரத்திற்கு கரூர் சென்று பேசி விட வேண்டும் எண்ணம் விஜய்க்கு வரவில்லை.
கரூருக்கு மதியம் 12 மணிக்கு வர வேண்டிய விஜய் மாலை 6:30 மணிக்கு மேல்தான் வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது குறித்து ஒரு சிறு வருத்தம் கூட விஜய் தெரிவிக்கவில்லை. தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
மதியம் 12 மணிக்கு விஜய் வந்து விடுவார் என்று நம்பி அதிகாலையில் இருந்தே காத்துக் கொண்டிருந்த ரசிகர் கூட்டம் சுட்டெரிக்கும் கரூரின் வெயிலில் வறுபட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி கிரிமினல் விஜய்க்கு கவலையில்லை. பல ஆயிரக்கணக்கான பேரை குடிக்க நீரோ பசிக்கு உணவோ கொடுக்காமல் கொடூரமாக நடத்தியதை பற்றி விஜய்க்கு குற்ற உணர்வு ஏதுமில்லை.
கிராமங்களில் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்பவர்கள் வெயிலில் நடந்து செல்ல முடியாது என்பதற்காக, அவர்களின் மீதும் காலிலும் தண்ணீர் ஊற்றுவதற்கு என்று சில பேரையும் அவர்களின் தாகத்தை தணிப்பதற்கு குடிநீர் போன்றவற்றைக் கொடுப்பதற்கு சில பேரையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்து விழாவை நடத்துவது என்பது தமிழக கிராமங்களில் கூட வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
கோவிலுக்கு வரும் நபர்களுக்கு தாகம் ஏற்படும் எனவே ஆங்காங்கே தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவில் திருவிழாக்கள் ஒவ்வொன்றும், சாதாரண மக்களால் கூட, திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கும் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும் பசி எடுக்குமே அவர்களின் பசியாற்ற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு.
அப்படிப்பட்ட மாநிலத்தில் திட்டமிட்டு மக்களை வரவழைத்து குடிக்க நீரும் கூட கொடுக்காமல் வெயிலில் நிற்க வைத்து கொன்ற கிரிமினல்கள் நிறைந்த கட்சி அல்லவா தவெக? இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை செய்து விட்டு நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விஜயால் எப்படி பேச முடிகிறது? தனது தாய் தந்தையை… மனைவி மக்களை குளிரூட்டப்பட்ட மண்டபத்திலேனும் இப்படி நிற்க விடுவாரா?
சூட்டிங்கிற்கு இப்படி ஏழு மணி நேரம் தாமதமாக விஜய் செல்வரா? அப்படிச் சென்று விட்டு டைரக்டரிடமோ புரடியூசரிடமோ தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்வாரா? சொல்ல மாட்டார். மக்களிடம் மட்டும்தான் அப்படி சொல்லுவார். ஏனெனில் மக்கள் விஜயின் கூந்தலுக்கு சமமானவர்கள்… மக்கள் அவரது தரிசனத்திற்காக தவம் கிடக்க வேண்டிய அற்பப்பதர்கள். இப்படித்தான் விஜய் மக்களை மதிக்கிறார்.
தொடர்ந்து பேசிய விஜய் “…எந்த தவறும் நாங்க செய்யல.
பட், இருந்தாலும் எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர் மேல எஃப் ஐ ஆர். அது மட்டும் இல்ல, சோசியல் மீடியாவை சேர்ந்த நண்பர்கள் தோழர்கள் அவங்க மேல எஃப் ஐ ஆர் எல்லாம் போட்டு புடிச்சிட்டு இருக்காங்க” என்று பேசியிருக்கிறார்.
விஜயின் ஆதரவாளர்களும் விஜய்க்கு ஆதரவான சோசியல் மீடியாக்களும், ‘காவல்துறை சரியாக திட்டமிட்டு செயல்படவில்லை; போதுமான காவலர்களை காவலுக்கு நிறுத்தவில்லை; காவல்துறை தான் இந்த துயரத்திற்கு காரணம். செந்தில் பாலாஜி ஆட்கள் கல்லெறிந்து கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்தியது காரணம். விச ஊசி போட்டு கொன்றிருப்பார்கள். அதை மறைக்க இரவே பிணக்கூராய்வு செய்துள்ளனர்’ என்று பொய் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். செத்தவர்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் தானா என்றே சந்தேகமாக உள்ளது என்று கிளப்பினர்.
50 பொது மக்களுக்கு ஒரு காவலர் என்ற அளவில் தான் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்கவைக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு 20 பேருக்கு ஒரு காவலர் என்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது திட்டமிட்டபடி விஜய் கரூருக்கு 12 மணிக்கு வந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இருந்திருக்காது. உண்மை இவ்வாறு இருக்க இவர்கள் வேறு விதமாக பொய் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறையைப் பார்த்து இந்த கேள்வியை கேட்கும் சமூக ஊடக கணவான்கள் “தவெக சார்பில் எத்தனை பேர் தொண்டர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்? அவர்களில் ரசிகர்களை ஒழுங்குபடுத்துவதற்காக எத்தனை பேர் ஒதுக்கப்பட்டு இருந்தனர்? குடிநீர் போன்றவற்றைக் ரசிகர்களுக்கு வினியோகிப்பதற்காக எத்தனை பேர் ஒதுக்கப்பட்டு இருந்தனர்? ஏன் தவெகவினர் இந்த ஏற்பாடுகள் எதையுமே செய்யவில்லை” என்ற கேள்விகளை மறந்தும் கூட கேட்கவே இல்லை.
தொடர்ந்து பேசிய விஜய் “சிஎம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கணும் என்கிற எண்ணம் இருந்துச்சுன்னா என்னை என்ன வேணாலும் பண்ணுங்க, அவங்க மேல கை வைக்காதீங்க. நான் ஒண்ணு வீட்டில் இருப்பேன். இல்லன்னா ஆபீஸ்ல இருப்பேன். என்ன என்ன வேணும்னாலும் செய்யுங்க” என்று சவடால் அடிக்கிறார்.
அதாவது தனது கிரிமினல் தனத்தை மறைப்பதற்காக தவறே செய்யாத எதிர் தரப்பினர் மீது சேற்றை வாரி இறைப்பபது என்ற பாஜகவின் பாணியை அப்படியே காப்பி அடைத்து வாய்ஜாலம் காட்டியிருக்கிறார் விஜய்.
தான் ஒரு மாபெரும் தைரியசாலி அஞ்சா நெஞ்சன் என்று காட்டிக் கொள்ளும் விஜய் அவர்களே,
‘சிஎம் சார் முடிஞ்சா என் மேல கை வெச்சு பாருங்க…
எங்க கை வையுங்க பார்க்கலாம்…
வச்சு பாருங்க…
பிஜேபியோட ஆளு நானு…
கை வச்சா என்ன நடக்கும் தெரியுமில்ல?’
என்று சற்று வெளிப்படையாக பேசி இருக்கலாம். இல்லை இல்லை வெளிப்படையாகவே நீங்கள் மிரட்டி இருக்கலாம். ஒருவேளை இந்த அளவிற்கு வெளிப்படையாக பேசி உங்களுக்கும் பாஜகவினருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பை வெளிப்படுத்தி மாட்டிக் கொள்ளக் கூடாது என்று பாஜகவினர் கூறியதால் தான் தங்கள் வீரத்திற்கு அணை போட்டு விட்டீர்களோ?
போராடும் மக்களை பார்த்து “மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்”என்று எம்ஜிஆர் சொன்னால் அடுத்து வரும் நாட்களில் அதிமுக ரவுடிகளை விட்டு உரிமை கேட்டுப் போராடும் மக்களை அடிக்கப் போகிறார் என்று அர்த்தம். அப்படித்தான் எம்ஜிஆர் செய்து கொண்டிருந்தார்.
எம்ஜிஆரை போல் தானும் ஒரு முதல்வராகி விட வேண்டும் என்று பேராசைப்படும் விஜய் எம்ஜிஆர் வழியில் ‘மக்கள் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க’ என்று வெளிப்படையாக திமுகவினரை மிரட்டாமல் பாஜகவின் அறிவுரையை ஏற்று “மக்கள் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்காங்க” என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.
விஜய் தனது பேச்சின் இறுதியில் தமிழர்கள் அனைவரும் அஞ்சி நடுநடுங்க வேண்டிய அளவுக்கு “நண்பர்களே, தோழர்களே நம்முடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்ட்ராங்கா, இன்னும் தைரியத்தோட கண்டினியூ ஆகும். தேங்க்யூ” என்று ஒரு மாபெரும் இடியை தமிழர்களின் தலையில் இறக்கி இருக்கிறார்.
விஜய்யும் தவெக -வும் ஒரு விஷச் செடி. இத்தகைய விசச் செடியை வளர விடலாமா? மக்களே சிந்தியுங்கள்!
– குமரன்