ரஷ்ய புரட்சி குறித்து படிக்க வேண்டிய நூல்கள்! உலகை குலுக்கிய 10 நாட்கள்!
உலகை குலுக்கிய 10 நாட்கள்!

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த நாள். அதுவரை ரஷ்யாவை ஆண்டு வந்த  ஜார் மன்னன் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களை தூக்கி எறிந்து தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இந்த உலகமே முதலாளிகளால் தான் இயங்குகிறது; முதலாளிகளுக்குத்தான் ஆட்சி செய்யும் அறிவும், திறனும் உள்ளது; அவர்களால்தான் இந்த உலகை வழி நடத்த முடியும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றி வந்ததை தகர்த்தெறிந்த நாள்.  ஆளும் வர்க்கத்தால்  ஒடுக்கப்படும், சுரண்டப்படும் உலகின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கலங்கரை விளக்காக அமைந்த நாள்.  உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு, தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வந்த நாள். உலகத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் கொண்டாடிட வேண்டிய நாள்.

அன்று ஐரோப்பாவின் முதலாளித்துவ சுரண்டலுக்கு முக்கிய பகுதியாக இருந்தது ரஷ்யா. மகத்தான சோசலிசப் புரட்சியின் மூலம் ஜார் மன்னனை தூக்கி எறிந்ததோடு  சேர்த்து போலி வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றிய முதலாளித்துவ ஆட்சியையும் தூக்கி எறிந்தது லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி.

ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சி ஐரோப்பா எங்கும் எதிரொலித்தது. பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி நிறுவப்பட்டது.  பல நாடுகளில் காலனியாதிக்க ஆட்சி தூக்கி எறியப்பட்டது.
உலகை சூறையாடிய முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராக உருவான  சோசலிச ரஷ்யாவில் மக்கள் அனைவருக்கும் கல்வி,  இலவச மருத்துவம் வழங்குவதும், அனைவருக்கும் வேலையளிப்பதும் அரசின் கடமையாகவும் பொறுப்பாகவும் இருந்தது; உண்மையான மக்கள்நல அரசு சோவியத்தில் உருவானது.

அங்கு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் பெரும் முதலாளிகள் இல்லை; ஆலைகள், சுரங்கங்கள், கனிம வளங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு இருந்தன; தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை பெற்றிருந்தன; அதுவரை பின்தங்கிய, ஏழை நாடாக இருந்து வந்த ரஷ்யா சோசலிச புரட்சி நடந்த சில பத்தாண்டுகளிலேயே பொருள் உற்பத்தி, அறிவியல்-தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் மின்னல் வேகத்தில் முன்னேறியது. ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் 300 ஆண்டுகள் சாதித்த சாதனையை சோசலிச ரஷ்யா வெறும் 30 ஆண்டுகளில் சாதித்தது.

ஏகாதிபத்திய வல்லூறுகளின் அச்சுறுத்தலையும், உள்நாட்டில் அதிகாரத்தை இழந்த முதலாளித்துவ வர்க்க ஓநாய்களின் சதித்தனங்களையும்  முறியடித்து சோசலிச அரசை கட்டிக்காத்தார் தோழர் ஸ்டாலின். இதனாலேயே அவரை சர்வாதிகாரி என்றும், அவரது ஆட்சியில்  கோடிக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், கருத்துரிமை நசுக்கப்பட்டது என்றும் அவதூறுகளை பரப்பி வந்தது முதலாளித்தவ வர்க்கம்.

யாரை சர்வாதிகாரி என்று தூற்றியதோ அவரின்  தலைமையில்தான் உலகை அச்சுறுத்தி வந்த முதலாளித்துவ பயங்கரவாதியான பாசிச ஹிட்லர் வீழ்த்தப்பட்டான். அது மட்டுமல்ல கம்யூனிசத்தின் பெயரால் திருத்தல்வாதத்தை முன்வைத்த பல்வேறு போலி கம்யூனிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சியை தொளதொளப்பாக மாற்ற முயற்சிக்கின்ற முதலாளித்துவ எடுபிடிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டியது.

அத்தகைய மாபெரும் புரட்சியைப் பற்றி உழைக்கும் மக்களாகிய நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு ஓர் அறிமுகமாய் சில நூல்களை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

உலகை குலுக்கிய 10 நாட்கள்!
ஜான் ரீடு

அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு எழுதிய இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். பத்து லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழு மனதுடன் இப்புத்தகத்தைச் வேண்டும். எல்லா மொழிகளிலும் பெயர்க்கப்பட வேண்டுமென நான் விரும்பும் புத்தகமாகும் இது. பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளபடி உயிர்க்களையுடன் இது விவரிக்கின்றது. இந்தப் பிரச்சினைகள் விரிவாய் விவாதிக்கப்படுகின்றவை, ஆனால் எவரும் இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ முற்படுமுன் தமது முடிவின் உட்பொருளைச் சரிவர புரிந்துகொள்வது அவசியமாகும். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் அடிப்படையான பிரச்சினையாகிய இதனைத் தெளிவுபடுத்த ஜான் ரீடின் புத்தகம் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.

தோழர் லெனின் 1919 (அமெரிக்க பதிப்பின் முகவுரை)

நூல் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
தொடர்புக்கு: +91 89256 48977

 

2 COMMENTS

  1. எனது அரசியல் பின்னணியை உணர்ந்து கொண்ட – அலுவலக ரீதியான எனது கீழ்நிலைப் பணியாளர் ஒருவர் 1987 ஜனவரி ஜனவரி 25 -ல் ‘உலகைக குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற ஜான் ரீடு-வின் ரஷ்ய – மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தின் அரிய நூலை தென் மாவட்டத்தில் நான் வசித்த பொழுது நேரடியாக வழங்கினார். அன்றைய காலம் வரை நான் அந்த மகத்தான நூலைப் பற்றி அறிந்திருந்தேன் என்றாலும் நான் பார்த்ததும் இல்லை; படித்ததும் இல்லை. எனவே நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நூல் அல்லது வாங்குவதற்கு ஆசைப்பட்ட நூல் அந்த நண்பர் மூலமாக சுமார் 39 ஆண்டு களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்தது. நன்றாக நினைவிருக்கிறது இந்த நூல் கிடைத்த பத்து தினங்களுக்குள் படித்து முடித்து விட்டேன். மனதில் ஒரு புத்துணர்ச்சியையும் கூடுதலாக வரப்பெற்றேன். மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான வாய்ப்பில்லையே என்றே வருந்துகிறேன்.
    இதுவரை எவரும் இந்நூலைப் படிக்காமல் இருப்பீர்களேயானால் அன்புகூர்ந்து உடனடியாக இந்நூலைப் படிக்கத் தவறிட வேண்டாம். ரஷ்ய புரட்சியை சர்வதேசிய கண்ணோட்டம் உடைய ஒரு அமெரிக்கர் இந்த அளவிற்கு நேரடி சாட்சியமாக இருந்து பதிவிட்ட பதிவுகள் நெஞ்சை உழுக்குவதாக உள்ளன. இந்நூலுக்கு ஆசான் லெனினும் அவரது துணைவியார் தோழர் குருஸ்கயாவும் முத்திரை பதிக்கும் வகையில் அளித்திட்ட முகவுரைகளே சாட்சியமாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here