பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக் கொண்டுள்ள இயக்கங்கள் தத்துவத்தை வெறும் படிப்பறைவாதமாக அணுகுவதை, அதாவது பாதுகாப்பான, உத்தரவாதமான வாழ்க்கை முறையில் அமர்ந்துக் கொண்டு மார்க்சியத்தின் மூல நூல்களில் இருந்து அரிய கருத்துக்களை எடுத்து போட்டு இப்படித்தான் செயல்பட வேண்டும். இதுதான் மார்க்சியம் என்று முன்வைப்பதை எப்போதுமே நிராகரித்து வந்துள்ளது.

அறிவு மேட்டிமைத் திறன் கொண்ட சிலர் நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? அப்படியென்றால் மார்க்ஸ் எழுதிய மூலதனம் வாசித்துள்ளீர்களா? மூலதனம் நூலையே வாசிக்காத நீங்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? என்று மடக்குவதை ஒரு வழிமுறையாக கொண்டுள்ளனர். மூலதனமானாலும் சரி! வேறு எந்த மார்க்சிய நூல்களாலும் சரி! அதனை படித்து புரிந்து கொள்வது; சொந்த முறையில் கிரகித்துக் கொண்டு, பருண்மையான சூழலில் பருண்மையாக அமல்படுத்துவது என்பதே மார்க்சியமாக இருக்க முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் நடைமுறையில் அமல்படுத்தப்படாத அல்லது நடைமுறையில் இறங்கி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க விரும்பாத எவ்வளவு பெரிய சித்தாந்தமாக இருந்தாலும் அது எதற்கும் பயன்படாது. இதனாலேயே தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் மார்க்சிய லெனினிய ஆசான்கள்.

1848 ஆம் ஆண்டு வெளியான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதல் அதன்பிறகு படிப்படியாக வெளியான பல்வேறு ஆய்வு நூல்கள்; இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நாட்டில் புரட்சியை நடத்திக் காட்டிய அனுபவங்கள்; அதனை தொகுத்து அரசும் புரட்சியும் உள்ளிட்ட நூல்களாக வெளியிட்ட சூழல் ஆகிய அனைத்தும் மீண்டும் மீண்டும் நமக்கு போதிப்பது மார்க்சியம் என்பது வெறும் கலைக்களஞ்சியம் அல்ல! மாறாக நடைமுறைக்கான, செயலுக்கான வழிகாட்டும் தத்துவம் என்பது தான்.

இந்த கண்ணோட்டத்தில் இன்றைய இந்திய சமூக அமைப்பின் நிலைமைகளை புரிந்துக் கொண்டு, குறிப்பாக ஏகாதிபத்திய நிதி மூலதனமானது இன்றைய கட்டத்தில் இந்தியா போன்ற நாடுகளை எப்படி தனது பிடிக்குள் கொண்டு செல்கிறது. இங்கே உள்ள பிற்போக்கு சக்திகளுடன் குறிப்பாக பார்ப்பன பாசிச மதவெறி சக்திகளுடன் இணைந்து பாசிச பயங்கரவாத அரசியலை எவ்வாறு முன்வைக்கிறது எனபதைப் பற்றி புரிந்துக் கொள்வதும், அதற்கு எதிராக மக்களைத் திரட்டுவதும் தான் இன்றைய காலகட்ட்த்தின் மார்க்சியமாக உள்ளது.

அந்த வகையில் நாட்டின் பிரதானமான அபாயம் கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் தான் என்று வரையறுத்து அதற்கு எதிராக திட்டவகைப் பட்ட செயல்தந்திரம் ஒன்றை முன்வைத்து அதனடிப்படையில் மக்களை அணி திரட்டி வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

ஆர்எஸ்எஸ் பாஜக கட்சியினரை பாசிஸ்டுகள் என்று வரையறுத்து முன் வைத்தாலும் பலரும் அதனை வீழ்த்துவதற்கு பொருத்தமான அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றத்திட்டம் ஒன்றை முன்வைத்து பாட்டாளி வர்க்கத்திடம் வேலை செய்வதில்லை. பொதுவாக பாசிச எதிர்ப்பு என்று பேசி பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என்று கருதுகின்றனர்.

அதிலும் குறிப்பாக நடைமுறையில் இல்லாத குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஜார்ஜ் டிமிட்ரோவ் முன் வைத்த ஐக்கிய முன்னணி தந்திரம் முதல் கிராம்சி, டோக்கிளியாட்டி மற்றும் சமீபத்தில் பாசிசத்தை எதிர்த்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற கெவின் பாஸ்மோர் வரை அனைத்தையும் கரைத்துக் குடித்து இதன் அடிப்படையிலேயே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஓயாமல் போதித்துக் கொண்டே உள்ளனர். தவறாமல் பாசிசத்தை வீழ்த்துவதற்கு கம்யூனிச இயக்கங்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் கொண்ட படையணியை கட்ட வேண்டும் என்பதையும் ’கிளிப்பிள்ளைகளைப்’ போல மீண்டும், மீண்டும் முன் வைக்கின்றனர்.

இத்தகைய அணுகுமுறைகளை புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஒருபோதும் மறுக்கவில்லை. பாட்டாளி வர்க்க இயக்கமானது சொந்த பலத்தை திரட்டிக் கொண்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கே ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் இணைந்து அதனை வீழ்த்த வேண்டிய சூழலே இந்திய சமூக அமைப்பில் நிலவுகிறது. இது புறநிலையில் எதார்த்தமாகவும், அகநிலையில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பலவீனத்தை கணக்கில் கொண்டதாகவும் உள்ளது என்பதை மேற்கண்ட குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

தோழர் லெனின் ஏகாதிபத்தியம் குறித்து வரையறுத்த காலக் கட்டத்தைவிட பல மடங்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் தற்போதைய சுரண்டல் வடிவமான மறுகாலனியாக்கத்தின் தீவிரத் தன்மையானது இந்திய வகைப்பட்ட பாசிச அபாயமாக உருவெடுத்துள்ள சூழலில், சீனாவை ஜப்பான் ஆக்ரமிப்பு செய்த சூழ்நிலைமையுடன் பொருத்திப் புரிந்துக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறோம்.

”உள்நாட்டுப் போரில் பத்தாண்டு காலத்தினுடைய அனுபவம் தற்போதைய ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்பு போர்க் காலப்பகுதிக்கு (period) மிகவும் ஏற்புடையதாகவும், சிறந்ததாகவும் இருக்கிறது. இது நம்மை மக்களுடன் இணைத்துக் கொள்வது எப்படி என்ற அம்சத்தோடும், எதிரிக்கு எதிராக அவர்களை அணி திரட்டுவது எவ்வாறு என்ற அம்சத்தோடும் தொடர்புடையதே யன்றி, செயல்தந்திர வழி என்ற அம்சத்தோடு மட்டுமல்ல. கட்சியினுடைய தற்போதைய செயல் தந்திர வழி கடந்தகால செயல்தந்திர வழியிலிருந்து கொள்கைநெறி (principle) அளவில் மாறுபட்ட தாகும். முன்பு கட்சியினுடைய செயல்தந்திர வழி எதிர் புரட்சிகர முதலாளிகளையும், நிலப் பிரபுக்களையும் எதிர்ப்பதாக இருந்தது. இப்பொழுது இது ஜப்பானை எதிர்ப்பதற்கு அனைத்து நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் ஐக்கியப்படுத்துவது ஆகும்.

பத்தாண்டு கால உள்நாட்டு போரின் பிந்தைய கட்டத்திலும் கூட ஒருபுறம் நம்மீது ஆயுத தாக்குதல்களை ஏவிக்கொண்டிருந்த பிற்போக்கு அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சியை நோக்கியும் மறுபுறத்தில் நமது சொந்த ஆட்சியின் கீழ் முதலாளிய தன்மையிலான அனைத்து சமூக அடுக்குகளை நோக்கியும் வேறுபடும் கொள்கையை பின்பற்றாமல் இருந்தது சரியானது அல்ல. அரசியல் கட்சிக்குள்ளும், பிற்போக்கு அரசாங்கத்திற்குள்ளும் வெவ்வேறு குழுக்களின் பொருட்டு மாறுபட்ட கொள்கைகளை பின்பற்றாததும் கூட தவறானதாகும். அக்காலத்தில் நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினுடைய கீழ்நிலை பிரிவையும், உழவர் வர்க்கத்தையும் தவிர்த்து சமூகத்தினுடைய ஒவ்வொரு பிரிவையும் நோக்கி போராட்டமே அனைத்தும் என்ற கொள்கை தொடரப்பட்டது இந்த கொள்கையும் சந்தேகத்திற்கிடமின்றி தவறானதாகும்.

விவசாயக் கொள்கையை பொறுத்தவரை பத்தாண்டு கால உள்நாட்டு போரின் தொடக்க மற்றும் மையக் காலப்பகுதிகளில் பின்பற்றப்பட்ட சரியான கொள்கையை மறுதலிப்பதும் தவறானதாக இருந்தது. அப்பொழுது நிலப்பிரபுகளுக்கு, உழவர்களுக்கு அளித்ததைப் போன்றே நில ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதன் விளைவாய் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதோடு அப்புறப்படுத்தப்படாமல் அல்லது கொள்ளையர்களாக மலைகளுக்கு சென்று பொது ஒழுங்கு சீர்குலைக்காத வண்ணம் இருக்க முடிந்தது. கட்சி கொள்கையினுடைய இப்போதைய தேவை மாறுபட்ட ஒன்றாகும். ”கூட்டணி இன்றி அனைத்தும் போராட்டம் என்பதும்” அல்ல: ”போராட்டம் இன்றி அனைத்தும் கூட்டணி (1927இல் சென் து-சியிசம் (Chen Tu-hsiuism) போல) என்பதும்” அல்ல. மாறாக இது ஜப்பான் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக்கூடிய அனைத்து சமூக பிரிவுகளுடன் ஐக்கியமாதல் குறித்த கொள்கையாகும். அவர்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்குதல் குறித்த கொள்கையாகும். அதே சமயத்தில் அவர்களுக்கு எதிராக போராட்டங்களை தொடுத்தல் குறித்த கொள்கையும். ஆகும் போராட்டங்கள் வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்ப வடிவத்தில் வேறுபடுகின்றன. எதிரிக்கு சரணடைந்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்களை எதிர்ப்பதில் அவற்றின் ஊசலாடும் அல்லது பிற்போக்கு கோணம் வெளிப்படுகிறது. தற்போதைய கொள்கையான இரட்டைக் கொள்கையானது, அது ”போராட்டமும்”, ”கூட்டணியும்” (Synthesises) சேர்ந்திணைக்கப்பட்டதாகும்.

தொழிலாளர் கொள்கையில் முறையான முதலாளியப் பொருளாதார வளர்ச்சியை தடுக்காதது, தொழிலாளர்களுடைய வாழ்நிலையை பொருத்தமாக மேம்படுத்துவது என்ற இரட்டைக் கொள்கையாகும். விவசாயக் கொள்கையில் நிலப்பிரபுக்கள் வட்டியையும் வாடகையையும் குறைப்பதை அவசியமாக்குவது, உழவர்கள் இந்த குறைக்கப்பட்ட வட்டியையும், வாடகையையும் கட்ட வேண்டும் என ஒப்பந்தப்படுத்துவது என்ற இரட்டைக் கொள்கையாகும். தொழிலாளர்கள் மற்றும் உழவர்களுக்கு இருக்கின்ற அதே தனிநபர் அரசியல் மற்றும் சொத்துரிமைகளை அனைத்து ஜப்பான் எதிர்ப்பு நிலப்பிரபுக்களுக்கும், முதலாளிகளுக்கும் அனுமதித்தல் மற்றும் அதே சமயத்தில் அவர்கள் தரப்பிலான சாத்தியமான எதிர் புரட்சிகர செயற்பாட்டுக்கு எதிராக விழிப்போடு இருத்தல் என்ற இரட்டைக் கொள்கையாகும். அரசுக்கு சொந்தமான பொருளாதாரமும், கூட்டுறவுப் பொருளாதாரமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்று ஊரக தளப்பகுதிகளில் முக்கிய பொருளாதாரத்துறை அரசை சேர்ந்ததாக இல்லாமல் தனியார் நிறுவனங்களை சேர்ந்ததாக இருக்கிறது; நமது பொருளாதாரத்தில் ஏகபோக தனி உரிமையற்ற முதலாளியத்தை அரைநிலவுடமை அமைப்பிற்கும் ஜப்பான ஏகாதிபத்தி யத்திற்கும் எதிராக வளர்ந்து பயன்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இன்றைய சீனாவிற்கான மிகவும் புரட்சிகரமான கொள்கை இதுவே ஆகும்.

இதனுடைய செயலாக்கத்தை எதிர்ப்பதோ, தடுப்பதோ சந்தேகத்திற்கு இடமின்றி(Mistake) தவறானதாகும். கட்சி உறுப்பினர்களின் கம்யூனிச தூய்மையை (Communist purity) சோர்வற்று நெஞ்சுரத்தோடு பேணுவதும் சமூக பொருளாதாரத்தின் முதலாளியத் துறையின் பயனுள்ள பகுதியை பாதுகாத்து அதை தகுந்தவாறு வளர்த்தெடுப்பதற்கு இயலச் செய்வதும் ஜப்பானை எதிர்த்த ஜனநாயக குடியரசை கட்டியமைத்தல் என்ற காலப்பகுதியில் தவிர்க்க முடியாத கடமைகளாக நமக்கு இருக்கின்றன. இந்த காலப்பகுதியில் சில கம்யூனிஸ்டுகள் முதலாளிகளால் ஊழல் பேர்வழிகளாக ஆக்கப்படலாம் என்பதும், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முதலாளிய கருத்துகள் தலை தூக்கலாம் என்பதும் சாத்தியமே. நாம் தரம் கெட்ட கருத்துகளுக்கு எதிராக போராட வேண்டும். இருப்பினும் கட்சிக்குள் இருக்கும் முதலாளிய கருத்துக்களுக்கு எதிரான போராட்டத்தை தவறுதலாக சமூக பொருளாதார களத்திற்கு எடுத்துச் சென்று முதலாளிய பொருளாதார துறையை எதிர்க்கக் கூடாது. நாம் இரண்டிற்கும் இடையில் தெளிவான எல்லைக்கோட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சிக்கலான சூழ்நிலையில் பணிபுரிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட் உறுப்பினரும், குறிப்பாக ஒவ்வொரு ஊழியரும் மார்க்சிய செயல் தந்திரங்களை புரிந்து கொண்ட போராளியாக மாறுவதற்கு தன்னைத் தானே புடம் போட்டுக் கொள்ள (பதப்படுத்தி-temper) வேண்டும். சிக்கல்களை ஒருதலைபட்சமாக அணுகுவதும், மிகவும் எளிமைப் படுத்தப்பட்ட அணுகுமுறையும் புரட்சியை வெற்றிக்கு ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது”

(மாவோ தேர்வு நூல்கள், தொகுதி-III)

வரலாற்றுப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகும் போது குறிப்பிட்ட சமூக அமைப்பிலிருந்து வேறொரு சமூக அமைப்பை நோக்கி முன்னேறுகின்ற பாதையில், அதனை இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிலிருந்து புதிய ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுகின்ற பாதையில் எதிர்ப்படுகின்ற ஏகாதிபத்திய போர் ஆக்கிரமிப்பு, பாசிச பயங்கரவாத அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற சூழ்நிலைகளில் புதிய ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கே மிகப்பெரும் தடையாக உள்ள பாசிசத்தை முறியடித்து முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மேற்கண்ட அறிஞர்கள் மறுக்கின்றனர்.

இந்த வகையிலேயே எமது அமைப்புகளின் மீது ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவு என்று முன்வைக்கும் போது திமுக அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகளை இணைத்துக் கொண்டு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்று முன் வைத்தால், ”அய்யய்யோ அவ்வளவுதான் இவர்கள் புரட்சியை கைவிட்டு விட்டனர்.” ”சொம்பு தூக்குகின்றனர்”. ”ஆளும் வர்க்கத்தின் அடிவருடியாகிவிட்டவர்” என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதி களைத்துப் போகின்றனர்.

வாழ்நிலை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இருந்து பரிசீலிக்கும் போது ஆபத்தற்ற உத்தரவாதமான, குட்டி முதலாளித்துவ வாழ்க்கை முறையும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களும், தத்துவத்தை வரட்டுத்தனமாக கையாள வேண்டும் என்ற அராஜகவாதக் கண்ணோட்டமே மேற்கண்ட நபர்களிடம் மேலோங்கி உள்ளது என்பதை உறுதியாக நாம் சொல்ல முடியும்.

அதுவும் சமூக வலைதளங்கள் வந்த காலகட்டத்தில் நடைமுறை வேலைகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காலையிலிருந்து மாலை வரை தனக்குத் தெரிந்த, தான் படித்த அனைத்து மார்க்சிய லெனினிய நூல்களையும் எடுத்துப் போட்டு பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வகுப்பு நடத்துகின்ற, ’அறைப் புரட்சியாளர்கள்’ (அப்பாடா! இப்போதாவது புரட்சியாளர்கள் என ஒத்துக்கொண்டீர்களே என்று சந்தோஷப்படுகிறார்கள்). மார்க்சியத்தை அதன் வரலாற்றுப் பொருள் முதல்வாத நடைமுறையில் இருந்து துண்டித்து கொச்சைப்படுத்துகின்றனர்.

அது திராவிட இயக்கங்களின் மீது அவதூறு பரப்புகின்ற, ”திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று முன்வைக்கின்ற பெங்களூர் குணாவாக இருந்தாலும் சரி! ”கம்யூனிசத்தால் வீழ்ந்தோம்” என்று கதைக்கின்ற திருப்பூர் குணாவாக இருந்தாலும் சரி. மார்க்சிய லெனினிய இயக்கங்களில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி சென்று ஒண்டிக் கம்யூனிசம் பேசுகின்ற திசைக்கு ஒருமுகம் காட்டும் ஷண்முகங்களானாலும் சரி! கம்பெனியை வைத்து சூதாடித் தோற்ற தருமர்களானாலும் சரி! இந்த வரையறுப்பிலேயே நாம் அணுக வேண்டும் என்றே கருதுகிறோம்.

ஆனால் இதனாலெல்லாம் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் ஒருபோதும் சோர்வடைந்து விடுவதில்லை. கம்யூனிசம் எதிர் கொள்ளும் சவால்கள் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சாவல்களையும் எதிர்கொள்வோம். தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை மார்க்சிய லெனினியத்தை குறிப்பான சூழலில் குறிப்பாக அமல்படுத்திக்கொண்டு எதிரிக்கு எதிராக போராடிக் கொண்டே, அகநிலை சக்திகளின் பலவீனத்தை படிப்படியாக களைந்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன புதிய ஜனநாயகம் அதன் தோழமை அமைப்புகள்.

தொடர்ச்சியாக பாசிசத்திற்கு எதிரான போரில் முன்னேறி செல்வதும், அதன் அடுத்த படியான புதிய ஜனநாயகத்தையும், சோசலிசத்தையும் நோக்கி முன்னேறுவோம். பாட்டாளி வர்க்க இயக்கம் என்ற முறையில் நாம் உலகம் முழுவதும் நிலவுகின்ற காலனியாதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழித்துக் கட்டி, கம்யூனிச புரட்சி ஒன்றை உருவாக்குவதற்காக போராடுவோம்.

இத்தகைய இயக்கவியல் அணுகுமுறைகளுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுக்கின்ற, இரண்டாம் அகிலத்தின் தலைவர்களான காவுத்ஸ்கி போன்றவர்களின் வாரிசுகளாக மாறியுள்ள, மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொண்டே மார்க்சியத்துக்கு எதிராக களமாடும் ’தத்துவ மாரீசன்களான’ குட்டி முதலாளித்துவ அறிஞர்களுக்கு பொருத்தமான முறையில் அவ்வப்போது பதிலடி கொடுப்போம் என்பதுடன் இந்தக் கட்டுரையை தற்போதைக்கு முடித்துக் கொள்கிறோம்.

◾ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here