திண்டுக்கல் மாவட்டத்தில் சாதிமாறி திருமணம் செய்ததற்காக பெண்ணின் தந்தையால் கொடூரமாக வெட்டப்பட்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் ராமச்சந்திரன் என்ற இளைஞர். சாதிவெறியின் காரணமாக தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் ராமச்சந்திரன் என்ற 26 வயது இளைஞன் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் 21 வயதான ஆர்த்தியை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ராமச்சந்திரன் – ஆர்த்தி வெவ்வேறு சாதி என்பதால், ஆர்த்தியின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ராமச்சந்திரனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை பெண்ணின் தந்தை சந்திரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் உயிரிழந்துள்ளார். கொலை செய்துவிட்டு குற்ற உணர்வு இல்லாமல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் கொலையாளி.
இந்த ஆண்டில் மட்டும் கவின், வைரமுத்து தற்போது ராமச்சந்திரன் என ஆணவ படுகொலைகள் செய்யப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது. பெரியார் பூமி என பெருமிதம் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களை வெட்கப்பட வைக்கும் செயல்கள் தான் இந்த ஆணவப் படுகொலைகள்.
அதிகரிக்கும் சாதிவெறி ஆதிக்க மனநிலை!
கீழ் சாதி – மேல் சாதி என்ற ஆதிக்க மனநிலை ஒருபுறம் என்றால் பிற்படுத்தப்பட்ட சாதிக்குள்ளேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பார்க்கும் மனநோயும் அதிகரித்துள்ளது. திருமணம் செய்தால் சொந்த சாதிக்குள் தான், அதுவும் பெண் என்றால் சொந்த சாதியாக இருந்தாலும் காதல் செய்யக்கூடாது. ஒரே சாதியாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக ஒரே அந்தஸ்தில் இருக்க வேண்டும், என இயற்கைக்கு புறம்பாக காதலுக்கு தடை போடுகிறது சாதிவெறிக் கும்பல்.
படிக்க:
♦ தொடரும் ஆணவப் படுகொலைகள்: சட்டரீதியாக மட்டுமே பாதுகாப்பு கிடைக்குமா?
♦ ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!
சாதி மறுப்பு திருமணம், கலப்புத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாலும், அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை தமிழகத்தில் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் ஆணவ படுகொலையில் அரசின் கையாலாகாத்தனத்தை குறைகூறி வந்த திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் அதே தவறை தான் இன்று வரை செய்து வருகிறார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்காததற்கு ஆட்சியில் இருக்கும் திமுகவே முதன்மை பொறுப்பு.
ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற மறுப்பது ஏன்?
திராவிட மாடல் அரசு, சமூக நீதி அரசு என தனக்குத்தானே பட்டங்கள் சூட்டிக் கொண்டாலும் அதற்கு பொருத்தமாக நடந்து கொள்ளாமல் முற்போக்கு அமைப்புகளும் பல்வேறு ஜனநாயக சக்திகளும் தேர்தல் கட்சிகளும் ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரி நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைத்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது ஏன்?. எமது மக்கள் அதிகாரம் அமைப்பு ஆணவ படுகொலையின் கொடூரத்தை உணர்ந்து செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்றிடு என கோரிக்கை முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆனால் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் மயிலாடுதுறையில் வைரமுத்து தற்போது திண்டுக்கல்லில் ராமச்சந்திரன் எனப்படுகொலைகள் நீண்டு கொண்டிருக்கிறது.
திமுகவை எது தடுக்கிறது?
திமுக பெரியாரின் வழியில் வந்த திராவிட கட்சி என்றாலும் தமிழ்நாட்டில் நிலமும் சாதி அரசியலை பற்றிக் கொண்டே தனது அரசியலை நீண்ட காலமாக செய்து வருகிறது. திமுகவில் உள்ள பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள். மற்ற கட்சிகளைப் போலவே, எந்த மாவட்டத்தில் எந்த சாதி ஆதிக்கம் நிலவுகிறதோ அந்த சாதியைச் சேர்ந்தவரே வேட்பாளராக நிறுத்தப்படும் அவலமும் தொடர்கிறது. இதுதான் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றுவதையும் தடுக்கிறது. திமுகவை பொறுத்தவரை எல்லாமே ஓட்டை மையப்படுத்திய அரசியல் தான் என்பதால் சாதி பிரச்சனையில் ‘சாதுரியமான’ அரசியலையே செய்து வருகிறது.
இமானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் முத்துராமலிங்க தேவருக்கும் விழா நடத்தும். கே.என்.நேரு உட்பட பலர் அமைச்சர்களாகவே இருந்தாலும் சாதி சங்கங்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதை தடுக்காது திமுக தலைமை. இது குறித்து ‘உடன்பிறப்புகளிடம்’ வினவினால் இதுதான் அரசியல் சாதுரியம் என்பார்கள்.
தமிழ்நாடு, சாதிவெறி கும்பலின் கையில் போகாமல் தடுக்க வேண்டுமானால் சாதி சங்கங்களை தடை செய்வதும், ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றுவதும் தற்போதைய அடிப்படை தேவையாக உள்ளது. இல்லையானால் சாதி என்ற விஷம் பள்ளி கல்லூரிகளில் என பிஞ்சுகளின் மனதிலும் புகுத்தப்படும் அபாயம் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்து மதவெறி அமைப்புகள் தமிழகத்தில் ஆதிக்கம் பெறும் நிலையும் ஏற்படும். இது தமிழக மக்களுக்கான எச்சரிக்கை.
- நந்தன்