சர்வே கல்லை தீபத்தூணாக மாற்றிய கதை!?
ஆர்எஸ்எஸ்- இந்து முன்னணி கும்பலுக்கு ஒரு ஆப்பு!
சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதில்தான் நூற்றாண்டுக்கு முன் தீபம் ஏற்றப்பட்டது என்றும் கூறி ராம.ரவிக்குமார் என்ற சங்கி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஆதாரமாக அவர் சமர்பித்தது கல்வெட்டு ஆய்வாளர் திரு.போஸ் எழுதி 1981இல் தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்ட திருப்பரங்குன்றம் என்ற நூலாகும்.
அந்நூலின் பக்கம் 129–ல் “மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச்சென்றால் பாதி வழியில் தீபத்தூண் ஒன்று இருப்பதைக்காணலாம். இந்தத்தூண் நாயக்கர் காலத்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடது பக்கம் திருப்பிக்கொண்டிருப்பதாகச் சிற்பமும் உள்ளது. இத்தீபத் தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும், இதில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் என்றும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது” என எழுதியுள்ளார்.




மனுதாரர் தனக்கு ஆதாரமென தாக்கல் செய்த நூல், சங்கிகள் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறும் மசூதி பக்கத்தில் உள்ள தூணை தீபத்தூண் எனக்குறிப்பிட வில்லை. அந்தக் கல்லில் கல்வெட்டு விவரமோ, அனுமன் சிலையோ பொறிக்கப்பட்டிருக்க வில்லை.
எனில், புத்தகம் குறிப்பிடும் தீபத்தூண் எங்கே இருக்கிறது? புத்தகத்தில் குறிப்பிடுவது போல அது “மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச்சென்றால் பாதி வழியில்“ உள்ளது. கீழே குடைவரைக் கோவிலாக உள்ள முருகன் கோவிலுக்கு நேர் மேலே – உச்சியில் “உச்சிப்பிள்ளையார் கோவில்” அருகில் உள்ள கட்டடத்தில்தான் அந்த தீபத்தூண் உள்ளது. அதுதான் முருகன் மலைக்கு உச்சி. ஓம் என்ற எழுத்து பொரிக்கப்பட்ட அந்த இடத்தில்தான் காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி அங்கு தீபம் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து சென்றனர். அந்த நேரத்தில்தான் மலையின் மற்றொரு உச்சியில் உள்ள தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமெனக் கோரி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர், நூற்றுக்கணக்கான சங்கிகளைக் களமிறக்கி கலவரம் செய்து கொண்டிருந்தனர். மக்களோ அமைதியாக தீபத்தை தரிசித்து சென்றனர்.
சங்கிகள் தீபம் ஏற்றச்சொல்லும் தர்கா பக்கத்தில் உள்ள தூண்தான் என்ன?
சங்கிகள் தீபத்தூண் என குறிப்பிடும் தூண் எதற்காக, எப்போது மசூதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுவது இயல்புதான். அது ஆங்கிலேயர்கள் 1800 –களில் இந்தியாவை அங்குலம் சுத்தமாக அளந்து ஆவணப்படுத்துவதற்கு பயன்படுத்திய ஆதாரக்கல். (Great Trignomterical Survey Stone). இதை GT ஸ்டேஷன் என்றும் குறிப்பிடுகின்றனர். மலை உச்சியில் இவ்வாறு அமைக்கப்பட்ட கல்லின் மீது Theodolite என்ற கருவியைப்பொருத்திதான் நில அளவை மேற்கொண்டனர். அதைப்பொருத்துவற்கும் கருவியை சுழற்றுவதற்கும் ஏற்ப அந்த கல்லின் மேல் பகுதியில் ஒரு குழிவான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதைத்தான் இந்த சங்கிகள் எண்ணெய் ஊற்றி விளக்கெரிப்பதற்கான குழி என்று அடித்து விடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் அதில் 3 லிட்டர் எண்ணெய் ஊற்றி திரி போட்டு எரிய விடுவார்கள் என்று உருட்டினார்கள். 100 மில்லி கூட எண்ணெய் ஊற்ற முடியாத அந்தக் குழியில் 3 லிட்டர் ஊற்றி எரித்தார்கள் என்று சங்கிகள் கூறியதைக்கேட்டு உள்ளூர் மக்களும் தொல்லியல் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்களும் வாயல் சிரிக்க முடியாமல் நெளிந்தனர்.
படிக்க:
♦ திருப்பரங்குன்றம் விவகாரம்: GR. சுவாமிநாதன் நீதிபதியா? RSS ரவுடியா?
♦ திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி கல*வரத்தை தூண்ட முயற்சி!
இதில் ஒரு GT ஸ்டேஷன் 1808-09 ஆம் ஆண்டிலும் மற்றொன்று 1871 ஆம் ஆண்டும் நிறுவப்பட்டது என்பது திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த திரு. அப்துல் ஜப்பார் அவர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் பெற்ற ஆவணங்கள் மூலம் உறுதியாகிறது. ஒன்றிய அரசின் ஜியோ ஸ்பாட்டியல் (Geo – Spatial) தகவல் மையத்தின் (TNP & ANI GDC, Chennai) இயக்குனரகத்தில் இருந்து 24.02.2022 அன்று அம்மையத்தின் அலுவலக சர்வேயர் மற்றும் ஒன்றிய பொது தகவல் அலுவலர் (CPIO) திரு P. பழனிமுத்து அவர்கள், “மனுதாராகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கேட்ட தகவல் எங்கள் அலுவலகத்தில் இல்லை. காரணம் 2015 ஆம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல ஆவணங்கள் அழிந்து போயின. எனவே மனுதாரர் கேட்ட தகவலை உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள (Geodetic & Research Branch Survey of India) ஒன்றிய நிலகணிப்பியல் துறைக்கு அனுப்பி பெற்றுத் தருகிறோம்” என முதல் பதில் கடிதத்தை அனுப்புகிறார்.
21.03.2022 தேதியிட்ட இரண்டாவது கடிதத்தில்,
ஆவணங்களில் உள்ளது படி GT ஸ்டேஷன் (Hill Station) 1808-09 மற்றும் 1871 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ஆவணங்களில் உள்ளதுபடி இரண்டு GT ஸ்டேஷன் (Hill Station) இருக்கிறது.
எனத் தெரிவித்துள்ளார்.
ஆக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ் மோடி அரசு வழங்கிய 2022 ஆம் ஆண்டு தகவலின் படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே Geometrical trigonometry Station (GT Station) என்று அழைக்கப்படுகிற இரண்டு நில அளவை தூண் கற்கள் இருக்கின்றன என்பதும் அவை சுமார் 216 ஆண்டுகள் பழமையானவை என்பதும் உறுதியாகிறது.
மேற்கண்ட இரண்டு நில அளவை கல்லில் ஒரு கல் சிதைந்துள்ளது. நில அளவை கல் வைக்கப்பட்ட இடத்தின் உள்ளே பாறையின் மீது வட்டமிட்டு நடுவில் ஒரு புள்ளி வைக்கப்பட்ட குறியீடு காணப்படுகிறது. அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.



(1800 – களில் இந்திய நிலப்பரப்பை அளக்க (Great Trignomterical Survey) பயன்படுத்திய நில அளவைக்கல். இந்தியா முழுவதற்குமான இந்த கணக்கெடுப்பு முதலில் தமிழகத்தின் செயின்ட் தாமஸ் மவுண்டிலிருந்துதான் துவங்கப்பட்டது. அங்கும் இதே வகை கற்களைப்பார்க்கலாம். மலை இல்லாத இடங்களில் இதற்காக உயரமான டவர் கட்டி அதிலிருந்து இந்த அளவீட்டை மேற்கொண்டனர்.)
கூடுதல் ஆதாரமாக,
1899 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட The Great Trigonometrical Survey of India, Volume XXIX நூலில் திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது நில அளவை கற்கள் என்பதை உறுதி செய்கிறது. இந்த நூலின் நகல் சமூக வலைத்தளத்தில் இணைய (Digital Copy) நகல் வடிவில் கிடைக்கிறது. அதில் பக்கம் 298இல் (Pdf Pg no 361) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒருபகுதி சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டுள்ளது. (நீதிபதி ஸ்ரீமதி திருப்பரஙங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கக்கூடாது எனக் கொடுத்த உத்தரவு எந்த அளவு மதிக்கத்தக்கது என்பதை மதிப்பிடவும்).
அந்த ஆவணத்தில் தொலைவுகளை Yards இல் குறிப்பிட்டுள்ளனர். Yards என்றால் கெஜம் என்று நாம் அழைக்கிறோம். 1 கெஜம் (Yards) என்றால் 3 அடி (Foot) ஆகும். ஆக சிக்கந்தர் தர்காவுக்கு வட மேற்கில் 150 அடி (50 Yards) தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 159 அடி (53 Yards) தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில் மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது.

ஆக, சங்கிகள் தமிழகத்தில் தமக்கு கிடைத்த அயோத்தியெனக் கருதி பெருமளவு நம்பிக்கையுடன் எடுத்த தீபத் தூண் என்ற அணுகுண்டு புஸ்…ஸாகிப் போனது. அவர்களுக்காக நேரில் சென்று ஆய்வு செய்த அவர்களது நீதிபதி அணியின் தமிழகத் தளபதி திருவாளர் ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் மாபெரும் ஆதாரமெனக் கருதி சிரமப்பட்டு கட்டமைத்த கதைகள் தவிடு பொடியாகி சமூக ஊடகங்களில் சந்தி சிரிக்கிறது. ஆனாலும் சங்கிகள் என்றுமே தங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அதற்கெல்லாம் கொஞ்சமாவது நாணயம் வேண்டும். சூடு, சொரணை, மானம், வெட்கம் போன்ற உணர்ச்சிகள் இருக்க வேண்டும். பாசிஸ்டுகள் எப்போதும் அவ்வாறு இருக்க மாட்டார்கள். பொய்யை திரும்பத்திரும்ப பிரச்சாரம் செய்து உண்மை என மக்களை நம்ப வைக்கவே முயற்சிக்கிறார்கள். ஆதாரம் என்பதை சுக்கு நூறாக உடைத்துப்போட்ட பின் தற்போது “இந்துக்களின் நம்பிக்கை” என்று உருட்ட ஆரம்பித்து விட்டார்கள் – அயோத்தி வழியில்.
சிக்கந்தர் தர்கா அருகே மலையுச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் 163 ஆண்டுகளாக இல்லை:
சார்பு நீதிமன்ற நீதிபதி ராம அய்யர் அவர்கள் 1923ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் – (பக்கம் 71-72) ”1862இலும், 1912லும் மலைஉச்சியில் தர்கா அமைந்துள்ள இடத்தில் தீபம் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு தர்கா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவ்விடத்தில் தீபம் ஏற்றுவதற்கு மேஜிஸ்ட்ரேட்கள் (அன்றைய நீதிபதிகள்) மறுத்துவிட்டனர். அதற்கு மூன்று காரணங்களை மேஜிஸ்ட்ரேட்கள் பட்டியலிடுகின்றனர்.
இதற்கு முன்பு அங்கே தீபம் ஏற்றுகிற வழக்கம் இருந்ததில்லை.
மேலும் அங்கு தீபம் ஏற்றுகிற முயற்சி மக்களிடையே நிலவும் அமைதியை சீர்குலைக்கும்.
தர்கா அருகே தீபம் ஏற்றுவதை மறுப்பதற்கு முக்கிய காரணம் மலையின் உச்சி பகுதி இசுலாமியர்களின் உரிமையாக இருந்தது.
இதில் இருந்து 1862 முதல் 2025 வரை சுமார் 163 ஆண்டுகள் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள மலையுச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.
ஆதாரம் என்று உருட்டுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் இனி இவர்களின் இந்துப் பெரும்பான்மையின் நம்பிக்கை என்ற உருட்டு அயோத்தி போல முன்னிலும் மோசமாக – அருவெருப்பாக வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. சங்கிகள் எந்த வடிவில் வந்தாலும் எச்சரிக்கையாக இருந்தும் எதிர்த்து நின்றும் வீழ்த்த தயாராக வேண்டியது தமிழகத்தின் கடமை!
தமிழகம் சித்தர்கள் முதல் வள்ளலார், பெரியார் மற்றும் கம்யூனிஸ்டுகள் பார்ப்பன மரபுக்கு எதிராக போராடிய மண் என்பதை நிரூபிப்போம்.
தமிழகத்தை கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் கல்லறையாக்குவோம்!
- குமரேசன்






