புங்க மரத்து ஒயர்மேன் வீடு
ஞாயிறு காலை.
கோடை எரி நெருப்பில் கிடந்த
வாடகைவீட்டுக்குள்ளே
குனிந்து நுழைந்தார்
ஒயர்மேன் பாட்டன்.
காலைச்சில்லிட நனைத்து
மேலுக்கும் கொஞ்சம் தண்ணீர் வீசிக்கொண்டு
நாற்காலியில் உட்கார்ந்தார்.
படிப்பை லேப்டாப்பில் நகர்த்தும் பேத்திக்கு–
2030க்குள் பிரபஞ்ச அளவில்
பெண் சமஉரிமை கிடைக்கும் என
வெறிகொண்டு நம்பும் அறிவாளிப் பேத்திக்கு–
தன்னால் முடிஞ்ச சித்தெறும்பு உதவியாய்
காலைச்சிற்றுண்டிக்கே
( ஒவ்வொரு ஞாயிறு மட்டும் சலுகையாக )
சேத்துப்பட்டு பீப் பிரியாணி;
தன்னவளுக்கு வள்ளலார் கடை கூழ்ப் பொதி,
தனக்கு மோர்ப் பொதி– பழஞ்சோத்துக்கு ;
பங்கிட்டுப் பிரித்துவைத்து
பெருமூச்சுவிட்டு
கொஞ்சம் அமைதியானார்.
அருகே மணம்வீசும் கைகள்அணைத்து
மேனியை ஒத்தி எடுத்தன,
வெத்துக்கைகளை ஏறிட
கருத்தமேனி கழுத்தில்
அழுக்குக்கயிறு
லேசாய்ச் சிரித்தது.
வழுக்குமர வாழ்க்கை
ஆத்தாமையும் சேர்ந்து
கணக்குப் பார்த்தவரின்
கண்களில் நீர்திரண்டு
அழுக்குக்கயிறும் மங்கிப்போக
புங்கமர நிழலாய் அவள்அருகிருந்ததால்
ஓடும் நினைவுக்குதிரையின்
லகானை இழுத்தார் பாட்டன்.
ஞாயிறு காலை
மெள்ளக்காலை ஊன்றி நின்றது —
புங்கமரத்து ஒயர்மேன் வீடு.
புதிய புத்தன்