தோழர் Rajasangeethan பதிவு
நாடகக் குழுவில் ஒரு நாடகம் போட திட்டமிடுகின்றனர். அங்கு பிரஞ்ச் பெண் தொடங்கி நாடகக் காதல் எனப் பேசும் கலையரசன் வரை பலரும் இருக்கின்றனர். வெவ்வேறு பின்னணிகள் என்பதால் ஒவ்வொருவரும் காதலைப் பற்றி ஒரு கருத்தை சொல்கின்றனர். அது விவாதிக்கப்படுகிறது. அதில் கலையரசனுக்கு மட்டும் அதிக விளக்கம் கொடுக்கப்படுகிறது. பார்ப்பனர் பற்றி பேசும் கருத்துக்கு எந்த பதிலும் இல்லை. என்னதான் இயல்பான விவாதமாக இருந்தாலும் எடிட்டிங்கில் ரஞ்சித்தானே இருந்திருப்பார். போகட்டும்.
Trans Woman இருக்கிறார். அவரை அடையாளம் காணுவதில் கலையரசன் சிக்கல் கொள்கிறார். தற்பாலின சேர்க்கையாளர் இணை ஒன்று இருக்கிறது. அவ்வப்போது கொஞ்சிக் கொள்கின்றனர். சுபத்ரா இருக்கும் உறவைப் பற்றி விளக்கப்படவில்லை. LGBTQIA+ பற்றிய சிக்கல்களோ விவாதங்களோ இருக்கிறதா எனப் பார்த்தால் ஒன்றே ஒன்று வருகிறது. தற்பாலின சேர்க்கையாளர் இணையை கலையரசன் கொச்சையாகப் பேசுவதும் அந்த இணையில் ஒருவரின் தாய்க்கு தெரிந்து அடிக்க வருவதும் மட்டும்தான் அவை.
மற்றபடி sexual orientation-ஐ உணரும் விதம், அதை explore செய்கையில் ஏற்படும் சிக்கல்கள், குடும்ப அமைப்பு குலையும் தன்மை, அவை கொடுக்கும் உளவியல் சிக்கல்கள், சமூகத்தை எதிர்கொள்ள நடத்தும் போராட்டம் என எவ்வளவோ இருந்தும் ரஞ்சித் அவற்றுக்குள் செல்லவில்லை.
முதல் காட்சியில் கிளம்பிப் போகும் ரெனே, இனியனை மறக்கவில்லை. இருவரும் எடுத்த புகைப்படங்களை தனியே பார்த்துக் கொள்கிறார். இனியனும் அதே போல ரெனேவிடம் வாய்ப்பு கிடைக்கும்போது தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனாலும் இணையவில்லை. காரணம், வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும் என இனியன் நம்புவதும் இளையராஜாவை பிடிக்காமல் இருப்பதும் அடிப்படையில் அவர் சாதியவாதியாக இருப்பதும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இனியன் கம்யூனிஸ்ட்டாக பாவிக்கப்படுகிறார்.
‘கிச்சானாலே இளிச்சவாயன்தானே!’
இவற்றுக்கிடையே கலையரசன் ஒரு கூட்டத்தில் போதையில் ரெனேவை abuse செய்கிறார். உடனே நாடகக் குழு அவரை வெளியேற்ற முடிவெடுக்கையில் ரெனே தடுக்கிறார். புத்தரை போல் அமர்ந்து ‘திருந்துற வரை இங்கயே இருக்கட்டும்’ என்கிறார். (அடேங்கப்பா). பெண் மீதான பாலியல் வன்கொடுமையை இந்தளவுக்கு normalize செய்து கொண்டாடப்படுவதெல்லாம் காலக்கொடுமைதான்.
நடுவில் ஆணவக்கொலைகளின் footage ஆகியவற்றை போட்டு அவரவர் குடும்பத்தார் வந்து விளக்குவது போல் காட்சி. இதில் அரசியல்வாதிகள் அக்கொலைகளை exploit செய்து வளர்ந்து கொண்டனர் என குற்றச்சாட்டு வேறு. (‘சார், அது கண்ணாடி சார்!’)
இறுதியில் ஒரு பெரும்பூனை வருகிறது. அவர் யோகா செய்கிறார். கதையுடன் வருகிறார். பிறகுதான் தெரிகிறது ‘ஓ இது அந்தக் கூட்டம்ல’ என. நாடகத்தைக் கலைக்க பெரும்பூனை முயல, நாடகக் குழுவினர் அதை அடித்து விரட்டுகிறது. சுபம்.
தோழர் ரஞ்சித் ஒரு பேட்டியில் birdman படம் தனக்கு பிடிக்கும் எனக் கூறியிருந்தார். அதைப் போல எடுக்க முயன்றிருப்பது தெரிகிறது. Climax பட சாயல்களும் இருக்கின்றன. கதையின் பிரதானப் பிரச்சினை என்னவென்பதில் தெளிவு இல்லை. ரெனே-இனியன் காதலா, கலையரசனின் transformation-ஆ, ஆணவக் கொலையா அல்லது ஆர்எஸ்எஸ்ஸா என தெளிவுபடுத்தப்படவில்லை. இதை பின் நவீனத்துவ கதை சொல்லல் என ரஞ்சித் குறிப்பிடுவார். அதில் அவருக்கு ஈர்ப்பு உண்டு. நமக்கு கிடையாது. எனவே அதையும் விட்டுவிடுவோம்.

பாத்திரங்களில் முழுமை இல்லை. அதற்கான காரணங்களும் இல்லை. ரெனேவின் பாத்திரம் 500 days of summer பட நாயகி தொடங்கி, அவள் அப்படித்தான் ஸ்ரீபிரியா வரை பல பாத்திரங்களை கலந்ததாக இருக்கிறது. அவள் அப்படித்தான் படமே கூட முதலாளிய toxic பெமினிஸ்ட்டாகதான் ஸ்ரீபிரியாவை ருத்ரய்யா படைத்திருப்பார். இன்று வரை அதுவொரு பெமினிச படம் எனக் கொண்டாடுவோரும் இருக்கின்றனர்.
நாடகக் குழு பாத்திரங்களின் சாதி ஓரளவுக்கு புரிய வைக்கப்படுகிறது. என்ன வர்க்கம் என சொல்லப்படவில்லை. எல்லா பாத்திரங்களும் வர்க்க நீக்கம் செய்யப்பட்ட பாத்திரங்களாக இருக்கின்றன. ரஞ்சித்துக்கு வர்க்கப் பிரச்சினை ஒரு பிரச்சினை கிடையாது என்பதால் இருக்கலாம். அவர்களுக்கு மாத வருமானம் என்ன, குடும்பப் பின்னணி என்ன, வர்க்க ரீதியான பிணக்குகளை எப்படி கையாளுகின்றனர் என்பதெல்லாம் இல்லை. Backstory பாத்திரங்களுக்கு எழுதப்பட்டதா எனத் தெரியவில்லை. அவ்வப்போது ஒரு போனில் அல்லது ஒரு காட்சியில் குடும்பமும் பின்னணியும் காண்பிக்கப்படுவது ரஞ்சித்துக்கு போதுமானதாக இருக்கிறது.
வர்க்க நீக்கம் செய்யப்பட்ட பாத்திரங்கள் என்பதாலேயே இவர்கள் எல்லாம் இந்த பூமியில் எங்கு வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை. குடும்பம், பின்னணி ஆகியவற்றுடன் கூடிய கதை கலையரசனுக்கு இருப்பதால்தான் அந்த பாத்திரத்துடன் ஒன்ற முடிகிறது. அவரது குடும்பம் போடும் நாடகத்துக்கு சிரிக்க முடிகிறது. ஆனால் பிறரை பற்றி அத்தகைய டீடெயிலிங் இல்லை. அதனால்தான் கலையரசன் ஒரு கட்டத்தில் கேட்கும் ‘ஏய்.. யாருடா நீங்கல்லாம்’ என்கிற கேள்வி நம் கேள்வியாகவே தொனிக்கிறது.
வர்க்க நீக்கம் செய்யப்பட்ட பாத்திரங்கள் என்பதால் அவை யாவும் இயல்பாகவே மேட்டுக்குடி பாத்திரங்களாக உலவுகின்றன. அனைவரும் பிராண்ட் செய்யப்படுகின்றனர். உடனுக்குடன் cancel செய்யப்படுகின்றனர். பிறகு பொலிட்டிகல் கரெக்ட்னெஸ் பற்றி வேறு வகுப்பெடுக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு லிபரல்பாளையத்துக்குள் கதை நடக்கிறது.
காதலுறவுகளில் பெரும் புரட்சியை படம் ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறர்கள். வாய்ப்பு இருந்தால் ரோசா லக்சம்பெர்க், கொலந்தாய் எழுதியவற்றையும் ‘ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்’ புத்தகத்தை படித்துப் பாருங்கள். இந்த எழுத்துகளும் விவாதமும் சுமார் நூறு வருடங்களுக்கு முன் நேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ‘அச்சச்சோ.. ஆனால் அவர்கள் கம்யூனிஸ்டுகளாயிற்றே.. Take diversion.. Take diversion…!’
இனியனை அடித்துவிட்டுப் பிரியும் ரெனேவை திரும்பப் பார்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் ஏன் காதலுக்கு உருகுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் வர்க்கப்புரட்சி வசனத்தை வைத்து பார்த்தால் ‘கம்யூனிசத்தை காதலிக்க விரும்பும் அம்பேத்கரியம், அதற்கு சாதிப் புரிதல் இல்லை என்பதால் பிரிந்து இருக்கிறது’ என சொல்வதாக புரிந்து கொள்ளத் தோன்றுகிறது. Nice, no?
பொதுவாக gender politics, liberalism, elitism மற்றும் கம்யூனிச எதிர்ப்புப் படைப்புகளுக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. பெரிய சந்தையும் முதலீடுகளும் உண்டு. இந்திய அளவில் வடக்கே கம்யூனிசத்தை எதிர்க்கும் அம்பேத்கரியத்தை வளர்க்கவென பல நிதி முதலீடுகளும். Ngo-க்களும் உண்டு. எதிர்கேள்வி கேட்டதற்கே கம்யூனிஸ்டுகளை சாதியவாதிகள் என முத்திரை குத்துவது இந்தியாவில் புதிதல்ல. படத்துக்கும் புதிதல்ல. அதற்கான நூலை பிடித்துச் சென்றால் அது வட இந்தியாவின் பார்ப்பன-அம்பேத்கரிய-முதலாளியக் கூட்டு மூலதனத்துக்கு இட்டுச் செல்லும்.
இந்தித் திரையுலகக் கூட்டுக்கு நகரும் தோழர் ரஞ்சித்துக்கு வாழ்த்துகள்!







