ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை: சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்கள்!
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை கைவிட்டு விட்டு சொத்துக்களை தனது உறவினர்கள் பெயரில் மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அவரது மனைவி மீது கிரிமினல் குற்றவாளி என்பதைப் போல குற்றம் சுமத்துகின்ற இந்த யோக்கியர்தான் சனாதன தர்மத்தை கடைபிடிக்கின்ற உத்தமர் என்று நாம் நம்ப வேண்டும்.

கும்பகோணத்து குடுமி பார்ப்பனர்கள் முதல் அமெரிக்காவில் உள்ள அம்பிகளான ஹைடெக் பார்ப்பனர்கள் வரை சனாதன தர்மம் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து வருகின்றனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான திருவாளர் சுவாமிநாதன் தன்னை ஒரு சனாதனவாதி என்றும், அதைவிட ஸ்மார்த்த பிராமணர் என்றும், ஆர் எஸ் எஸ் அமைப்பில் காரியகர்த்தா நிலையில் இருந்தவர் என்றும் முன்வைத்துக் கொள்கிறார்.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதிகள் தான் பணி காலம் முடிந்த பிறகு தனக்கு பிடித்த அரசியல் கட்சிகள் அல்லது சாதி சங்கங்களில் இணைந்து கொள்வார்கள்.

ஆனால் பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிபதிகள் உள்ளிட்ட அனைத்து உயர்பதவிகளையும் வகிப்பவர்கள் தாங்கள் ஆர்எஸ்எஸ் பாஜக சார்பு உடையவர்கள் என்றும், சனாதனவாதிகள் என்று சொல்வது சொல்லிக் கொள்வதிலும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

மதச்சார்பின்மை என்பதை முன்வைக்கின்ற அரசியல் சட்டமோ இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க சனாதனவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஜோஹோ கார்ப்பரேஷன் ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

தமிழகத்தில் திடீரென்று முளைத்துள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகள் பட்டியலில் இடம் பிடிக்க துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் காரரான திருவாளர் ஸ்ரீதர் வேம்பு ஜோஹோ என்ற நிறுவனத்தின் மூலம் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே 1.04 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளார்.

சனாதன தர்மப்படி தான் வாழ்ந்து வருவதாக கூறிக் கொண்டாலும், அவரது வாழ்க்கை மோசடி தன்மை நிறைந்ததாகவும், கட்டிய மனைவியையும், ஊனமுற்ற மகனையும் கழட்டி விட்டு விட்டு இந்தியாவிற்கு திரும்பி செட்டிலான உத்தம சனாதனியாகவே வாழ்கிறார் திருவாளர் ஸ்ரீதர் வேம்பு.

1996ஆம் ஆண்டு, வேம்பு தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர் டோனி தாமஸுடன் சேர்ந்து, அட்வென்ட்நெட் என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். இது 2009ஆம் ஆண்டு ஜோஹோ கார்ப்பரேஷன் என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், ஜோஹோவின் சொத்துக்களின் உரிமை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகராறு அவர்களின் திருமணத்தில் முறிவுக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓவான ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணியான பிரமிளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டார்.

58 வயதான பிரமிளா ஸ்ரீனிவாசன் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவராவார். அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினிப்பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவில் கல்வியாளரும், தொழில் முனைவோருமாக அறியப்படுகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சுகாதார தொழில்நுட்பத் துறையில் நன்கு பிரபலமான நபராக இருக்கின்றார்.

சென்னை ஐஐடியில் படித்து முடித்து மேற்படிப்புக்காக பிரின்ஸ்டனில் மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா வந்த ஸ்ரீதர் வேம்புவை 1993இல் மணந்தார். குவால்காமில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இருவரும், 30 ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதியருக்கு 26 வயது மகன் உள்ளார், அவருக்கு ஆட்டிசம் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குடும்பம் கலிபோர்னியாவில் வசித்து வந்தபோது மனைவி பிரமிளாவை பிரிவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

“ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020 ஆம் ஆண்டு நிர்கதியாக விட்டுவிட்டு இந்தியா சென்றுவிட்டதாகவும்,  கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகளை அவரது உறவினர்களுக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்கவே ஸ்ரீதர் வேம்பு இந்தியாவுக்கு சென்றதாக” பிரமிளா குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவிடம் விவாகரத்து வழக்கில் நஷ்ட ஈடாக அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரங்களை குறிப்பிட்டு தனக்கும் பாகப்பிரிவினைக் கேட்டுள்ளார்.

“அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்ட விதிகளின்படி விவாகரத்து வழக்குகளில் ஒரு நபர் தனது சொத்தில் 50 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இதன்படி ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளில் 50 சதவீதத்தை மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்துள்ளார். ஆனால் இதை அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஏற்கவில்லை. அவர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள வாதத்தில், “சோஹோ நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புக்கு 88% பங்குகள் உள்ளன. அதில் தனக்கு 50% வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

படிக்க:

♦ ஸ்ரீதர் வேம்பு: கிராமத்தில் பிறந்து இந்தியாவின் 39 ஆவது பணக்காரனாக உயர்ந்த கதை!

 டி.எம். கிருஷ்ணா எதிர்ப்பு:  பார்பனர்களின் பதற்றம் – சங்கி  அரசியல்! இரண்டும் கலந்த கலவை.

இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்புவை தனது மனைவியின் உரிமைகளை பாதுகாக்க 1.7 பில்லியன் டாலர் (ரூ. 15,278 கோடி) பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனாதன தர்மத்தை மீறாத ‘ உத்தமருக்கு’ மிலேச்சரான (பார்ப்பனரல்லாத அந்நியர்) வழக்கறிஞர் ஒருவர்தான் அமெரிக்காவில் வாதாடுகிறார் மேற்கண்ட தீர்ப்பு பற்றி திருவாய் மலர்ந்துள்ள அந்த வழக்கறிஞரான கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர், “இது பழைய தீர்ப்பு என்றும், நீதிபதியை ஏமாற்றி, 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளனர் என்றும், பின்னர், அந்த நீதிபதியே அந்தத் தொகை மிக அதிகம் என்பதைப் புரிந்துகொண்டார் என்றும் வாயாடுகிறார்.

“ஸ்ரீதரால் அவரது பங்குகள் மூலம் 150 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க முடியும். ஆனால், அந்தப் பணத்தை அவர் மனைவி மறுத்துவிட்டார். அதனால், இவை அனைத்துமே அவரின் மனைவி ஸ்ரீதரை டார்கெட் செய்வதற்காகவே செய்கிறார். ஸ்ரீதர் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வருகிறார். 1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு இப்போது செல்லாது. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.” என பேசிக் கொண்டுள்ளார்.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனை கைவிட்டு விட்டு சொத்துக்களை தனது உறவினர்கள் பெயரில் மாற்றிக் கொண்டுள்ள நிலையில் அவரது மனைவி மீது கிரிமினல் குற்றவாளி என்பதைப் போல குற்றம் சுமத்துகின்ற இந்த யோக்கியர்தான் சனாதன தர்மத்தை கடைபிடிக்கின்ற உத்தமர் என்று நாம் நம்ப வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் சுவாமிநாதனோ காரைக் கொண்டு விபத்து நடத்திய ஒருவருக்கு பதிலாக வேறு ஒருவரை ஆஜர்படுத்தி வழக்கை முடித்தது மட்டுமின்றி அவ்வாறு ஆஜரானவர் சனாதன தர்மப்படி வாழ்கின்ற நீதிமான் என்று அவருக்கு சான்று தருகிறார்.

தனது சாதனைகளில் ஒன்றாக இதனை முன் வைக்கின்ற நீதியரசர் தற்போது தமிழகத்தின் அரசியலை பார்ப்பன மதவெறியர்கள் கைப்பற்றுவதற்கு பல்வேறு வகைகளில் தீர்ப்புகளை வழங்கி வருகின்றார். இவரது புண்ணியத்தில் திருப்பரங்குன்றம் பற்றி பேசினாலோ, எழுதினாலோ அது நீதிமன்ற அவமதிப்பு என்ற நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள் போல தெரிகிறது.

சனாதனத்தை காக்கின்ற பார்ப்பன கும்பல், சாதி மேலாதிக்கத்தை நிலை நாட்டுவது; தன்னைத் தவிர இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பெரும்பான்மை மக்களை சாதிரீதியாக அடக்கி வைப்பது; உணவு பழக்கவழக்கங்களில் மரக்கறி உணவை உட்கொள்பவர்கள் தவிர பிற அனைவரையும் பல்வேறு அம்சங்களில் இழிவுபடுத்திக் நடத்துவதைதான் சனாதன தர்மம் என்று கடைபிடிக்கின்றனர்.

ஆனால் இதற்கு நேர் மாறாக சனாதனம்: நிலையானது, நித்தியமானது, காலத்தால் அழியாதது என்று விளக்கம் அளிக்கின்ற இந்த சனாதனவாதிகள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார்கள்.

“ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்.!” என்று காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அனைத்து விதமான கேடுகெட்ட செயல்களிலும் ஈடுபடுகின்ற பார்ப்பன கும்பலுக்கு மறுபெயரே சனாதனவாதி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் சமகால எடுத்துக்காட்டாக திகழ்கின்ற ஹைடெக் பார்ப்பனரான ஸ்ரீதர் வேம்பு சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு காட்டுகிறார். அவரது சொந்த வாழ்க்கையை பற்றியோ அவரது சனாதன நேர்மையை பற்றியோ கவலைப்படாத புதுச்சேரி பாஜக ஆதரவு என் ஆர் காங்கிரஸ் அரசாங்கம் அங்கு பல்வேறு தகவல் தொழில்நுட்ப பணிகளை நிறைவேற்றுவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழகத்தின் ஒரு ஓரத்தில் அதாவது தென்காசியில் அமர்ந்து கொண்டு உலகை கட்டுப்படுத்துகின்ற சனாதனவாதியை, ஆர்எஸ்எஸ் இன் புரவலராக செயல்படுகின்ற இவரை சரியாக மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்.

  • மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here