நவம்பர்-28
கம்யூனிச ஆசான் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்;
மார்க்சிய ஒளியில்
கார்ப்பரேட் காவி – பாசிசத்தை வீழ்த்துவோம்!
“ஐரோப்பாவை ஒரு பூதம் ஆட்டிப்பிடிக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். போப் ஆண்டவரும், ஜார் மன்னரும். கிஸோவும், பிரெஞ்சு தீவிர கொள்கையினரும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகாரச் சக்திகள் அனைத்தும் இந்த பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.”
– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிட்ட இந்த பூதம் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பலையும், கார்ப்பரேட் தரகு அதிகார வர்க்க முதலாளிகளையும், இன, மத வெறிப்பிடித்த அரசு அதிகார வர்க்கத்தினரையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகில் எங்கெல்லாம் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்களோ, சுரண்டப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாய் போராட்டக் களத்தில் துணையாய் நிற்கிறது. இந்த ’கம்யூனிச பூதம்’ மக்கள் விரோத சுரண்டல் கும்பலை வீழ்த்தி உழைக்கும் மக்களுக்கான அரசை அமைக்கும் வரை ஓயப்போவதில்லை.
கம்யூனிசத்தின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகிறது அமெரிக்க மேலாதிக்க கும்பல். ”கம்யூனிசம் வீழ்ந்து விட்டது. இனி ஒரு போதும் எழப் போவதில்லை” என சோவியத் யூனியன் உடைவிற்கு பின்னர் கொக்கரித்தக் கும்பல் தான், உலகில் எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற அனுமதியில்லை என, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பானது புதிய கொள்கை அறிவிப்பை 2020 ஆம் ஆண்டு வெளியிட்டது.
நிதிமூலதன கொள்ளையர்களும், அவர்களுக்கு சேவை செய்யக் கூடிய அதிகார வர்க்கமும் அஞ்சி நடங்கும் கம்யூனிச சித்தாந்தத்தை படைத்திட்டவர்கள் தான் தோழர்கள் காரல் மார்க்சும், ஏங்கெல்சும். உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அது இருப்பதற்கான அவசியத்தை கேள்விகளாக கேட்டு விடை தேடியவர்கள். ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்தவர்களாக விஞ்ஞானத்தை ஆதாரப் பூர்வமாகக் கொண்ட அவர்கள், சமூகத்தை மாற்றும் முனைப்போடு வாழ்ந்ததன் விளைவாகவே , மார்க்சியம் என்றொரு புரட்சிகர சித்தாந்தத்தை பெற்றிருக்கிறோம்.
வரும் 28-11-2025 தோழர் ஏங்கெல்சின் 206 ஆம் ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிச பேராசான்கள் மார்க்ஸ்-ஏங்கெல்ஸை தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. ஜெர்மனியின் தொழிலதிபரின் மகனாகப் பிறந்த ஏங்கெல்ஸ் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது வாழ்வினை அர்பணித்தவர். பொருள்முதல்வாதியாக கம்யூனிஸ்டாக மார்க்ஸ் விட்டுச் சென்ற முக்கியமான பணியை தொடர்ந்தவர். இன்றும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக நம்முடன் துணைநிற்கிறார். அவரின் இங்கிலாந்தை பற்றிய ஆய்வு மிகப் பிரபலமானது.
பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் பின்வருமாறு எழுதினார்: “…உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையைப் பார்க்க, உங்களது நிலைமையையும் தேவைகளையும் பற்றி உங்களுடன் பேச, உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய, அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தைக் காண நான் விரும்புகிறேன்… நான் மேட்டுகுடியினரையும் விருந்துகளையும் பூர்ஷ்வாவின் மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு, எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்குக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன்; இதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமை கொள்கிறேன்”
பிரிட்டிஷ் தொழிலாளர்களிடம் ஏங்கெல்ஸ் செய்த ஆய்வு தான் அவரை கம்யூனிஸ்டாக மாற்றியது. மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் சமுதாயத்தை பற்றி அவர்கள் செய்த ஆய்வுகளும் நம்மிடம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. அதனை நடைமுறையில் பொருத்தி மக்களை அரசியல்படுத்துவதில் நம்மிடம் உள்ள தேக்க நிலையே உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைத்து அவர்களை முன்னணிபாத்திரம் வகிக்கும் நிலைக்கு உயர்த்துவதில் பின் தங்கியிருக்கிறோம்.
படிக்க:
♦ ஆகஸ்டு-5. பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான்களின் ஒருவரான தோழர் ஏங்கெல்ஸ் நினைவு தினம்.
♦ மே 5: பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் காரல் மார்க்சின் 207ஆவது பிறந்த தினம்.
“குடும்பம், தனிச்சொத்துஅரசு, ஆகியவற்றின் தோற்றம்”, “வரலாற்றில் முதலாளியமும் மதமும்” “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்”, “கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்”, “மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்”, “இயற்கையின் இயக்க இயல்”, “டூரிங்குக்கு மறுப்பு” ஆகியவை ஆசான் எங்கெல்சின் மகத்தான நூல்கள்.
இன்று இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு, உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களும் மறுபுறத்தில் அதானி, அம்பானிகளின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்து வருவதும் நன்றாகவே தெரிந்தும் பாட்டாளி வர்க்கத்தை அரசியல்படுத்ததன் விளைவு, முதலாளித்துவ வர்க்கத்தால் தான் நம்முடைய நிலைமை மோசமாக உள்ளது என்பதை அறியாமல் அவர்கள் உருவாக்கியிருக்கும் நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி போயுள்ளார்கள்.
அவர்களை சமூக விஞ்ஞானமான மார்க்சிய அரசியல்படுத்துவன் மூலமே இந்தியாவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வை களைய முடியும். கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு முடிவுக் கட்டமுடியும். இதனை ஆசான்கள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் காட்டிய மார்க்சிய ஒளியில் தோழர்கள் லெனின், ஸ்டாலின், மாவோவின் நடைமுறை அனுபவங்களை வரித்துக் கொண்டு செய்து முடிப்போம்.
அது மட்டுமல்ல! இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வரும் மார்க்சிய லெனினிய புரட்சியாளர்களை ’நக்சல்பாரிகள்’ என்று முத்திரைக் குத்தியும், ’பிரிவினைவாதிகள்’, ’தேச விரோதிகள்” என்று பல்வேறு அவதூறுகள் பரப்பி மக்களிடமிருந்து பிரிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கும், கம்யூனிசத்தின் பெயரால் பிழைப்புவாத நோக்கத்தில் செயல்படுகின்ற பல்வேறு திருத்தல்வாதிகள், குழப்பவாதிகள், துரோகிகள், கோழைகள் ஊசலாட்டப் பேர்வழிகள் போன்ற அனைத்து விதமான எதிர் புரட்சி சக்திகளையும் முறியடிப்பதற்கும் தோழர் ஏங்கெல்ஸ் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வோம்.
சரசுவதி.
புதிய ஜனநாயகம் (நவம்பர் 2025)







