ணவக் கொலையின் மூலமாக ஓர் ஆண் தன்னுடைய அதிகாரத்தை நிறுவிக் கொள்ள முடியும். ஒரு குடும்பம் தனக்கான சொத்தை ரத்த சொந்தங்களுக்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு குழு, அதிகாரத்துக்கான போட்டிக்குள் நுழைய முடியும். ஒரு கட்சி, வாக்குகள் பெற முடியும். ஒரு மதம், வளர முடியும். ஒரு சாதி, வேர்களை ஆழப் பரப்பிக் கொள்ள முடியும். ஓர் அதிகாரம் இங்குள்ள உற்பத்தி முறைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இத்தனை அனுகூலங்களை கொடுக்கும் ஆணவக்கொலை செய்ய ஒருவன் எப்படி மறுக்க முடியும்?

ஓர் உயிர் கொல்லப்படுவதற்கான துணிச்சலை சமநிலை கொண்ட தனி நபர் எவரும் கொண்டிருப்பதில்லை. அந்த துணிச்சலை வழங்குவதற்கென ஏதோவொரு வகை உத்தரவாதம் மட்டுமே கொலையை செய்ய உதவுகிறது. பெரும்பாலும் இத்தகைய உத்தரவாதங்களுக்கு ஒரு குழு, ஒரு சமூக அமைப்பு, ஓர் அரசு அமைப்பு என ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இணைந்து உருவாக்கும் கட்டமைப்புகள்தாம் அடிப்படையாக இருக்கின்றன.

குறிப்பாக இந்தியா போன்ற சமூகத்துக்குள், எங்குமில்லாத விந்தையாக வர்ணம், நிறம், பாலினம், சாதி என அடுக்குகளாக பிரிக்கப்பட்ட சமூகத்தின் இயங்குவிசைகளால் ஆணவக்கொலை கொள்ளும் நுட்பங்கள் அதிகம்.

இத்தகைய சமூக முறையில் உருவாகும் ஓர் அரசு எப்படி இருக்கும்?

சாதியை இந்திய அரசியல் அமைப்பு அனுமதிக்கிறது. அதைப் பொறுத்தவரை தீண்டாமைதான் குற்றம். வன்கொடுமைதான் குற்றம். சாதி பாராட்டுவது குற்றமே இல்லை. சாதி பாராட்டுதலின் அடுத்த நகர்வே ஒடுக்குமுறையாகதானே இருக்க முடியும்?

அந்த ஒடுக்குமுறையை இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் அமைப்பாக்கி இருக்கிறது.

பார்ப்பனிய பீடத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற அதிகாரத்தை கொண்டு இடைநிலை சாதிகள், நவபார்ப்பனராகும் முயற்சியை எடுக்கிறார்கள். பார்ப்பனர்கள் குவித்து வைத்த நிலங்களை போலவே, இடைநிலை சாதிகளும் நிலத்தை தன்னகத்தே குவித்துக் கொள்ள முற்படுகின்றன. சாதிய சங்கங்களின் பங்கு அப்படிதான் நேர்கிறது. அங்குதான் அகமணமுறை மீண்டும் மொட்டவிழ்க்கிறது.

நிலமில்லாதவன், இடைநிலை சாதிய உறவுகள் கொடுக்கும் அனுகூலங்களை அனுபவிக்கும் பொருட்டு, அந்த சாதிகளின் அரசியல் பிரதிநிதித்துவ சங்கங்கள், வர்க்க செழிப்பான குடும்பங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை பாராட்டும் சாதிய ஆதிக்க முறைமைகளை பின்பற்ற தலைப்படுகிறான். பெரும்பாலும் இடைநிலை சாதிகளின் வர்க்க உயர்வு பெற்ற குடும்பங்களில் நடத்திட முடியாத ஆணவக்கொலையை வறிய இடைநிலை சாதிக்காரனை வைத்து செய்து தன்னுடைய ஆதிக்கத்தை அந்தந்த சாதிகள் நிறுவிக் கொள்கின்றன.

ஏன் ஒருவன் ஆணவக் கொலை செய்கிறான்?
பார்ப்பன கும்பலால் வடிவமைக்கப்பட்ட இந்திய சாதிய கட்டமைப்பு!

எந்த சாதியிலும் இருக்கும் வறியவனுடைய அதிகபட்ச ஆசை என்பது, அந்த சாதியில் இருக்கும் ஒரு பணக்கார குடும்பமாக மாறி விட வேண்டும் என்பதுதான். அந்த பணக்கார குடும்பம், உயர்வுற்றதற்கு சாதிய உறவுகளே காரணம் என அவன் நம்ப வைக்கப்படுகிறான். பிறகு அந்த நம்பிக்கையை சமூகத்தின் எல்லா திக்குகளுக்கும் கொண்டு செல்லும் பிரசாரகனாகி விடுகிறான். அதில் அவனுக்கு சமூக ஏற்பும் மரியாதையும் மதிப்பும் தன்னகங்காரமும் கிடைக்கிறது.

சற்று நடைமுறை சாத்தியத்துடன் பேசுவோம்!

How can supporting caste annihilation socially benefit one?

சாதிகளுக்கு சங்கம் உண்டு. சாதி மறுப்பவர்களுக்கு சங்கம் உண்டா?

சாதி மறுப்பவர்களுக்கு சலுகையோ இட ஒதுக்கீடோ உண்டா?

சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை பாதுகாக்கும் (காவல்துறை அல்ல) அரசு அமைப்பு உண்டா?

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை உண்டா? இருந்தாலும் நடைமுறையில் அது எப்படி இருக்கிறது?

சாதி மறுப்பவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவம் உண்டா?

சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதை தவிர்க்கும் தேர்தல் சீர்திருத்தமோ விகிதாச்சார பிரதிநிதித்துவமோ உண்டா?

சாதிய திரட்சிக்கு கிடைக்கும் அரசியல் ஏற்பு, சாதி மறுப்பு திரட்சிக்கு உண்டா?

ஒரு குடும்பம் இன்று என்னவாக இருக்கிறது?

நவதாராளவாத மூளையுடன் நிலப்பிரபுத்துவ காலத்தில் ஊன்றியிருக்கும் மனங்கள் கொள்ளும் சாத்தியங்கள் மற்றும் அசாத்தியங்கள் பற்றிய பார்வை நமக்கு உண்டா?

குடும்பத்துக்குள் பிணைந்திருக்கும் சாதிய முடிச்சுகளை நீக்குவது யாருக்கான பொறுப்பு?

சில கார்ப்பரேட் நிறுவன உயர்தளங்களிலும் சைவ உணவு பாரபட்சம் காட்டப்படுவதை ஏன் தடுக்க முடியவில்லை?

ஒட்டுமொத்த இந்திய அரசும் சாதியை காக்க வடிவமைக்கப்பட்டிருக்கையில், சாதி ஒழிப்பு மட்டும் தனிமனிதனின் பணியாக இருக்கிறது.

சாதி மறுப்புக்கான அரசியல் வடிவங்கள் பலவற்றை முன்னெடுக்காமல் சாதிய ஒழிப்பை நோக்கி நகர முடியாது.

குறிப்பாக தேர்தலின் வழியாக அதிகாரம் பெற முயலும் கட்சிகளுக்கு, அது எத்தகைய கட்சியாக இருந்தாலும், சாதிய ஒழிப்பை நோக்கிய அழுத்தத்தைதான் அவை தர முடியுமே தவிர, தீர்வை தர முடியாது.

தீர்வு, இந்திய அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது. கட்சி அரசியலை தாண்டிய மக்கள் போராட்டங்களில் இருக்கிறது.

படிக்க: ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!

சாதிய ஒழிப்பை கட்சி தலைமைகள் தன்னளவில் விரும்பினாலும் அவர்கள் அதிகாரம் பெற விரும்பும் இந்திய அரசு என்கிற கட்டமைப்பில், சாதிய கணக்குகளை முன் வைத்து மட்டும்தான் அவர்களால் அதிகாரம் பற்றியேற முடியும். எனவே இறுதிக்கும் இறுதியாக அவர்களையும் ஆதிக்க சாதி பீடங்களுக்கு பணியாற்றுபவர்களாகவே நம் அரசியல் அமைப்பு கொண்டு சென்று நிறுத்தும்.

சாதி மறுப்புக்கான அனுகூலங்களையும் சலுகைகளையும் சமூகப் பொருளாதார ஏற்பையும் உருவாக்கும் பணியை அரசியல் இயக்கங்கள்தான் செய்ய வேண்டும். சாதி ஒழிப்புக்கான புதிய அரசியல் வடிவங்களை ஆய்வுப்பூர்வமாக ஆய்ந்து, நிர்வாக ரீதியாக ஏற்க வைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சாதி என்பது மூடுண்ட வர்க்கம் என அம்பேத்கர் ஒன்றும் உணர்ச்சிவயப்பட்டு சொல்லவில்லை. ஒவ்வொரு சமூகத்தின் சட்டங்களும் அச்சமூகத்தில் மேலெழுந்து வரும் வர்க்கங்களால் எழுதப்படுபவை என மார்க்ஸும் பொழுது போகாமல் சொல்லவில்லை. அவர்கள் செய்த ஆய்வுகள்தாம், அத்தகைய கருதுகோள்களுக்கு அவர்களை கொண்டு சென்று சேர்த்தது. அவற்றின் துணை கொண்டுதான் அவர்கள் அரசியல் தீர்வுக்கான கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.

எந்தவொரு சமூக முறைமைக்கும் மாற்றத்துக்கும் கட்டமைப்புக்கும் அடிப்படை காரணியாக இருப்பது ஏதோவொரு வகை மக்கள்திரள்தான். சாதி மறுப்புக்கான அத்தகைய ஒரு மக்கள்திரளை, கூட்டை, அரசியலை, சமூக செயல்பாட்டை உருவாக்குவதை நோக்கி நகரத் தொடங்குவோம்!

கவின் கொல்லப்பட்ட கோபத்துடன் Netflix-ல் இருக்கும் Origin படத்தை பாருங்கள்.

படத்தை பரிந்துரைத்த Amalorpavanathan Joseph தோழருக்கு நன்றி.

ஆத்திரத்தை ஆய்வுகளின் துணை கொண்ட அரசியல் ஆற்றலாக மாற்றுங்கள்!

நன்றி: ராஜசங்கீதன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here