
இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒன்றில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்து கொண்டு குடியரசு தின உரையாற்றினார். அப்போது, அந்த அமைச்சரின் உரையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி பணியில் இருந்த வனக்காவலர் மாதவி ஜாதவ் கேள்வி எழுப்பியது நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியில் பாராட்டையும், ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் மீது கேள்வியையும் எழுப்பி உள்ளது.
ஆர்எஸ்எஸ் பாஜக அமைப்பானது டாக்டர் அம்பேத்கர் பெயரை தவறுதலாக உச்சரிக்கத் தவறிவிட்டது என்று யாராவது புரிந்துக் கொண்டால் அதைவிட பாமரத்தனம் எதுவும் இருக்க முடியாது.
இந்தியாவில் தற்போது நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்களுக்கு சட்டரீதியாக சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மட்டுமின்றி சமூகத்தில் மிகவும் கேடான முறையில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக தனது கடுமையான உழைப்பாலும், திறமையை வெளிப்படுத்தி பல்வேறு துறைகளில் சாதனை ஈட்டி வருகின்றனர்.
இதனை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக உள்ள கல்வி பெறும் உரிமையை பட்டியலின மக்களுக்கு ஒரு சமூக அங்கீகாரமாக வழங்கியது அரசியலமைப்புச் சட்டம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் சில உரிமைகளை வழங்கியிருந்தாலும் அதனை பெறுவதற்கே பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக போராடி தான் ஒரு சில உரிமைகளை பெற முடிந்துள்ளது.
இந்திய சமூக அமைப்பில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சில அம்சங்களில் ஆர் எஸ் எஸ் பாஜக உங்களுக்கு தொடர்ச்சியான எதிரியாகவே இருந்து வருகிறது என்ற காரணத்தினால் அதனை தூக்கி எறிந்து விட்டு மனு நீதியை அரசியலமைப்புச் சட்டமாக கொண்டு வருவதற்கு துடித்துக் கொண்டுள்ளனர்.
இந்தப் பின்னணியில் இருந்து தான் டாக்டர் அம்பேத்கர் பெயரை குடியரசு தின உரையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் அமைச்சரான கிரிஷ் மகாஜன் நிராகரித்துள்ளார் என்று தான் இதனை அவதானிக்க வேண்டியுள்ளது.
அந்த வகையில் குடியரசு தின உரையில் டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காத சனாதன அமைச்சரை கண்டித்து அதே இடத்தில் கலகக் குரலால் எதிர்ப்பைதெரிவித்த அவர், “அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கூறப்போவதில்லை” என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்ல! “என்னை நீங்கள் இடைநீக்கம் செய்யுங்கள் கவலை இல்லை.. இடைநீக்கம் செய்யப்பட்ட பின் மணல் லாரி இழுக்கச் சொல்லுங்கள் கவலை இல்லை. சேற்றில் இறங்கி கூலி வேலை பார்க்க செய்யுங்கள் கவலையில்லை. ஆனால் அம்பேத்கர் அவமதிக்கபடுவதை, அம்பேத்கரை புறக்கணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று முழங்கி இருக்கிறார்.
அநீதி நடைபெறுகின்ற இடத்திலேயே அதை எதிர்த்து போர் குரல் எழுப்புவதற்கு துணிச்சல் வேண்டும். அது மட்டுமல்ல! தனது வேலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்தவிதமான தயக்கமும் இன்றி சனாதனவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள இந்த போர்க்குரல் நாடு முழுவதும் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும்.
ஆனால் எதிர்பார்த்ததைப் போலவே சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கின்ற அரசாங்கத்தினால் வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்திய அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டே குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் குடியரசு தினத்தில் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
படிக்க: குடியரசு தின அணிவகுப்பு முகிலன் ஓவியம்!
இவ்வாறு செய்வதையும் செய்துவிட்டு தனக்கு அதுபோன்று எந்த எண்ணமும் கிடையாது. நான் எப்போதும் அம்பேத்கரின் புகழ் பரப்புபவன் தான் என்று கிரிஷ் மகாஜன் பித்தலாட்டமாக பேசுவதையும், அதற்கு நேர் எதிராக போராடிய மாதவி ஜாதவ் மீது இடைநீக்க நடவடிக்கை எடுப்பதையும் சகித்துக் கொண்டு போகக்கூடாது.
போராடுகின்ற முறையானது சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய இதுபோன்று கலகக் குரல் எழுப்பக்கூடாது அதுமட்டுமின்றி எதிரிகளை கூர்மையாக விமர்சிக்கக் கூடாது மாறாக மென்மையாகவும், சட்ட ரீதியாக சிக்கிக் கொள்ளாத வகையில் பாலிஷ் ஆகவும், விமர்சிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் வண்டி வண்டியாக போதனை செய்கின்ற காலத்தில் மாதவி ஜாதவ் போன்றவர்களின் போர்க்குணம் அனைவராலும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய புரட்சிகர நடைமுறையாகும்.
அதைவிட இந்த வேலையை இழந்த பிறகு அவர் கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதை தனது பேட்டியின் மூலம் உலகுக்கு பறைசாற்றியுள்ளார். இதுதான் உழைக்கும் மக்களின் நேர்மை மற்றும் தவறுகளுக்கு எதிராக போராடுகின்ற போர்க் குணம்.
படிக்க: அனைவருக்குமான தலைவரா அம்பேத்கர்?
பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சொல்லப்படக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டி புதைத்து வருகிறது என்பது மட்டுமின்றி போராடுகின்ற உரிமைகளையும் தனக்கு எதிராக கேள்வி கேட்கின்ற கருத்துரிமை மற்றும் போராடுகின்ற உரிமை அனைத்தும் சவக்குழி தோண்டி வருகிறது என்பதையும் புரிந்து கொள்வதற்கு இந்த போராட்டம் ஒரு கலங்கரை விளக்காக நம் கண் முன்னே தெரிகிறது.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பு செலுத்திய டாக்டர் அம்பேத்கர் பெயரை புறக்கணிப்பது முதல் பட்டியலின மக்கள் பழங்குடி மக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதலை தொடுத்து தாங்கள் யார் என்ன நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள் முன் வைத்து விட்டார்கள்.
இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
◾மருது பாண்டியன்.






