கடந்த நவம்பர் 21 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி இந்திய அளவில் பேசுபொருள் ஆகியுள்ள திரைப்படம் HOMEBOUND. சில திரைப்படங்கள் அதன் கதைக்களத்திற்காக உலக அளவில் பேசப்படுவதும் உண்டு. இந்த படம் அந்த வகையை சேர்ந்தது.
இயக்குனர் நீரஜ் கய்வான் இயக்கிய இத்திரைப்படத்தில் விஷால் ஜெத்வா(சந்தன் குமார்), இஷான் கட்டர் (சோயப் அலி) மற்றும் நடிகை ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே மாறி உணர்ச்சிகளை பார்வையாளரிடம் கடத்தியுள்ளனர்.
இந்த கதை 2020 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் பிரதிபலிப்பு. வடமேற்கு இந்தியாவான உத்திரபிரதேசத்தின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இரு நண்பர்களின் கதை. இந்தியாவின் ‘உண்மை’ கதையும் கூட. இதனை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லிய, காட்சி அமைப்பின் மூலம் மக்களுக்கு உணர்வுகளை கடத்திய இயக்குனருக்கு நன்றி சொல்லலாம். இந்திய மக்களின் இதயத்திற்கு நெருக்கமான இந்த திரைப்படத்தின் உண்மை கதையை சொல்லித் தீர வேண்டிய கட்டாயத்திலேயே நமது நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளது.
000
உண்மை கதையை பற்றி தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் சாதி தீண்டாமை கொடுமைகள் ஆங்காங்கே இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வேங்கைவயல் பிரச்சனை முதற்கொண்டு பல்வேறு தீண்டாமை கொடுமைகள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் தென் மாநிலங்களை விட வடமேற்கு மாநிலங்களில் சாதிய தீண்டாமை சமூகத்தின் அங்கமாகவே மாறி உள்ளதை பல செய்திகளின் மூலம் நாம் பார்த்திருப்போம்.
அதேபோல்தான் இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக சங்பரிவார் கும்பலால் பரப்பப்படும் மதவெறுப்பு பிரச்சாரங்கள், மத ரீதியான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதிகரித்து வருவதை காணலாம்.
இந்தக் கதை இவர்கள் இருவரை பற்றியே.
உத்திரபிரதேசத்தின் பஸ்தியில் உள்ள தேவரி என்ற சிறிய கிராமத்தில் 22 வயது முஸ்லிம் முஹமது சாயூப்பும் 24 வயது தலித் வால்மீகி சாதியை சேர்ந்த அம்ரித் குமாரும் ஒன்றாக வளர்ந்தனர். இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி மற்றும் மத பிரிவினைகளை கடந்த நண்பர்கள்.
தங்களது இளம் வயதிலேயே அவர்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள சூரத்திற்கு சென்று உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்து வாடகை அறையை பகிர்ந்து கொண்டு வேலை செய்து வந்தனர். தேவரியில் உள்ள தங்கள் குடும்பங்களை பராமரிக்க பணத்தை சேமிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றால் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த போது தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தெருவிற்கு வந்தனர். முதலாளிகள் சம்பளம் கொடுக்காமல் கை விரித்ததால் உணவுக்காக கையேந்திய உழைக்கும் வர்க்கம் வேறு வழியில்லாமல் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து வீடு திரும்பும் ஆபத்தான முடிவை எடுத்தது.
வீடு திரும்பும் ஆபத்தான பயணம்!
வீடு திரும்ப முயற்சித்த சாயுப்பும், குமாரும் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில்களில் இடம் பிடிக்க முயன்றனர், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு சில இரயில்கள் போதவில்லை. பல வாரங்கள் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், அவர்கள் உத்தரபிரதேசத்திற்கு தொழிலாளர்களை வடக்கு நோக்கி கொண்டு செல்லும் ஒரு லாரியை நாடினர். அவர்கள் ஓட்டுநருக்கு தலா 4,000 ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டனர்.
இந்த ஜோடி சுமார் 60 தொழிலாளர்களுடன் சுமார் 15 மைல்கள் நடந்து சென்று நெடுஞ்சாலையில் லாரி காத்திருந்த ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்தது. லாரியில் ஏறியவுடன், ஓட்டுநர் கேபினுக்கு மேலே ஒரு நெரிசலான பால்கனி போன்ற இடத்தில் நீண்ட, துயரமான பயணத்தை மேற்கொண்டனர் இருவரும்.
மறுநாள், குமாருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு நடுங்கத் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுக்கு பயந்து சக பயணிகள், லாரியை விட்டு இறங்குமாறு வற்புறுத்தினர். சாயூப் தனது நண்பரை கைவிட மறுத்து, மதிய வெயிலில் அவர்கள் இறக்கி நடக்க ஆரம்பித்தனர். நெடுஞ்சாலையில் ஒரு சிறிய இடைவெளியில் காத்திருந்தனர், அங்கு ஒரு உள்ளூர் அரசியல்வாதி உணவு மற்றும் தண்ணீரை கொடுத்து உதவி செய்தார். நீர்சத்து குறைபாட்டின் காரணமாக குமாரின் உடல்நிலை மோசமடைந்து சென்றது.
படிக்க:
♦ வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!
இறுதியில் ஒரு ஆம்புலன்ஸ் அவர்களை கோலாரஸில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அந்த நேரத்தில், அவர்கள் தேவரியில் உள்ள அவர்களின் கிராமத்திலிருந்து இன்னும் 310 மைல்களுக்கு மேல் தொலைவில் இருந்தனர். மருத்துவர்கள் ஆரம்பத்தில் வெப்ப பக்கவாதம் (Heat Stroke) மற்றும் இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருப்பதாக சந்தேகித்தனர், அவரை சுயநினைவில் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். குமாரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சிவபுரியில் உள்ள ஒரு சிறந்த வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் கடுமையான நீரிழப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கோவிட்-19 சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்தபோது சாயுப் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டார், அவரது நண்பரின் மோசமான நிலை குறித்து கவலையுடன் அறிந்திருந்தார், மேலும் குமாரின் குடும்பத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து கவலைப்பட்டார்.
வைரலாகி வந்த புகைப்படம்
மே 15, 2020 அன்று, ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், மத்திய இந்தியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இதயத்தை உடைக்கும் தருணத்தைப் படம்பிடித்தது: முகமது சாயூப் தனது நண்பர் அம்ரித் குமாரை மடியில் கட்டிப்பிடித்து, காய்ச்சலுடனும், நீரிழப்புடனும், சுயநினைவின்றியும் இருந்தார். கடுமையான வெயிலில் அவர்களுக்கு அருகில் பாதி காலியான தண்ணீர் பாட்டிலும் ஒரு சிவப்பு பையும் கிடந்தன.

இந்தப் படம் இந்திய சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, அசைக்க முடியாத நட்பு, உழைக்கும் மக்களின் பாதிப்பு மற்றும் COVID ஊரடங்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதலும் வெளிப்பட்டன . இது ஒரு சோகமான தருணத்தை மட்டுமல்ல, தொற்றுநோய்க்கு மத்தியில் தங்கள் வீடுகளை நோக்கிச் செல்லும் கடினமான பயணங்களை எதிர்கொள்ளும் எண்ணற்ற தொழிலாளர்களின் பரந்த போராட்டத்தையும் பதிய வைத்தது.
அம்ரித் குமாரின் துயர மரணம்
மே 16, 2020 அன்று, அம்ரித் கடுமையான நீரிழப்பு காரணமாக இறந்துவிட்டார். இரண்டு நண்பர்களுக்கும் கோவிட்-19 தொற்று இல்லை என்று சோதனையில் தெரிய வந்தது, இது வைரஸால் அல்ல, பயணத்தின் கடுமையான சூழ்நிலைகளால்தான் மரணத்திற்குக் காரணம் என்பதைக் காட்டுகிறது. பின்னர் சாயூப் கடுமையான ஊரடங்கு விதிகளுக்கு மத்தியில் அம்ரித்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வரும் சவாலை எதிர்கொண்டார். அரசாங்க அதிகாரிகள் ஆரம்பத்தில் அம்ரித்தின் தந்தை பயணம் செய்வதைத் தடுத்தனர், மேலும் சாயூப் பொறுப்பேற்று இறந்த தனது நண்பரின் உடலை தேவரி கிராமத்திற்கு கொண்டு சென்றார். உள்ளூர் தலித் கல்லறையில் ஒரு எளிய மண் மேட்டின் கீழ் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
அம்ரித்தின் மரணம் அவரது வருமானத்தையும் ஆதரவையும் நம்பியிருந்த அவரது குடும்பத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சிறிய செங்கல் வீடு உட்பட அவரது கடும் உழைப்பால், அவர்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துவதில் அவரது பங்கை அடிக்கோடிட்டுக் காட்டின. சாயூப் நிலையும் அதே தான்.
000
இந்த உண்மை கதையின் தழுவலே HomeBound என்றாலும் இந்தியா சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் அவலங்களையும், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் தாக்குதலையும் நமக்கு நெருக்கமாக காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்காக சென்ற இடத்தில் ஒரு காட்சி. 3500 காலி பணியிடங்களுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியிடுவார்கள். இது மோடி ஆட்சியின் வேலையின்மையை படம் பிடித்து காட்டியது. சந்தன் குமார் தலித் என்பதால், போலீஸ் வேலை கிடைத்தால் சமூகத்தில் தமது அந்தஸ்து உயரும் என்பதற்காகவே முயற்சிப்பார், அது அவரது விருப்ப தேர்வல்ல.
சந்தனின் அம்மா நல்ல சுவையாக சமைக்க கூடியவர் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்கும் வேலை அவருக்கு கிடைத்திருக்கும். அவர் தலித் என்பதால் அவர் சமைத்துக் கொடுத்த உணவை மாணவர்கள் சாப்பிடக்கூடாது என உயர் சாதியை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள். அதனால் அவரது வேலை பறிபோகும். இந்த சாதி தீண்டாமை வடக்கில் மட்டுமல்ல நாம் வாழும் தமிழ்நாட்டிலும் நடந்திருப்பதை நாம் மறந்திருக்க மாட்டோம்.
சாகிப் இஸ்லாமியர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் என்ன விதமான அடக்கு முறையை எதிர்கொள்வார்களோ அது அத்தனையும் சாஹிப்பும் எதிர்கொண்டிருப்பார். ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த சாகிப்பை சங்கி மனநிலை கொண்ட நபர் அவர் இஸ்லாமியர் என்பதை அறிந்து கொண்டு இனிமேல் எனக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என சொல்வதும் அவரது அடையாள அட்டை மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தினரின் அடையாள அட்டையை கேட்பதும், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது சாகிப்பை பாகிஸ்தான் ஆதரவாளராக இருக்க கட்டாயப்படுத்துவதும் என, சங்பரிவார் கும்பலின் மதவெறுப்பு மனநிலையை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.
இது எல்லாவற்றையும் விட 2020 கோவிட் காலத்தில் இந்திய உழைக்கும் வர்க்கம் பட்ட கொடுமைகளை இயக்குனர் குறைந்த அளவில் காட்டி இருந்தாலும் காட்சிப்படுத்திய விதம் அனைவரையும் உடைந்து அழ வைத்துவிடும். பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் எண்ணற்ற தொழிலாளர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் லாக்டவுன் காலகட்டத்தில் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் பொருளாதார ரீதியாக 10 வருடம் பின்னோக்கி சென்றது.
பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் சாதி, மத ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதை இரண்டு தொழிலாளர்களின் கதையை வைத்து அந்த சமூகத்தின் வலிகளை மக்களுக்கு கடத்தியுள்ளார் இயக்குனர். தனிநபர் சாகசங்களை உயர்த்தி பிடித்து கல்லாக்கட்டும் இயக்குனர்கள் மத்தியில் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் படும் துன்ப துயரங்களை இந்த படம் பேசுகிறது. சினிமா என்பது மக்களின் உண்மையான வரலாற்றை மக்களுக்கு உணர்வுகள் மூலமாக கடத்தும் அற்புதமான சாதனம். அதனை சில படைப்பாளர்களே செய்கிறார்கள். அதில் HomeBound-ம் சேர்ந்துள்ளது. இதுபோன்ற படைப்புகளை வரவேற்போம்.
- நந்தன்







HOME BOUND திரைப்படம் ஓ.டி.டி. யில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது புலம்பெறும் வட மாநில தொழிலாளர்கள் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து முடக்கப்பட்டதால் வட மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே சென்று பல பேர் இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை குறிக்கும் இந்த HOME BOUND திரைபடம் புலம் பிறந்த வட மாநில தொழிலாளர்கள் வாழ்க்கையின் அவல நிலைமைகளை இந்த திரைப்படத்தில் காட்சிகளாக அமைந்துள்ளது
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மோடி அரசிசு வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித போக்குவரத்து வசதியும் செய்து தராமல் ஈவு இரக்கமற்ற முறையில் வட மாநில தொழிலாளர்களை மோடி அரசு சாகடித்த செய்தியை இந்தத் திரைப்படம் அம்பலப்படுத்துகிறது கட்டுரையாளர் தோழர் நந்தன் சிறப்பாக எழுதியுள்ளார் தோழருக்கு. நன்றி.
HOME BOUND திரைப்படம் ஓ.டி.டி. யில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது புலம்பெறும் வட மாநில தொழிலாளர்கள் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து முடக்கப்பட்டதால் வட மாநிலத் தொழிலாளர்கள் நடந்தே சென்று பல பேர் இறந்து விட்டார்கள் அந்த சம்பவத்தை குறிக்கும் இந்த HOME BOUND திரைபடம் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் வாழ்க்கையின் அவல நிலைமைகளை இந்த திரைப்படத்தில் காட்சிகளாக அமைந்துள்ளது
கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் மோடி அரசு வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித போக்குவரத்து வசதியும் செய்து தராமல் ஈவு இரக்கமற்ற முறையில் வட மாநில தொழிலாளர்களை மோடி அரசு சாகடித்த செய்தியை இந்தத் திரைப்படம் அம்பலப்படுத்துகிறது கட்டுரையாளர் தோழர் நந்தன் சிறப்பாக எழுதியுள்ளார் தோழருக்கு. நன்றி.