திருப்பரங்குன்றத்தில் மலையை வைத்து கலவரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கும் சங்பரிவார் கும்பலின் சதியை முறியடிக்க பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எமது மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த டிசம்பர் 17 அன்று திருப்பரங்குன்றம் நில அளவை கல் மீது ஆர்எஸ்எஸ் – பாஜக நீதிமன்றம் இயற்ற துடிப்பது தீபமல்ல! மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் நெருப்பு!! என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
மதுரை காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடுத்ததன் மூலம் டிசம்பர் 21 அன்று கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஒரு மைக், ஒரு ஸ்பீக்கர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், பொதுக் கூட்டத்தை முழதாக வீடியோ பதிவு செய்து ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தார் நீதிபதி ஸ்ரீமதி.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பும் அதன் தோழமை சக்திகளும், திருப்பரங்குன்றத்தில் காவி கும்பலின் கலவர நோக்கத்தை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தனர்.
மாநாடு நடைபெறும் நாள் அன்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது தோழர்களை சங்கிகளின் தூண்டுதலின் பேரில் காவல்துறை கைது செய்தது. மூன்று மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டது, சங்பரிவார் கும்பலுக்கு எதிரான மக்களின் மனநிலையை அறிய முடிந்தது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட மக்கள் அதிகாரத்தின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். தோழர் ராஜா வரவேற்புரை வழங்கினார்.
பொதுக் கூட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் செழியன், மதுரை மாவட்ட செயலாளர் தோழர் நடராஜன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில பொருளாளர் தோழர் செல்வராஜ், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் சந்திரமோகன், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ , தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட தலைவர் தோழர் ஆரோக்கிய மேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ராஜூ சிறப்புரை ஆற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நகழ்ச்சியும் நடைபெற்றது. தோழர் காளிதாஸ் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
மக்கள் அதிகாரம் ஊடகம்






