தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி, மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனராம். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை கண்டித்துத்தான் சீமான் போராட்டம் நடத்தினார்.
தமிழ் தேசிய விடுதலைப் புலிகளின் பெயரை வைத்துக் கொண்டு தமிழகத்தில் மட்டுமின்றி, ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் சென்று புலி ஆதரவு பேச்சு பேசி ‘ கல்லா’ கட்டிய சீமான் தனது சொந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழந்து கொண்டிருந்தார்.
சீமானின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டு அவரது தம்பிமார்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகி வெவ்வேறு கட்சிகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக அதில் முக்கியமான சிலர் வேல்முருகன் நடத்துகின்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சீமான் மீது வைத்த விமர்சனங்கள், சீமானின் அரசியல் பித்தலாட்டங்கள் மற்றும் நிதி மோசடி ஆகியவை குறித்து முன்வைக்கப்பட்டவை அனைத்தையும் சீமான் இடது கையால் தள்ளிவிட்டு தொடர்ச்சியாக தமிழக அரசியலில் செயல்பட்டு வருகிறார்.
திடீரென்று விஜய் துவங்கிய தமிழக வெற்றி கழகம் ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்க பரிவார கும்பலின் ஊடகங்களினால் மிகப்பெரிய அளவிற்கு ஊதி பெருக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்கள் தலையின் மீது மிளகாய் அரைக்கின்ற வேலையை பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.
கவர்ச்சிவாத அரசியலில் புதிய வரவாக தோன்றிய விஜயின் பின்னால் சீமானின் ரசிகர்கள் கூட்டம் குறிப்பிட்ட அளவிற்கு சென்றுள்ளதால், சீமான் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக, அதாவது ‘போராளி’ என்ற பெயரில் உலா வருகின்ற மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக மாடு மேய்க்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மாடுகளின் பெயரால் அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்பரிவார கும்பலுக்கு கை வந்த கலை என்பதால் அவர்களின் பினாமிகளில் ஒருவரான சீமானும் மாடுகளை வைத்து அரசியலை முன்னெடுத்துச் செல்லத் துவங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாடுகளை வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக வீர உரையாற்றிய சீமான் இரண்டு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் அருகில் உள்ள முந்தல் பகுதியில் உள்ள வனக் காடுகளில் மாடு மேய்க்க சென்றுள்ளார்.
படிக்க: சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களை நீங்கள் பார்த்தாலே அவர்கள் அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பாஜகவின் கூலிப்படையினர் என்பது நன்றாக தெரியும்.
அது மட்டுமல்ல கடந்த 10 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் வன பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து காட்டு வளங்களை உள்நாட்டு, அந்நிய கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு தாராள அனுமதி கொடுத்துள்ளது. இத்தகைய சட்ட திருத்தங்களை பற்றி ஆழமான அறிவோ அல்லது அதற்கு எதிரான போராட்டங்களையோ மேற்கொள்ளாமல் வனத்துறை அதிகாரிகளுக்கும் மாடு மேய்ப்பவர்களுக்கும் இடையிலான போராட்டமாக சுருக்கி பார்ப்பது, பொருளாதார வகைப்பட்ட போராட்டமாக மாற்றுவது என்ற அயோக்கியத்தனத்தையும் சீமான் செய்துள்ளார்.
படிக்க: சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள் மீள்பதிவு
பாசிசத்தை ஆதரிக்கின்ற இத்தகைய கோமாளிகள், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை பற்றி அறியாத, அதாவது வெளி உலகத்தை கூகுள் வழியே பார்க்கின்ற குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளுக்கு கனவு நாயகனாக தோன்றுகிறார்.
ஏற்கனவே ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழர்களின் பெயரை முன் வைத்து பல்வேறு உருட்டுகளின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் நெருங்கிய உறவு இருந்ததை போலவும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பல்வேறு உதவிகளை தான் செய்து வந்ததை போலவும், தமிழகத்தில் அப்படிப்பட்ட ஒரு எழுச்சியை உருவாக்கப் போவதாகவும் வீரவசனங்களை பேசி குறிப்பிட்ட அளவிற்கு இளைஞர்கள் மத்தியிலும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலும் ஒரு ஆதரவு சக்திகளை உருவாக்கிக் கொண்ட சீமான் தற்போது பழைய முறையில் இல்லாமல் பியூஸ் போன பல்பை போல மாறியுள்ளதால் தனது போராட்ட முறைகளை மாற்ற வேண்டியுள்ள நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
அதுவும் மாடு மேய்ப்பது, ஆடு மேய்ப்பது, பன்றி மேய்ப்பது போன்ற போராட்டங்களின் மூலம் மக்களை கவர்ந்து விட முடியும் என்று ஹைடெக் பாணியில் ஷூ அணிந்து மாடு மேய்க்க சென்ற முதல் மேய்ப்பாளர் இவராகத்தான் இருக்க முடியும்.
தமிழக மக்கள் இன்னும் என்னவெல்லாம் கேலி கூத்துக்களை பார்க்க வேண்டிய உள்ளதோ என்று தெரியவில்லை. 2026 தேர்தலுக்குள் நவரசங்களையும் உள்ளடக்கிய பல்வேறு விதமான போராட்டங்கள், மயிர் கூச்செரியும் பேட்டிகள், வசவுகள், ஆபாச வக்கிர உரையாடல்கள், நீ பெரியவன் நான் பெரியவன் என்று முண்டா தட்டுவது ஆகிய அனைத்தையும் பார்க்க வேண்டிய காலக்கொடுமையில் தமிழக மக்கள் உள்ளார்கள்.
எனவே, இத்தகைய போராட்டங்களை ஊக்குவிக்காமல் முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில் கடும் எதிர்ப்பை தெரிவித்து மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை திசை திருப்ப முயல்கின்ற கோமாளித்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
- கரட்டுப்பட்டியான்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






