
செப்டம்பர் 2: வியட்நாம் விடுதலை தினம் மற்றும் தோழர் ஹோ சி மின் நினைவு தினம்.
செப்டம்பர் 2 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் போராளியான தோழர் ஹோ சி மின் நினைவு தினம் என்பது மட்டுமின்றி வியட்நாம் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் என்ற வகையில் முக்கியத்துவம் பெற்ற தினமாகும். இதனைப் பற்றி நேற்று கட்டுரை ஒன்று எழுத வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாலும் வேலை நிலைமைகள் காரணமாக இயலவில்லை.
“நாம் சின்னஞ் சிறிய கட்சி நாம் முன்வைக்கின்ற மாற்றத்திட்டத்தை நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் குறிப்பாக பாசிசத்தை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கமுடைய கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா?” என்று அவநம்பிக்கையை கிளப்புகின்ற குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் புரட்சியின் வரலாற்றை இயக்கவியல் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதில்லை.
ஒரு சிறிய நாடு, மூன்று பெரிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து முறியடித்து வெற்றியை சாதித்ததன் பின்னணியை புரிந்து கொண்டால், மக்களின் மகத்தான போராட்ட உணர்வு எத்தகைய கட்சியையும் தூக்கி எறியும் என்பது மட்டுமின்றி, வரலாற்றில் முன்னுதாரணமிக்க, நம்பிக்கையான போராட்ட முறைகளையும் பிற நாடுகளுக்கும் கற்றுக் கொடுக்கும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் வியட்நாம்.
வியட்நாம் போராட்டத்தின் வெற்றியை பாட்டாளி வர்க்கத்திற்கு அறைகூவலாக விடுத்து எமது உட்கட்சிப் பத்திரிக்கை ஒன்று கீழ்கண்டவாறு எழுதி இருந்தது. “கடந்த கால் நூற்றாண்டு காலமாக பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போரிட்ட சின்னஞ்சிறிய நாடான வியட்நாம் இன்று விடுதலை திங்களாக காட்சியளிக்கிறது.
வீரம் செறிந்த வியட்நாமிய மக்கள் வெல்லற்கரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டனர். அம்மக்கள் தங்கள் தலைவர் ஹோ சி மின் கண்ட கனவை இறுதியாக குருதி சிந்தி நனவாக்கியுள்ளனர்..
உழைக்கும் மக்களின் குருதியில் மலர்ந்த மலரைக் கண்ட ஆதிக்கவாதிகள் இனி ஒருபோதும் துணிய மாட்டார்கள்”. என்று 74 ஆம் ஆண்டு வெளியான எமது உட்கட்சி பத்திரிக்கையில் வியட்நாமிய புரட்சி குறித்து சிவப்பு வாழ்த்துகளையும், அந்த புரட்சியின் அனுபவத்தை இந்திய பாட்டாளி வர்க்கம் கைக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் குறித்து எழுதி இருந்தோம்.
ஏறக்குறைய 50 ஆண்டுகள் கடந்த பின்பு வியட்நாம் புரட்சியின் அனுபவங்களை மீளாய்வு செய்வதும் தற்போதைய காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு அவை எந்த வகையில் உந்துவிசையாக இருக்கிறது என்பதையும் பொருத்தி புரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
மேல்நிலை வல்லரசாக இருந்தாலும் சரி! ஏகாதிபத்தியமாக இருந்தாலும் சரி! பாசிச பயங்கரவாத அரசாங்கமாக இருந்தாலும் சரி! அவர்கள் அனைவருமே காகிதப் புலிகள் தான் என்பதை புரிந்து கொண்டால் தான் “அவர்கள் பெரிய சக்திகள், நாமோ சிறிய சக்தி” என்ற அகநிலை தவறுகளையும், அச்ச உணர்வையும் போக்கிக் கொள்ள முடியும்.
“பலமுடையவர்கள் என்று புகழப்படும் பிற்போக்குவாதிகள் அனைவரும் காகிதப்புலிகளே என்று நான் கூறினேன். காரணம் அவர்கள் மக்களிடமிருந்து பிரிந்தவர்கள். பாருங்கள் ஹிட்லர் ஒரு காகிதப்புலி இல்லையா? ஹிட்லர் தூக்கி எறியப்படவில்லையா? ரஷ்யாவின் ஜார் ஒரு காகிதப்புலி,. ஜப்பானிய ஏகாதிபத்தியம் ஒரு காகிதப்புலி. என்றும் நான் கூறினேன். பாருங்கள் அவர்கள் எல்லோரும் தூக்கி எறியப்பட்டு விட்டனர்.
அமெரிக்கா ஏகாதிபத்தியம் இன்னும் தூக்கி எறியப்படவில்லை. அதனிடம் அணுகுண்டும் இருக்கிறது. அது கூட தூக்கி எறியப்படும் என்று நான் நம்புகிறேன் அதுவும் ஒரு காகிதப் புலியே!” என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியின் மாஸ்கோ மாநாட்டில் 1957 நவம்பரில் தோழர் மாவோ உரையாற்றினார்.
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை ஏற்றுக் கொண்ட மார்க்சிய லெனினியவாதிகள் அனைவரும் தோழர் மாவோ முன்வைத்த பலம், பலவீனம் குறித்த இந்த கருத்தை தான் இன்று வரை தனது வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்ல! சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் முதல் முதலில் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற ஆவணத்தில் துவங்கி புரட்சியை சாதித்த பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களான தோழர் லெனின், ஸ்டாலின் மற்றும் மாவோ, வியட்நாமின் ஹோ சி மின் உள்ளிட்ட அனைவரின் சொந்த அனுபவங்கள் கற்றுக் கொடுப்பது என்ன?
ஒரு நாட்டின் புரட்சிகர வரலாற்றை கற்றுக்கொண்டு அந்தந்த நாட்டிலும் உள்ள பாட்டாளி வர்க்க இயக்கம் அந்த நாட்டின் சூழலுக்கு பொருத்தமான வழிமுறைகளை கையாண்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமே ஒழிய, புரட்சியை இறக்குமதி செய்யவோ, காப்பியடிக்கக் கூடாது என்பதையே புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தனது நடைமுறை வழிமுறையாக கொண்டுள்ளது.
இந்தியாவில் வலது மற்றும் இடது சந்தர்ப்பவாத திருத்தல்வாத போக்குகளை நிராகரித்து இந்திய புரட்சிக்கு பொருத்தமான வழிமுறையை கண்டறிந்த மார்க்சிய லெனினிய இயக்கம் 1970 இல் முன் வைத்த கட்சி திட்டத்தின் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சூ என் லாய் மற்றும் காங் ஷென் ஆகிய இருவரும் சில விமர்சன குறிப்புகளை வெளியிட்டனர்.
“உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் சூழ்நிலைகள் வேறுபடுகின்றன என்பதையும், அத்தகைய பருண்மையான சூழ்நிலைகளை பருண்மையாக பரிசீலித்தலே (concrete analysis of concrete conditions) இயங்கியலின் அடிப்படை விதி என்பதை புரிந்து கொள்ளாமல் தன்னோக்கு அடிப்படையில், “சீன தலைவரே நம் தலைவர்”, “சீனாவின் பாதையே நமது பாதை” என்ற முழக்கம் வைக்கப்பட்டது.
ஆனால் அம்முழக்கத்தின் கேடான தன்மையை சீனத் தோழர்கள் மிகச்சரியாக தோலுரித்துக் காட்டி நமக்கு வழிகாட்டியுள்ளனர் சர்வதேசியத்தின் அடிப்படையில் இவ்விளக்கம் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இம்முழக்கத்தின் பொருளே உண்மைகளுக்கு புறம்பாய் உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் புரட்சி அனுபவங்களை தொகுப்பதன் மூலமே சரியான வழிமுறையை வகுக்க முடியும் என்பதை வலியுறுத்திய தோழர்கள் சர்வதேச அனுபவங்களை முறையாக தொகுத்துள்ளனர்” என்று அந்த விமர்சனங்களில் இருந்து புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தனது வழிமுறையை கற்றுக் கொண்டது.
மார்க்சிய லெனினிய இயக்கம் துவங்கிய காலத்திலேயே அதன் திசைவழியில் இருந்த தவறுகளை சுயவிமர்சனமாக உணர்ந்து எமது பாதையை வகுத்துக் கொண்டோம்..
படிக்க:சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்
ரஷ்ய, சீன புரட்சியின் அனுபவங்கள் மட்டுமின்றி வியட்நாம் போன்ற நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் இந்திய விடுதலைக்கான புரட்சிப் பாதை நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்றும்,, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலமே புரட்சி வென்றெடுக்கப்பட முடியும் என்பதையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்..
இந்த நீண்ட கால மக்கள் யுத்த பாதைக்கு மாற்றாக, நகர்ப்புற கொரில்லா வாதம் என்று சொல்லக்கூடிய சாகச வழிமுறைகளையும், அதிரடி புரட்சி வழிமுறைகளையும், குழு சாகச நடவடிக்கைகளையும், புரட்சியை ரகசிய குழுக்களின் மூலம் நடத்துகின்ற சதி நடவடிக்கை போன்ற வழிமுறைகளையும் விமர்சித்தது மட்டுமின்றி இதற்கு நேர் எதிராக பாராளுமன்ற சரணடைவு என்ற சந்தர்ப்பவாத பாதையையும் தோலுரித்துக் காட்டியது.
“ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சுட்டிக்காட்டிய விமர்சனங்களின் மூலம் கிடைத்த அனுபவங்களில் இருந்து நாம் உறுதியாகவும், உணர்வுபூர்வமாகவும் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு சுய விமர்சனம் செய்து கொள்வதன் மூலம் கூடாத நடையை நீக்கி நல்ல நடையை ஏற்படுத்துவோம்.
படிக்க: செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!
தவறான பழைய வழித்தடத்தில் ஆக்கபூர்வமான புதிய வழியை மக்கள் வழியை (mass line) வைப்பதன் மூலம் இந்திய புரட்சியில் புத்தொளியாக பாய்வோம். புதிய வாழ்வை, புதிய கலாச்சாரத்தை, புதிய சகாப்தத்தை, புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை எனும் ஒளியில் பாட்டாளி வர்க்க சர்வதேச பதாகையை உயர்த்திப்பிடித்து ஆயிரமாயிரம் தியாகிகளின் ரத்தத்தால் சிவந்த பாதையில் பீடு நடை போட்டு முன்னேறுவோம்.
எதிர்காலம் ஒளிமிக்கது. பாதையோ கடினமானது. உறுதியாக இருங்கள் துன்பத்திற்கும், மரணத்திற்கும் அஞ்சாதீர்கள். வெற்றியை நோக்கி முன்னேற எவ்வித இடையூறையும் கடக்க தவறாதீர்கள்.” என்று தோழர் மாவோ முன்வைத்ததை புதிய ஜனநாயகம் துவங்கிய காலத்தில் நாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை மீண்டும் செப்டம்பர் 2 தோழர் ஹோ சி மின். நினைவு தினத்தில் உறுதிபட முன்வைக்கின்றோம்.
ஏறக்குறைய 30 ஆண்டு காலம் 3 ஏகாதிபத்தியங்களில் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய சிறிய நாடாகவும், சிறிய கட்சியாகவும் இருந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தோழர் ஹோ சி மின் முன் வைக்கும் போது. “இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டைபோடுகிறது. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல,.. உண்மையில் நடந்தேறியது. அமெரிக்க வல்லரசினை மண்ணைக் கவ்வச் செய்தவர் வியட்நாம் விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஹோ சி மின்.
புதிய ஜனநாயக புரட்சியை தனது கடமையாக கொண்டு செயல்படுகின்ற புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தற்போதைய இடைக்கட்டத்தில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பொருத்தமான வழிமுறை ஒன்றை முன் வைத்துள்ளது.
ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் கூட்டு சேர்ந்து ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவது மட்டுமே சரியான தீர்வாக அமையும் என்பதையும் முன்வைத்து போராடுகிறது.
“மூக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவதால் மாடுகளுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை” என்று பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திலிருந்து ஜப்பான் ஆதிக்கத்திற்கு மாறிய போது எளிமையாக முன்வைத்தார் தோழர் ஹோ சி மின்.. அது நாடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளில் உள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதையும் உணர்ந்தே உள்ளோம்.
இத்தகைய மகத்தான கடமையை முடிப்பதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் செல்ல வேண்டிய பாதையையும் தோழர் ஹோ சி மின் முன் வைத்துள்ளார்.
“முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் மிகவும் ஆபத்தான எதிரிகள்.. இந்த இரண்டு எதிரிகளுடன் மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும்.. இந்த எதிரியானவர் மேலே குறிப்பிட்ட இரு எதிரிகளின் கூட்டாளியாவார்” என்று மிக நுட்பமாக வரையறுத்து கூறினார். “இத்தகைய மூன்று எதிரிகளுக்கும் எதிராக உறுதியுடன் போராடுவதிலேயே புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது” என்று தோழர் ஹோ சி மின் கூறினார்.
அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறு காலனியாக்க சுரண்டல்,, அடக்குமுறைகளையும், அது தோற்றுவிக்கும் பாசிச அபாயத்தையும் முறியடிப்பதற்கும், அதன் பிறகு புதிய ஜனநாயக புரட்சியை நோக்கி நாட்டையும், மக்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கும், மேற்கண்ட மூன்றாவது போக்கான தனிநபர் வாதம் என்ற கொடிய நோயானது புரட்சிகர இயக்கங்களுக்குள் தோன்றுவதையும் எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதை தோழர் ஹோ சி மின் வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொள்வோம்.
எனினும், வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைவது தான் அற்புதமானது என்ற தோழர் மாவோயின் கூற்றுக்கு இணங்க தோழர் ஹோ சி மின் வாழவில்லை. இறுதி காலத்தில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர நடைமுறைகளில் இருந்து விலகி சென்றார் என்பதையும், எதிர்மறை அனுபவமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம்.
◾ஆல்பர்ட்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி