ஆண் பாவம் பொல்லாதது
எனக்குத் தெரிந்த நண்பருக்கும் அவர் தம்பி ஒருவருக்கும் ஒரே நேரத்தில் விவாகரத்து ஆனது. அண்ணன் தம்பி இருவரின் மனைவியும் ஒரு பிசினஸ் தொடங்குகிறார்கள், அவர்களுக்குள் சண்டை வருகிறது. அந்தச் சண்டையின் நீட்சியாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்து அந்த வீட்டில் இரண்டு விவாகரத்துகள், துபாயில் வேலை செய்த நண்பர், விவாகரத்து வழக்குக்கு மதுரைக்கு வரவேண்டியதாக இருந்தது. வீட்டிலும் வயதானவர்கள் இருக்கிறார்கள், நண்பர் ஜீவனாம்ச தொகையைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்.
இருந்தாலும் அவர்கள் வீட்டையே எழுதி வாங்குவதற்கு அவர் மனைவி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.
நண்பர் குழந்தையைக் கூட அவர்கள் பார்க்கவிடுவதில்லை.
நண்பர் அவரின் மனைவிக்கு பிடிக்காமல் கூட விவாகரத்து வாங்கலாம் சண்டை தான் வரவேண்டும் என்று அவசியமல்ல , சண்டை வரலாம் அதற்கு நியாயமான விவாகரத்து சொந்தத்தேர்வு அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்குப் பின் நடந்த விடயங்கள் நண்பரை மனவுளைச்சலுக்குத் தள்ளியுள்ளது.
எனக்குத் தெரிந்து இன்னொரு நண்பர் இருக்கிறார் , நண்பருக்கும், மனைவிக்கும் பிரச்சினை விவாகரத்து அதற்குள் எல்லாம் நாம் செல்லவில்லை. ஆனால் அந்தக் குழந்தை கொஞ்சம் ஆட்டிச பிரச்சினை இருக்கும் குழந்தையாக உள்ளது, நண்பரே அந்தக் குழந்தையைப் பராமரிக்கிறார், விவாகரத்து செய்த நண்பரின் மனைவி அந்தக் குழந்தையைப் பார்க்கக்கூட வரவில்லை என்பது நண்பருக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
“ஆண் பாவத்தில் ” வரும் விக்னேஷ் காந்த் பாத்திரத்தைப் போல ஒரு நண்பருக்கு அவர் குழந்தையைக் கண்ணில் காட்ட மறுக்கிறார்கள் இன்னொருவருக்கு அந்தக் குழந்தையை அவர்கள் அம்மா பார்க்க வருவதில்லை. நண்பர்கள் ஆணாதிக்க மனநிலையில் இருந்திருக்கலாம் விவாகரத்து தேவையில்லை என்றெல்லாம் சொல்லவில்லை ஆனால் சமூகத்தில் இப்படியும் வகைமாதிரிகள் இருக்கவே செய்கின்றன.
அதிலிருந்து உருவான இயக்குநர் தான் “ஆண் பாவம் ” இயக்குநர்.
பிரச்சினை டைட்டிலில் இருந்து தொடங்குகிறது, “ஆண் பாவம் ” இது ஒட்டுமொத்தமாக அனைவருக்குமான கதையாக generalize செய்யும்போது பிரச்சினை வருகிறது. இது ஏதோ ஒரு அரைவேக்காட்டு ஆணுக்கும் ஏதோ ஒரு பெண்ணுக்கும் நடக்கும் ஒரு கதை என்று சொல்லியிருந்தால், அந்தக் கதையை ஒரு கதையாகப் பார்த்துவிட்டு சேரனின் “சொல்ல மறந்த கதை ” போல ஏதோ ஒரு கதை என்று மக்கள் கடந்து சென்றிருப்பார்கள், ஆனால் ஒட்டுமொத்த ஆண்களின் பிரதிநிதியாக இயக்குநர் மாறியது தான் இங்கு பெரிய பிரச்சினை.
அதைத்தாண்டி இயக்குநரின் இன்னொரு தவறான பாத்திரப்படைப்பு அந்த மனைவி கதாபாத்திரம். அரைவேக்காட்டுதனமாக முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் ஆண்களும் உண்டு , பெண்களும் உண்டு.
சிக்கல் என்னவென்றால் இங்கு “தோழர் ” என்ற பாத்திரங்களே சினிமாவில் குறைவாக வரும்போது, அப்படிக் காட்டப்படும் ஒரு பாத்திரமும் கூட அரைவேக்காடாக காட்டும் போது. அது பிரச்சினை ஆகிறது.
ஒரு வேளை மாஸ் ஹீரோ என்றால் ஒரு காவல்துறை வேடம் காட்டப்படும், அதில் நேர்மையான அதிகாரியாக நாயகர்களை பல முறை பார்த்திருப்போம். அப்படி நூறு முறை நல்லவர்களாக காட்டப்பட்டு ஒரு மங்காத்தா காட்டப்படும் போது இங்கு பிரச்சினை அல்ல. அதைத்தாண்டி காவல்துறை உலகெங்கிலும் வன்முறையின் கருவி என்பதெல்லாம் வேறு விடயம். ஒரு அரசு பயங்கரவாதத்தை காவல்துறை இல்லாமல் எல்லாம் கட்டமைக்க முடியாது என்பது வேறு விடயம். அப்படி இருக்கும் காவல்துறையையே நேர்மையான போலீஸ் அதிகாரி என்று காட்டும்போது, “தோழர்” என்று எப்போதாவது காட்டப்படும் ஒரு பாத்திரம் மொண்ணையாக அரைவேக்காட்டாக காட்டப்படுவது ஆக மோசமான பாத்திரப்படைப்பு.
படிக்க:
♦ Homebound- இந்திய அவலத்தின் பிரதிபலிப்பு!
♦ ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)
“முற்போக்கு ” என்பது ஒரு இயங்கியல் அது 100 சதவிகிதம் அல்ல, பெரியார் பற்றி படிக்கும் நம்மைப் போன்ற ஆண்களிடமும் போலித்தனங்கள் கொட்டியே கிடக்கும், ஆணாதிக்கம் கொட்டியே கிடக்கும். “போலி” முற்போக்கு என்று ஒன்றில்லை என்பது அதன் அர்த்தமல்ல . நாம் ஆணாதிக்கவாதியாய் இருந்தாலும் “நேமையாக ” மாற்றிக்கொள்வோம் அல்லது மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம் என்பதே அதன் அர்த்தம்.
ஒருவன் தன்னை மாற்றிக்கொள்ள நேர்மையாக சுயவிமர்சனம் செய்துகொண்டு மாற்றத்துக்கு உண்டான முயற்சிகள் செய்தால் அது “நேர்மையான ” முற்போக்கு. இல்லை மாற்றிக்கொள்ள மாட்டேன் ஆனால் முற்போக்கு வேடம் போடுவேன் என்றால் “போலியான ” முற்போக்கு.
“போலியான ” என்பதற்கு 100 சதவிகிதம் தூய்மைவாதமாக இங்கு நான் அதை பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தில் காட்டப்படும் பெண் பாத்திரம் “போலி யான ” பெண்ணியம் பேசுகிறது. அப்படி ஆட்களும் இருக்கிறார்கள், ஆனால் சினிமாவில் முற்போக்கு என்பதே குறைந்த அளவு காட்டும்போது , அதிலும் பெண்கள் முற்போக்காக இருப்பது ரொம்பக் குறைவாகக் காட்டப்படும்போது அதை நக்கல் நையாண்டியுடன் காட்டும்போது அதை விமர்சிக்கவேண்டிய தேவையும் உள்ளது.
ஒரு வேளை உண்மையான இடதுசாரித்தோழர்களை reference காட்டிவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அழுத்தமாக காட்டிவிட்டு அப்படியே இந்தப் பெண்ணைக் காட்டும் போது இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. அப்படியும் ஒரு பெண் களச்செயற்பாட்டாளர் காட்டப்படுகிறார், அது அழுத்தமாகக் காட்டப்படாமல் ஒரு காதல் என்றால் என்னவென்று கருத்து சொல்லும் பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் செயல்பாட்டுத் தோழர் பேசவேண்டிய காட்சியை வீட்டில் வேலை செய்யும் பெண் பேசுகிறாள்.
ஒரு ஏழெட்டு பெண்ணியவாதிகளையோ அல்லது இடது பெண் செயல்பாட்டாளர்களையோ காட்டிவிட்டு, , அவர்கள் உலகையும் அறிந்தவர் தான் கணவன் பாத்திரம் என்று சொல்லிவிட்டு அதைத்தாண்டி மனைவியின் பாத்திரம் மோசமாக சித்தரிக்கப்படும் போது, அது அந்தப் பாத்திரத்தின் அரைவேக்காட்டுத்தனமாக மட்டுமே புரிந்துகொள்ள பட்டிருக்கும். ஒரு அரைவேக்காட்டுத் தோழரை காட்டுவது பிரச்சினை அல்ல, தோழர் என்றாலே அரைவேக்காடு என்று காட்டும்போது தான் பிரச்சினை வருகிறது.
பிரச்சினை என்னவென்றால் இங்கு காட்டப்படும் தோழர் பாத்திரமே ஒன்று இரண்டு பாத்திரங்கள் தான் அந்தப் பெண்களும் முன்முடிவானவர்கள் மோசமானவர்கள் என்று காட்டப்படும் போது அது சிக்கலாகிறது.
இங்கு அரைவேக்காட்டுத்தனமாக ரீல்ஸ் போடும், ஆண்களும் உண்டு , பெண்களும் உண்டு . ஜோடியாக ரீல்ஸ் போடும் தம்பதிகளுக்கு பெரிய ரசிகர்கள் உண்டு. லுங்கிபாய்ஸ் போன்ற youtube சேனல்கள் குடும்ப சகிதமாய் சேனலில் வளம் வருவார்கள்.
அதேநேரம் பெரியார் , மார்க்ஸ் , அம்பேத்கர், புத்தகங்கள் பற்றி பேசுபவர்கள் ரீல்ஸ் வரும், பெரும்பாலும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரீல்சாக இருக்கும். ஆணவக்கொலைகள் பற்றியும் , அப்போதைய சமூக விடயங்கள் பற்றியுமே அவர்கள் ரீல்ஸ் போடுவார்கள் . பெரும்பாலும் product ஐ எல்லாம் அந்தத் தோழர்கள் பரிந்துரை செய்து நான் பார்த்ததில்லை.
முற்போக்கு பேசி ரீல் போடும் ஆட்கள் வேறு , இன்ஸ்ட்டா influencer என்ற ஆட்கள் வேறு என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இயக்குநருக்கு இல்லை. அதைத்தாண்டி ஆண் பக்கம் இருக்கும் விடயங்களை காட்டும் இயக்குநர் , பெண் பக்கமும் இருக்கும் விடயங்களை காட்டவே இல்லை. “ஆண் பாவம் ” என்ற கண்ணோட்டம் கொண்ட கண்ணாடியை மாட்டிக்கொண்டே திரைக்கதை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் வண்ணம் பேசும் இயக்குநர் ஒட்டுமொத்தமான பெண்களுக்கும் ஆடைகள் மற்றும் ரீல்ஸ் எடுப்பது மட்டுமே பிரச்சினையா ? அதற்காக மட்டுமே விவாகரத்து வாங்குகிறார்களா ? ஒரு வேளை அது ரொம்ப ரொம்ப மேல்தட்டு வர்க்கத்தில் இருப்பவர்களின் பிரச்சினையாக இருக்கலாம். அப்படி ஒட்டுமொத்தமாக இதுதான் பிரச்சினை என்று சொல்லிவிட முடியுமா ?
கரு கலைந்தது என்பதைத்தாண்டி நாயகன் நாயகிக்குள் வரும் பிரச்சினை எல்லாம் வாய்ச்சண்டைகள் ரகம் தான். அந்தக் கணவன் பாத்திரமும் அந்த மனைவி பாத்திரமும் இரண்டு பேருமே சிறுபிள்ளைத்தனமாக கட்டமைக்கப்பட்ட பாத்திரங்கள் , அவர்களுக்குள் முரண் என்று காட்டப்படும் பாத்திரங்களும் பிரதீப் ரங்கநாதன் cringe வகைகள் தான்.
படத்தில் உண்மையான நாயகன் விக்னேஷ் காந்த் தான் , விஜய்காந்த் கேப்டன் பிரபாகரன் படத்தில் 20 நிமிடத்துக்குப் பிறகு தான் வருவார் என்று யாரோ அவருக்கு நினைவுப்படுத்தியிருக்கிறார்கள் தலைவன் இருபதாவது நிமிடத்தில் ஆஜர்.
படத்தில் ஜென்சன் திவாகரின் பாத்திரப்படைப்பு அற்புதமாக இருந்தது. விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணமாய் இருந்தது. அதைத்தாண்டி அவரை எல்லாப்படங்களிலும் குடிகாரராகவே காட்டவேண்டுமா?
இதை சொல்லிவைத்தார் போல அனைத்துப்படங்களிலும் செய்கிறார்கள்.
படம் எப்படி இருக்கிறது, ஆண் கண்ணாடி கொண்டு பார்த்தால் ஆண்கள் மட்டுமே பாவமாய்த் தெரிவார்கள், கண்ணாடியைக் கழட்டிவிட்டு பார்த்தால் பெண்கள் பக்கமும் நியாயங்கள் இருக்கவே செய்யும். அவர்களின் கதையைக் காட்டினால் தானே நேர்மையான படைப்பு.
படத்தில் ஒரு விடயத்தை பாராட்டலாம் படத்தில் வரும் இறுதிக்காட்சியில் ஒரு இயங்கியலைத் தொட்டிருப்பார் இயக்குநர். பெண்கள் உலகைப் புரிந்துகொள்ள ஆண்களுக்கும் அவகாசம் வேண்டுமென்று சொல்லியிருப்பார் இயக்குநர். அது இயக்குநருக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அவகாசங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, இயக்குநரின் ஆணாதிக்க கண்ணோட்டம் மாறலாம் ஒரு வேளை இயக்குநருக்கும் பெண்களைப் புரிந்துகொள்ள அவகாசம் தேவைப்படுகிறது போல? ஒரு நல்ல படம் கூட எடுத்துவிடலாம் தானே.
- கார்த்திக்
முகநூல் பதிவு







