திகார் நிறைய மாறியிருக்கிறது. எங்களின் சிறைக்கூடத்தில் கிட்டத்தட்ட 50 பேர் இருக்கின்றனர். கொள்ளளவு தாண்டிவிட்டது. முன்பை விட அமைதி இப்போது குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் பிணை மனுவை நிராகரித்தற்கு பிறகு அமைதியின்மையின் சத்தம் இங்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.
தீர்ப்புக்கு பிறகான ஊடகப் புயலிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனால் சிறைவாசிகள் பலருக்கும் முன்பை விட என்னை தற்போது தெரிந்திருக்கிறது. என்னை குறித்து தொடர்ந்து பேசி வரும் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களுமே காரணம். இப்போது அனைவரும் என்னிடம் சற்று நேரம் பேச விரும்புகின்றனர். ஆர்வத்தாலா திகைப்பிலா என தெரியவில்லை. ஆனால் நானோ உண்மையில் தனியாக இருக்கவே பெரிதும் விரும்புகிறேன்.
என்னுடைய சிறையும் சற்று வித்தியாசம் பூண்டிருக்கிறது.
இடைக்கால பிணை முடிந்து வீட்டிலிருந்து நான் கிளம்பியபோது, தீர்ப்பு சாதகமாக இருக்குமென ஏதோவொரு மூலையில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எனவே என் புத்தகங்கள், குறிப்புகள், படங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றிருந்தேன். ஆனால் பிணை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனி இந்த இடத்தை விட்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு செல்ல முடியாது. என் சிறையில் நான் உருவாக்கியிருந்த வெளி, காலிப் பலகை போல் வெறித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இது நன்மைக்காகவும் இருக்கலாம். இது ஒரு புது தொடக்கமாகவும் இருக்கலாம்.
ஒரு தீர்ப்பு வந்த பிறகு, சில நாட்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். உச்சநீதிமன்றம் என் பிணையை நிராகரித்தபோது, 2022ம் ஆண்டில் முதன்முறையாக விசாரணை நீதிமன்றம் என் பிணையை நிராகரித்த நினைவை மனம் மீட்டிக் காட்டியது. திடுமென வந்து சேர்ந்த செய்தி முன்பை போலவே இப்போதும் என்னை உலுக்கியிருந்தது.
ஐந்து வருடங்களில் மூன்று நீதிமன்றங்களால் ஐந்து முறை என் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது.
கையறுநிலையில் உழலுவது பழக்கமாகிவிட்டது. வாடைக்குளிர் வாட்ட சால்வை, சூடான ஆடைகள் ஆகியவற்றுக்கு அடியில் சுருண்டு கிடக்கிறேன். இரவுப்பொழுதில் இரும்புக் கம்பிகளினூடாக வரும் கூர்மையான காற்றால் சிமெண்ட் தளத்தில் படுப்பதே கடினம். காலைப் பொழுதுகளில் பிரச்சினை இல்லை. வெளியே சென்று வெளிச்சம் இருக்கும் வரை நடக்க அனுமதிக்கப்படுகிறோம். ஆனால் பிற்பகல் 3 மணிக்கு பிறகு, சிறைக்குள் அடைக்கப்படும் நேரம் வருகையில், மனம் விழத் தொடங்கி விடுகிறது. முடிவற்ற இருளில் அலையும் மனம், விடுதலை பெற்று வெளியே சென்றுவிட முடியுமா என பதறுகிறது.
ஒருவேளை பிணை கிடைத்தாலும் என்ன செய்வது?
பிணை கொடுக்கப்பட்டவர்களுக்கு வெளியே இருக்கும் கட்டுப்பாடுகள், வாழ்க்கையை அனுபவிக்க முடியாதளவுக்கு கொடுமை நிறைந்தவை. அதுவும் கிட்டத்தட்ட சிறைவாசம்தான். இந்த இருளுக்குள் இருந்து கடுமையாக போராடிதான் ஒவ்வொருமுறையும் விடுபடுகிறேன்.
திகாரின் விலங்குகள்தான் எனக்கு ஆறுதல். ஷில்பா, ஷ்யாம்லால் என்ற இரு பூனைகளுக்கு உணவளிக்கிறேன். ஷில்பா இரண்டு குட்டிகளை போட்டது. ப்ளாக் பாந்தர், ஸ்டூவர்ட் லிட்டில் என பெயரிட்டிருக்கிறேன். அவற்றின் அன்றாட விளையாட்டுகள் வேடிக்கையாகவும் மனதுக்கு இதமாகவும் இருக்கின்றன. சக மனிதர்களை விட அவற்றுடன் நேரம் செலவழிக்க அதிகம் விரும்புகிறேன்.
இன்னொரு சுவாரஸ்யம்! வெளியே பல குற்றங்கள் சாட்டப்பட்டு உள்ளே வந்தவர்கள் பூனைகள், பறவைகள், பல்லிகள், எறும்புகள் என பல விலங்குகளுக்கு உணவளித்து நேரம் கழிக்கின்றனர். விலங்குகளுக்கு உணவளித்தால், சீக்கிரம் விடுதலை கிட்டும் என ஒரு மூட நம்பிக்கை. இதனால்தான் ரொட்டியின் சிறு துண்டுகளையோ சர்க்கரை துணுக்குகளையோ கூட இங்கு நீங்கள் பார்க்க முடியாது. எல்லா எறும்புகளுக்கும் நல்ல தீனி.
ஒருமுறை ஒரு மரத்துக்கு நீரூற்றியவருக்கு இரு வாரங்களில் பிணை கிடைத்தது. அடுத்த நாள் அவர் சென்ற பிறகு, வேறு மூன்று பேர் அந்த மரத்துக்கு தொடர்ந்து நீரூற்றத் தொடங்கினர். அவர்களுக்கும் ஒரு நம்பிக்கைதான். சிறைபட்டாலும் நம்பிக்கை மட்டும்தான் அடைபடாமல் இருக்கும் ஒரே விஷயம், இல்லையா?
பிணை மறுப்பு கொடுத்த கலக்கத்தை தாண்டி மீண்டும் வாசிப்புக்கு செல்லலாமென இருக்கிறேன். வாசிக்கவென ஒரு புத்தகப் பட்டியலை யோசித்து வைத்திருக்கிறேன். இம்முறை விடுதலைக்கான காத்திருப்பு அதிகமாக இருக்கக் கூடும். எனவே மனம் தளர்ந்து விடாமல் இருக்க தேவையானவற்றை நான் செய்ய வேண்டும். குறிப்பாக என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் மீதான சந்தேகம், நிச்சயம் என்கிற நிலைக்கு பொதுப்புத்தியில் மாற்றப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில்!
வெகுஜன ஊடகங்களில் என்னை குறிக்க பயன்படும் வார்த்தை ‘தேசவிரோதி’ என்பதில் இருந்து இப்போது ‘தீவிரவாதி’ என மாற்றம் பெற்றுவிட்டது.
படிக்க:
♦ பரோலில் குர்மீத் ராம் ரஹிம் – சிறையில் உமர் காலித்! ஓர் ஒப்பீடு!
அரசு என்னை பற்றி சொல்பவற்றை நம்புபவர்களை நான் மாற்ற முடியாது. அதே நேரம் எனக்கு ஆதரவாக நிற்பவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவனாக என்னை சித்தரிக்கும் போக்கை நீங்கள் கைவிட வேண்டும்.
முடிவற்ற காத்திருப்பில் வலி இருப்பது உண்மைதான். ஆனால் அதிலும் ஓர் அழகு இருக்கிறது. நான் இருக்கும் இடத்தில் திருப்தி கொள்கிறேன். எனக்கு நிகழ்த்தப்படுவதை குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை. ஏனெனில் இது எனக்கு மட்டுமானது இல்லை!
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
இதனால்தான் எனக்கு ஆதரவாக நிற்பவர்கள் என்னை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல்களை மாற்றும்படி கேட்கிறேன்.
நம்முடைய போராட்டம் என்பது ஓர் இலக்கை நோக்கிய போராட்டம்!
அனைவரும் சமமற்று வாழ நிர்ப்பந்திக்கப்படும் காலத்தில் நாம் இந்த போராட்டத்தை தொடுக்கிறோம்!
உறுதிதான் என்னுடைய இந்த வலியை சகித்துக் கொள்ள வைக்கும் பலம்!
கிறிஸ்துவை போல, பகத் சிங்கை போல!
இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்களின் உயிர்களை ஈந்தார்கள். அந்த வரிசையில் வரலாறு என்னையும் இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும்போது பேருவகை அடைகிறேன்.
இதனால்தான் அன்றாடம் விழித்தெழுந்ததும் பார்வையில் படுவது போல பகத் சிங்கின் வாசகங்களை சிறை சுவற்றில் எழுதி வைத்திருக்கிறேன்:
“சாம்பலின் ஒவ்வொரு அணுவையும் என் வெப்பம் இயக்குகிறது.
சிறையில் கூட சுதந்திரமாக இருக்குமளவுக்கு சுதந்திரப் பித்து பிடித்தவன் நான்!”
– Outlook இதழில் வெளியாகியிருக்கும் தோழர் உமர் காலீத் கட்டுரையின் மொழிபெயர்ப்பு!
முகநூல் பதிவு
ராஜசங்கீதன்






