கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து செய்த மகனை, அவரது தந்தையே வெட்டி படுகொலை செய்தார். தடுக்க வந்த தாயையும் வெட்டிக் கொன்றார். கொடுங்காயங்களுடன் மருமகள் உயிர்த்தப்பினார். மோசமான இழிக்குற்றத்திற்கு தற்போது நீதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.

என்ன நடந்தது?

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுசுயாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ்-ம்  திருப்பூர் பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். வேலை இடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு சாதியாக இருப்பதால் சுபாஷ் தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி தனது காதலுக்கு நேர்மையாக அனுசுயாவை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 15 நாட்களுக்குப் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊரான தனது பாட்டி வீட்டிற்கு மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் சுபாஷ். இதை அறிந்து அங்கு சென்ற சுபாஷின் தந்தை தண்டபாணி மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தனது மகன் என்றும் பாராமல் சாதி வெறி தலைக்கேறி சரமாரியாக வெட்டியுள்ளார். மருமகள் அனுசுயாவையும் வெட்டும் போது தடுக்க முயன்ற அவரது தாயையும் தண்டபாணி கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் சம்பவ இடத்திலேயே சுபாசும் அவரது பாட்டியும் உயிரிழந்தனர். மருமகள் அனுசுயாவை  பொதுமக்கள் படுகாய படுகாயங்களுடன் வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொலையாளி தண்டபாணியை கைது செய்த போலீசார் எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் கொலை வழக்கு உள்ளிட்ட (307, 302) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இரண்டு வருடங்களாக நடந்த வழக்கின் தீர்ப்பில் ஆணவ படுகொலை செய்த சுபாஷின் தந்தை தண்டபாணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை 8000 ரூபாய் அபராதம் அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது.

ஆணவப்படுகொலைக்கு எதிரான நீதியை பெறுவதற்கு நீண்ட போராட்டம் தேவைப்படுகிறது. அவ்வளவு எளிதில் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. அதன் காரணமாகவும் புதிய சாதிவெறியர்கள் முளைத்து வருகிறார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனுசுயாவுக்கு துணையாக நின்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம் முக்கியமானது. தொடர்ந்து வழக்கு நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை.

தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் 65க்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன. அனைத்திற்கும் நீதி கிடைக்கவில்லை. உடுமலை சங்கர் படுகொலை, கோகுல்ராஜ் படுகொலை உள்ளிட்ட சிலவற்றிற்கே நியாயமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிலைமை மாற்றப்பட வேண்டுமானால் இப்படியான தீர்ப்புகள் வரவேற்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆட்சி என்ற பாகுபாடு இல்லாமல் சாதி ஆணவ படுகொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது இப்போது தொடங்கியதில்லை. பார்ப்பனியம் உருவாக்கிய சாதிய  அடக்குமுறையின் விளைவால் உருவானவை. சாதிஆணவ படுகொலைகள் வர்ணாசிரம தர்மத்தை பாதுகாக்கின்றன. இதற்கு நீரூற்றி சாதிய வெறியூட்டி வளர்ப்பது ஆர் எஸ் எஸ் போன்ற மத வெறி அமைப்புகளும் களைச் செடிகளாய் மண்டி கிடைக்கும் சாதிய சங்கங்களும் தான். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் பாமக போன்ற சாதிய கட்சிகளாலும், சங்கங்களாலும் சாதி வெறி ஊட்டி வளர்க்கப்படுகிறது.

படிக்க:

 தொடரும் ஆணவப் படுகொலைகள்: சட்டரீதியாக மட்டுமே பாதுகாப்பு கிடைக்குமா?

 புத்தாண்டில் புதுக்கணக்கைத் துவங்கியுள்ள சாதி ஆணவப்படுகொலை!

சாதி ஆணவ படுகொலைகள் பெரியார் மண் என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலேயே இவ்வளவு நடக்கிறது என்றால் வட மாநிலங்களின் நிலைமை?! எல்லோருடைய கைகளிலும் முதலாளித்துவத்தின் உற்பத்தி பொருட்கள் நீக்கமாக நிறைந்து இருந்தாலும் சாதிய கறைகள் அவர்களுடைய கைகளை விட்டு அகலவில்லை. சாதிக்காக பெற்ற மகளையே அல்லது மகனையோ கொல்லும் அளவிற்கு காட்டுமிராண்டிகளாய் மாறி உள்ளது  சாதி வெறிக் கூட்டம். சாதிக்காக கொலை செய்தவனை பெருமையாகவும் கருதுகிறது. சாதி வெறி கொலைகாரன் சிறையில் இருந்து வெளிவரும் போது அந்த சமூக மக்களால் தியாகியை போல் வரவேற்கப்படுகிறான்.

சமீபத்தில் டெல்லி கார் கொண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் டிரைவரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட செய்தியை பார்க்க முடிந்தது. குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமலேயே அவரது வீட்டை இடித்து அவரது குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். ஆனால், ஆணவ படுகொலை விஷயத்தில் சம்பந்தப்பட்டவனுக்கு தியாகி பட்டம் சூட்டப்படுகிறது. அவனது குடும்பம் சாதிவெறியர்களால் பாதுகாக்கப்படுகிறது. இரண்டையும் செய்வது ஒரே கொள்கை கொண்டவர்கள் தான். இருவருமே பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் தான்.

இப்போது இருக்கின்ற சமூக கட்டமைப்பில் இப்படியான காட்டுமிராண்டி கும்பலை தண்டிப்பதற்கு ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் அவசியமாகிறது. அதனாலயே மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் “ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்று” என போராடுகிறார்கள்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு அரசு ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையம் ஆணவப் படுகொலையை தடுக்க புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆணவ படுகொலையின் சாட்சிகளாய் ஆணவக் கொலை சாமிகள் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் வீற்றிருக்கின்றன. இது பார்ப்பனியத்தின் இருத்தலை எதிரொலிக்கிறது. பார்ப்பனிய வர்ணாசிரம கோட்பாட்டை தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சங்பரிவார் கும்பலை ஒழித்துக் கட்டுவதும், சாதிவெறி சங்கங்களை இல்லாமல் செய்வதுமே நம்முன் உள்ள ஒரே வழி.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here