லஞ்சம் பெறுவதில் பல வகைகளை நாம் கண்டிருக்கிறோம். இதுவரை நாம் கேள்விப்பட்டிராத ஒரு புது முறையில் ஆண்டு கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை-இயக்குநராக பணியாற்றி வரும் பிரத்யுமான் தீக்க்ஷித்
ராஜஸ்தான் அரசின் டெண்டர்களை ஓரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் மற்றும் ட்ரீஜன் சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுத்ததற்காக ஆண்டு கணக்கில், மாதாமாதம் லஞ்சம் பெற்றுள்ளது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த லஞ்சத்தொகை பெறுவதற்கு இவர் கையாண்ட வழிமுறைதான் தற்பொழுது பேசுபொருள் ஆகியுள்ளது. பொதுவாக லஞ்சம் பெறுபவர்கள் லஞ்சப் பணத்தை கையில் பெற்றுக்கொண்ட பிறகு ஏதாவது ஒரு பொய் கணக்கை எழுதி தனது வருமானமாக காட்டிக் கொள்வார்கள்.
இந்த அதிகாரி மிகவும் ‘முன்யோசனை’யுடன் செயல்படுபவர் போலிருக்கிறது. லஞ்சப் பணத்தை சம்பளம் என்ற பெயரில் வங்கியின் மூலமாக பெற்றுவிட்டால் பொய் கணக்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டமிட்டு இருக்கிறார்.
அந்தத் திட்டத்தின் படி இவர் டெண்டர் ஒதுக்கீடு செய்த இரண்டு கம்பெனிகளிலும் தனது மனைவி பூனம் தீக்க்ஷித் வேலை செய்வது போல ஆவணங்களை உருவாக்கி அவர் சம்பளம் பெறுவதைப் போன்ற போர்வையில் மாதாமாதம் லஞ்சம் பெற்றுள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஒரு நாள் கூட இவரது மனைவி வேலைக்கு சென்றதில்லை. அந்த நிறுவனத்தின் எந்த வேலையிலும் இவரது மனைவி பங்கு கொண்டதே இல்லை.
வேலைக்குச் செல்லாமலேயே இந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் ( 2019 – 2020 ஆம் ஆண்டுகளில்) சுமார் ரூ. 37,54,405 சம்பளம் என்ற பெயரில் இவரது மனைவியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்றுள்ள பொழுதும் அந்த நிறுவனங்களின் தணிக்கை அதிகாரியோ அல்லது வருமான வரித்துறை லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற எந்த ஒரு அரசுத்துறையோ இந்த லஞ்ச ஊழல் முறைகேட்டை கண்டறிந்து வழக்குத் தொடுக்கவில்லை.
தனிநபர் ஒருவர் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் இந்த லஞ்ச – ஊழல் முறைகேடு குறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், இதுகுறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக வேறு வழியின்றி விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, இப்பொழுதுதான், இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இது நாடெங்கும் நடக்கும் வழக்கமான லஞ்ச ஊழல் போன்றது அல்ல. ஒரு அதிகாரி தனது மனைவியை ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்வதாக இரண்டு நிறுவனங்களிலும் ஆவணங்களை தயார் செய்ய வைத்து மாத மாதம் தனக்கு வரவேண்டிய லஞ்சத்தை தனது மனைவியின் ஊதியமாக பெற்றிருக்கிறார் என்பது எதை காட்டுகிறது?
தான் செய்யும் இவ்வளவு பெரிய முறைகேட்டை அரசுத் துறையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையோ அல்லது அது போன்ற துறைகளோ கண்டுபிடிக்கவே போவதில்லை; இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இது குறித்து சோதனையோ ஆய்வோ நடக்கவே நடக்காது என்று மிகமிக உறுதியாக நம்பிய காரணத்தால் தான் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட முடிந்திருக்கிறது.
படிக்க:
♦ அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!
♦ மோடி வாஷிங்மெஷினில் ஊழல்கறை நீக்கப்பட்ட புதிய உருப்படி சந்திரபாபு நாயுடு!
இந்த அதிகாரிக்கு எப்படி இவ்வளவு பெரிய நம்பிக்கை வந்தது? இந்தியாவில் உள்ள அரசு துறைகளில் தன்னைப் போலவே லஞ்ச ஊழல் பேர்வழிகள் நிரம்பி இருப்பதால் எவ்வித சோதனையும் நடைபெறாத படி அவர்களை “சரிக்கட்டி” விடலாம் என்ற மாபெரும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அந்த அதிகாரி இதைச் செய்திருக்கிறார்.
ஆனால் யாரோ ஒருவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதன் காரணமாக தான் மாட்டிக் கொள்ள நேரிடும் என்று இந்த அதிகாரி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இந்த ஊழல் கதையைப் படிக்கும் பொழுது (கடந்த 2023 ஆம் ஆண்டு) 18 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோமீட்டர் ரோடு போடுவதற்கு திட்டம் போடப்பட்டு இருந்த நிலையில் ஒரு கிலோமீட்டர் சாலைக்கு 250 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் செலவு செய்து ரோடு போடப்பட்டதாக மோடி அரசு கூறியதும் அந்த காலகட்டத்தில் ஆண்களுக்கு பிரசவம் பார்த்ததாக கூறி அரசின் இன்சூரன்ஸ் பணம் ஊழல் செய்யப்பட்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.
எப்பேர்ப்பட்ட ஊழல் செய்தாலும் தப்பி விடலாம் என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இவ்வளவு வெளிப்படையாக நம்ப முடியாத அளவிற்கு தைரியமாக பொய் கணக்குகளை ஊழல் பேர்வழிகளால் எழுத முடிகிறது. இதுவே தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தால் தலைப்புச் செய்தியாக்கப்பட்டிருக்கும்
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தின் கீழ் அதாவது பாசிச பாஜகவின் ஆட்சியில் லஞ்சம் – ஊழல் எவ்வளவு பெரிய அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதற்கு இவைகள் உதாரணங்களாக உள்ளன.
– குமரன்.







