எம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது, “கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது.”

“மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிஜிட்டல்மயம் சாத்தியமற்றது என்று உலக நாடுகள் கூறி வந்தன. அந்த கூற்றை, இந்தியா பொய்யாக்கி உள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் வெற்றிகரமாக ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது”. என்று மக்களை கண்காணிப்பதற்கு உருவாக்கப்பட்ட அடையாள அட்டையையும், பணப் பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படுத்துகின்ற டிஜிட்டல் பொருளாதாரத்தையும் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் டிஜிட்டல்மயமாகிவிட்டது என்று மோடி கும்பலை பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும், அதுவும் குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என்பதால் இந்தியா உலக பொருளாதாரத்தின் எஞ்சினாக உள்ளது என்ற அளவிற்கு ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டினாவால் புகழப்பட்டுள்ளதை கண்டவுடன் இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டு விட்டதாகவும், உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் ஊது குழல்கள் முதல் பிரதமர் மோடி வரை துள்ளி குதித்து வருகின்றனர்.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம், அனைவருக்கும் மருத்துவம், அனைவருக்கும் கல்வி போன்ற அடிப்படையான பொருளாயாத தேவைகள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளதோ அதை வைத்து தான் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் மனிதவளக் குறியீடு ஆகியவற்றை மதிப்பீடு செய்ய முடியும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சூறையாடி கொழுத்து கொண்டுள்ள தேசங்ககடந்த தரகு முதலாளிகள் ஒரு பக்கத்திலும் அவர்களின் லாபவெறிக்கு பலியாகி தனது உழைப்பு சக்தி முதல் தனது சேமிப்பு வரை அனைத்தையும் பறிகொடுத்துள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மறுபுறம் என்று இரு துருவ ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

“விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக மாற்றுவேன்” என்று வாய்ச்சவடாலடித்த மோடி, அவர்கள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை கூட இன்றளவும் நிறைவேற்றவில்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் விவசாயம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது; பருவ காலங்களில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை குறைவாக விற்கப்படுவதால் உற்பத்தி அதிகரித்தும், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. லாபம் கிடைப்பதில்லை என்பதை விட அவர்கள் பயிரிட்ட பயிர்களுக்கு செலவிட்ட தொகை கூட அவர்களுக்கு மிஞ்சுவதில்லை என்பதுதான் யதார்த்த உண்மையாக உள்ளது.

இந்தியாவின் நீண்ட கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் கடலை நம்பி உயிர் வாழ்கின்ற கடலோடிகளின் வாழ்க்கை அன்றாடம் மிகவும் நெருக்கடியுடன் கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்திய- இலங்கை இடையில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் வாழ்க்கை உத்தரவாதமற்ற நிலைமையில் அடிக்கடி உயிர் பலி ஒரு தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் வாழ்க்கை முதல் உத்தரவாதமற்ற தினக்கூலி தொழிலாளர்களாக வாழ்கின்ற, அரை பாட்டாளிகளாக உள்ள 93 சதவீத உழைப்பாளி மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு வேலையை செய்து வயிற்றைக் கழுவுகின்ற நிலைமைதான் நாடு முழுவதும் பரவி கிடக்கிறது. வேலை வாய்ப்பு என்பது உத்தரவாதமான வேலை இல்லாமல் ஏதோ ஒரு வேலை செய்து பிழைக்கின்ற நிலைமை தான் தலை விரித்து ஆடுகிறது.

குடும்பங்களின் கடன், வட்டிக்கடன் முதல் கல்வி கடன், வீடு கட்டுவதற்கு கடன், வாகன கடன் மற்றும் குழு சீட்டுகளில் பெறுகின்ற கடன், தனி நபர்களிடம் பெறுகின்ற கடன் என்று கடனில் மூழ்கி ஒவ்வொரு குடும்பமும் கடனில் கழுத்து மூழ்கும் அளவிற்கு நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டுள்ளது.

இந்த இரு துருவ வாழ்க்கை அவலங்களை புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே டிஜிட்டல் மயமாக்கம் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. இந்தியாவில் 1.2 பில்லியன் மக்கள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் கிராமங்களில் 96.8% நகரங்களில் 97.6 சதவீதமும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் பயன்பாடு கேம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காகவே 70 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.

அதுவும் குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் சுமார் 1.1 ட்ரில்லியன் மணி நேரத்தை இந்த ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் செலவிடுகின்றனர். இன்டர்நெட் சேவையை கிராமப்புறத்தில் 94.7 சதவீதமும் நகர்ப்புறத்தில் 95.7 சதவீதமும் பயன்படுத்துகின்றனர் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

15 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 97.1% ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள் அதுவும் அன்றாடம் சராசரியாக 5 மணி நேரம் என்பதில் துவக்கி காலவரையின்றி செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

படிக்க: நெருக்கடியை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!

“ஒரு மைல்கல் சாதனையாக, இந்தியா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் இரண்டாவது பெரிய 5G சந்தையாக மாறியுள்ளது, சீனாவிற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது.” என்று அலைக்கற்றையை பயன்படுத்திக் கொள்ளையடிக்கின்ற கார்ப்பரேட்டுகள் குதூலிக்கின்றனர். இதனைத் தான் டிஜிட்டல்மயம், சாதனை என்று பெருமை பீற்றுகின்றனர்.

இந்த டிஜிட்டல் மயமாக்கத்தின் விளைவாக செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது சராசரியாக 36 மாதங்களுக்கு ஒரு புதிய போன் வாங்கி நுகர்கின்ற நுகர்வு கலாச்சாரமும், வெறித்தனமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

இந்த செல்போன் விற்பனையில் சாம்சங் 14.7% பங்கைப் பெற்றது, ஒப்போ 12.3% உடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 21.1% உயர்ந்தது, அதே நேரத்தில் ரியல்மீயின் பங்கு சற்று குறைந்து 10.1% ஆக இருந்தது. ஆப்பிள் 9.7% பங்கைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் ஐபோன் 16 அப்டேட் என ஆண்டுக்கு ஆண்டு 34.8% விரிவடைந்து வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக உருவெடுத்தது.

படிக்க: இந்தியப் பொருளாதாரம்: விலைவாசி உயர்வு / பணவீக்கம்:

மக்களின் வயிறு காலியாக இருப்பதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்களின் மூளை காலியாக இருப்பது பற்றி மிகவும் கவலைப்படுகின்றனர் என்பது மட்டும் இன்றி அந்த மூளையை வெளியில் இருந்து தகவல் தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள் மூலம் கட்டுப்படுத்துகின்றனர்.

இதனையே இந்தியாவின் பொருளாதாரம் முன்னிலையில் உள்ளது என்று தைரியமாக பேசுவதற்கு உலக வங்கி தலைவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதைவிட மிகப்பெரிய நகைச்சுவையாக உலகப் பொருளாதாரத்தில் இஞ்சினாக இந்தியா உள்ளது என்று கூறும் அளவிற்கு கார்ப்பரேட் விசுவாசம் தலைவிரித்து ஆடுகிறது.

இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அது அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் உலகை சூறையாடுகின்ற அந்நிய ஏகபோக, ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களுக்கான வளர்ச்சி தான் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதையே ஐஎம்எப் தலைவரின் கூற்று நிரூபித்துள்ளது.

  • தமிழ்ச்செல்வன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here