திராவிட இயக்கங்களை பார்த்து வாரிசு அரசியல் செய்கிறார்கள்; பார்ப்பன கைக்கூலிகளாக மாறி விட்டார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்து ஆடம்பர, உல்லாச ஊதாரி வாழ்க்கை வாழ்கிறார்கள்; பெரும்பான்மை வன்னியர்கள் பாட்டாளிகளாக உள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டுகிறோம், என்றெல்லாம் 90களில் வன்னிய சாதி அடையாளத்துடன் சாதிய, பிழைப்புவாத அரசியலை முன்வைத்து கட்சியை துவங்கிய ராமதாஸின் குடும்பச் சச்சரவு நாறிக் கொண்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரால் நடத்திய அனைத்து சாதி ஆதிக்க வெறியாட்டங்கள் மற்றும் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல்கள் அனைத்திற்கும் உயர்நீதிமன்றத்தில் காவலனாக நின்று வழக்கு நடத்தி வந்த ‘ சமூகநீதி காவலர்’ என்ற பட்டத்துடன் திரிந்த வழக்கறிஞர் பாலு இன்று ராமதாஸிடம் இருந்து விலகி அவரது மகனுடன் ஒட்டிக்கொண்டு உள்ளார்.
‘ஓடுகின்ற குதிரையில் எந்த குதிரை அரசியல் ரேஸில் ஜெயிக்கும்’ என்பதை கண்டறிவதில் கணக்குப் புலியான திருவாளர் ராமதாஸ், ஜெயிக்கின்ற கட்சியின் மீது பந்தயத்தைக் கட்டி தனது கூட்டணியை முன்வைப்பார்.
ஒவ்வொரு தேர்தலிலும் எம்எல்ஏ பதவி, எம்பி பதவி ஆகியவற்றை பெறுவது; அதன் மூலம் ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெறுவது; அந்தப் பதவியை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிப்பது என்பதை ஒரு வாடிக்கையாவே செய்து வந்தார் ஐயா ராமதாஸ்.
ராமதாஸ் கட்சி துவங்கிய போது இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் திமுக செய்து வரும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதாகவும், சட்டநாதன் கமிஷன் அறிக்கை வெளியிட்ட படி இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று போராடத் துவங்கினார்.
இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து வன்னிய சாதி இளைஞர்களை பல்வேறு போராட்டங்களில் இறக்கி நூற்றுக்கணக்கான வழக்குகளில் அவர்களை சிறையில் அடைத்தார்; அரசு பதவிகள் முதல் நீதிமன்றம், போலீசு உயர் பதவி ஆகியவற்றில் தலை விரித்தாடிய பார்ப்பன ஆதிக்கம் மற்றும் இட ஒதுக்கீட்டில் பார்ப்பனரல்லாத பிற மேல் சாதிகள் பெறுகின்ற ஒதுக்கீடுகள் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கி அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பாட்டாளி மக்கள் கட்சி.
வடமாவட்டங்களில் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக சதவீதத்தில் உள்ள வன்னிய சாதி உழைக்கும் மக்கள் மத்தியில் பல்வேறு புள்ளி விவரங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டில் மறுக்கப்படுகின்ற நிலைமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லி, ‘ வன்னியர்களின் முன்னேற்றத்தை தான் சாதிக்கப் போவதாக’ கூறிக் கொண்ட ராமதாஸ், “நானோ எனது குடும்பத்தினரோ பதவிக்கு அலைய மாட்டோம்!” “ஒருவேளை அப்படி பதவிக்கு நாங்கள் நின்றால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்” என்றெல்லாம் சவடால் அடித்து தான் கட்சியை துவக்கினார்.
வன்னிய சாதி ஓட்டை பயன்படுத்தி கூட்டணியில் பேரம் பேசுவது; சீட்டுகளை வாங்குவது; அதில் தனது மகன், தனது மருமகள் போன்றவர்களை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்வது போன்றவற்றின் மூலம் தனது குடும்ப சொத்தை பல மடங்கு பெருக்கிக் கொண்டார் என்று அவர் மீது ‘வன்னிய சொந்தங்களே’ விமர்சனம் செய்கின்றனர்.
வன்னிய அறக்கட்டளை மூலம் சேர்க்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை தனது மனைவி மற்றும் உறவினர் பெயரில் எழுதி வைத்துக்கொண்டு வன்னிய சொந்தங்களை ஏய்த்து வருகின்ற ராமதாசு தற்போது அந்த சொத்துக்கள் அனைத்தும் தனது குடும்பத்தினருக்கு விள்ளாமல், விரியாமல் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடனே கூட்டணி யாருடன் சேர்வது என்பதை முன் வைக்கின்றார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் சேர்ந்து நின்றால்தான் ஒன்று, இரண்டு சீட் ஆவது கிடைக்கும் என்று அவர் முன் வைக்கின்ற நிலைமையில் அவரது மகன் அன்புமணி ராமதாஸோ பாஜகவுடன் கூட்டு வைக்க வேண்டும் என்று விழுந்து புரண்டு அழுததாக திருவாளர் ராமதாஸே பேட்டி அளித்துள்ளார்.
“மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி” என்றெல்லாம் கார்ப்பரேட் பாணியில் பிரச்சாரம் செய்து ஓட்டுக்களை அறுவடை செய்வதில் கில்லாடியான அன்புமணி ராமதாஸ், ராமதாசுக்கு வயதாகிவிட்டது, அவருடைய திரண்ட சொத்துக்களை மகள் மற்றும் மருமகன் பெயரில் எழுதி வைத்துவிட்டால் என்ன ஆவது என்று ஆத்திரத்தில் தான் தான் கட்சியென கட்சியில் உள்ள பெரும்பான்மை நபர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளார்.
படிக்க:
♦ திண்டிவனத்து பண்ணையாரின் அன்புமணி ராமதாசுக்கு கல்தா கொடுக்கும் புதிய அறிவிப்பு!
♦ சந்தி சிரிக்கும் அரசியல் வா(வியா)திகள்” ராமதாசும் – அன்புமணியும்!
இந்த சூழலில் அன்புமணி ராமதாஸ் மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை சுமத்தி, “இதற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டும்?” என்று ராமதாஸ் மிரட்டியது நாடறிந்த உண்மை. ஆனால் அதற்கெல்லாம் அன்புமணி எந்த பதிலும் சொல்லவில்லை என்ற காரணத்தையே முன்வைத்து தற்போது அவரது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக்கி உள்ளார் ராமதாஸ்.
“பிள்ளையார் கோவிலுக்கு போக முடியாதவர்கள், சாணியை உருண்டையாக பிடித்து வைத்தால் அதுவே பிள்ளையார் தான்” என்று பார்ப்பான (இந்து) மதம் கூறுவதைப் போல, “எனக்கு பிறகு, என் மகள் தான்” என்று ஒரு சாணி உருண்டையை பிடித்து வைத்து, “இவர் தான் எனது கட்சியின் செயல் தலைவர். நான் உயிருடன் இருக்கும் வரை நான் தான் தலைவர். எனக்குப் பிறகு என் மகள் தான் தலைவர்” என்று வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக் குதிக்கிறார்.
“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது” என்று தான் பழமொழி உள்ளது இங்கு கட்சியை காப்பாற்ற பல்வேறு குரங்கு வித்தைகளை செய்து கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்,, லட்சக்கணக்கான வன்னிய இளைஞர்களின் எதிர்காலத்தை பாழடித்த திருவாளர் ராமதாஸ். ஒரு சுயநலவாதி என்பது அம்பலமாகி நாறிக் கொண்டுள்ளது.
மருத்துவ படிப்பு முடித்த ராமதாஸ் 90களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய போது அதனை எதிர்த்து உழைக்கும் மக்கள் ஓர் அணியில் திரண்டு விடக்கூடாது என்பதற்காகவே “அடையாள அரசியல்” முன்வைக்கப்பட்டது. அந்த அடையாள அரசியலை வன்னிய சாதி பெரும்பான்மை மக்கள் என்ற முன்மொழிவுடன் அவர்களை நிறுவனமயமாக்கி ஒரு கட்சியாக உருவாக்கிய திருவாளர் ராமதாஸ், தற்போது கட்சி துவங்கிய போது அவரே முன்வைத்த நோக்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு சொத்துக்களை பாதுகாப்பதற்காக யாருடன் கூட்டு சேர்ந்தால் அதனை பாதுகாக்க முடியும் என்று அலைந்து கொண்டிருக்கிறார். இதனையே ராஜதந்திரம் என்றெல்லாம் அவரது துதிபாடிகள் பேசிக்கொண்டுள்ளனர்.
வடமாவட்டங்களில் பெரும்பான்மை மக்களாக உள்ள வன்னிய சாதியினரிடையே புதிய தலைமுறை இளைஞர்கள் தொழிலாளர்களாகவும், சிறு குறு தொழில் முனைவர்களாகவும் உருவெடுத்த காலகட்டத்தில் அவர்களை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்டு முதலாளித்துவ ஜனநாயக உணர்வு போன்றவை உருவாக விடாமல் தடுத்து சாதிய, பிழைப்புவாத கண்ணோட்டத்தில் ஆழ்த்திய ராமதாசு இன்று பதவிக்காகவும், சொத்துக்களை பாதுகாக்கவும் தனது குடும்பத்தினரை வைத்துக்கொண்டு நாடகமாடுவது பார்க்கவும், கேட்கவும், அருவருப்பாகவும், கேவலமாகவும் உள்ளது.
ஆனால் அவரது கட்சி துவக்கப்பட்ட நோக்கத்தை அவர் நிறைவேற்றி விட்டார் என்றே நாம் பார்க்க முடியும். ஏனென்றால் இன்று வரை வடமாவட்டங்களில் பெரும்பான்மை உழைக்கும் மக்களாக உள்ள வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் நிரந்தர பகை உணர்ச்சியை உருவாக்கி வைத்திருப்பதன் காரணமாக அவர்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி உள்ளது என்பதை கணக்கில் கொண்டு பார்க்கும் போது அவரது நோக்கம், அவர் கட்சியை துவங்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது.
தற்போது இறுதியாக ஒன்றுதான் உள்ளது அவரது திரண்ட சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றி விடக்கூடிய ஒரே ஒரு ஆசை மட்டும் தான் பாக்கி உள்ளது.
சாதிய, பிழைப்புவாதிகளின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு ராமதாஸ் ஒரு வகை மாதிரி என்பதை புதிய ஜனநாயகம் இதழில் பலமுறை அம்பலப்படுத்தி ஒரு பச்சோந்தி என்று எழுதியிருந்தோம். அதனை மிஞ்சக்கூடிய வகையில் பச்சோந்திக்கே டஃப் கொடுத்த ராமதாஸ் தற்போது தனது மகளை அரசியலில் இறக்கி, தெம்பாக உட்கார்ந்து இருப்பதை பார்க்கும்போது வன்னிய சாதி இளைஞர்கள் மற்றும் சொந்த சாதி மீது அபிமானம் கொண்ட உழைக்கும் மக்களின் நிலைமையை நினைத்து வருத்தப்பட வேண்டியுள்ளது.
திமுகவுடன் பேரம் பேசுவதற்கு ஐயாவும், பாஜகவுடன் பேரம் பேசுவதற்கு சின்ன ஐயாவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெரும்பான்மை உழைக்கும் மக்களாக வாழ்கின்ற வன்னிய சாதி மக்கள் இந்த, “பதவி வெறி – சொத்து பாதுகாப்பு” போட்டிக்கு இடையில் சிக்கிக் கொள்ளாமல் தனது வாழ்க்கை அவலங்கள், துன்ப துயரங்களில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு பிற சாதிகளில் உள்ள உழைக்கும் மக்களுடன் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவது தான் நிரந்தரமான தீர்வு.
◾கணேசன்







‘ஐயா மார்களை’ மிகச் சிறப்பாக தோல் உரித்து அம்பலப்படுத்திய கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.