“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28.) என்று பூலோகத்தில் பாரம் சுமப்பவர்களை தன்னிடத்தில் அழைக்கின்றார் இயேசு கிறிஸ்து.
இந்தியாவில் கிராமம் ஒன்றில் பிறந்து உலக பணக்காரனாக உருவாகியுள்ள நவீன ரட்சகரான ஸ்ரீதர் வேம்பு, “அமெரிக்காவில் H1B விசாவால் பாதிக்கப்பட்ட பாரம் சுமப்பவர்களே நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” என்று இரட்சிப்பை வழங்க கிளம்பியுள்ளார்.
ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நான்காம் கட்ட தொழில்நுட்ப புரட்சியை பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் மூலமாக கொள்ளையடிக்க கிளம்பியுள்ள பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் வரிசையில் இந்தியாவிலிருந்து கிளம்பியுள்ள ஜோகோ நிறுவனம் முன்னிலையில் வளர்ந்து வருகிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் கீழ்க்கண்ட வகையிலான நவீன வடிவிலான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தனது சுரண்டல் மற்றும் ஆதிக்க பரப்பு எல்லையை விரிவுபடுத்தி வருகிறது. கிளவ்டு மவுண்ட், டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன், செயற்கை நுண்ணறிவு திறன் (AI), சைபர் செக்யூரிட்டி மற்றும் இ காமர்ஸ் போன்ற அம்சங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகின்ற இந்த துறையானது 2025 ஆம் ஆண்டு வாக்கில் 9.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை சுரண்டி கொண்டு வருகிறது. இந்தத் துறையானது மேலும் வளர்ச்சி பெற்று 2029 வாக்கில் 13.17 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக கொண்ட மிகப் பெரும் சந்தையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாய்ப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்டு உலகை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கட்டுப்படுத்தி வருகின்ற மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ஆகியவற்றுக்கு போட்டியாக ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ள அரட்டை செயலி இந்தியாவில் சுதேசி என்ற பெயரில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மென்பொருள் தயாரிப்பு மட்டுமின்றி மைக்ரோசாப்ட் போன்ற அடிப்படை கட்டுமான வசதிகளிலும் தனது உற்பத்தியை விரிவுபடுத்த துவங்கியுள்ளது ஜோகோ.
எங்க முதலாளி!
தங்க முதலாளி!!
ஸ்ரீதர் வேம்புவை ஒரு பிராண்டாக முன்னிறுத்துகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக உள்ளிட்ட சங்பரிவார கும்பல் அவரை பிரபலப்படுத்துவதற்கு அவரிடம் உள்ள திரண்ட சொத்துக்களின் மூலம் பெருநகரங்களில் அதாவது பெங்களூர் அல்லது மும்பை போன்ற நகரங்களில் ஏர்கண்டிஷன் போட்ட அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இயக்கலாம்.
ஆனால் கிராமத்தை ஆதாரமாகக் கொண்டு தென்காசி அருகில் உள்ள கடையம் பகுதியில் தனது செயல் அலுவலகத்தை கொண்டுள்ளதன் மூலம் கிராமத்தில் இருந்து உதித்த எளிமையான முதலாளிதான் ஸ்ரீதர் வேம்பு என்று கொண்டாடி மகிழ்கின்றனர். முதலாளி என்றாலே சுரண்டல், ஏமாற்று, மோசடி ஆகியவை உள்ளடக்கிய நபர்தான் என்ற போதிலும் அதிலும் நல்ல முதலாளியாக உள்ளார் என்று பித்தலாட்டம் புரிகின்றனர்.
ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறிய பார்ப்பன குடும்பத்தில் பிறந்தார். அவர் ஐஐடி மெட்ராஸில் மின் பொறியியல் பயின்றார். பின்னர் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றார். குவால்காமில் வயர்லெஸ் பொறியாளராக அவரது வாழ்க்கை தொடங்கியது. பின்னர் அவர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் பணிபுரிந்தார். 1996-ல், அவரும் அவரது சகோதரர்களும் அட்வென்ட்நெட்டைத் தொடங்கினர்.
பின்னர் அந்த நிறுவனம் ஜோஹோ கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றப்பட்டது. இன்று, இந்த நிறுவனம் அதன் கிளவுட் மென்பொருள் மற்றும் CRM தீர்வுகளுக்காக உலகளவில் அறியப்படுகிறது.
ஃபோர்ப்ஸின் 2024 பட்டியலின்படி, அவர் இந்தியாவின் 39வது பணக்காரர். தோராயமாக தோராயமாக ₹50,000 கோடி நிகர மதிப்புடன் உள்ளார். இந்திய ஒன்றிய பாஜக அரசு 2021-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.
அதன் பிறகு அவர் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் நேரடியாகவே பங்கெடுப்பது ஆர்எஸ்எஸ் க்கு புறவாளராக மாறி நிதி உதவி செய்வது அதன் முகாம்களில் முன்னிலை வகிப்பது ஆர்எஸ்எஸ் இன் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது என்று முழு சங்கியாக மாறியுள்ளார். தமிழகத்திலிருந்து புறப்பட்டு HCL என்ற நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் கொள்ளையடித்து வருகின்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளுள் ஒருவரான ஷிவ் நாடார் போலவே ஸ்ரீதர் வேம்புவும் வளர்ந்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் ஆபீஸ் சாப்ட்வேர், CRM, HR, கணக்கு நிர்வாகம், மின்னஞ்சல், கிளவுட் சேவைகள் என 50-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
“Microsoft, Google போன்ற உலக நிறுவனங்களுக்கு போட்டியாக நிற்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெயரும் Zoho-வுக்கு உண்டு”. என்று ஆர்எஸ்எஸ் கும்பல் பெருமை பேசுகிறது.
விரிவடையும்
வேம்பு சாம்ராஜ்ஜியம்!
இந்தியாவில் ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) நிறுவனம், தனது அரட்டை செயலி மூலம் சமூக வலைதளங்களில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த செயலி, உலகளாவிய மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த அரட்டை செயலியை ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார். சமீபத்தில் ஆனந்த் மகேந்திரா முதல் இந்தியாவில் உள்துறை அமைச்சரான அமித்ஷா வரை இதில் இணைந்துள்ள காரணத்தினால் அரட்டை செயலி பிரபலமாகி வருகிறது.
வழக்கமாக பயனர்களின் தரவுகளை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று பித்தலாட்டம் புரிகின்ற மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளை போலவே இவரும் தனது அரட்டை செயலியை பற்றி அளந்து விடத் துவங்கியுள்ளார்.
“நான் இதுபற்றி தெளிவாக கூறியிருக்கிறேன். எங்களின் முழுமையான SAS வணிகமும், நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. வாடிக்கையாளர்களின் தரவை நாங்கள் ஒருபோதும் அணுகுவது இல்லை. இதற்காக ‛எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்’ என்ற ஒரு தொழில்நுட்பம் வருகிறது. நம்பிக்கை என்பது விலைமதிப்பற்றது. சர்வதேச சந்தையில் இந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம். எங்கள் நிறுவன தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையை அனைத்து இடங்களிலும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்’’ என்று கூறுகிறார் திருவாளர் வேம்பு.
அது மட்டுமல்ல ‛அரட்டை’ செயலியில் ‛எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன்’ அம்சம் வருகிறது. இதனால் இருவருக்குள் நடக்கும் சாட் மற்றும் போட்டோ, வீடியோ பரிமாற்றத்தால் மற்றவர்களால் அணுக முடியாது என்று நவீன தகவல் தொழில்நுட்பத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாத இந்தியர்களின் தலையில் அக்மார்க் மிளகாயை அரைக்க பார்க்கிறார்.
படிக்க:
♦ அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!
ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணி வேம்பு வேறொரு வகையில் இது பற்றி உத்திரவாதம் கொடுக்கின்றார். ,‛‛வாட்ஸ்அப் போன்று ‛எண்ட்-டு எண்ட் என்க்ரிப்ஷன்’ அம்சம் ‛அரட்டை’ செயலியில் கொண்டு வரப்படும். இதற்காக பணியாற்றி வருகிறோம். இதனால் தனிப்பட்ட நபர்களின் உரையாடல், போட்டோ வீடியோ பகிர்வு உள்ளிட்டவை பாதுகாக்கப்படும்’’ என்கிறார்.
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பல ட்ரில்லியன் டாலர் புழங்குகிறது என்பதற்கு முக்கிய காரணம் தனிப்பட்ட பயனாளர்களின் விவரக் குறிப்புகளை தகவல் திரட்டுகளாக பெற்றுக் கொண்டு, அதாவது டேட்டாக்களாக திரட்டி கொண்டு அந்த டேட்டாக்களை தேவைப்படுகின்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் பல்லாயிரம் கோடி வருவாயை ஈட்டுகின்றனர் என்பது தான் நவீன தொழில்நுட்பத்தின் யோக்கியதை. இதன் மூலம்தான் இதன் சந்தை விரிவாகிறது இதில் இறங்கியுள்ள கார்ப்பரேட்டுகளும் பல்லாயிரம் கோடி வருவாயை ஈட்டுகின்றனர்.
உலகம் இனி தரவுகளால் ஆளப்படும் என்று இப்போதே ஏகாதிபத்திய முதலாளித்துவ அறிஞர்களும், தகவல் தொழில்நுட்பம் பற்றி புரிந்து வைத்துள்ள மக்கள் மீது அக்கறை கொண்ட அறிவியலாளர்களும் முன்வைக்கின்றனர்.
தனி நபர்களின் விவரங்களை வெளியில் சொல்ல மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்கின்ற ஜோகோ நிறுவனம் தனிப்பட்ட நபர்களின் தரவுகள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது சதி திட்டங்களில் ஈடுபடுவது என்றதாக தெரிந்து கொண்டாலோ அதனை அனுமதிக்க முடியாது என்று கூறுவதன் மூலம் தனது கொண்டையை மறைக்க முடியாமல் கீழ்கண்டவாறு முன் வைத்துள்ளது.
“தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். கூகுள் இந்தியாவில் செயல்படும்போது இந்திய சட்டங்களுக்கும், ஆப்பிள் சீனாவில் செயல்படும்போது சீன சட்டங்களுக்கும் கட்டுப்படுவது போல, ஜோஹோ எந்த நாட்டில் இயங்குகிறதோ அந்த நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று ஸ்ரீதர் வேம்பு முன்வைப்பதன் தகவல் தொழில்நுட்ப அறிவியல் என்ன நோக்கத்திற்கு பரவலாக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதுபோன்று ஒரு சில அம்சங்களில் அரை உண்மைகளை முன் வைப்பதன் மூலம் தான் நேர்மையான நபர் என்று சித்தரித்துக் கொள்ள முயற்சி செய்கிறார் என்பதுதான் அவர் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி முன் வைத்துள்ள விமர்சனங்கள்.
“அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் ஏதென்ஸில் 2023 முதல் மின் கட்டணம் 60% அதிகரித்துள்ளது. ஏனென்றால் புதிய செய்யறிவு தரவு மையத்தால் அதிக மின்சாரம் தேவைப்பட்டதன் காரணமாக…தற்போதைய அதிநவீன செய்யறிவு தொழில்நுட்பம் பற்றி குறைத்து மதிப்பிடப்பட்ட உண்மைகளில் ஒன்று, அது அசாதாரண திறனைக் கொண்டிருக்கவில்லை.
இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சினை. நம்மால் அனைத்து கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளையும்(GPU) வாங்க முடிந்தாலும்(இல்லாவிட்டாலும்) நம்மால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
நமக்கு அதிக திறன் கொண்ட செய்யறிவு தேவைதான். ஆனால் அதற்கு தேவையான அம்சங்களைக் கணக்கிட்டு மறுபரிசீலனை செய்வது அவசியம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வேம்பு.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள் என்று முன் வைக்கும் பிரபல இரட்சிப்பு வாசகத்தின் அடுத்த வாசகம் கீழ்க்கண்டவாறு துவங்குகிறது.
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29).
இந்த அடிப்படையில் கிராமத்து முதலாளியான ஜோஹோ இந்தியாவின் 39 ஆவது பணக்காரனாக வளர்ந்துள்ள நிலையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்த துறையில் பணியாற்றுகின்ற இளம் மென்பொருளாளர்களை குறி வைத்து தனது இரட்சிப்பை இறக்கியுள்ளார்.
நமது சொந்த விவர குறிப்புகள் அடங்கிய தகவல்கள் மற்றும் தரவுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பது மட்டுமின்றி இது போன்ற நவீன ரட்சகர்களின் பித்தலாட்டங்கள், சுரண்டல் மற்றும் ஆதிக்கம் வேறொரு வகையில் நிலை நாட்டப்படுவதற்கு சுதேசி என்ற பெயரில் முன்வைக்கப்படுகின்ற அயோக்கியத்தனங்களை முறியடிக்காமல் இந்திய பாட்டாளி வர்க்கத்திற்கு விடிவு கிடையாது.
◾பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி