
1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற வகையில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசின் மூலமாக அதாவது பாசிச மோடி அரசாங்கத்தின் மூலமாக 100 ரூபாய் நாணயம் ஒன்றையும், தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று முன்வைக்கின்ற ஒரு பயங்கரவாத அமைப்பு, அதிலும் குறிப்பாக பார்ப்பன மேலாதிக்கத்தையும் சனாதன தர்மத்தையும் இந்தியாவில் நிலைநாட்ட வேண்டும்; சாதி மேன்மையானது என்று சித்தாந்தரீதியாக முன்வைக்கின்ற; மனிதர்களுக்குள் அதாவது குறிப்பாக இந்திய மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை புனிதப் படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் நூற்றாண்டு விழாவை அரசாங்கமே கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மத்தியில் எழுந்தாலும் பெரும்பான்மை ‘ இந்து’ மக்களிடம் எழவில்லை.
பல நூற்றாண்டுகளாக சாதிய கட்டமைப்பின் கீழ் பிளவுபடுத்தப்பட்டு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வான வாழ்க்கை முறையை கடைப்பிடித்துக் கொண்டே அது சரியானது தான் என்றும், சாதி இந்தியாவின் மிகப்பெரிய பெருமிதம் என்றும் கருதுகின்ற பெரும்பான்மை இந்து சமூகத்திடமிருந்து மதச்சார்பற்ற ஜனநாயக உணர்வு எழவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்பது மட்டுமின்றி அபாயகரமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற எச்சரிக்கையை விடுப்பதாகும்.
ஆர்எஸ்எஸ் தோன்றிய பின்னணி, அது இன்றைய காலகட்டத்தில் செயல்படுகின்ற வழிமுறைகள், இதன் மூலம் இந்திய சமூக அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள கேடுகள் ஆகியவை அனைத்தும் குறித்து ஆங்கிலத்தில் ஏஜி நூரானி எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ நூலை தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் மூலம் தமிழில் மொழி பெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிச தன்மைகள் குறித்தும், பார்ப்பன மேலாதிக்கமும், சாதிய அடக்குமுறையும் கொண்ட அதன் சித்தாந்தம் குறித்து புரிந்து கொள்ள விரும்புகின்ற ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளர்கள், கம்யூனிஸ்டுகள் கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான நூல்களில் ஒன்றுதான் ஆர்எஸ்எஸ் பற்றி ஏ.ஜி.நூரானி ‘ஆர்எஸ்எஸ் ஓர் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எழுதிய நூலாகும்.
ஆர்எஸ்எஸ் தோன்றியது ஏன்?
“தனக்கென்று ஒரு தனிப்பட்ட ராணுவத்தையும், ஜெர்மனியில் பியூரர் கோட்பாட்டின் அடிப்படையில் பாசிசத் தன்மை வாய்ந்த ஒரு தலைவருக்கு கேள்வியின்றி அடிபணியும் பண்பினையும் முழுமையாக கொண்டிருக்கும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் என்று அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் இந்தியாவிலேயே அதிக வலிமை வாய்ந்த இயக்கம் என்பது சந்தேகம் இல்லை.”
“ஆர்எஸ்எஸ் 1951 இல் தன் அரசியல் அமைப்பாக பாரதிய ஜனசங்கத்தை உருவாக்கியது. 1977-ல் ஜனதா கட்சியில் ஐக்கியமான ஜன சங்கம், 1980ல் வெளியேறியது. ஜனதா கட்சியில் ஐக்கியமான பிறகும் தன்னுடைய தாய் அமைப்பாகவும், வழிகாட்டியாகவும் இருந்த ஆர்எஸ்எஸ்- சிடம் ஜனசங்கம் விசுவாசமாக இருந்ததால் ஜனதாவிற்குள் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்துதான் அது வெளியேறியது.
வெளியேறிய சில மாதங்களுக்குள்ளாகவே 1980-ல் அது மீண்டும் ஒரு அரசியல் கட்சியாக இருந்தது. ஆனால் அது தோன்றிய மூன்று பத்தாண்டுகள் வரை வைத்திருந்த ஜனசங்கம் என்ற பெயரை துறந்து விட்டு, ஒரு மரியாதைக்குரிய பாரம்பரியத்திலிருந்து வரும் அமைப்பு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட துவங்கியது” என்கிறார் ஆர்எஸ்எஸ் பற்றி ஆய்வு செய்துள்ள ஏ.ஜி.நூரானி.
இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் பாஜக என்ற பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல் கைப்பற்றிய பிறகு 2017 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் தனது ஊழியர்கள் மத்தியில் பேசிய உரை ஆர்எஸ்எஸ் இன் உண்மையான நோக்கத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.
“ஜெர்மனி யாருடைய நாடு? அது ஜெர்மனியர்களுடையது தான். பிரிட்டன் பிரிட்டிஷ்காரர்களுடைய நாடு. அமெரிக்கா அமெரிக்கர்களுடைய நாடு. அதேபோல் இந்துஸ்தான் இந்துக்களின் நாடு. இதனால் இந்துஸ்தான் மற்றவர்களுடைய நாடல்ல என்று பொருள் அல்ல. பாரத மாதாவின் புதல்வர்கள், இந்திய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள், இந்திய கலாச்சாரத்துடன் ஒத்து வாழ்பவர்கள் ஆகிய அனைவரையும் குறிக்கும் சொல் தான் இந்து. இந்திய (அதாவது இந்து) கலாச்சாரத்தை கடைப்பிடிப்பவர்கள் தான் இந்துக்கள் என்பதே அதன் பொருள். இதுதான் சங் குடும்பத்தின் ‘ கலாச்சார தேசியம்’.”
தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக, விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரே இந்தியாவை இந்துக்கள் ஆள வேண்டும் என்ற கருத்தியல் கொண்ட ஆரிய சமாஜத்தின் வழித்தோன்றல்கள் என்பதால் அது ஒரு கலாச்சார அமைப்பு அல்ல.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஒருபோதும் ஆர்எஸ்எஸ் போராடியதே கிடையாது. மாறாக பார்ப்பன கும்பலின் அதிகாரத்தை அங்கீகரித்துக் கொண்ட பார்ப்பன (இந்து) மதத்தை கோட்டை கட்டி பாதுகாத்த பிரிட்டன் ஆட்சியை ஆதரித்த அடிமைகளாகவும் விசுவாசிகளாகவுமே இருந்தனர் என்பது தான் வரலாற்று உண்மை.
பிரிட்டன் ஒருவேளை நாட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் அடிமை விசுவாசியாக இருந்து கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கும், அந்நியர்களுக்கும் சேவை செய்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கை ஒன்றை முன் வைத்திருந்த ஒரு பயங்கரவாத இயக்கம் தான் ஆர்எஸ்எஸ் பாஜக என்பது தான் உண்மையாகும்.
இந்தியாவை எப்படிப்பட்ட நாடாக உருவாக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸின் சித்தாந்த குருமார்களான சாவர்க்கர் முதல் கோல்வால்கர் வரை தெளிவாகவே முன் வைத்துள்ளனர். அவை ஆங்கிலத்திலும் தற்போது மொழிபெயர்ப்பாக தமிழிலும் காணக் கிடைக்கிறது.
“தேச ஒற்றுமையை உருவாக்கவும், ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், சிறுபான்மையினர் ஆணையத்தினை மூட வேண்டும். அதற்கு பதிலாக மனித உரிமை ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சங் பரிவாரம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தினை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ரத்து செய்யப்படும். அந்நிய கிறிஸ்தவ சபைகள் வெளியே தூக்கி எறியப்படும். மதமாற்றத்திற்காக கிறிஸ்தவ முஸ்லிம் நிறுவனங்களுக்கு அந்நிய பணம் வருவது முற்றிலுமாக தடை செய்யப்படும். எந்த பிரதேசத்திலாவது இந்துக்கள் சிறுபான்மையாக இருந்தால் அது நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பதாக சங் பரிவாரம் கருதுகிறது.
எங்காவது ஏமாற்று வேலை மூலமாகவோ கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்யப்பட்டால் அது தடை செய்யப்பட வேண்டும். பஞ்சாப்பை பொறுத்தவரையில் சங் அமைப்பின் பங்கு முற்றிலும் தேசிய நோக்கிலானது சீக்கியர்கள் இந்து சமூகத்தின் ஓர் அங்கம்” என்று தான் அது கூறிக் கொள்கிறது என்கிறார் ஆர்எஸ்எஸ் இன் கொள்கைகளை பற்றி எழுதியுள்ள பிஷிக்கர்.
1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தனது சொந்த நடவடிக்கைகளின் காரணமாக ஒரு பயங்கரவாத அமைப்பு என்று மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது எப்போதுமே இந்திய நாட்டை சுரண்டுகின்ற அமெரிக்காவையோ ஏற்கனவே சுரண்டி வந்த பிரிட்டன் ஏகாதிபத்தியத்தையோ எதிரியாக சித்தரிக்கவில்லை. மாறாக இந்திய மக்களில் பார்ப்பன கொடுங்கோன்மையின் கீழ் தாக்குப் பிடிக்க முடியாமல் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு சென்ற மக்களை தான் தனது எதிரியாக சித்தரித்து வருகிறது.
பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து துண்டித்துக் கொண்டு வேறு ஒரு தனி மார்க்கம் கண்ட குருநானக் உருவாக்கிய சீக்கிய மதத்தையும், பார்ப்பன மதத்திலிருந்து வெளியேறி தனி வழிபாட்டு முறையை கொண்ட கர்நாடகத்தில் பசவண்ணர் உருவாக்கிய லிங்காயத்து, தமிழகத்தில் அய்யா வைகுண்டர் போன்றவர்களையும் செரிப்பதற்கு ஆர்எஸ்எஸ் இவர்கள் அனைவரும் இந்து மதத்தின் ஒரு அங்கத்தினர்தான் என்ற பித்தலாட்டத்தை முன்வைத்து வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்கின்ற அல்லது அவர்கள் முன்வைக்கின்ற ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்ற மிதவாத இந்துக்களை கூட ஆர்எஸ்எஸ் ஒருபோதும் விட்டு வைப்பதில்லை என்பதன் அடையாளம் தான் காந்தியை படுகொலை செய்தது.
காந்தியை படுகொலை செய்து இன்றுவரை காந்தியை ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கின்ற அடிப்படையில், ‘ தேசத்தந்தை’ என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாத ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் காந்தியை அவ்வப்போது புகழ்ந்து பேசுவதும், வெளிநாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்தால் காந்தியின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது என்று கபட நாடகம் ஆடுவதை பிரித்துப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
“ஓர் அமைப்பு என்கிற வகையில் இந்து மகா சபைக்கு காந்தியின் படுகொலையில் முடிந்த சதியில் பங்கு இல்லை என்று நீங்கள் சொல்வதில் நான் உடன்படுகிறேன். ஆனால் கணிசமான அளவிலான மகாசபை உறுப்பினர்கள் இந்த துயரத்தை கொண்டாடி இனிப்புகள் வழங்கியது என்ற உண்மையை நாம் காணாமல் விடவும் முடியாது இது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நமக்கு தகவல்கள் வந்துள்ளன…… ரகசியமாக ஒரு ராணுவம் போல அல்லது அரை ராணுவம் போல செயல்பட்டு, உள்ளார்ந்த அபாயத்தை தாங்கி நிற்கும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பிற்கும் இது பொருந்தும்” என்கிறார் பட்டேல்.
காந்தியின் படுகொலையில் தனக்கு பங்கு இல்லை என்று ஒருபுறம் மறுத்துக் கொண்டே காந்தி போன்ற சனாதனத்தையும், வர்ணாசிரமத்தையும், சாதிய படிநிலைகளையும் ஏற்றுக் கொண்ட மிதவாத இந்துக்களை ஆர்எஸ்எஸ் ஒரு போதும் அங்கீகரித்தது கிடையாது. அவர்களை ஒன்று தீவிரவாத இந்துவாக மாறு அல்லது தீர்த்துக்கட்டப்படுவாய் என்ற கொள்கையின் கீழ் தான் கையாண்டு வருகிறது.
இந்தியாவின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நலன்களை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் நிதியாதிக்க கும்பல்களின் காலடியில் குறிப்பாக கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்திவிட்டு, தேசபக்தி பஜனை பாடுகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஒருபோதும் ஒரு தேசபக்தி இயக்கம் கிடையாது.
இத்தகைய பயங்கரவாத இயக்கத்தை கொண்டாடுகின்ற வகையில் மக்களின் வரிப்பணத்தில் இருந்து நாணயங்கள் வெளியிடப்படுவதும், தபால் தலை வெளியிடப்படுவதும் சமகாலத்தில் நமக்கு நேர்ந்துள்ள அவமானகரமான நடவடிக்கையாகும்.
தனது நூற்றாண்டுக்குள் இந்தியாவை ஒரு இந்து நாடாக்க வேண்டும்; ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யமாக, இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்று வெறித்தனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட பயங்கரவாத கும்பலை மக்களிடம் அம்பலப்படுத்தி தூக்கி எறிவதற்கு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்.
இத்தகைய எழுச்சிகளுக்கு தேவையான அனைத்து போராட்டங்களுக்கும் தேர்தல் உள்ளிட்ட போராட்ட வடிவங்களையும் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி அதனை அதன் மூதாதையர்கள் இருந்த இடத்திற்கே அனுப்ப வேண்டும்.
◾தமிழ்ச்செல்வன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி