பத்திரிக்கைச் செய்தி
கோவை மேம்பாலத்திற்கு சாதிப் பெயரை சூட்டுவதை கண்டிக்கிறோம்!
இந்தியாவிலேயே மிக நீளமான (10 கிலோமீட்டர் தொலைவு கொண்ட) கோவை மேம்பாலத்திற்கு தமிழ்நாட்டின் அறிவியல் மற்றும் விவசாய அறிஞர் கோபால்சாமி துரைசாமியின் பெயரை சூட்டுவது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கிறோம்.
இந்தியாவில் முதன்முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை,சலவை செய்யும் எந்திரம், காபி தயாரிக்கும் கருவி, சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் கருவி, உருளைக்கிழங்கு தோல் உறிக்கும் கருவி, சாவி கொடுக்கும் சுவர் கடிகாரம், ரேடியோ கிராம், தமிழ் டயல் ரேடியோ, எலெக்ட்ரிக் மோட்டார், கால்குலேட்டர் என பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டியவர் அறிஞர் கோபால்சாமி துரைசாமி .
படிக்க: ஆதிக்க சாதிவெறியனுக்கு ‘கலைமாமணி’ விருது! வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
குறைந்த விலை காரை தயாரித்தார். பயணச்சீட்டு வழங்குவதற்கான ஒரு எந்திரத்தையும் கண்டுபிடித்து தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே அதைத்தயாரித்து பயன்படுத்தினார். விவசாயத்துறையில் சோளச்செடிக்கு மருந்து தயாரித்தளித்து குறுகிய காலத்திலேயே 26 கிளைகளுடன் பதினெட்டரை அடி உயரத்திற்கு அதை வளரச்செய்தார். அந்தச் செடிகளில் 39 கதிர்கள் வரை விளைந்தன.
முன்காலத்தில் புகைப்படத்துறையில் மிகவும் உதவிகரமாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்ட்டர் என்ற புகைப்பட கருவி, எந்தவிதமான வெட்டுக்காயமும் இன்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு….என இவருடைய கண்டுபிடிப்புகள் நீண்டன.
பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற விரும்பியும் தர மறுத்தார். “என்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்துமே நம் நாட்டிற்குத்தான் பயன்பட வேண்டும், அதனால்தான் காப்புரிமை கோராமல் வைத்திருக்கிறேன். இந்தியர் யாராக இருந்தாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று அறிவித்தார். ஜெர்மனியில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவருடைய கண்டுபிடிப்பான சவரக்கத்திக்கு முதல் பரிசும், பிளேடுக்கு 3-ம் பரிசும் கிடைத்தன.
இப்படி தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கின்ற, பயனளிக்கின்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர் கோபால்சாமி துரைசாமி அவர்களின் பெயரை கோவை மேம்பாலத்திற்கு சூட்டுவது பெருமை சேர்க்கின்ற ஒன்றுதான் என்றாலும் அவரது இந்த இயற்பெயரை வைக்காமல் ‘ஜி.டி. நாயுடு’ என்று ஒரு சாதிப் பெயரை பின்னொட்டாக வைப்பது மிகமிகத் தவறானது என்று முன்வைக்கின்றோம். பள்ளிகளில், சாலைகளில் என பொது இடங்களில் சாதிப் பெயர்கள் கூடாது என்று சட்டம் இயற்றியுள்ள திமுக அரசனது தன்னை ‘ திராவிட மாடல் அரசு’ கூறிக் கொள்கிறது.
ஆரிய சித்தாந்தத்திற்கு எதிராக திராவிடம் மாற்று என்று ஒருபுறம் கூறிக் கொண்டே சாதிய அடையாளங்களை புதுப்பிப்பது முன்னிலைப்படுத்துவது போன்றவை ஒருபோதும் ஆரிய எதிர்ப்புக்கு உதவாது. எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு சாதிப்பெயரை சூட்டுவது முரணானது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
அந்த மேம்பாலத்திற்கு ‘அறிவியல் அறிஞர் கோபால்சாமி துரைச்சாமி’ என்கிற பெயரையே சூட்ட வேண்டும் என்பதையும் மக்கள் கலை இலக்கியக் கழகம் வலியுறுத்துகிறது.
இவண்,
மாநில செயற்குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
மிகச் சரி. தந்தை பெரியாருக்கு மிக நெருங்கிய நண்பர் அறிவியல் மேதை G. D.
என்பது உண்மை. தந்தை பெரியார் குட்டிய சுயமரியாதை இயக்க மாநாட்டில் இனி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தன் பெயருக்கு பின்னால் சாதி ‘பட்டத்தை’ தூக்கி சுமக்க கூடாது; சாதியை துறக்க வேண்டும் எனத் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றியவுடன், மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தோரும், பங்கேற்றோரும் தத்தம் பெயர்களுக்கு பின்னால் இருந்த சாதி ‘பட்டத்தை’ துறந்து தத்தம் பெயர்களை மட்டும் அறிவித்தார்கள். அதனால் தான் பிற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் அருதிப் பெரும்பான்மை மக்கள் எவரும் தன் பெயருக்கு பின்னால் சாதியை தூக்கிக் கொண்டு அலைவதில்லை. அப்படி இருக்கின்ற பொழுது பெரியார் மண் என்றும், திராவிட மாடல் அரசு என்றும், சமூக நீதி அரசு என்றும்
சொல்லிக் கொள்ளும் அரசு கோவை பெரிய மேம்பாலத்திற்கு அறிவியல் மேதை கோபாலசாமி துரைசாமி மேம்பாலம் என பெயர் சூட்டுவதற்கு பதிலாக ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயர் சூட்ட எத்தனிப்பது
மிகக் கேடானது. எனவே அந்த பிரேரணையை உடனடியாக திமுக அரசு வாபஸ் பெற வேண்டும் என்பது சரியானது.
மகஇக அறிக்கை மிக மிக பொருத்தமானது.
வாழ்த்துக்கள்.