Iris Dena மூழ்கடிக்கப்பட்டதும் மோடி அரசின் மௌனமும்!
இந்தக் கப்பலில் இருந்தவர்களில் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 140-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.

ந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவி வந்த அமைதியைச் சீர்குலைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம். இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena), அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ (torpedo) ஏவுகணையால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 180 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலில் இருந்தவர்களில் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 140-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.

ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் விரிவாக்கம்!

இந்தத் தாக்குதல் ஏதோ தற்செயலாக நடந்த ஒன்றல்ல; மாறாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள அறிவிக்கப்படாத போரின் ஒரு அங்கமாகும். கடந்த ஐந்து நாட்களாக ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயத்துல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

“சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு எதிரிக் கப்பலை மூழ்கடித்துள்ளோம்” என்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் திமிருடன் அறிவித்திருப்பது, சர்வதேச சட்டங்களை அமெரிக்கா காலில் போட்டு மிதிப்பதையே காட்டுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் ஒரு கப்பலை மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என்று அமெரிக்கா பெருமை பேசுகிறது.

இந்தியாவின் ‘விருந்தினர்’ மீதான தாக்குதல்!

இங்கு மிக முக்கியமான அரசியல் கேள்வி என்னவென்றால், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி குறிப்பிட்டது போல, இந்த ‘ஐரிஸ் டெனா’ போர்க்கப்பல் இந்தியாவின் கடற்படை நடத்திய ‘சர்வதேச கடற்படை ஆய்வு 2026’ (International Fleet Review 2026) நிகழ்வில் பங்கேற்ற ஒரு விருந்தினர் கப்பல் ஆகும்.

இந்தியாவிற்கு வந்து சென்ற ஒரு நட்பு நாட்டு கப்பல், இந்தியாவிற்கு அருகிலேயே நிராயுதபாணியாக இருந்தபோது தாக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

மோடி அரசின் மௌனமும் அடிபணிதல் அரசியலும்!

ஒரு நாட்டின் விருந்தினராக வந்து சென்ற கப்பல் சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகத் தாக்கப்பட்டபோது, அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கடமையாகும். ஆனால், நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இதுவரை இந்த அத்துமீறலுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது அதன் அடிமைத்தனத்தின் உச்சம்.

இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் வாஷிங்டனின் விருப்பங்களுக்கு அடிபணிந்து போயுள்ளதையே காட்டுகிறது. அண்டை நாடான இலங்கை கூட இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து, உயிரிழந்த ஈரானியத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா தனது மௌனத்தின் மூலம் அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்குத் துணை நிற்பது அப்பட்டமாக தெரிகிறது.

படிக்க: ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!

தெற்காசியப் பகுதியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அனுமதிப்பதும், அதன் இராணுவ நடவடிக்கைகளைத் தட்டிக் கேட்கத் தவறுவதும் இந்தியாவின் நீண்டகால ‘அணிசேராக் கொள்கை’க்கு விடப்பட்ட மரண அடியாகும்.

இந்தியப் பெருங்கடல் பகுதி உலக வல்லரசுகளின் போர்க்களமாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மோடி அரசு அமெரிக்காவின் இளைய பங்காளியாக செயல்படுவதை நிறுத்திவிட்டு, பிராந்திய அமைதி மற்றும் இறையாண்மைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்காவின் அடிமையாக மாறியுள்ள பாசிச மோடி அரசு இதனை செய்யப்போவதில்லை.

இந்தியா நீண்டகாலமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. நீண்டகால வர்த்தக உறவும் உள்ளது. இடையில் அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதார தடை காரணமாக வர்த்தகம் குறைந்தது. ஈரானால் இந்தியா பொருளாதாரப் பலனை அடைந்துள்ளதை யாரும்  மறுக்க முடியாது.

ஆனால், இந்தியாவோ அதாவது பாசிச மோடி அரசோ ஈரானின் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா கமேனி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டபோது கண்டனம் தெரிவிக்காமல் மாறாக, அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரான் அரசு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்திய தாக்குதல் கவலைக்குரியது என்று தனது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டினார் மோடி.

படிக்க: இந்திய விவசாயிகளை ஒழிக்க வரும் இந்திய அமெரிக்க வணிக ஒப்பந்தம்!

நீண்ட காலமாக தன்னை விஸ்வகுரு என பெருமை பீற்றிக்கொள்ளும் மோடியை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைமதிப்பிட்டு பேசுவதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய மோதலை  ஆபரேஷன் சிந்தூர் மூலம் தான்முறியடித்ததாக மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போதே, டிரம்ப் நான் சொல்லாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் போர் நின்றிருக்காது என பேசினார். இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறியும் மோடி மறுப்பு தெரிவிக்காமல் உள்ளார்.

அடுத்து ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்த ட்ரம்ப் இனி இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்காதென தன்னிச்சையாக அறிவித்தார். டிரம்பின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக  இதுவரை  மோடி என்ற சர்வாதிகாரியிடமிருந்து சிறு எதிர்ப்பு கூட வரவில்லை.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

சமீபத்தில் நடந்த இந்தியா அமெரிக்கா ஒப்பந்த மூலம் அமெரிக்க முதலாளிகளின் நலனுக்காக இந்திய விவசாயிகளின் வாழ்வை நாசம் செய்துள்ளார் மோடி. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு 18 சதவீதம் வரியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய பொருளுக்கு 0 சதவீதம் வரியும் என ஒப்பந்தத்தை போட்டு ஒட்டு மொத்த மக்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  அடிமையாக்கி உள்ளார். இந்தியாவை அமெரிக்க பொருட்கள் சந்தையாக மாற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட அமெரிக்க அடிமை தான் இந்திய மக்களை ஆண்டுக்கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிற்காக உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இன்று இந்திய நாட்டிற்கு விருந்தினராக வந்திருந்த ஈரான் மாலுமிகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் வேட்டையாடிய போதும் வாய் திறக்காமல் மௌனமாக அமெரிக்காவின் படுகொலைக்கு துணையாய் நிற்கிறது.

டிரம்பின் அடிமைக்கு நாம் அடிமையாக இருப்பதா? அல்லது எதிர்த்து நிற்பதா?

  • நந்தன்

3 COMMENTS

  1. ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதும் மோடியின் மௌனமும்!

    உலக ரவுடி அமெரிக்கா அதிபர் டிரம்ப் எதிர்க்க தைரியம் இல்லாத முதுகெலும்பில்லாத பிரதமராக மோடி இருக்கிறார்
    ஈரான் நாட்டுடன் நட்பை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு இந்திய பொருளாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் பாக்கெட்டையும் நிரப்பும் பாசிச பிரதமர் மோடி ஈரானுக்கு ஆபத்து என்றவுடன் மௌனம் காக்கிறார் ஈரானுக்கு ஆதரவாக ஒரு சிறிய அளவில் கண்டனத்தை கூட பதிவு செய்ய முடியாத அளவிற்கு தொடை நடுங்கியாக ஒரு நாட்டின் பிரதமர் இருக்க முடியுமா ?

    நாட்டின் சர்வதேச விதி மீறல்களையும் இறையான்மையும் மீறி கதவுகள் திரந்த வீட்டில் தெரு நாய் 🐶 வீட்டுக்குள் நுழைவுவது போல் உலகத்தில் உள்ள எந்த நாட்டிலும் உள்ளே புகுந்து அந்த நாட்டில் உள்ள வளங்களை சூறையாடி ஏப்பம் விடும் ஒரு கொள்ளை பேர்வழியாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் செயல்படுகிறார் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.

  2. உலக ரவுடி அமெரிக்கா அதன் தொங்கு தசை இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஈவிறக்கமற்ற போர் தொடுத்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நட்புரீதியாக இந்தியாவுக்கு வந்து திரும்பிய மாலுமிகள் அடங்கிய
    ஈரான் போர்க்கப்பலை இலங்கைக்கு அருகில் அமெரிக்காவின் நீர் மூழ்கி போர்க்கப்பல் மூலமாக தகர்த்தெறிந்து கொன்று குவித்துள்ளது கொடும் மனிதாபிமானமற்ற செயல்.

    ஈரான் உச்சபட்ச தலைவர் அதயத்துல்லா கமேனி குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட போதும் இந்த பாசிச மோடி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டார். இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் கப்பலை மூழ்கடித்து மாலுமிகளை கொன்றொழித்த போழ்தும்
    கண்களை இருக மூடிக் கொண்டார் மோடி. இவை யாவற்றையும் பற்றி கட்டுரையாளர் நந்தன் நன்றாகவே தோலுரித்து முகத்திரை கிழித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள்!

    பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது இந்த ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிச கும்பலின் முன்னோடிகள் காலனி ஆதிக்கவாதிகளின் ஷூவை நக்கி விசுவாசம் காட்டி பிழைத்தவர்கள் தானே?
    அவர்களின் நேரடி வாரிசுகளான மோடி அமித்ஷா மோகன் பகவத் கும்பலிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்…? அமெரிக்க ட்ரம்பின் ஷூவை நக்குவதைத் தவிர…!

    இந்திய நாட்டு மக்கள்தான் போருக்கு எதிராகவும் இந்திய நாட்டு காவிப் பாசிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் களம் இறங்கி போராட வேண்டிய தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளனர்…!

    அத்திசை நோக்கி போராட்டங்களை முன்னெடுப்போம்…!

  3. ஈரான் அதிபர் கொல்லப்பட்டு ஒரு வாரம் கடந்து கொண்டிருக்கிறது. தற்போது தான் நாளிதழை புரட்டினேன். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய அரசு சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொண்டாராம்.

    மெல்ல…மெல்ல… காவிப் பாசிஸ்ட்களே…
    அவசரம் இல்லை… மெல்ல… இன்னும் மெல்ல… ட்ரம்ப்கோ-நெதன்யாகுக்கோ
    தெரிந்துவிடாமல் ரகசியமாகக் கையாளுங்கள்…! அப்பொழுது தானே உங்களது சாயம் வெளுக்காமல் இருக்கும். மானங்கெட்டவர்களே, உங்களது மனிதாபிமான வேஷம் முற்றிலுமாக கலைந்து கொண்டிருக்கிறது…! அனைத்து வகைகளிலும் மிக விரைவிலேயே அம்பலப்பட்டு போவீர்கள்…! துரத்தி அடிக்கப்பட்டே தீர்வீர்கள்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here