
புதிய ஜனநாயகம் இதழ் (செப்டம்பர் 2025)
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் (1941-45) ஜெர்மனியில் ஹிட்லரால் இலட்சக்கணக்கான யூதர்கள் இனவழிப்புக்குள்ளானார்கள். அங்கு கொன்றொழிக்கப்பட்டதன் காரணமாக தங்களுக்கென ஒரு நாட்டை அமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை ஐரோப்பாவின் செல்வாக்குமிக்க யூதர்கள் மேற்கொண்டனர். பிரிட்டிஷ் அரசியலிலும் யூதர்கள் பங்குவகித்ததால் ஒரு சதித்தனமான ஒப்பந்தத்தின் மூலம் பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பறித்து 1948-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல் என்ற நாடு.
அதுமுதல் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பரிபூரண ஆசியோடும், அரபு நாடுகளின் கோழைத்தனத்தாலும் அந்நாடு தனது ஆக்கிரமிப்பை படிப்படியாக விரிவாக்கி ஏற்கனவே அங்கிருந்த பாலஸ்தீன நாட்டை மேற்குக்கரை மற்றும் காசா என்று இரண்டாகப் பிளந்துபோட்டது. உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலையான காசாவில் அடைபட்டிருந்த சுமார் 25 இலட்சம் பாலஸ்தீன மக்கள் தங்களது அன்றாட வாழ்வை வாழமுடியாமல் நான்கு திசையிலும் இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
அந்த ஆற்றாமையின் வெளிப்பாடாக 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசா பகுதியில் ஆட்சியிலிருந்த ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்குள் புகுந்து 1200 பேரை சுட்டுக்கொன்றும் 251 பேர்களை பணயக் கைதிகளாகவும் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அன்று முதல் காசாவின் மீது போரை அறிவித்த இஸ்ரேல் ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்துக்கட்டுகிறோம் என்ற பெயரில், அவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையும் கூண்டோடு கொன்றொழிப்பது என்றவகையில் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை பகிரங்கமாக செய்து வருகிறது. யூத, சியோனிச இஸ்ரேலின் இத்தாக்குதல் மூலம் இதுவரை 64,000 மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். யுனிசெப் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு பாலஸ்தீன குழந்தை கொல்லப்படுகிறது அல்லது முடமாக்கப்படுகிறது. அங்கு வசிக்கும் 10 இலட்சம் குழந்தைகள் அன்றாடம் அங்கு நடக்கும் குண்டுவீச்சையும், துப்பாக்கி சூட்டையும், அதனால் கொடூரமாகக் கொல்லப்படுவோரையும் கண்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறுகிறது.
மேலும் சுமார் 22 இலட்சம் பாலஸ்தீனர்களை வடக்கிலிருந்து தெற்காகவும், தெற்கிலிருந்து வடக்காகவும் தொடர்ந்து விரட்டியடித்தும், பட்டினி சாவுக்குள் தள்ளியும் வருகிறது யூத, சியோனிச இனவெறி இஸ்ரேல் இராணுவம். பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் குண்டுவீச்சால் சிதறி இடிபாடுகள் நிறைந்த ஒரு மயானமாக காசா மாற்றப்பட்டுள்ளது.
உதவிப்பொருட்களைத் தடுத்து
பட்டினியை போராயுதமாக மாற்றியுள்ள இஸ்ரேல்!
இதுவரை ஆயுதங்களைக் கொண்டு பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவித்த சியோனிஸ்டுகள் தற்போது பட்டினியை ஆயுதமாக்கி வெளியிலிருந்து வரும் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தடுத்து நிறுத்தி பட்டினி போட்டு கொன்றுவருகின்றனர். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். போலவே இஸ்ரேலிலும் “ரிசர்வ் படைகளின் தளபதிகள் மற்றும் வீரர்கள் மன்றம்” (Forum of Reserve Commanders and Fighters ) என்ற அரசுசாரா அமைப்பு வகுத்துக்கொடுத்த திட்டத்தை இஸ்ரேலிய இராணுவத் தளபதியான இய்லான்ட் என்பவர் நவம்பர் 2024-ல் முன்வைத்தார். “ஜெனெரலின் திட்டம்” அல்லது “இய்லான்ட் திட்டம்” (General’s plan or Eiland’s plan) என்றழைக்கப்படும் இந்தத் திட்டமானது “வடக்கு காசா பகுதியை இனரீதியாக சுத்திகரித்தல்; பின்னர் அப்பகுதியை முற்றுகையிடுதல், மனிதாபிமானப் பொருட்களின் நுழைவை நிறுத்துதல், பாலஸ்தீனப் போராளிகள் உட்பட எஞ்சியிருக்கும் எவரையும் பட்டினியால் அழித்தல்” என்பதுதான்.
“பாலஸ்தீனியர்களின் சாவுக்குக் காரணமாக இருக்கும் பிற அச்சுறுத்தல்களையும், எடுத்துக்காட்டாக தொற்றுநோய்க்கான சாத்தியக்கூறையும் புறக்கணிக்க கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, காசாவின் வயதான பெண்கள் யார்? – அவர்கள் ஹமாஸ் இயக்கத்தினரின் அதே தாய்மார்கள் மற்றும் பாட்டிகள்தானே?. “காசா பட்டினியால் வாடும் போது, இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கோபமாகவும் எரிச்சலுடனும் இருப்பார்கள். பசியுள்ள மக்கள் ஹமாஸ் அரசாங்கத்துக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்துவார்கள்” என்று கூறி இத்திட்டத்தை முன்வைத்தார்.
படிக்க:
♦ பாலஸ்தீன் அரசை அங்கீகரி: ஆஸ்திரேலிய அரசை அசைத்த சிட்னி ஹார்பர் போராட்டம்!
♦ கொலைகார இஸ்ரேலே, அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து!!
இதன்மூலம் பாலஸ்தீன மக்களை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு விரட்டிவிடுவது, இல்லையென்றால் அவர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்து முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு காசாவை இணைத்துக்கொள்வது என்ற திட்டத்தைத்தான் தற்போது இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் நடைமுறைப்படுத்திவருகின்றனர். இதையேதான் ரியல் எஸ்டேட் அதிபரான அமெரிக்காவின் பாசிச கோமாளி ட்ரம்ப்-பும் “Gaza Riviera” என்ற பெயரில் செயல்படுத்த நினைக்கிறார். அதனால் இஸ்ரேலிய இனவெறியர்கள் நடத்தும் இந்த இனப்படுகொலையை ஆதரித்தும் வருகிறார். ட்ரம்ப்பும் இஸ்ரேலிய அதிபர் நெதன்யாகுவும் கூட்டுசேர்ந்து நடத்தும் வெறியாட்டத்தால் இன்றுவரை குழந்தைகள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் பட்டினிச்சாவு அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களையும் அம்மக்களுக்கு வழங்கவிடாமல் தடுத்து வருகிறது
இஸ்ரேலிய இராணுவம். இந்தியாவில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய பஞ்சம் போலவே பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற ரவுடியால் உருவாக்கப்பட்டுள்ள இப்பஞ்சம் பச்சிளம் குழந்தைகள் முதல் அனைவரையும் வெறும் எலும்புக்கூடாக மாற்றி, ஒரு சிறு ரொட்டித்துண்டுக்கும்கூட முந்தியடிக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது. அமெரிக்கா இஸ்ரேலால் கூட்டுசேர்ந்து நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation) என்ற அமைப்பால் ஒருசில இடங்களில் நடத்தப்படும் நிவாரண முகாம்களில் மட்டுமே உணவு வழங்கப்படும் என்று சுருக்கி இம்மையங்களை மக்களை வரவைக்கும் பொறிகளாகப் பயன்படுத்தி அங்கு வரும் மக்களை குண்டுவீசியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்து வருகிறது.
உணவுக்காக காத்திருக்கும் மக்களின் மேல் நடத்தப்படும் இத்தகைய தாக்குதலில் மட்டும் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலக ரவுடியும் உள்ளூர் ரவுடியும் கூட்டுசேர்ந்து பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் இந்த இனப்படுகொலையை மனிதாபிமானமுள்ள மக்கள் எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பிவருகிறார்கள். தற்போது சுமார் 50 கப்பல்களில் உலகமுழுவதுமுள்ள மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் காசாவை நோக்கி செல்கின்றன. சூழ்நிலைப் போராளி கிரெட்டா துன்பர்க் உட்பட பேர் 6 கொண்ட குழு இரண்டுமாதங்களுக்கு முன்பு இதே போன்றதொரு முயற்சியை எடுத்தபோது அதைத் காசாவின் கடற்பரப்பில் தடுத்து திருப்பி அனுப்பியது இஸ்ரேலிய இராணுவம்.
ஏன் இது இனப்படுகொலை?
1948-ல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான மாநாடு மற்றும் 1998-ல் ரோம் நகரத்தில் நடைபெற்ற மாநாட்டில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம், பிரிவு இரண்டின்படி, “இனப்படுகொலை என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய, இன, அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கிறது” என்று கூறுகிறது.
– ஒரு இனக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது.
– கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவித்தல்.
– முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உடல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு இனக்குழுவின் வாழ்வாதாரத்தை வேண்டுமென்றே சேதப்படுத்துதல்.
– இனக்குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளைத் திணித்தல்.
– இனக்குழுவின் குழந்தைகளை வேறொரு இனக்குழுவிற்கு வலுக்கட்டாயமாக மாற்றுதல்.
மேற்கண்டவற்றில் முதல் நான்கு கூறுகளும் பாலஸ்தீன மக்களுக்குப் பொருந்துகின்றன. பாலஸ்தீனர்களை சகமனிதர்களாக யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பாலஸ்தீனக் குழந்தைகளை அவர்கள் கடத்திப்போவதில்லை மாறாக சுட்டுகொன்றுவிடுகிறார்கள்.
மேற்கண்ட சர்வதேச சட்டம் பிரிவு ஒன்றின்படி உலகின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட ஒரு இனவழிப்பு நடக்குமானால் அதை தடுக்கவும், தண்டிக்கவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு கடமையாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சியோனிச இஸ்ரேலால் அப்பட்டமாக நடத்தப்படும் இந்த இனப்படுகொலையை எந்தவொரு நாடும் இன்றுவரை தடுக்கவும் இல்லை, இப்படுகொலையை முன்னின்று நடத்தும் இஸ்ரேலின் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவோ, அவரது அமைச்சரவை சகாக்களோ, அல்லது இராணுவத் தளபதிகளோ தண்டிக்கப்படவும் இல்லை.
படிக்க:
♦ Oracle லாரி எலிசன் தான் பாலஸ்தீன இன அழிப்பின் உண்மைக் குற்றவாளி!
♦ காசாவில் சாவின் விளிம்பில் 14,000 குழந்தைகள்!
தென்ஆப்பிரிக்காவின் முன்முயற்சியால் இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது வெகுசில மூன்றாம் உலக நாடுகள்தான் அதை ஆதரித்தன. வல்லரசு நாடுகளோ, ஜனநாயகம், மனிதாபிமானம், தனிமனித சுதந்திரம் என்று உலகிற்கு வகுப்பெடுக்கும் ஐரோப்பிய நாடுகளோ, முஸ்லீம் சகோதரத்துவம் பேசும் இஸ்லாமிய நாடுகளோ, பெரும்பாலான ஆசிய நாடுகளோ ஆதரிக்கவில்லை. உலக நாட்டாமையான ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலைக் கண்டிக்கும் தீர்மானத்தை பெரும்பாலான நாடுகள் ஆதரித்த போதும் உலக ரவுடியான அமெரிக்கா தனது வீடோ (veto) அதிகாரத்தின் மூலம் அந்த தீர்மானத்தை குப்பையில் போட்டது.
2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலால் யூதர்களிடம் ஏற்பட்டுள்ள பயத்தையும், அச்சஉணர்வையும் பயன்படுத்திக்கொண்டுள்ள சியோனிஸ்டுகள் தங்கள் மீதான மக்களின் அதிருப்தியையும், உள்நாட்டில் தங்களுக்கெதிராக நடந்துவந்த போராட்டங்களையும் திசைதிருப்பி தேசிய வெறியைக் கிளப்பி தங்களின் அகண்ட இஸ்ரேல் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இந்த இனப்படுகொலையை நடத்திவருகிறார்கள். அதற்கு உறுதுணையாக அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளும், Google, Meta, Oracle போன்ற உலகளாவிய கார்போரேட்டுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதம் முதல் அதிநவீன தொழில்நுட்பம் வரை அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றனர்.
படுகொலை செய்யப்படும் பத்திரிக்கையாளர்கள்!
பொதுமக்கள், குழந்தைகள் குறிவைத்து கொல்லப்படுவதும், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தளங்களின் மீது தாக்குதல் நடத்துவதும் போர்க்குற்றம் என்ற நிலையில், சியோனிச இஸ்ரேலின் இத்தகைய போர்க்குற்றங்களை, மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை, பாலஸ்தீன மக்களின் துயர்களை, பசியால் மரணத்தின் விளிம்பில் அழக்கூட பலமில்லாத குழந்தைகளின் நிலையைப் வெளியுலகுக்குப் படம்பிடித்துக்காட்டும் பத்திரிக்கையாளர்களை இலக்கு வைத்து கொன்றுகுவிக்கும் மற்றொரு போர்க்குற்றத்தை எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி செய்துவருகிறது இஸ்ரேல்.
சமீபத்தில் காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே அல்-ஜசீரா செய்தியாளர் குழுவினர் தங்கியிருந்த கூடாரத்தின் மீது குண்டுவீசி அக்குழுவினரை கூண்டோடு படுகொலை செய்துள்ளது இஸ்ரேலிய இராணுவம். இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, துல்லியமான தாக்குதல். இப்படுகொலையை “ஆமாம். நாங்கள் அவர்களை குறிவைத்துதான் தாக்கினோம்” என்று இஸ்ரேலிய இராணுவம் திமிராக அறிவித்துள்ளது. உண்மையைச் சொல்வதை நிறுத்தாத பத்திரிகையாளர்களை அழித்தொழித்தல் என்ற இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் மூலமாக இதுவரை 247 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு காசாவிலிருந்த அல்-ஜசீராவின் செய்திக்குழுவினரை முற்றிலுமாக கொன்றொழித்துவிட்டது இஸ்ரேல்.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் குறிவைத்து கொல்லப்படும் அதேவேளையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இஸ்ரேலுக்கு துணைநிற்கும் நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் காசா பகுதிக்குள் செல்லாமலேயே இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவ்-வில் சகல வசதிகளுடன் நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு இஸ்ரேலிய இராணுவம் சொல்லும் கட்டுக்கதைகளை செய்திகளாக தங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பிவருகின்றனர்.
இதன்மூலம் பாலஸ்தீனர்களுக்கு எதிராகவும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராகவும் பல்வேறு பொய்ச்செய்திகளைப் பரப்பிவருகின்றனர். இத்தகைய பொய்பிரச்சாரத்தின்மூலம் தங்கள் நாட்டின் விடுதலைக்காகவும், கண்ணியமான வாழ்விற்காகவும் போராடும் பாலஸ்தீன போராளிகளைத் தீவிரவாதிகளாகவும், பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்கப்படவேண்டிய வேற்றுகிரகவாசிகளாகவும் கருதும் மனநிலைக்கு இஸ்ரேலிய மக்களை சியோனிஸ்டுகள் தள்ளுகிறார்கள். அதுமட்டுமின்றி பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 5000-6000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பெயர்களையே பாலஸ்தீன பகுதிகளுக்கு சூட்டி அழைப்பதன்மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து அந்த வரலாற்றுப் பகுதிகளைக் காப்பாற்றுவதாக உலகில் பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்துவ மக்களிடமும் தங்களுக்கான ஆதரவை அறுவடை செய்துவருகின்றனர்.
உலக நாடுகளின் பாராமுகம்!
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கையாலாகாத அரபு நாடுகள், ரசியா, சீனா, இந்தியா போன்ற வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கும் நாடுகள் பக்கபலமாக உள்ளதால் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் கொட்டம் அதிகரித்துவருகிறது. மேற்கண்ட நாடுகள் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தச்சொல்லி வெற்று அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் தங்கள் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களை நசுக்கிவருகின்றன. ஆனால் யூத, சியோனிச இஸ்ரேலின் தாக்குதலை உண்மையிலேயே நிறுத்தவேண்டுமானால் மேற்கண்ட நாடுகள் வெற்று அறிக்கைக்குப் பதிலாக இஸ்ரேலுடன் வர்த்தக உறவுகளை துண்டிப்பது, தூதரக உறவுகளை துண்டிப்பது, இஸ்ரேலுக்கு சர்வதேச தடை விதிப்பது, ஐ.நா. படைகளை பாலஸ்தீனத்தில் இறக்கி இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். உக்ரைன்-ரசியப் போரில் ரசியாவுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ள ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன.
ஏனென்றால் எண்ணெய்வளமிக்க அரபு நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், வரைமுறையில்லாமல் தங்கள் நாட்டு எண்ணெய் கார்போரேட்டுகள் சுரண்டிக்கொழுக்கவும் அப்பகுதியில் இஸ்ரேல் என்றொரு தடையரண் (checkmate) இந்நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. இன்னும் கொடுமையாக, பாலஸ்தீனத்தின் சகமுஸ்லிம்கள் மீது நடைபெறும் இந்த திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டித்து பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளில் பெரிய மக்கள் போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை.
தற்போது பாலஸ்தீனத்தின் காசாவையும், அடுத்து பாலஸ்தீனத்தின் மேற்குகரைப் பகுதியையும், அதற்கடுத்ததாக சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்தின் சில பகுதிகளையும் இணைத்துக்கொண்டு அகண்ட இஸ்ரேலை அமைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் இப்போரையும், அப்பாவி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் சியோனிஸ்டுகளைக் கண்டித்து போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்தவேண்டிய அரபுநாடுகளோ, ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களை போட்டுவிட்டு இஸ்ரேலிய இராணுவத்திடம் சரணடையச் சொல்கின்றன.
மேற்குக்கரை பகுதியின் பிரதமரான முகமது அப்பாஸ் ஒருபடி மேலேசென்று இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இனவெறிபிடித்த பிரதமர், அவரின் அமைச்சரவை சகாக்கள், இராணுவத் தளபதிகள், மேற்குக்கரை பகுதியிலும் யூதர்களை குடியமர்த்தி ஆக்கிரமிப்பை நடத்திவரும் சியோனிஸ்டுகளை விமர்சிக்காமல் தங்களுக்குப் போட்டியாக காசாவில் அரசாங்கம் நடத்திவரும் ஹமாஸ் குழுவினரை “நாய்கள்” என்று வெறுப்பைக் கக்கியுள்ளார்.
மெதுவாக மாறிவரும் சூழல்!
“மக்கள் மட்டுமே வரலாற்றைப் படைக்கிறார்கள்” என்ற பேராசான் மாவோவின் கூற்றுப்படி உலகளாவிய அளவில் மக்களின் போராட்டங்களின் விளைவாக ஒருசில நாடுகள் குறிப்பாக, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, மற்றும் மால்டா ஆகிய நாடுகள் இம்மாத தொடக்கத்தில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன. பாலஸ்தீன மக்களின் மீது அப்பட்டமான இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்தும் சியோனிச இஸ்ரேலுக்கு ஒரு சிறிய வேகைதடைபோல இது அமையலாம். பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? இந்த ஒரு சிறிய வாய்ப்பை ராஜதந்திர ரீதியாக அந்நாடு எப்படி பயன்படுத்திக்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் உலக முழுவதுமுள்ள, குறிப்பாக இஸ்ரேலில் உள்ள மனிதாபிமானமுள்ள மக்களும், இடதுசாரி, ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமைக்காக குரல்கொடுக்கும் அறிவுஜீவிகளும், பத்திரிக்கையாளர்களும், சமூக ஊடகங்களும் தங்கள் நாடுகளின் அரசாங்கங்களை அசைத்துப் பார்க்கும் வகையில் தொடர்ந்து நடத்தும் போராட்டங்களே பாலஸ்தீன மக்களை இன அழிப்பிலிருந்து காக்கும். இத்தகைய போராட்டங்கள் உலகில் ஆங்காங்கே நடந்து வருகின்றன. என்றாலும் இப்போராட்டங்களில் பெருவாரியான பாட்டாளி வர்க்கத்தினர் இணையும்போதும், இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் ஒன்றிணையும்போதும்தான் சர்வதேச அரங்கில் யூத, சியோனிச இஸ்ரேலையும், அதன் கூட்டாளிகளையும் தனிமைப்படுத்தி முறியடிக்கமுடியும். அத்தகைய உறுதிமிக்கப் போராட்டங்களை முன்னெடுப்போம், அப்படிப்பட்ட போராட்டங்களில் நாமும் இணைந்துகொள்வோம்.
தன் இளைய சகோதரனைத் தவிர அனைவரையும் இழந்திருந்த 8 வயது மரியமிடம் அவர்கள் இருவருக்கும் என்ன வேண்டும் என்ற கேட்டபொழுது உடைந்த அழுகுரலில் சொல்வதைக் கேளுங்கள்,
“எங்களுக்கு அனைத்தும் வேண்டும்
- ரொட்டித்து துண்டு வேண்டும், வெள்ளை ரொட்டித்துண்டு.
மற்ற அனைத்துமே வேண்டும்.”
இதுவே காசாவில் பட்டினிச்சாவின் விளிம்பிலிருக்கும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் குரலாகும்.
- மதியழகன்