ந்தியாவின் துணை ஜனாதிபதி என்று சொல்லப்படுகின்ற, மிகப்பெரிய ’ரப்பர் ஸ்டாம்ப்’ பதவியில் ஏற்கனவே இருந்துக் கொண்டு, தலையசைத்துக் கொண்டிருந்த ஜெகதீப் தன்கர், ஆர்எஸ்எஸ் பாஜக நடவடிக்கைகளுக்கு எதிராக சில கேள்விகளை எழுப்பியதால் வீசி எறியப்பட்டு அந்த இடம் வெற்றிடமானது.

தற்போது மீண்டும் அந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் முஸ்தீபுகள் ஆரம்ப மானதையொட்டி பாஜக மற்றும் காங்கிரசு கூட்டணிக் கட்சிகளிலிருந்து புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு முகாம்களாக பிரிந்து நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

பாசிச பாஜக முகாமிலிருந்து போட்டியியிடும் தமிழகத்தைச் சார்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தனது 16 ஆம் வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனசங்கம் ஆகிய அமைப்புகளில் சேர்ந்து ’தீவிரவாதியாக’ வேலை செய்தவர். முன்னாள் பிரதமரான வாஜ்பாய் முதல் இன்னாள் பிரதமர் மோடி வரை அனைவருக்கும் நெருக்கமானவர்.

1997 ஆம் ஆண்டு கோவையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்த போது அதனை மவுனமாக ஆதரித்த ’பெரிய மனிதர்’. ஏற்கனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக பணியாற்றி வந்த சூழலில் தற்போது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று இப்போது முதலாளித்துவ ஊடகங்கள் ஆரூடம் தெரிவித்து வருகின்றன.

இவர் தமிழக பாஜகவின் தலைவராக இருந்த போதுதான் கோவைக் கலவரங்கள் நடந்தது. ”1988 முதல் இரு தரப்பிலும் தொடர்ந்து மதப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால், இந்த வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை. இதன் உச்சக்கட்டம்தான் 1997 நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலவரங்கள். முதலில் இது தனி நபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தது. ஒரு சரியான வாய்ப்புக்காக காத்திருந்தது போல, 1997இல் அது கலவரமாக வெடித்தது. காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்ததால், மதவெறி கும்பல் தாங்கள் நினைத்ததை சாதித்தது.” என்கிறார் கோவை ராமகிருஷ்ணன்.

ஆனால் இதற்கு நேர் மாறாக, ”கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடந்த விநாயக சதுர்த்தி பொதுக்கூட்டத்தில், 1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான காவலர் செல்வராஜ் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து, நடந்த கலவரம்… பா.ஜ.க-வோ, இந்து முன்னணியோ செய்தது அல்ல. அவை, காவல் துறையினரே செய்ததுதான். ஆனால், காவல்துறையினரில் ஒருவரைக்கூட ஒருபோதும் பா.ஜ.க-வினர் காட்டிக்கொடுக்கவில்லை.” என்று தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், மத்திய கயிறு வாரியத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.” என்று பார்ப்பன ஊதுகுழலான ஆனந்த விகடன் இதழிலேயே செய்தி வெளியானது. இதுதான் சிபிஆரின் சுருக்கமான அறிமுகம்.

துணை ஜனாதிபதி தேர்தல்: சிபி ராதாகிருஷ்ணன் ’பச்சைத் தமிழரா?’ ஆர்எஸ்எஸ் ’தீவிரவாதியா?

அவர் ஒரு பச்சை தமிழர் என்பதால் தமிழகத்தில் உள்ள மக்களும், எம்பிகளும், தமிழக கட்சிகளும் எந்தவிதமான கருத்து மாறுபாடும் இன்றி தமிழனை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் பரப்பப்படுகிறது.

இவருக்கு போட்டியாக இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி பற்றி இந்தியாவில் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா, ”அவர் ஒரு நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்” என்று வாய் கூசாமல் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டித்து 18 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்ற போதிலும் அமித்ஷாவை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. அவர் முன் வைத்த கருத்து நாடு முழுவதும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற்கு உருவாக்கப்பட்ட சல்வாஜூடும் அமைப்பை சட்டப்படியாக செல்லாது என்றும், அது ஒரு சட்டவிரோத பயங்கரவாத அமைப்பு என்றும் தீர்ப்பளித்த சுதர்சன் ரெட்டி மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று விமர்சிக்கப்படுகின்றார்.

இதற்கு நேர்மாறாக கோவைக் கலவரங்கள் அதனை தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்புகள் முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மதக் கலவரங்களுக்கு காரணமான கிரிமினல் குற்றவாளிகளின் கூடாரத்திலிருந்து முன் மொழியப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்டவர் என்பதைப் போல சித்தரிக்கப் படுகிறது.

படிக்க: ஜகதீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவிக்கு நேர்மையாக நடந்து கொண்டாரா என்பதே நம் கேள்வி!

உண்மையிலேயே வழக்கு என்ற வகையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான தீர்ப்பை வழங்கிய சுதர்சன் ரெட்டி விதிவிலக்கான நபர். ஆனால் நாடு முழுவதும் திட்டமிட்டு பல படுகொலைகளையும், குண்டுவெடிப்புகளையும் நடத்துகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த சிபி ராதாகிருஷ்ணன் பசுந்தோல் போர்த்திய புலியாவார்.

இத்தகைய கொடிய கிரிமினல் குற்றச் செயல்களைப் புரிகின்ற ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்குவதும், ஏற்கனவே அரை டவுசர் பேர்வழியான ஜெகதீப் தன்கர் தற்போது எதிர்த்து நிற்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை வீட்டிலேயே தனிமைச் சிறையில் வைத்துள்ள அளவிற்கு கொடூரமான பாசிச பயங்கரவாதம் நாட்டில் தலை விரித்தாடுகிறது. இவற்றை விமர்சித்து எழுதுபவர்கள் மீது அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளும், பாசிச பயங்கரவாதச் சட்டங்களும் பாய்கிறது.

தமிழகத்திலிருந்து தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதை கண்டு பெருமை கொள்ளாமல் விமர்சிப்பது தமிழர்களுக்கு செய்கின்ற துரோகம் என்று உளறுகின்ற முட்டாள்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக் கொள்வோம்.

உலகை சூறையாடுகின்ற தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற சுந்தர் பிச்சை முதல் முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற தமிழர்கள் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள் என்பதை தான் பார்க்க முடியுமே தவிர அவர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா என்று பார்ப்பது ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மேலும், மேலும் தீவிரப்படுத்துவதற்கு உதவுமே தவிர வேறு ஒரு சுக்குக்கும் உதவாது.

”இவையெல்லாம் இப்படியே கடந்து போகும், காலம் இப்படியே இருக்கும்” என்று கனவு கண்டு கொண்டிருக்கின்ற பாசிஸ்டுகளுக்கு நாம் ஒன்றை உரக்கச் சொல்வோம். ”மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்ற மகத்தான உந்து சக்தி ஆவர்.” அவர்கள் அரசாங்கத்தின் கொடூரங்களை சொந்த அனுபவத்தின் மூலமாக புரிந்துக் கொண்டு விட்டால் கோடிக்கணக்கில் பூதமாக திரண்டு பாசிஸ்டுகளை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமின்றி, இன்று அவர்கள் செய்கின்ற அனைத்து குற்றங்களுக்கும் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பது தான் அந்த எச்சரிக்கையாகும்.

பார்த்தசாரதி.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here