காவிப் பாசிசம்:
‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’
வார்த்தைகள் நீக்க மசோதா!
கடந்த 06-12-2025 அன்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. பீம் சிங் கீழ்க்கண்டவாறு அரசியலமைப்பு திருத்தக் ‘காவி மசோதா’ ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
‘அரசியலமைப்பு முகப்புரையில் இருக்கும் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ – என்ற வார்த்தைகள் குழப்பத்தை உருவாக்குகின்றன. (உண்மையில் இந்த இரண்டு வார்த்தைகள்
தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உருப்படியானவை என்பதுதான் இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் மிகச் சரியான வார்த்தைகள் ஆகும்).
1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 முதல் நடைமுறையில் உள்ள அசல் அரசியல் அமைப்பில் இந்த இரண்டு வார்த்தைகளும் இல்லை. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில், 42-வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கண்ட 2 வார்த்தைகளையும் அரசியலமைப்பில் சேர்த்து விட்டார். அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் இருந்தனர். அரசியலமைப்புசபையும் ஏற்கனவே இந்த பிரச்சினையை விவாதித்துள்ளது. அப்போது வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் அமைப்பு நாட்டை மதச்சார்பற்றதாக மாற்றும் வகையில் இருப்பதால், ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை சேர்ப்பது தேவையில்லை என்றார். மேலும் ‘சோசலிஸ்ட்’ என்ற வார்த்தையைச் சேர்ப்பதையும் அம்பேத்கர் விரும்பவில்லை. (அனைத்தும் அப்பட்டமான பொய்) அப்போதைய சோவியத் ஒன்றியத்தை மகிழ்ச்சிப்
படுத்த ‘சோசலிஸ்ட்’ என்ற சொல் சேர்க்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்த ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் சேர்க்கப்பட்டது.
எனவே, இந்த இரண்டு வார்த்தைகளையும் நீக்க வேண்டும். அது எந்த அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்
பின் பிற விதிகளையும் பாதிக்காது’.
– இதுதான் பாஜக எம்.பி. பீம்சிங் மாநிலங்களவையில் கொண்டு வந்த ‘காவிமய மசோதா’-வின் சாரம்.
அதற்கு அவர் அண்ணல் அம்பேத்கரை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். என்னமோ அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் குழுவில் இருந்த அண்ணல் அம்பேத்கரை தவிர்த்து மற்ற அனைவரும்கூட
‘மிகச்சிறந்த’ பங்களிப்பினை செய்து உழைத்தது போன்ற பாவனையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மேற்படி இரண்டு வார்த்தைகள் உட்பட இன்னும் விரிவான தன்மையில் தொழிலாளர்கள் நலன் சார்ந்து, பெண்ணுரிமைகள் நலன் சார்ந்து, மொத்தத்தில், அனைத்து சமூக நலன் சார்ந்து, தீண்டாமை ஒழிப்பு நலன் சார்ந்து, சனாதன சாதி ஒழிப்பு நலன் சார்ந்து, தொழிலாளர்கள் நலன் சார்ந்து எண்ணற்ற முன்மொழிவுகளை அண்ணல் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க முனைந்த பொழுது அரசியலமைப்பு குழுவில் அங்கம் வகித்திருந்த பார்ப்பன மற்றும் பார்ப்பனீய உறுப்பினர்கள் எப்படி எப்படி எல்லாம் கடிந்து போராடி ‘ஸனாதனத்தை’
நிறுவிடப் பங்காற்றினர் என்பதே உண்மை நிலவரமாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் மிக முக்கிய பங்காற்றிய அண்ணல் அம்பேத்கர் இப்படிக் கூறினார்.
‘அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் நான் ஒரு எழுத்தர் (Clerk) நிலையிலேயே ஆளாக்கப்பட்டிருந்தேன். சுற்றி இருந்தவர்கள் அந்த அளவிற்கு எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
ஏதோ முடிந்த அளவிற்கு இந்த பணி முடிவுற்று கரை சேர்ந்திருக்கிறது. எனவே, இந்த அரசியலைப்புச் சட்டம் நல்லவர்கள் கையில் கிடைத்தால் குறைந்தபட்சமேனும் மக்களுக்கு நலன் பயக்கும்; தீயவர்கள் கையில் சிக்கினால் அதிகக் கொடுமைகளை மக்கள் சந்திக்க வேண்டி வரும்’ – இதுதான் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி முடித்த பின்பு அண்ணல் அம்பேத்கர் தெரிவித்த கருத்துக்களின் சாரம். ஆக, இன்று தீயவர்கள் கையில் ஆட்சி அதிகாரமும் அரசியலமைப்பு சட்டமும் மாட்டிக் கொண்டு எந்த அளவிற்கான இன்னல்களை – கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ அந்தளவிற்கு அனுபவித்துக் கொண்டிருப்பதை ஆர் எஸ் எஸ் சங் பரிவார் காவி பாசிஸ்டுகள் மற்றும் அதன் எடுபிடி பிழைப்பு வாத அடிமைகள் தவிர்த்து அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் மக்களவையில் விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் அண்ணல் அம்பேத்கரின் சிறப்பியல்கள் பற்றி எடுத்துரைத்த பொழுது, ‘அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்…
இப்படி எதற்கெடுத்தாலும் அம்பேத்கரை உச்சரிப்பது ஒரு ஃபேஷனாகிப் போய்விட்டது; அப்படி அம்பேத்கர் பெயரை உச்சரிப்பவர்கள், அதற்குப் பதிலாக கடவுள் பெயரை இத்தனை முறை சொல்லியிருந்தாலாவது, நாட்டிற்கும் மக்களுக்கும் விமோசனம் விளைந்திருக்கும்…’ என்று அண்ணல் அம்பேத்கரை ஏளனம் செய்தார்; இழிவு படுத்தினார் – இன்றைய காவிக் கூட்டத்தின் பிதாமகன்களில்
ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஆனால் இன்றோ திருப்பரங்குன்றத்தில் அமைதியைக் குலைக்க இந்து மதத் தலைவன் ராம. ரவிக்குமார் மற்றும் சங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை காவிக் கூட்டம் எப்படி பயன்படுத்து
கிறதோ, அதே பாணியில் மாநிலங்களவையில் பாஜக எம்.பி. பீம் சிங்-கைப் பயன்படுத்தி ‘மதச்சார்பற்ற’ ‘சோசலிஸ்ட்’ என்ற இரண்டு வார்த்தைகளை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவதற்கு மசோதா கொண்டு வரச் செய்து நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்க:
♦ இந்துராஷ்டிரத்துக்கு பாதைசமைக்கும் நீதிமன்ற தீர்ப்புகள்!
♦ தேர்தல்களை கடந்து இந்துராஷ்டிராவை நோக்கி பாஜக!
உண்மையில் இந்த வார்த்தைகள் இருப்பதினாலேயே பாசிச காவி கூட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை நொறுக்கு கின்ற ‘பணிகள்’ தொழிலாளர்கள் விவசாயிகள் நலன்களை பறிக்கின்ற ‘ ‘பணிகள்’ எவையும் தடைபட்டு நின்று விடவில்லை. அது பாட்டிற்கு வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் உண்மையில், சிறுபான்மை மதத்தினரை குறிப்பாக இஸ்லாமிய மதத்தினரை இந்திய நாடு முழுமைக்கும் காவி வானரக் கும்பல் படுத்துகின்ற பாடு – நடத்துகின்ற அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா?
நாட்டின் அறுதிப் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் – தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக எத்தனை எத்தனை சட்டங்களை (143 எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை வெளியேற்றி
விட்டு) நிறைவேற்றிக் கும்மாளம் அடித்தனர். மறந்திடத் தான் முடியுமா?
மக்கள் நலன் சார்ந்தா பீம்சிங் இந்த மசோதாவை தாக்கல்
செய்துள்ளார்?
அரசியல் அமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ என்ற வார்த்தைகளை சேர்த்து அரசியலமைப்பு திருத்தப்பட்டு 50 ஆண்டுகள் அதாவது அரை நூற்றாண்டு நிறைவுற்று விட்டது. இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு அமையப்பெற்ற காலத்தில் கூட சிந்தனைக்கு வராத இந்த இரண்டு வார்த்தைகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம், இப்போது மட்டும் காவிக் கும்பலுக்கு ஏன் அவசரமாகத் தேவைப்படுகிறது? காரணம் தெளிவானது.
சங்கிக் கும்பலின் மக்கள் திரள் அமைப்புகளில் ஒன்றான பாஜக-வின் மூல பீடமான RSS வைத்திருக்கும் வேலைத் திட்டத்தில், 1925-ல் , RSS உருவாக்கப்பட்டு, 2025-ல் நூற்றாண்டு நிறைவுறும் இவ்வேளையில் ‘இந்தியா’வின் பெயர் ‘இந்துராஷ்ட்ரா’-வாக மாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் இழிவான வேலைத்திட்டமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எவை எவை எல்லாம் தடைக் கற்களாக இருப்பதாக உணர்கிறார்களோ அவை அனைத்தையும் உடைத்தெறிய வேண்டும் என்பதே அவர்களின் ‘தெளிவான’ நோக்கம். அந்த அடிப்படையில் தான், தற்போது பாஜக எம்.பி. பீம்சிங் மூலம் அரசியலமைப்பில் இருந்து ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ என்ற காவிகளின் கொள்கைகளுக்கு நேர் எதிரான வார்த்தைகளை நீக்கக் கூறிய மசோதாவை தாக்கல் செய்ய வழிவகை செய்துள்ளனர்.
பாஜக-விற்கு அருதிப் பெரும்பான்மை இல்லையாயினும் தமது எடுபடிகளாக மாறிப்போன பிழைப்புவாத கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுடன் இந்த வார்த்தைகள் நீக்கம் செய்யப்படப் போகின்றன.
ஏற்கனவே, தேர்தல் திருட்டு, லஞ்ச ஊழல், விவசாயிகள் தொழிலாளர்கள் நலன்கள் பறிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் செல்வங்களை தாரை வார்த்தல், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அடிமாட்டு விலைகளுக்கு அள்ளிக் கொடுத்து மக்களைத் திண்டாடச் செய்தல்… என எண்ணற்ற மக்கள் விரோதச் செயல்களில் தங்கு தடை இன்றி நான்கு கால் பாய்ச்சலில் காவிக் கூட்டம் காரியங்களில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பு முகவுரையில் (Preamble) “மதச்சார்பற்ற” (Secular) மற்றும் “சோசலிச” (Socialist) ஆகிய வார்த்தைகளை 1976 ஆம் ஆண்டு சேர்த்து 42வது சட்ட திருத்தத்தின் (42nd Constitutional Amendment Act) மூலம் சேர்க்கப்பட்டது.
இந்திய நாட்டின் சமூக எதார்த்த சூழலில், இவ்விரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சேர்க்கப்பட்டது 100 சதவீதம் சரியே ஆகும்.
எனவே இந்த இரண்டு வார்த்தைகளை நீக்க முற்படும் பாசிசக் காவிக் கூட்டத்திற்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
சமூக மாற்றம் விரும்பும் புரட்சிகர இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், பாஜக எதிர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்று திரண்டு நாட்டு மக்களைத் திரட்டி களம் காண வேண்டும். காவிப் பாசிஸ்ட்டுகளை புதைகுழிக்குள் தள்ள வேண்டும்!
- எழில்மாறன்







சோசலிசம் மதச்சார்பற்ற என்ற இரண்டு வார்த்தைகளை நீக்குவது மூலம் இந்தியாவை இந்துராஷ்டிர நாடாக மாற்றுவது சங்கிகளின்திட்டம் நிறைவேறுவதற்கான அடிப்படையாகும்.
மக்களிடம் சமத்துவம் சகோதரத்துவம் இருக்கக் கூடாது என்பதை ஆர் எஸ் எஸ் விரும்புகிறது. ஆனால் அதற்கு எதிராக செயல்படக்கூடிய கட்சிகள் அமைப்புகள் மேலும் வீரியமாக போராட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை தான் நமக்கு உணர்த்துகிறது.