பத்திரிக்கைச் செய்தி


நாள் 5-5-2022

♣ தமிழக மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! வன்மையாக கண்டிக்கிறோம்!
♣ சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை நமது மாணவர்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.
♣ அறிவியலை மறுத்து, பிற்போக்குதனத்தை இயல்பாக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், செயல்திட்டத்தை முறியடிக்க அனைத்து முனைகளிலும் போராடியாக வேண்டும்.!

தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சரக சம்ஹிதை என்ற நூலை எழுதியதாக கூறப்படும் சரகர் பெயரால் சமஸ்கிருதத்தில் உறுதி ஏற்றுள்ளனர். இதனை எமது மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மகரிஷி சரகர் உறுதி மொழியை மாணவர்கள் எடுக்கும்படி கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், அது தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை.
மருத்துவத்தின் தந்தையான கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் பெயரில் உறுதிமொழி ஏற்பதுதான் வழக்கமானது. ஹிப்போகிரேட்டஸ், நல்லறிவு, அன்பு, இரக்கம், நேர்மை, ஆண்-பெண் பாகுபாடு இல்லாமல், மனச்சான்றுக்கு கட்டுப்பட்டு, கண்ணியமாக, தன்னால் இயன்ற அளவுக்கு உயிர்களைக்காப்பாற்றப் பாடுபடுவேன் போன்றவற்றையும் நோய்கள் கடவுள்களால் வருவதில்லை, இயற்கையாக வருபவை என்று சொன்ன முன்னோடி அவர்.

ஆனால் தற்போது திணிக்கப்பட்டுள்ள சரகர் உறுதிமொழியில் நோயை அது பாவத்தின் விளைவாகப் பார்க்கிறது. பிரம்மச்சாரியாய் இரு, மாமிசம் சாப்பிடாதே, அரசனுக்கு அடிமையாக இரு, பிராமணர்களின் நலனுக்காக உழை, அரசை விமர்சிப்பவர்களுக்கு சிகிச்சை தராதே, தனியாக வரும் பெண்களுக்கு சிகிச்சை தராதே, ஆயுர்வேதம் தான் சிறந்தது போன்றவை கூறி அறிவியலை பின்னோக்கி இழுப்பவையாக உள்ளது. இதனை தான் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கல்லூரி முதல்வர் மட்டுமல்ல இன்னும் பல ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்து உள்ளனர். இவர்கள் சமயம் வரும் போது தனது விஷக்கொடுக்கை நீட்டுவார்கள். இது போன்ற தருணங்களில் தமிழக மக்கள் விழிப்பாக இருந்து ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலை வெளியேற்றுவது மிக முக்கிய கடமையாகும்.
பொதுவாக மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையிலிருந்து மாறி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ள இந்த சூழலில் மாணவர்களை மேலும் சீரழிக்கின்ற வகையில் இதுபோன்ற குப்பைகளை அவர்கள் மூளையில் திணிப்பது அபாயகரமானது. மோடி தலைமையிலான பிஜேபி அரசு கல்வித்துறையை சமஸ்கிருதமயமாக்குவது இந்திமயமாக்குவது, சனாதனமயமாக்குவது போன்ற ஆர்எஸ்எஸ் அஜென்டாக்களை தொடர்ந்து செய்து காவி பாசிசத்தாக்குதலை செய்து வருகிறது. இதற்கு எதிராக தமிழக மக்கள் போராடவும் காவி பாசிசத்தை வீழ்த்தவும் ஒன்றிணைய வேண்டும்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி

மருத்துவ_கல்லூரியில்_சமஸ்கிருதத்தில்_உறுதிமொழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here