பாகம் 1 : ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!

பாகம் 2: ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 2

பாகம்3: ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் -3

மார்க்சிய லெனினியத்தை வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற கம்யூனிச இயக்கங்கள் தனது இறுதி இலட்சியத்தை அடைவதற்கு வெவ்வேறு வழிமுறைகள் மூலம் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மார்க்சியத்தின் ஆசான்கள் முன்வைக்கின்ற வழிமுறைகளில் இருந்து வேறுபடுகின்ற காரணத்தினால் தான் அவற்றின் மீது விமர்சனங்களும், அதன் போக்குகள் குறித்து வரையறுப்புகளும் முன்வைக்கப்படுகிறது.

ஆனாலும் இத்தகைய அமைப்புகளில் பேராசிரியரோ, வழக்கறிஞரோ, சிறு குறு தொழில் முனைவோராக இருந்தாலும் அந்த அமைப்பு எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்டுப்பட்டு தனது செயல்பாடுகளையும், தனது கருத்துகளையும் வரையறுத்துக் கொள்கிறார்கள். அதன் அமைப்பு முறைகளுக்கு கட்டுப்பட்டு ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அமைப்புசாரா மார்க்சியர்கள் எந்த அமைப்பிற்கும் கட்டுப்படாமல் சுதந்திர மார்க்சியத்தை முன் வைப்பதும், நடைமுறையில் சோதித்தறியப்படாத அந்தக் கருத்துகளே உண்மையானது என்பதைப் போல அனைத்து அமைப்புகளுக்கும் மேலாக நின்று கொண்டு வழிகாட்டுவதும், கற்பனையில் புரட்சிக்கே தலைமை தாங்குவதாக கருதி கொள்வதும் ஒரு போக்காகவே மாறியுள்ளது.

90-களில் சோவியத் வீழ்ச்சி மற்றும் அதற்கு நிகராக இந்தியாவில் நக்சல்பாரி வழிமுறையில் செயல்படுகின்ற மார்க்சிய-லெனினிய அமைப்புகளின் மீது தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக தாக்குப் பிடிக்க முடியாமல் இத்தகைய அமைப்புகளில் இருந்து வெளியேறிய குட்டி முதலாளித்துவ பிரிவினர், மார்க்சியத்தின் மீதும் மார்க்சிய லெனினிய அமைப்புகளின் நடைமுறை செயல்பாடுகள் மீதும் குறைகளை கண்டுபிடித்து இதனால் தான் தாங்கள் அமைப்புகளில் செயல்பட முடியவில்லை என்று ’பெருங்கதையாடல்களில்’ இறங்கினர்.

இதன் மற்றொரு போக்காக மார்க்சியம் அனைத்தும் தழுவிய உண்மைகளை பேசவில்லை. அது இன்பியல், துன்பியல் போன்ற மனித உணர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பொருளாதார வகைப்பட்ட எந்திரமாகவே மனிதர்களை வகைப்படுத்தின்றது என்றெல்லாம் தனது ’கண்டுபிடிப்புகளை; முன்வைத்து களமாடத் துவங்கினார்கள் பின் நவீனத்துவ பேராசிரியர்கள் மற்றும் தத்துவவாதிகள்/ ஆய்வாளர்கள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க தாக்குதல்கள் இந்தியாவில் அமல்படுத்த துவக்கப்பட்டதற்கும், இப்படிப்பட்ட பின்நவீனத்துவ கருத்துகள் முன்னிலைக்கு வந்ததற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது. மறுகாலனியாக்கத்தினால் வாழ்க்கையை இழக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதரப் பிரிவு உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிதிரண்டு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் புதிய வடிவமான மறு காலனியாக்கத்தை எதிர்த்து புரட்சிகர எழுச்சியை நடத்தி விடக்கூடாது என்பதற்காகவே அடையாள அரசியல் என்ற பெயரிலும், சாதி, மத, இனங்களின் பெயரிலும் கொண்டுவரப்பட்ட பல்வேறு இசங்கள் மற்றும் பின் நவீனத்துவ கருத்துகள் ஆகியவை அனைத்தும் மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டு ஆழமாக செயல்படுகின்ற கம்யூனிஸ்டுகளின் மீதும், கம்யூனிச இயக்கங்களின் மீதும் தாக்குதலை தொடுத்தது.

அதுபோலவே, 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக அதனை முறியடிக்கின்ற ஒரே சித்தாந்தமாக உள்ள கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிச அமைப்புகளில் அணி திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு களமிறங்கியுள்ளனர் அமைப்பு சாரா மார்க்சியர்கள். வர்க்க வாழ்க்கையில் குட்டி முதலாளிகளாகவும், அரசியல் கருத்துகளில் சந்தர்ப்பவாதிகளாகவும் சீரழிந்துள்ள இப்படிப்பட்ட நபர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தனது கருத்துக்களின் மூலம் ஆதிக்கம் செலுத்துகின்ற வல்லமை படைத்தவர்களாக உள்ளனர் என்பதால் பாட்டாளி வர்க்க இயக்கம் இவர்களை எதிர்கொண்டே தீர வேண்டியுள்ளது.

அமைப்புக் கட்டுப்பாடு, ஜனநாயக மத்தியத்துவம் போன்ற கோட்பாடுகளுக்கு அடிபணிய விரும்பாத சுதந்திர மார்க்சிய சிந்தனைக் கொண்ட இத்தகைய ’தறுதலை ஜனநாயகம்’ பேசுகின்ற குட்டி முதலாளிகளை பற்றி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தோழர் ஏங்கெல்ஸ் வரையறுத்துக் கூறியுள்ளார்.

”எந்த ஒரு இயக்கத்தையும் நாசம் செய்வது தவிர வேறு எதையும் இந்த வர்க்கத்தால் செய்ய இயலாது என்பதை நாம் இனி காண்போம். அதிகமாக பெருமையடித்துக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ வர்க்கம், செயலில் மிகவும் திறமை இல்லாததாகவும் எதையும் இழப்பதற்கு அறவே விரும்பாததாகவும் இருக்கிறது. அதன் வாணிக நடவடிக்கைகள் மற்றும் கடன் துறை செயல்பாடுகளின் அற்பத்தனம், அதன் தன்மையில் உள்ள ஊக்கமின்மையை முத்திரையிட்டுக் காட்ட மிகவும் பொருத்தமானது என்பதோடு அதன் அரசியல் வாழ்க்கையை சுட்டும் வகையில் ஆர்ப்பாட்டமான சொற்கள் மற்றும் மிகையான பேச்சுகள் மூலம் புரட்சிகர எழுச்சியை ஊக்குவித்தது.

இதற்கு ஏற்பான முறையில் குட்டி முதலாளி வர்க்கம் தான் என்ன செய்யப் போகிறது என்பது பற்றிய பகட்டான சொற்கள், மிகப்பெரும் ஜம்ப பேச்சுகள் மூலம் புரட்சிகர எழுச்சியினை ஊக்குவித்தது அதன் சித்தாந்தத்துக்கு மிகவும் ஒவ்வாத முறையில் புரட்சிகர எழுச்சி விடுத்த உடனேயே அது அதிகாரத்தை ஆர்வமுடன் கைப்பற்றிக் கொண்டு, இந்த அதிகாரத்தை இந்த புரட்சிகர எழுச்சியின் விளைவுகளை நாசப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தியது”. என்கிறார் தோழர் ஏங்கெல்ஸ்.

நாம் இந்த கட்டுரையின் துவக்கத்தில் முன் வைத்தது போல ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்தும், அது உலகம் முழுவதும் புதிய வகையிலான காலனி ஆதிக்கத்தை நடத்துவது குறித்தும், தனது அரசியல் பொருளாதாரக் கொள்கைகளாக தானே முன் வைத்திருந்த முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடுகளான, ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” ஆகியவற்றுக்கு எதிராக பாசிச பயங்கரவாதத்தை முன்வைப்பது குறித்தும் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் ஆய்வு செய்து அதன் அடிப்படையிலேயே கட்சி இயக்கத்தை நடத்துகின்றன.

இத்தகைய இயக்கங்களில் ஏதாவது ஒன்றில் தானும் தன்னை இணைத்துக் கொண்டு தனது ஆய்வுத் திறனையும், மார்க்சியத்தின் மீதான விமர்சனங்கள் அல்லது அங்கீகரிப்புகளையும் முன்வைத்து சமூக மாற்றத்திற்கு நேர்மறையில் உதவுவதற்கு பதிலாக புரட்சிகர அமைப்புகளின் மீது அவதூறுகள் பரப்புவதும், அவநம்பிக்கை பரப்புவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர்.

இவையும் மார்க்சிய இயக்கத்தின் வரலாற்றில் புதிய நிலைமை அல்ல. அரசும் புரட்சியும் பற்றி வரையறுத்த தோழர் லெனின் காலத்திலேயே மார்க்சியத்திற்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் துவங்கிவிட்டது.

”மார்க்சின் கோட்பாட்டுக்கு தற்போது என்ன நேர்ந்து வருகிறதோ அதுவே தான் விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகர சிந்தனையாளர்களின் மற்றும் தலைவர்களின் கோட்பாடுகளுக்கு வரலாற்றில் மீண்டும் மீண்டும் நேர்ந்துள்ளது. ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின; அவர்களுடைய கோட்பாடுகள் மீது காட்டுதனமான காழ்ப்பும், வெறித்தனமான வெறுப்பும் கொண்டு கயமையான பொய்களும், அவதூறுகளும் கொண்ட பரப்புரை இயக்கம் நடத்தினர். அவர்கள் இறந்த பிறகு அவர்களை அபாயமற்ற பூசையறை படங்களாக்கி வழிபாட்டுக்குரியவராகவும் ஓரளவு அவருடைய பெயர்களை ’புனித திருப்பெயர்கள்’ ஆக்கவும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை, ’ஆன்ம திருப்தி’ பெறச் செய்வதும், அவற்றை ஏமாற்றுவதும் அதே நேரம் புரட்சிகர கோட்பாட்டில் இருந்து அதன் சாரப்பொருளை களைந்து அதன் புரட்சிகர முனையை மழுங்கடித்து அதை கொச்சைப்படுத்துவதும் தான் இந்த முயற்சிகளின் நோக்கம். முதலாளித்துவ வர்க்கத்தாரும், தொழிலாளர் இயக்கத்தில் உள்ள சந்தர்ப்பவாதிகளும் இன்று மார்க்சியத்தை இவ்வாறு சிதைத்து உருமாற்றுவதில் ஒன்றுபடுகிறார்கள்” என்கிறார் தோழர் லெனின்.

நாம் வகுத்துக் கொண்டுள்ள திட்டத்தின் அடிப்படையில் மக்களை திரட்டுவதற்கு தொடர்ச்சியாக போராடுவோம். அதில் ஏதாவது தவறுகள் நேர்ந்தால் நேர்மையாக சுய விமர்சனம் ஏற்றுக்கொண்டு திருத்திக் கொண்டு மீண்டும் புரட்சிகர பாதையில் முன்னேறிச் செல்வோம். ஆனால் நடைமுறையில் சிறு துரும்பையும் எடுத்து அசைக்காத ஆய்வாளர்களை அவர்கள் போக்கிலேயே அனுமதிக்க முடியாது என்றே கருதுகிறோம்.

தொடரும்.

ஆல்பர்ட்.

நன்றி புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here