
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட காலம் முதல் தொடர்ச்சியாக தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நாம் அவதானித்து வருகிறோம்.
சட்டமன்றத்தில் அமைச்சரவை தயாரித்துக் கொடுக்கும் அறிக்கைக்கு மாறாக பலவற்றை நீக்கியும், தன்னிச்சையாக சிலவற்றை சேர்த்தும் அறிக்கை படித்தார் ஆர்.என்.ரவி.
அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்பதாக சுருக்கினார்.
அரசின் அறிக்கையில் இருந்த பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் முதலானோரின் பெயர்களை உச்சரிப்பதைத் தவிர்த்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதே வெளிநடப்பு செய்தார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்தார்; பூணூலையும் மாட்டி விட்டார். தமிழ்நாடு அரசின் லோகோவிற்கு பதிலாக ஒன்றிய அரசின் லோகோவை பதிவிட்டார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் யாவற்றையும் வருட கணக்கில் ஆளுநர் மாளிகையிலேயே முடக்கிப் போட்டு கையெழுத்திட மறுத்து வந்தார்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொன்றுக்கும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவல நிலையை உருவாக்கி வருகிறார். தொடர்ச்சியாக எண்ணற்ற முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் போன்ற சங்கிகள் ஆதரவைப் பெற்று தனது சதிராட்டத்தை நீடிக்கச் செய்யவும், ஆர்எஸ்எஸ் -ன் ‘சித்தாந்தங்களை’ எங்கு சென்றாலும் அரசு செலவில் பிரச்சாரம் செய்யவும் அவர் தயங்கியதே இல்லை. ஆளுநர் மாளிகையையே ஆர்எஸ்எஸ்- பாஜக தலைமையகமாக தகவமைத்துக் கொண்டார்.
இந்தி சமஸ்கிருத திணிப்பை எந்நாளும் ஆதரித்துப பிரச்சாரம் செய்கிறார்; புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து ஆர் எஸ் எஸ் பாஜக காரர் போலவே பிரச்சாரம் செய்கிறார். பார்ப்பன சனாதனத்தை பரப்பிட வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்.

சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்குள்ளேயே தீட்சிதப் பார்ப்பனர்கள் குழந்தைகள் திருமணம் மேற்கொண்ட விவரம் கையும் களவுமாக பிடிபட்ட பின் அவாளுக்கே உரிய செல்வாக்கில் காவல்துறை, நீதிமன்றம் மூலமாக குற்றச்செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதிலும் கூட மூக்கை நுழைத்து ‘குழந்தைத் திருமணம் ஒன்றும் குற்றச் செயல் அல்ல; நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன் தான்’ – எனத் துளியும் வெட்கமின்றி கூறிக் கொண்டவர் தான் இதே ஆர்.என்.ரவி.
துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில் அராஜகமான முறையை புகுத்தினார் ஆர்.என்.ரவி. பல பல்கலைக்கழகங்களில் இன்று வரையிலும் கூட துணைவேந்தர்கள் நியமனம் செய்யப் பெறாமல் இருப்பதற்கும், பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கும், பட்டதாரி மாணவர்கள் பட்டங்கள் பெறாமல் இருப்பதற்கும் இவரே காரணமாக இருக்கிறார்.
உச்ச நீதிமன்றமே இவரது தலையில் சம்மட்டியால் ஓங்கி பலமுறை அடித்த பிறகும், மோடி அமித்ஷா, ஆர்எஸ்எஸ் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளுநராக நீடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் தனது போக்குகளை கிஞ்சிற்றும் மாற்றிக் கொள்வதாய் இல்லை.
இவ்வாறு இவரது அருவருக்கத் தகுந்த – சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளை அவர் நிறுத்துவதாக இல்லையாதலால், பல்வேறு அரசியல் இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும் இவரை தமிழ்நாட்டில் இருந்தே விரட்டுவதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தினர்; ‘ஆளுநர் மாளிகை முற்றுகை’ப் போராட்டங்களைக் கூட நடத்தி விட்டனர்.
ஆனால் அவரும் தமிழ்நாட்டை விட்டு கிளம்புவதாக இல்லை; ஒன்றிய பாஜக அரசும் தமக்கு எதிரான திமுக அரசிற்கு குடைச்சல் கொடுப்பதற்கு என்றே இவரது பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது.
தற்போது திருவள்ளுவருக்கு ஆர்.என்.ரவி அளித்திட்ட அவமரியாதை!
கடந்த 13-07-2025 அன்று மருத்துவத் தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் ‘சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள்’ என 50 பேர் ‘கௌரவிக்கப்பட்டு’ ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகள் வழங்கினார். வழங்கப்பட்ட கேடயம் போன்றதொரு பரிசில் திருக்குறள் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதாவது 944-வது குறள் என்பதாக குறிப்பிட்டு
“செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு மன்னுஞ் சொல் மேல்வையப் பட்டு”
– (திருக்குறள்-944) என்பதாக அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களில் இப்படியான வார்த்தைகள் அடங்கிய குறள் என்ற ஒன்றே இல்லை என்பதுதான்.
உண்மையில் 944-வது குறள் இதோ:
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து” என்பதே உண்மையான குறளாகும்.
ஆக, இந்த ஆரியன் ஆர்.என்.ரவிக்கு இப்படிப்பட்ட கேடான ‘குறள்’களைத் தயாரித்து அளிக்கும் அந்த ‘மேதைகளான’ கயவர்கள் யார்? அவர்கள் மீது உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசுகளைத் திரும்ப பெற்று சரி செய்து கொடுப்பது தீர்வாகாது.
உண்மை வெட்ட வெளிச்சமாகி பல்வேறு தமிழ் அறிஞர்களும், அரசியல் இயக்கத்தினரும், தமிழ் மக்களும் கண்டனக் குரல்களை ஆர்.என்.ரவிக்கு எதிராக எழுப்பிய உடன் ஆளுநர் மாளிகையிலிருந்து பரிசுகளைப் பெற்றுச் சென்ற 50 மருத்துவர்களுக்கும் செய்திகள் பரந்து அவற்றை திரும்ப ஒப்படைக்குமாறும், சரி செய்த பின் மீண்டும் வழங்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை துளியும் வெட்கமின்றி தற்போது அறிவிக்கிறது.
இது ஏற்கத் தகுந்த முடிவல்ல. இப்படிப்பட்ட கோமாளித்தனங்களை இந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல; இது உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையே அவமரியாதை செய்யும் கடும் குற்ற செயலாகும்.
படிக்க: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!
எனவே, இத்தகு குற்றச்செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியையே குற்றவாளியாக்கி குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். வழக்குப் பதிய வேண்டும். தண்டனை வழங்க வேண்டும். சாதாரண குடிமகன் இப்படிப்பட்ட குற்றச்செயலை செய்திருந்தால் அரசு வேடிக்கை பார்க்குமா? காவல்துறையோ நீதித் துறையோ வேடிக்கை பார்க்குமா? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனில் அது ஆளுநர் ரவிக்கும் பொருந்தும் தானே? என்ன செய்கிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
குறைந்தபட்சம் ஆர் என் ரவி ஆளுநர் மாளிகையில் நடந்த இவ்விதக் கொடும் குற்றத்திற்காக முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இவரை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு விரட்டுவதற்கான களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இது அவசர அவசியக் கடமையாகும்.
- எழில்மாறன்







மிகஅருமை.
திருவாள்ளுவன் திருக்குரலை இழிவு படுத்தும் ஆர்.என்.ரவி தமிழகத்தில் இருந்து வெளியேறு