பீகார் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தத்தின் (special intensive revision) மூலமாக சுத்தம் செய்யப் போவதாக கூறிக்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்கி, ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு ஆளான தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் மூலமாகவும் விமர்சனத்திற்கு ஆளானது.
அதன் தொடர்ச்சியாக, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையையும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு வாக்குரிமையை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
அதன் பிறகும் தேர்தல் ஆணையம் தனது அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்வதாக இல்லை. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் செய்து இருந்ததைப் போலவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலிலும் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் ஆணையம்!
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்த பணி தொடங்கப்படுவதற்கு முன்பாக (ஜூன் 2025 ல்) 7.89 கோடி பேர் வாக்காளர்களாக இடம் பெற்றிருந்தனர். வாக்காளர் பட்டியலை சீர்திருத்தி வரைவு வாக்காளர் பட்டியலை (ஆகஸ்ட் 2025 ல்) வெளியிட்ட பொழுது அதில் 7.24 கோடி பேர் வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதாவது 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.
இப்பொழுது வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை ‘சரி செய்து’ செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி பேர் பீகார் மாநிலத்தின் வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தின் மூலமாக இப்பொழுது 47 லட்சம் பேர் வாக்குரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் வாக்களிக்கும் வயதில் உள்ள (18 வயதிற்கு மேற்பட்ட) மக்களில் சுமார் 9.3% பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.
வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களுக்குள் செல்லும் முன்பாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகளை குறித்து பார்ப்போம்.
பீகார் முழுவதும் 1.32 கோடி வாக்காளர்கள் சந்தேகத்திற்குரிய மற்றும் கற்பனையான முகவரிகளில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 14.35 லட்சம் வாக்காளர்கள் சந்தேகத்திற்குரிய இரட்டை வாக்காளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் பீகாரின் வாக்காளர் பட்டியல் “சுத்தப்படுத்தப்பட்டு” வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறுகிறார்.
போலி முகவரிகள்!
பாராசட்டி என்ற சட்டமன்றத் தொகுதியில் ஒரு போலியான முகவரியில் 855 வாக்காளர்களும் மற்றொரு போலியான முகவரியில் (இல்லாத வீட்டு எண் 23இல்) 853 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதாவது இல்லாத வீட்டு எண்ணில் இவ்வளவு பேர் வாக்காளர்களாக எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளனர்?
பீகார் மாநிலம் முழுவதும் எடுத்துக் கொண்டால் சுமார் 20க்கும் மேற்பட்ட முகவரிகள் ஒவ்வொன்றிலும் 650 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரா என்ற சட்டமன்றத் தொகுதியில் உள்ள கலிம்பூர் கிராமத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த 509 வாக்காளர்கள் ஒரு போலியான முகவரியில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு போலியான முகவரியில் 459 வாக்காளர்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, வாக்காளர்களுக்கு வீட்டு எண் இல்லாத பொழுது தேர்தல் ஆணையமே கற்பனையான வீட்டு எண்ணை கொடுத்து அந்த வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்குவது வழக்கமான நடைமுறைதான் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அப்படி கற்பனையான எண் வழங்குவதாக இருப்பினும் கூட ஒவ்வொரு குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கும் தனித்தனியான கற்பனையான எண்களை வழங்காமல் ஏன் ஒரே எண்ணை பல குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது?
படிக்க:
♦ தேர்தல் ஆணையத்தின் மற்றும் ஓர் தேர்தல் மோசடி அறிவிப்பு!
♦ பாஜகவின் “தேர்தல் பிரிவாக” செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!
மேலும் சிறப்பு தீவிர சீர்திருத்தத்திற்கு முன்பாக இருந்த வாக்காளர் பட்டியலில் இந்த வாக்காளர்கள் தங்கள் குடும்பவாரியாக தனித்தனியான (கற்பனையான) வீட்டு எண்-ஐ கொண்டிருந்தனர். அதேபோன்று இப்பொழுதும் வாக்குரிமையை பதிவு செய்யாமல் ஏன் ஒட்டுமொத்தமாக ஒரே வீட்டு எண்ணில் பல நூற்றுக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலையும் கூறவில்லை.
லட்சக்கணக்கில் போலி வாக்காளர்கள்!
பீகார் மாநிலம் முழுவதும் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் 14.35 லட்சம் வாக்காளர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை கொண்டுள்ளனர். இவர்களின் வயது 0லிருந்து 5வரை வேறுபடுகிறது. மற்றபடி இவர்களின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் உள்ளிட்டவைகள் எந்த வேறுபாடும் இன்றி ஒரே மாதிரியாக உள்ளன. இவற்றில் 3.4 லட்சம் வாக்காளர்களின் வயது உட்பட அனைத்து விவரங்களும் ஒரே மாதிரியாக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
பிப்ரா, பாகஹா மற்றும் மோதிஹாரி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வால்மீகிநகர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 5,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த போலி வாக்குகள் அனைத்தும் செலுத்தப்பட்டால் அது தேர்தல் முடிவையே அயோக்கியத்தனமாக மாற்றி அமைத்து விடும் என்பது உறுதி.
இறந்தவர்களுக்கு வாக்குரிமை!
முசாபர்பூர் நகரில் வார்டு கவுன்சிலர் ஆக உள்ள சக்நாத்குமார் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து போன தனது பெற்றோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதை நீக்க வேண்டும் என்று பலமுறை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த பிறகும் அவரது பெற்றோர் பெயர்கள் நீக்கப்படவில்லை. இந்த பெயர்களை பயன்படுத்திக் கொண்டு கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகளை தேர்தல் ஆணையமே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இப்படி ஏற்கனவே மாநிலம் முழுவதும் இறந்து போனவர்களின் பெயர்கள் எத்தனை ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் உள்ளன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களின் விபரங்களையும் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் விவரங்களையும் அதாவது என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டனர் – சேர்க்கப்பட்டனர் என்ற விவரங்கள் உட்பட அனைத்தையும் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பல தரப்பிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்த பொழுதும் தேர்தல் ஆணையம் அந்த விவரங்களை கொடுக்க மறுத்து விட்டது.
இதைக் கொடுப்பது என்பது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நிமிட வேலை தான். இதற்காக பெருமளவில் ஆட்களை அமர்த்தி வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை எனும் பொழுது தேர்தல் ஆணையம் ஏன் அப்படி கொடுக்க மறுக்கிறது?
இப்படி விவரங்களை தெளிவாக பட்டியலிட்டு கொடுத்து விட்டால் தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனங்கள் அனைத்தும் மக்களின் முன்பாக தோலுரிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை கொடுக்க மறுக்கிறது.
கள்ள ஓட்டு போடுவது, மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பது மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றுவதால் தான் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே வழிமுறையின் மூலமாகத்தான் பீகாரிலும் தேர்தல் முடிவுகளை தனது கூட்டணிக்கு சாதகமாக மாற்றுவதற்காக பாஜக துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட பாஜக, தேர்தல் ஆணையம் அம்பலப்பட்டு நிற்கும் ஒவ்வொரு முறையும்
‘தேர்தல் ஆணையம் எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து,
“வாழ்க, வளர்க இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி! மென்மேலும் தொடரட்டும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணி! “
என்ற வாழ்த்துச் செய்தியை இன்னும் பாஜக பொதுவெளியில் விடுக்கவில்லை என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
– குமரன்
செய்தி ஆதாரம்:
The reporter’s collective