துரை சைவ சமய 293-வது ஆதீனமாக தற்போது  ‘ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியா சுவாமிகள்’ இருந்து வருகிறார். இவரது உண்மை பெயர் ‘ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள்’ என்பதாகும்.

கிராமப்புற வழக்குச் சொல்லுக்கேற்ப ‘விளக்குமாற்றுக்குப் பெயர் பட்டுக் குஞ்சம்’ என்பது போல என்ன பெயரையோ ‘சூட்டிக்’கொண்டு தொலையட்டும்.

(292-வது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் தான் இந்த ஹரிஹர தேசிகரை இளைய ஆதீனமாக நியமித்திருந்தார் என்பது பழைய கதை).

இவர்கள் அனுபவிக்கும் சொத்து சுகங்கள், உல்லாசங்கள் அனைத்தும் அறுதிப் பெரும்பான்மை மக்களின் உழைப்பால் வந்த சொத்துக்கள் ஆகும். மதுரை ஆதீனம் ஒரு சைவ ஆதீனமாக, சைவ சமயத்தை பரப்புவதற்கும், தமிழை வளர்ப்பதற்குமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பிரதான கொள்கையாகும். பணியாகும்.

கிரிமினல்களாகிவிட்ட ஆதீனங்கள்!

ஆனால் இவர்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட பணிகளைத் தவிர  மற்ற கிரிமினல் தொழில்களை செய்வதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளனர் இந்தியா முழுமையும் பல மடாதிபதிகள். இவ்விடயத்தில் தமிழ்நாட்டில் ‘ஆகச்சிறந்தவராக’ விளங்குபவர் மதுரை ஆதீனம்.

இதில் சில ஆன்மீகவாதிகளாக – மடாதிபதிகளாக இருந்தாலும் சற்று நேர்மைக்குணம் உடையவர்களாகவும்,  தமிழ் மொழியை கற்றாய்ந்து அதன் சிறப்பை பரப்புபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்கு எடுத்துக்காட்டு குன்றக்குடி அடிகளார்.

இந்த கிரிமினல் புத்தியுடைய மதுரை ஆதீனம் ஒரு சங்கியாகவும், அவ்வப்போது நிரூபித்துக் கொண்டு வருகிறார்  என்பதனை அவருடைய பேச்சுக்களிலிருந்தும்,  சங் பரிவார் – காவிக் கூட்டத்திடம் கீழிருந்து மேல் வரை ஒட்டி உறவாடி வருகிறார் என்பதிலிருந்தும் நம்மால் உணர முடிகிறது.  திருப்பரங்குன்றம் பிரச்சனை, முருக பக்தர்கள் மாநாடு இவற்றில் இவரது பங்கீடு நிறையவே உள்ளது. ஒப்பீட்டளவில் 292-வது மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இவரைப் போன்று கிரிமினல் புத்தி உடையவர் அல்லர் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக மக்களின் பொதுச் சொத்துக்கள் ஆக்கப்பட வேண்டிய இப்படிப்பட்ட மடங்களையும்,  மடங்கள் சார்ந்த அனைத்துச் சொத்துக்களையும்கூட இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டு வருவதுதான் சாலச் சிறந்தது; மக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக  இருக்கும்.

இந்த மதுரை ஆதீனம் கடந்த மே மாதம் 5-ம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை – காட்டாங்கொளத்தூரில் அமையப் பெற்றுள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மதுரை ஆதீனம்: குற்றச் செயலும் நிர்வாகத் துறையின் விசாரணை கேவலங்களும்!

(அந்தப் பல்கலைக்கழகத்திற்கு பொதுவாகவே கல்விக் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி, இப்படி காவி மயம் சார்ந்த சிண்டு முடிக்கும் வேலையை பிரதானமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் அதன் உரிமையாளர் பாரிவேந்தர், தான் சேர்த்து வைத்திருக்கக்கூடிய பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. பிற மதத்தவர்களுக்கு மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு இப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தை அளிப்பாரா என்பது வேறு விடயம். அது தனியே கிடக்கட்டும்)

இந்த ஆதீனம் மே 5-ல் சென்னையை நெருங்கும் வேளையில் ஓரிடத்தில் இவரது பெரிய கார் வேகமாக ஒரு நான்கு முனை நெடுஞ்சாலையைக் கடக்கிறது. அப்பொழுது இடப்புறமாக வந்த சிறிய கார், ஆதீனத்தின் கார் வந்த வேகத்தைப் பரவசமாகப் பார்த்து, உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தி விடுகிறார் கார் ஓட்டுநர்.

அவ்வாறு அந்த வாகனத்தை அவர் நிறுத்தாமல் இருந்திருப்பாரேயானால் சிறிய காருக்குத் தான் கூடுதலான பாதிப்பும் ஏற்பட்டிருக்கும்.

உண்மை இவ்வாறு இருக்க, இந்தத் திருட்டு மதுரை ஆதீனம் மாநாட்டில் பேசுகின்ற பொழுது, ‘நேற்று கூட ஒரு சம்பவம் நடந்து விட்டது; என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர்; என்னை காப்பாற்றியது மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமாள் தான் என்னைக் காப்பாற்றினார்; இன்று இந்த இடத்தில் நிற்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகிவிட்டது’ – என்று உருக்கமாகப் பேசி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார். ஊடகவியலாளர்களை கூட்டி வைத்துக் கொண்டு பேட்டியளிக்கிறார். எப்படி என்றால், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், இது பாகிஸ்தான் சதி என்றும், அப்படி கொலை முயற்சியில் ஈடுபட்ட காரில் வந்தவர் தலையில் தொப்பி வைத்திருந்ததாகவும்,  தாடி வைத்திருந்ததாகவும் சைகையுடன் – அதாவது ‘துலுக்கன்’ தான் தன்னைக் கொலை செய்ய முயன்றான் என்றும் பரவசமாக பேட்டியளித்தார்.

இவரது பேட்டிகள் யாவற்றையுங்கூட நாம் காட்சி ஊடகங்களிலும்,  அச்சு ஊடகங்களிலும் பார்த்தோம்தான். ‘பெரிய – பெரிய’ காவிக் கூட்டத் தலைவர்களும் இந்துமத ஆதீனத்திற்கு ஏற்பட்ட ‘பெரும் துயரத்திற்காக’ மிகக் கடும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்து விரோத அரசிடம் நியாயம் கிட்டாதாம்!

இவ்வளவு கொலைவெறி சம்பவம் என்று பரவசம் காட்டும் இந்த காவி உடை தரித்த ஆதீனம், இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்க முன்வரவில்லை. கேட்டால் ‘இது இந்து விரோத அரசு; எனவே புகார் அளிப்பதில் பயனில்லை. இந்த இந்து விரோத அரசிடம் நீதி கிடைக்கவே கிடைக்காது’ என்று அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டு மீண்டும் மத வெறியை கக்கினான்.

ஆனால் இப்பிரச்சினையை இந்துத்துவ சங்பரிவார்க் காவி கூட்டம் ஊதிப் பெருக்கியது. தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று ஓலமிட்டது. அவர்கள் சார்ந்த காட்சி ஊடகங்கள், யூடியூப் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் யாவையும் கூட அவருக்கு ஏற்பட்ட  ‘மிகப் பெரும் பேராபத்தை’ சிலாகித்து வர்ணித்தன.

தமிழ்நாட்டில் எப்படியும் பாஜக ஆட்சி கால் பதிக்க வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் –  இந்துத்துவ சங் பரிவார்க் கூட்டம் மிகப் பிரத்யட்சனம் பண்ணிக் கொண்டிருக்கிறது. பொய்களை கட்டவிழ்த்து விடுவதும், அவதூறுகளை அள்ளி வீசுவதும்… இதனையே தொழிலாகக் கொண்டுள்ளன.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

மதுரை ஆதீனம் புகார் கொடுக்கவில்லையாயினும் சமூகத்தில் ஊடகங்கள் மூலமாக, பல்வேறு எதிர்க்கட்சிகள் மூலமாக இப்பிரச்சினை பெரும் பேசுபொருள் ஆகிவிட்டதால் திமுக அரசும், காவல்துறையும் இதன் உண்மைத்தன்மையை அறிய முற்பட்டன.

காவல்துறை முனைப்புக் காட்டி மதுரை ஆதீனம் கொலைபாதகச் செயலுக்கு ஆட்பட்ட இடமாக குறிப்பிட்டுச் சொன்ன  சாலைகளைப் பார்வையிட்டு அங்கேயுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் கைப்பற்றினர்.

சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்த போது தான், குற்றச்செயல் அனைத்தும் மதுரை ஆதீனம் தரப்பு பக்கமே இருந்தது என்ற உண்மை தெரிய வந்தது. அதனை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில்

சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் காவல்துறை வெட்ட வெளிச்சமாக்கி ஊடகங்களிலும் மக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.

படிக்க: தருமபுரம் ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா?

அதை பார்த்த பொழுது தான் மதுரை ஆதீனம் மீது எந்த ஒரு உள்நோக்கமும் கொண்டு,  பிரிதொரு கார் மோதவில்லை என்றும், அவர்கள், ஆதினத்தின் பெரிய கார் வரும் வேகத்தை பார்த்து தாங்கள் வந்த சிறிய காரை (அதாவது ஆதீனம் மொழியில் கொலைகார ‘துலுக்கன்கள்’ வந்த வாகனத்தை) எச்சரிக்கையாக நிறுத்திக் கொண்டதையும் மக்கள் பார்க்க முடிந்தது. மேலும் உண்மையில் ஆதீனம் சென்ற காரின் வேகத்தை பார்க்கின்ற பொழுது இவரது காரில் மோதி கொலை செய்ய முயன்றதாக சரடு விடும் காரில் இருந்தவர்கள் யார் என்ற விவரமே ஆதீனம் சென்ற காரில் சென்ற எவரும் பார்த்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.

எனவேதான், மதுரை ஆதீனம் வடநாட்டைப் போல இந்து – முஸ்லீம் மதக் கலவரத்தைத் தூண்டும் ஒரே உள்நோக்கோடு புனையப்பட்ட பொய் குற்றச்சாட்டு என்பதை உணர்ந்து, சென்னை வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் மாநகர் காவல் துறையில் புகார் செய்கிறார்.  அதன்பின் காவல்துறையும் நன்கு விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகள், அப்பகுதியில் வசித்தோர் என அனைவரிடமும் விசாரித்து அறிந்தபின், உண்மையை உணர்ந்தபின், சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது

  • கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல்
  • இரு வேறு சமூகங்களுக்கு இடையே பகைமை உண்டாக்கும் வகையில் செயல்படுதல்
  • பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்
  • தவறான தகவல்களை பரப்புதல் என நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
காவல்துறை விசாரணைக்கு வர மறுத்த ஆதீனம்! முன் ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்!

இரண்டு முறைக்கு மேல் மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இறுதியில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமது காவி வழக்கறிஞர்கள் மூலம் முன்ஜாமீன் கோரினார். காவிமயமாகிவிட்ட நீதிமன்றமும் சில ‘நிபந்தனை’களுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியதாம். ‘நிபந்தனை என்றால் சாதாரண நிபந்தனை அல்ல?’ கேவலத்திலும் கேவலமான நிபந்தனை. இப்படிப்பட்ட மதக்கலவரத்திற்கு வித்திட்ட காவி உடை தரித்த ஒருவனை விசாரணை செய்ய,  சென்னை சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீன மடத்திற்கு வருகின்ற பொழுது அந்த விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்பதே அந்த ‘மாபெரும்’ நிபந்தனை. எவ்வளவு கேவலமான நீதிபரிபாலன முறை என்பதைப் பாருங்கள். பிற மதத்தினருக்கு இவ்வித சலுகைகளை அளிக்குமா இந்த நீதிமன்றங்கள்? அதாவது அவர் வயது மற்றும் உடல் நிலையை அனுசரித்து இவ்விதத் தீர்ப்பை வழங்கி உள்ளதாம் அமர்வு நீதிமன்றம். அதுவும் கூட மதுரையில் உள்ள ஏதேனும் ஒரு காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலோ மதுரை ஆதீனத்தை வரச் செய்து, அங்கே கூட விசாரிக்காமல் அந்தக் குற்றவாளியின் இருப்பிடம் சென்று விசாரிக்கச் செய்துள்ளது சென்னை அமர்வு நீதிமன்றம். கேவலம்! மகாக் கேவலம்!

ஜூலை 20-ல் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் அமையப் பெற்றுள்ள மதுரை ஆதீன  மடத்திற்கு சென்னை சைபர் கிரைம் பெண் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் சில காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகினர்.

படிக்க: சைவ மடங்களும் பட்டினப்பிரவேசமும்: நிலவுடமைச் சமூக ஒடுக்குமுறையின்சொச்சமிச்சங்கள்!

அங்கே போய் பார்த்தால் செத்த பிரேதம் போல் கட்டிலில் படுத்து கிடக்கிறான் அந்தக் குற்றவாளிக் கயவன். அனைத்தும் மகாப் பெரிய நடிப்பு. விசாரணைக்குச் சென்ற காவல்துறையினரோ அவனிடம் குனிந்து குனிந்து விசாரிக்கின்ற அசிங்கத்தைக் காணச் சகிக்க முடியவில்லை. பாஜக மாவட்ட செயலாளர் உட்பட இந்து மத வெறியர்கள், மடம் சார்ந்த ஊழியர்கள் கூட்டம் வெளியே நின்று கொண்டு காவல் விசாரணைக்கு இடைஞ்சல் தரும் வகையில் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஆதீனத்தின் வழக்கறிஞர்களும் விசாரணையின் போது உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தனர். வழக்கம்போல் மாநகர காவல்துறை பெயருக்கு 10 காவலர்களை மடத்திற்கு வெளியே நிறுத்தி இருந்தது. எந்த லட்சணத்தில் விசாரணை நடந்திருக்கும் என்பதனை நம்மால் நன்றாகவே யூகிக்க முடிகிறது.

விசாரணைக்கான கேள்விகளோ 50; ஆதீனம் பதிலளித்ததோ ஓரிரண்டுக்கு! விசாரணையிலும் ‘மகத்தான நடிப்பு’!

ஆதீனமும், காவிக் கூட்டமும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகும் அளவிற்கான 50 விதமான சரியான கேள்விகளை தொகுத்துச் சென்று இருந்தனர் காவல்துறையினர். கேள்வி கேட்கின்ற பொழுது ஓரிரண்டு கேள்விகளுக்கு மட்டும் மழுப்பலானப் பதில் சொல்லிவிட்டு, மற்ற கேள்விகள் யாவற்றுக்கும் பதில் அளிக்காமல் மௌனம் காத்துள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரியிடம், உதவியாளர் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் மெதுவாக போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு போலீசார் விசாரணை என்பதால் உங்கள் தரப்பு வழக்கறிஞர் மட்டும் அனுமதி உண்டு. வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். அதன் பிறகு விசாரணை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஆதீனம் தூங்குவது போல் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டார்.

சிறிது நேரம் காத்திருந்த அதிகாரிகள் மீண்டும் அவரிடம் கேள்வி கேட்க முயன்ற போது ஆதீனத்திடம் இருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. ஒரு கட்டத்தில் அவர், எப்போதோ செய்து கொண்ட ஹெர்னியா அறுவை சிகிச்சையைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.

எனவே காவல் அதிகாரிகள் 11-30 முதல் 12-30 வரை மட்டும் ஆதினம் மடத்தில் கெஞ்சிக் கூத்தாடி ‘விசாரணை’ செய்துவிட்டு ஏமாற்றத்துடன்புறப்பட்டுச் சென்று விட்டனர். ஆனாலும் இன்னும் சில நாட்களில் மருத்துவரையும் உதவிக்கு வைத்துக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தப் போகிறார்களாம். நல்ல கேலிக் கூத்து தான்…  நீதிபரிபாலன முறையும்… விசாரணை முறையும்…?

ஆதீனம் யார்!? மடப்புரம் ஏழை காவலாளி அஜித்குமாரா என்ன? எப்பேர்ப்பட்ட ‘உயர் அந்தஸ்தில்’ உள்ளவர்… அதற்கான மரியாதையின்படி தானே காவல்துறை ‘விசாரணை’ மேற்கொள்ளும்? இன்னும் கூட காவல்துறையினர், அவர் உடல்களை அமுக்கிவிட்டு, உடலில் மருந்துகள் தடவி, குளிர் பானங்கள் வாயில் ஊற்றி, உணவூட்டி இங்கிதமாக விசாரணையை மேற்கொள்ளலாம். பார்த்து… பார்த்து…ஆற… அமர ஆதீனம் மனம் குளிரும்படி விசாரணையை நடத்தட்டும் காவல்துறை!? இவ்வித அணுகுமுறையே போதுமென்ற மன மகிழ்ச்சியில் திழைக்கட்டும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு!

அன்று ஜெயாவின் காவல்துறை ‘ஜெகத்துக்குரு’ காஞ்சி சங்கராச்சாரியைத் தூக்க முடிந்த போது – இன்று ஸ்டாலினின் காவல்துறை ஒரு ஆதீனத்தை தூக்க முடியாமல் போனது ஏன்?

அன்று ஜெயா ஆட்சிக் காலத்தில்,  காஞ்சி சங்கர மடத்தில் ‘ஜெகத்துக்குரு’ ஜெயேந்திரர், கோவில் மட வளாகத்துக்குள்ளேயே நடத்திய காமக் களியாட்ட அசிங்கங்களை கண்ணால் கண்ட சங்கரராமன் என்ற பார்ப்பனர் மூலமாக ‘லீலைகள்’ வெளியே கசியத் துவங்கியவுடன், மடத்துக்குள்ளேயே வைத்து சங்கரராமனைப் போட்டுத் தள்ளினான் சங்கராச்சாரி. ஏற்கனவே சில சொத்து பிரச்சனைகளில் சங்கராச்சாரியுடன் முரண்பட்டிருந்ததை சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக குற்றவாளி சங்கராச்சாரியை அளக்காக தூக்கி சிறைக்குள்ளே போட்டார் ஜெயா. ஜனாதிபதி வெங்கட்ராமன் முதல், துக்ளக் சோ வரை குய்யோ முறையோ என்று அலறினார்கள் என்பதை கடந்த காலத்தில் நாம் கண்டு ரசித்தோம்.

ஆனால் சிலர் இவ்வாறு கூறக்கூடும். சங்கர மடத்தில் நடந்தது மாபெரும் கொலைக்குற்ற செயல். அதற்கு இவ்வித கைது நடவடிக்கைகள் அவசியம் தான்.

ஆனால் ஆதீனம் கொலை குற்றவாளி அல்ல; எனவே ஸ்டாலின் அரசாங்கம் –  அதன் காவல்துறை அந்த அளவிற்கு விரைவு காட்டி ஆதீனத்தை கைது செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடக் கூடும். இவ்விதப் பார்வையே மாபெரும் தவறு.

சங்கர மடத்தில் நடந்த லீலைகள் ஆனாலும் சரி; அதைக் கண்ட சங்கரராமன் சங்கராச்சாரியால் கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டதும் சரி; அது ஒரு மடத்திற்குள்ளேயே நடந்து முடிந்து விட்ட நிகழ்வு ஆகும். இரு நபர்கள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமே. மடம் சார்ந்த விடயம் மட்டுமே. ஆனால் மதுரை ஆதீனம் செய்திருப்பதோ அதைவிட ஆயிரம் மடங்கு மாபெரும் குற்றச்செயலை உள்ளடக்கியது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வடமாநிலங்களில் இப்படிப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுத் தான் சாதி மத வெறி மோதல்களை உருவாக்குவதும், கொலை பாதகச் செயல்களைக் கட்டவிழ்த்துவிட்டு ரத்தக்களறியை ஏற்படுவதும் வாடிக்கையாகக் கொண்டு விட்டனர் இந்துத்துவவாதிகள். அந்த மதவெறி மூலமாக ஆட்சி அதிகாரத்தையும் பிடித்துக் கொண்டனர்; தக்கவைத்தும் கொண்டுள்ளனர்! அந்த நிலை தமிழ்நாட்டில் இதுவரை உருவாகுவதற்கான சூழல் ஏற்படவில்லை.

அந்தச் சூழலை உருவாக்கத்தான் ஏற்கனவே எச்ச.ராஜா, அர்ஜுன் சம்பத், அண்ணாமலை, இராம.சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கரு. நாகராஜன், தமிழிசை, வானதி உட்பட பல்வேறு வகை வானரக் கூட்டம் ஒன்றிய தலைமையின் வழிகாட்டலில் விடாது போராடிக் கொண்டிருக்கிறது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், காவி உடை அணிந்து கொண்டு ஆன்மீகத்தை பரப்புவதாக வேடம் தரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆதீனம், இப்படிப்பட்டதொரு மத மோதல்களை –  கலவரங்களை உருவாக்கத்தக்க பொய்களை கட்டவிழ்த்து விடுவதென்பது மிகச் சாதாரண குற்றச்செயல் அல்ல. மாபெரும் குற்றச்செயல். அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச் செயலின் ஆழத்தை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசோ, காவல்துறையோ உணர்ந்ததாக தெரியவில்லை அல்லது இந்துத்துவவாதிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை.

வேடிக்கை என்னவெனில் காவல்துறை, அரசாங்கம், நீதிமன்றம் அனைத்துமே ஆதீனத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றன என்பது தான் உண்மை. இது கேவலம்! அவமானம்! மானக்கேடு!

எனவே, இப்படிப்பட்ட ஆன்மீகப் போர்வையில் மதக் கலவரங்களுக்கு வித்திடும் மதுரை ஆதீனம் போன்ற அயோக்கியர் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டிய முழு பொறுப்பும் சாதி மதங்களைக் கடந்த தமிழ் மக்களின் தலையில் வீழ்ந்து கிடக்கிறது. முடிவு கட்டுவோம் வாரீர்!

தமிழ்நாட்டைக் காப்போம் வாரீர்!

  • எழில்மாறன்

1 COMMENT

  1. தமிழை வளர்க்க வேண்டிய ஆதீனம் மத கலவரத்தை நடத்த திட்டமிடுகிறான். ஆன்மிகத்தின் பெயரால்
    கிரிமினல்களாக வலம் வருகிறார்கள் தமிழக மக்களே எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here