கவர்ச்சிவாதமும், பாசிச அடிவருடித்தனமும் இணைந்து
மிரட்டிய விஜய்யின் இரண்டாம் மாநாடு!
நடிகர் விஜய்யின் தவெக கட்சி தனது 02- வது மாநில மாநாட்டை கடந்த மாதம் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தி முடித்துள்ளது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டதையும் தாண்டி, அதிக அளவில் மக்கள் கூடினார்கள் என்பதால் கூட்டம் பிரம்மாண்டமானது, எழுச்சியானது என சில ஊடகங்கள் எழுதின.
மக்கள் கூட்டத்தை பார்த்த விஜய், மாநாடு முடிந்தவுடன் வெளியிட்ட அறிக்கையில், “விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாடு நெகிழ வைத்தது என்றும், மதுரை மாநாடு திக்குமுக்காடச் செய்துள்ளது என்றும், மாநாட்டிற்கு பல தடைகள் வந்ததையும் மீறி மக்கள் திரளாக வந்து வெற்றி பெற செய்துள்ளார்கள்”என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகரை பார்க்க எப்போதும் மக்கள் கூடுவது வழக்கம். தவெக மாநாட்டில் கூடிய கூட்டமும் விஜய் என்ற நடிகரை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டமே தவிர, கொள்கை – கோட்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு கூடிய கூட்டம் இல்லை. உண்மையில், தவெக-வின் இரண்டாவது மாநாடு 2026 ஆம் ஆண்டில் ஆட்சியை பிடிப்போம் என்ற வெற்று கூச்சலுக்கும், தனது ரசிகர்களை உசுப்பேற்றவும், கட்சியின் வாக்கு வங்கியை உருவாக்கவும் விஜய் மாநாட்டை நடத்தியுள்ளார்.
மாநாட்டில் விஜய்யின் பேச்சும்!
வாக்கு வங்கிக்கான திட்டமும்!
அரசியல் வியூகம் வகுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் விஜய்யின் மாநாட்டு பேச்சு தயாரித்து தரப்பட்டுள்ளது என்றால் மிகையல்ல. குறிப்பாக தவெக கட்சிக்கு வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற உள்ளடக்கத்தில் சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் வரை கேட்கும், வேட்டு – ஓட்டு ஸ்டாலின் அங்கிள் போன்ற மசாலாக்கள் தடவி சினிமா வசனங்கள் போல் வடிவமைத்து உள்ளனர். விஜய்யின் பேச்சு அவரது கட்சிக்கு வாக்கு வங்கியை உருவாக்குவது விட பல கட்சிகளின் வாக்குகளை சிதறடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
அதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38% வாக்குகளையும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி 39.71% வாக்குகளையும் பெற்றது. நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றன. இப்போது பா.ஜ.க.வினை கொள்கை எதிரியாகவும், தி.மு.க. வினை அரசியல் எதிரியாகவும் முன்னிறுத்துவதால் இந்த இரு கட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் தனக்கு வரும் என பகல் கனவு காண்கிறார்.
அரசியல் எதிரி திமுக என்ற கருத்தை மீண்டும் மீண்டும் கூறியதுடன், திமுக எதிர்ப்பை வலுவாக வைப்பதன் மூலமும், திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்ற கருத்தை மக்கள் மனதில் விதைப்பதன் மூலமும் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை கவர முயற்சித்துள்ளார்.
முதல் மாநாட்டில் பாசிசமா? பாயாசமா! என்று உளறியவர் இந்த மாநாட்டில் பாசிச பாஜக என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும், இஸ்லாமிய ஆதரவு என பேசி தமிழகத்தில் உள்ள பாஜக எதிர்ப்பு வாக்குகளை நோக்கி வலை வீசியுள்ளார்.
எம்.ஜி.ஆர் புகழ்பாடி அதிமுக – பாஜக பொருந்தாத கூட்டணி என்றும், அதிமுக யார் கையில் இருக்கிறது என்றும் பேசி பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் வெறுப்பில் இருக்கும் அதிமுக தொண்டர்களை நோக்கி தூண்டில் போட்டுள்ளார்.
அண்ணன் விஜயகாந்தின் மதுரை மண்ணில் நிற்கிறேன் என உணர்ச்சியை உருவாக்கியும், விஜயகாந்துடன் தனது உறவு பிணைப்பை புகழ்ந்து பேசியும், சீமானை மறைமுகமாக தாக்கி பேசியும் தேமுதிக – நாம் தமிழர் தொண்டர்களை இழுக்கவும் முயற்சித்துள்ளார்.
தனது கட்சியின் பொதுச்செயலாளர் என முன்வைத்துள்ள புஸ்ஸி ஆனந்து முதல் பிற கட்சிகளில் சீட்டு, பதவி கிடைக்காத பிழைப்புவாத கும்பல் வரை வெவ்வேறு நோக்கம் கொண்ட கதம்பக் கும்பலையே தனது ’மாபெரும் கட்சி தொண்டர்களாக’ கொண்டுள்ளார்.. இவர்களை திரட்டியே மாநாட்டை நடத்தியுள்ளார்.
மொத்தத்தில், விஜயின் மாநாட்டு பேச்சில் மக்கள் நலன்கள் குறித்தவை எள் முனையளவும் இல்லை. இருந்தாலும், ஆட்சியைப் பிடிப்போம் என்ற வெற்று கூச்சலும், வாக்கு வங்கியை உருவாக்குவதற்கான அடித்தளமும் வாக்குகளை சிதறடிப்பற்கான தன்மையும் கொண்டுள்ளது. முதல் மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்று கூறிய பிறகும் தமிழகத்தில் எந்தக் கட்சியும் தவெகவை திரும்பிகூட பார்க்கவில்லை என்பதால் பிற கட்சித் தொண்டர்களை குறி வைத்து பேசி வாக்கு வங்கியை சிதறடிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளார்.
இதனை மற்ற ஓட்டு கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. மாறாக, அறியாமையின் காரணமாக பேசுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமியும்; முதிர்ச்சியற்ற தன்மையுடன் பேசுகிறார் என தமிழிசை சௌந்தர்ராஜனும்; திமுகவை விமர்சித்தால் தான் முதலமைச்சராக முடியும் என பேசுகிறார் என டிகேஎஸ் இளங்கோவனும்; புலிகள் நுழைந்த உடனேயே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை என சீமானும் நக்கல் செய்து பேசியுள்ளனர்.
அரசியல்-கொள்கை எதிரி என வீர வசனம்!
மக்கள் பிரச்சனை – கொள்கை கோட்பாடுகளில் மட்டும் மவுனம்!
தவெக- வின் அரசியல் எதிரியான திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை விஜய் பேசினாலும், மக்களை பாதிக்கும் பிரச்சனை பற்றி வாயே திறக்கவில்லை. சமீபத்தில், தமிழகத்தில் பெரும் போராட்ட அதிர்வலையை உருவாக்கிய தூய்மைப் பணியாளர் போராட்டத்தை பற்றியோ, சாதி ஆணவப் படுகொலை பற்றியோ, போலீசின் கொட்டடிக் கொலைகள் பற்றியோ கிஞ்சித்தும் பேசவில்லை.
படிக்க:
♦ விஜய் நடத்திய மதுரை மாநாட்டின் செய்தி உணர்த்துவது என்ன?
♦ ஆளும் வர்க்கம் உருவாக்கும் நபர்கள் தான் விஜய்யும் சீமானும்! | மக்கள் அதிகாரம் | தோழர் சி.ராஜூ
கொள்கை எதிரியான பாஜகவை பாசிச சக்தி என உணர்ந்து பாசிச பாஜக என அழைத்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பாசிச பாஜக என கூறுவதால் தாமும் பாசிச பாஜக என சொல்லி வைப்போம் என்றே கூறியுள்ளார். பாஜகவின் எந்த பாசிச திட்டங்களை எதிர்த்தும் பேசவில்லை. குறிப்பாக, ஓட்டுத்திருட்டு எனும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), தர்மஸ்தலா பிரச்சனை, கல்வி நிதி தர மறுப்பது போன்ற சமகால அரசியல் பிரச்சனைகளை பற்றி பேசவே இல்லை.
அதேநேரத்தில், உழைக்கும் மக்கள் மீது ஒன்றிய அரசும், மாநில ஆட்சியாளர்களும் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பை காட்டாமல் அறிக்கை வெளியிடுவது என்று மட்டும் இருந்து வருகிறார்.
நாட்டின் இயற்கை வளங்களை, மக்களின் உழைப்பை லாப வெறியோடு சூறையாடும் கார்ப்பரேட் சுரண்டல் பற்றி பேசுவதே இல்லை என்பதில் இருந்து கார்ப்பரேட் சுரண்டலை மௌனமாக ஆதரிக்கிறார். டங்ஸ்டன் ஆலைக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் ஒன்று கூடிய போது அந்தப் போராட்டத்தை ஆதரித்து களத்திற்கு செல்லவில்லை.
திமுகவிற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இவரது ரசிக குஞ்சுகள் பேரிகார்டுகளை உடைப்பதும், சென்டர் மீடியன்களை சேதப்படுத்துவதும், சேர்களை சுக்குநூறாக்குவது என, ‘பொது சொத்துக்களை சேதம்’ செய்து வருகின்றனர். இவரது ரசிகர்களையே கட்டுப்படுத்த முடியாத இவரால் கட்சியில் உள்ள நிர்வாகிகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இவர் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் இவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என்ன செய்வார்கள் என்பதற்கு மாநாட்டில் உடைக்கப்பட்ட, திருடிச் செல்லப்பட்ட பொருட்களே சாட்சி.
தவெக ஏற்றுக் கொண்டக் ’கொள்கை’ தலைவர்களுக்கு அரணாகவும் இல்லை. அதாவது, பெரியார் எங்களது கொள்கை தலைவர் என்றும், அறிஞர் அண்ணாவின், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே எங்கள் நிலைப்பாடு என்றும் முதல் மாநாட்டில் பேசினார் விஜய். சமீபத்தில் பாசிச பாஜக நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரை பற்றி அவதூறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. கொள்கை தலைவர்கள் பற்றி அவதூறு வீடியோ வெளியிட்டதை கண்டித்து இன்றுவரை வாய் திறக்கவில்லை நடிகர் விஜய். இதுதான் விஜய் கொள்கைகள் மற்றும் அதன் தலைவர்களை உயர்த்தி பிடிக்கும் லட்சணம். இப்படிப்பட்ட பாசிச அரைவேக்காட்டு கோமாளியிடமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக மக்களுக்கு உருவாகியுள்ளது.
முதல்வராகும் ஆசையும்!
வரலாற்று சூழல் புரியாத அரசியல் தற்குறியும்!
தமிழகத்தில் 1970-களின் துவக்கம் வரை தி.மு.க. vs காங்கிரஸ் என இருந்த களம், அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு, 1970-களின் மத்தியில் தி.மு.க. vs அ.தி.மு.க. என மாறியது. எம்.ஜி.ஆரால் 1972-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அ.தி.மு.க. முதன்முதலாகப் போட்டியிட்ட 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 33.5% வாக்குகளைப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது. நடிகர் எம்.ஜி.ஆர் மீது இருந்த திரை போதை மட்டுமே அதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தது என சுருக்கி பார்க்க முடியாது.
1975 முதல் 1977 வரை நடைமுறையில் இருந்த நெருக்கடி நிலை;1969 முதல் 1975 ஆம் ஆண்டுக்குள் காமராஜர், ராஜாஜி, பெரியார், அண்ணா ஆகியோர் இறப்பு; தி.மு.கவிலிருந்து அதன் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் வெளியேறி மக்கள் தி.மு.க என்ற புதிய கட்சியையும் ஆரம்பித்தது; திமுக கூட்டணியில் இருந்து ஜனதா தளமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விலகியது போன்ற அன்றைய அரசியல் சூழல் அதிமுக அதிக வாக்குகள் பெற காரணங்களாகும். இதுபோன்ற அரசியல் சூழல் இல்லாததால் தான் அதன் பிறகு விஜயகாந்த், கமலஹாசன், சீமான் பல சினிமா கழிசடைகள் கட்சி தொடங்கினாலும் பாசிச கோமாளி எம்.ஜி.ஆர் பெற்ற வாக்கு சதவீதத்தை பெற முடியவில்லை.
இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் அரசியல் தற்குறியான விஜய் 1977 ஆம் ஆண்டு வரலாற்றை மீண்டும் உருவாக்க போவதாக கூறி வருகிறார். இதற்கு தவெக நடத்திய இரண்டு மாநாடுகளில் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை முக்கிய காரணம். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது விஜய்க்கு கூடிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் கூடியது என்பதும், தமிழகத்தில் சிவாஜி கட்சி தொடங்கிய போதும் விஜயை விட அதிக அளவு கூட்டம் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டத்தை வைத்து அது ஓட்டாக மாறும் என நினைத்து,”1977-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது” என வெற்றுக் கூச்சலிட்டு உள்ளார்.
தங்களது ரசிகர் மன்றத்தின் மூலமாகவோ அல்லது ரசிகர் மன்றத்தின் பெயரை மக்கள் இயக்கம் என மாற்றிக் கொண்டோ மக்களுக்கு சில உதவிகளை- தேவைகளை செய்வதும், புயல் மழை போன்ற பேரிடர் காலங்களில் உணவு பொட்டலங்களும், அரசுக்கு நிதி வழங்குவதுமே அரசியலுக்கும், மாநில முதல்வராவதற்கும் போதுமானது என நினைக்கின்றனர் நடிகர்கள். அதனால் தான் அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக, வாழ்வியல் மாற்றத்திற்காக மக்களின் நலன்களுக்காக வீதியில் இறங்கி போராடியதே இல்லை. இதற்கு விஜய்யும் விதிவிலக்கு அல்ல.
விஜய் படங்களில் கதையை விட மொத்த படத்தையும் விஜய் தாங்கி நிற்பது போல் உருவாக்கப்பட்டு இருக்கும். சினிமா படம் போல் கட்சியை விஜய் நினைப்பதால் தவெக கட்சி முழுவதிலும் விஜய் மட்டுமே உள்ளார். 234 தொகுதிகளில் யாரை நிறுத்தப் போவது என்ற திட்டம் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் நானே நிற்கிறேன் என நினைத்து எனக்கு வாக்களியுங்கள் என்று பிதற்றுகிறார்.
முழுநேர அரசியல்வாதியாக தன்னை அறிவித்துக் கொண்டு, கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை விரல் விட்டு எண்ணக்கூடிய கூட்டங்களே நடத்தியுள்ளார் விஜய். முக்கிய நிர்வாகிகளே விஜய்யை சந்திக்க முடிவதில்லை. புஸ்லி ஆனந்த் ஒருவரோடு மட்டுமே விஜய் தொடர்பில் உள்ளார். இதனால் தவெக கட்சியில் தொடர முடியாமல் வெளியேறி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மறுபுறம், ஒன்றிய மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பு வேண்டும் எனில் கணிசமாக பணம் கொடுத்தால் மட்டுமே கட்சி பொறுப்புகளை பெற முடிகிறதாம். இவ்வாறு பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்கள் புஸ்லி ஆனந்தின் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற மோசமான கட்டமைப்பு கொண்ட கட்சியாகவே தாவெக உள்ளது என்கின்றனர் அந்த கட்சிக்குள் இருக்கும் சிலர்.
கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கூட்டங்களையும் முறையாக நடத்த முடியாமல் நிர்வாகிகளை தக்க வைக்க முடியாமல் திணறும் விஜய் மாநில முதல்வராக வேண்டும் என ஆசைப்படுவது குழந்தைகள் வானத்தில் பறக்கும் வானூர்திகளை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவது போன்றதாகும்.
பாசிச கோமாளி விஜய்யிடமிருந்து
இளைஞர்களை பாதுகாப்போம்!
பாசிசத்திற்கு எதிராக அணிதிரட்டுவோம்!
இன்றைய கார்ப்பரேட் – காவி பாசிச சூழலில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, சாதிய தாக்குதல் அரசின் ஒடுக்கு முறை ஆகியவற்றிற்கு மேலும் மேலும் ஆட்படுத்தப்பட்டு கோபத்திற்கும், துடிப்பிற்கும் ஆளாகி வரும் இளைய தலைமுறையினரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாசிசம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இளைஞர்களை பாசிசத்திற்கு எதிரான அரசியல் அமைப்புகளில் அணிதிரட்ட வேண்டியது அவசியம். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பாசிச எதிர்ப்பு அரசியலை நோக்கி வராமல் தடுத்து, விட்டேத்திகளாக மாற்றி கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் அடியாள் படையாக மாற்றுவதையே விஜய்யின் தவெக செய்கிறது.
திமுக கார்ப்பரேட் ஆதரவு தன்மையிலேயே செயல்பட்டு வருதுடன், காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு மாற்று திட்டம் ஏதுமின்றி தமிழக இளைஞர்களை பாசிசத்திற்கு எதிராக அணி திரட்டுவதில்லை. திரட்டப்போவதுமில்லை.
இந்தியாவில் நிலவுகின்ற சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டு, தங்களுக்கு ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை தீர்த்துக்கொள்ள ஆட்சி மாற்றம் மூலமே முடியும் என நம்பி மாறிமாறி வாக்களித்து வருகின்றனர். எனவே, ஓட்டரசியல் மூலம் ஆட்சியை மாற்ற வேண்டும் என இருப்பவர்களில் நல்லவர்களை தேடுகின்றனர். இதனை பயன்படுத்தி விஜய் திமுக தவெகவுக்கு இடையில் மட்டுமே போட்டி என்று உளறி வருகிறார். இளைஞர்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
மக்களுக்கு நிலவும் சட்டமன்றம் – நாடாளுமன்றத்தின் உள்ளடக்கம் பாசிசமாக மாறி உள்ளதையும், மாற்று அரசியலையும் அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர வைப்பதே பாசிச எதிர்ப்பில் களமாடும் கட்சிகளின் பொறுப்பும் கடமையும் உள்ளது. இதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமிது.
◾லூர்துசாமி.
புதிய ஜனநாயகம் (செப் 2025 இதழ்)






