
கடந்த வாரம் 2026 – 27 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஒரு வலிமையான பெரிய பொருளாதார நிலைப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்தார். பிரதமர் மோடியோ “தொலைநோக்குடன் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிதி நிலை அறிக்கையில், மொத்த அரசாங்க செலவினமாக 53.5 லட்சம் கோடி காட்டப்பட்டுள்ளது. இந்த செலவில் 12.07 லட்சம் கோடி இந்தியா வாங்கியுள்ள கடனுக்கான வட்டிக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வட்டிக்கே செலவிடப் படுகிறது. கடந்த ஆண்டில் இந்தத் தொகை 11.37 லட்சம் கோடியாக இருந்தது.
நான்கு மடங்காக உயர்ந்த கடன் சுமை!
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற போது இந்தியாவின் மொத்தக் கடன் 55.87 லட்சம் கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளில் இந்தியா வாங்கிய கடன் தொகை தான் இது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் அந்தக் கடன் சுமையை நான்கு மடங்காக உயர்த்திய பெருமை பாசிச மோடி கும்பலைத்தான் சேரும்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது 181.74 லட்சம் கோடியாகவும், இன்றைய நிலையில் அது 200 லட்சம் கோடிகளையும் தாண்டி உள்ளது. 2025-26 நிதியாண்டில் அரசின் கடனானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 56.1% என கணக்கிடப் பட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக கடன் வாங்கி இருப்பது பெரும் ஆபத்து என விமர்சிக்கப்படும் நிலையில், சங்கிகள் “நமது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், பொதுமக்களின் நலனை மேம்படுத்தவும் அரசு முதலீடுகள் செய்கிறது. எனவே அதற்கு கடன் வாங்க வேண்டியுள்ளது” என்கிறார்கள்.
மேலும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களுக்காக தேவைப்படும் நிதிக்காகவே கடன் வாங்குவதாகவும் கதை அளக்கிறார்கள். ஆனால் உண்மையில் கடன்தொகை அதிகரிப்பதால் அதற்கு ஆண்டுதோறும் செலுத்தப்படும் வட்டித் தொகையும் அதிகரிக்கிறது. இதனால் கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது என்பதே உண்மை.
பட்ஜெட்டில் அறிவிப்பதும் நடைமுறைக்கு வருவதில்லை!
சமூக நல அமைச்சகங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் பட்ஜெட் ஒதுக்கீடுகளை விடக் குறைவாகவே உள்ளன. அதாவது பெரும்பாலான துறைகளில் அரசாங்கம் பட்ஜெட்டில் அறிவிப்பதை விடக் குறைவாகவே ஒதுக்குகிறது. செலவு செய்வது அதை விடவும் குறைகிறது. சென்ற நிதியாண்டில் (2025-26) கிராமப்புற மேம்பாட்டிற்கு 2.65 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2.12 லட்சம் கோடிகளாக செலவினம் சுருங்கியது. இது பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்து 20 % சரிவாகும்.
இதே போலத்தான் சமூக நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய செலவினங்களும் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட குறைந்தன. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் (100 நாள் வேலை) திட்டத்திற்கு ரூபாய் 86 ஆயிரம் கோடி மட்டுமே மாறாமல் ஒதுக்கப்பட்டது. தொடர்ச்சியான தேவை அதிகரித்த போதும், நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. இப்போது இதை மேலும் குறைக்கும் வகையில் மாநில அரசின் பங்களிப்பைக் கோருகிறது ஒன்றிய பாஜக அரசு. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்காத பாசிச பாஜக மோடி அரசு, இப்போது மாநிலங்களின் தலையிலேயே கை வைக்கிறது.
சமூக நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைகிறது!
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிர்வாகத்தால், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் அரசாங்கம் பட்ஜெட் ஒதுக்கீட்டை போதுமான அளவு அதிகரிப்பதில்லை. எனவேதான் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் குறைகிறது. இந்த நிதிநிலை அறிக்கையில், ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 67,000 கோடியிலிருந்து 17,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல சமூக நலத்துறைக்கு 9,999 கோடியும், விவசாயத் துறைக்கு 6,985 கோடியும், கல்வித்துறைக்கு 6,701 கோடியும், சுகாதாரத் துறைக்கு 3,686 கோடியும் இந்த நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது.
படிக்க:
♦ 2026 பட்ஜெட்: “கரடி விடும்” ஒன்றிய மோடி அரசு!
♦ மோடி அரசின் பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்களுக்கு கறி விருந்து! உழைக்கும் மக்களின் கோவணத்துக்கும் ஆப்பு!
ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு நிதிப் பங்களிப்பு குறையும்போது அதுசமூகத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் இரத்த சோகை 59 முதல் 67% வரையிலும், 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 57 % அளவிலும் அதிகரித்துள்ளது. இங்கு நிலவும் கட்டமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பட்ஜெட்டில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை அங்கன்வாடி மையங்களின் நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாநிலங்களில் நிலவும் நிதி அழுத்தங்கள் இந்த செயல்பாடுகளை முழுமை அடைய விடாமல் ஆக்குகின்றன.
அதேபோல பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் இதுவரை 3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் கணக்கிடப்படும் போது 24 முதல் 28 % அளவிலான பணவீக்கம் காரணமாக இந்த ஒதுக்கீட்டின் உண்மையான மதிப்பில் இழப்பு ஏற்படுகிறது. இதேபோன்ற கட்டமைப்பு சிக்கல் சுகாதாரத் துறையிலும் உள்ளது. 2025 அக்டோபர் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 42 கோடி நபர்களுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.52 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய காப்பீட்டு திட்டங்கள் சில முன்னேறாத மாநிலங்களில் சரிவர நடைமுறைப்படுத்தப் படவில்லை. காப்பீட்டுத் தொகை கிடைப்பதில் எழுந்த தாமதம் காரணமாக இதில் மருத்துவமனைகள் தங்களை இணைத்துக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
இந்த அரசு மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது!
கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டிற்கும், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டியாவது நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் தேர்தல் ஆணையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும் வைத்துக்கொண்டு நினைத்ததை சாதிப்போம் என மோடி அரசு இறுமாப்புடன் இத்தகைய நிதிநிலை அறிக்கையை சமர்பித்துள்ளது.
ஆகவே, இந்த பட்ஜெட் மக்களின் உண்மையான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தி நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக வெறுமனே தனது போலி பிம்பத்தை பாதுகாக்க முயற்சிக்கும், வெற்று டாம்பீக முழக்கமிடும் அரசின் செயலாகவே பார்க்க வேண்டி உள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்ததன் மூலம் இது மக்கள் நல அரசாக செயல்படவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த பாசிச கும்பலை ஆட்சியில் இருந்து அகற்றினால் தான் நாட்டிற்கு விடியல் கிடைக்கும்.
குரு






