ம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதியான பிரிவு 370 ஐ ரத்து செய்து இந்தியாவுடன் இணைத்ததை நரேந்திர மோடியின் சாதனைகளில் ஒன்றாக பாஜகவினர் பீற்றிக் கொள்கின்றனர். அன்றைய காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் தான் இப்பொழுது பதற்றத்தில் உள்ளது. மக்கள் போராட்டம், வன்முறை, துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு என பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இமயமலையில் பரவும் நெருப்பு!

2019 ஆக., 5ல் பிரிவு  370 ஐ  நீக்கியதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற மற்றொரு யூனியன் பிரதேமுசமாக காஷ்மீர் இரண்டாக துண்டாடப்பட்டது. தனது கையாட்களாக செயல்படுகின்ற ஆளுநர்களை நியமித்து அவர்கள் மூலம் மாநிலங்களின் அல்லது யூனியன் பிரதேசங்களின் மீதான தனது ஆதிக்கத்தை ஒன்றிய மோடி அரசு நிலைநாட்டி கொண்டு விட்டது.

அதில் ஜம்மு காஷ்மீரில் வழக்கம்போல் பிரிவினைவாத, எல்லை தாண்டிய பயங்கரவாத பீதியூட்டல், பொது மக்கள் மீதான துப்பாக்கிச்சூடு, தாக்குதல் என எப்போதும் போல் பதற்றத்திலும், ராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்பின் கீழுமே இருந்து வருகிறது.

பண்பாடு மற்றும் கலாச்சார ரீதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களின் இயல்பும், ஜம்முவின் பழக்கவழக்கங்களும், லடாக்கியர்களின் வாழ்க்கை முறைகளும் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவை. அதில் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களான லடாக் மக்கள் மீடியாக்களில் பெரும்பாலும் அடிபடாமல் ஒதுங்கியே இருந்து வந்துள்ளனர்.

ஒதுங்கி இருந்த லடாக்!

லடாக்கிய கலாச்சாரம் திபெத்திய கலாச்சாரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. லடாக்கி மொழியாகட்டும், கடோக் சென்மோ மற்றும் சாம் போன்ற நடனங்களாகட்டும், நான் ஹெமிஸ் சச்சு மற்றும் லோசர் பண்டிகைகளாகட்டும், துப்கா போன்ற உணவுகளாகட்டும் இவை அனைத்தும் திபெத்துடன் நெருக்கமானவை.

அத்தகைய லடாக் மக்கள், குறிப்பாக புத்த மத பிடிப்புள்ளவர்கள், தமக்கே உரிய அகிம்சை வழியில் ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் விதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இது ஊடகங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், பாங்காங் சோ ஏரி பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவல் மற்றும் கைலகலப்பு எனும் போது மட்டுமே லடாக் பேசு பொருளாக, முக்கிய செய்தியாக ஊடகங்களில் சுற்றி வந்துள்ளது.

ஒப்பீட்டளவில் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பின்தங்கிய நிலையில் உள்ள லடாக்கியர்கள் தமக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தரப்பட்டது போல் சிறப்பு உரிமைகள் தேவை என்று கோரிக்கை வைக்கின்றனர். காஷ்மீரில் நடப்பது போல கார்ப்பரேட்டுகளால் தமது நிலம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர் என்பதை மக்கள் அதிகாரம் ஏற்கனவே எழுதியுள்ளது.

மேலும் படிக்க:

பாஜக அலுவலகம் பற்றி எரிகிறது! லடாக்கில் நடப்பது என்ன?

அமைதியை விரும்பியவர்கள் போராட்டம்!

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக தேர்தலில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பினர்(Leh Apex Body LAB) கடந்த 10-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சோனம் வாங்சுக் உள்ளிட்ட இருவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்கள் இருவரும் செப். 23 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

LAB அமைப்பினர்  கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். லே நகரில் உள்ள பாஜக அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக அலுவலகத்தின் மீதும், போலீஸார் மீதும் கற்களை வீசிய போராட்டக்காரர்கள், அங்கிருந்த காவல் துறை வாகனத்துக்கும் தீ வைத்தனர் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. தொடர் போராட்டத்தை கலைக்க யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் உத்தரவின் கீழ் காவல்துறை ஆத்திரமூட்டலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. அரசின் அலட்சியம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களால் அமைதி வழி, அறவழி, உண்ணாவிரத போராட்டம் வேறு வடிவத்தை எடுத்திருப்பதாக தெரிகிறது.
 
அரசே தூண்டிய கலவரமா?

ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு காரணமான ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ள  பாஜகவின் அலுவலகத்திற்கு தீயும் வைத்தனர் என்றும் கருதப்படுகிறது. எது உண்மை என்பது நாளை தெரியவரும். அதாவது, சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிக்கொள்ளும் தமிழ்நாட்டு சங்கிகளின் பாணியில், தங்கள் அலுவலகத்திற்கு சங்கிகளே தீவைத்து விட்டு நாடகமாடுகின்றனரா என்பது  வெளிச்சத்துக்கு வரும்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னரே டயர்களை கொளுத்தியும் சிசிடிவி கேமராக்களை நொறுக்கியும் வெறியாட்டம் போட்டனர் போலீசும் அவர்களின் அடியாட்களும்.  அதே பாணியில்  லேவில் போலீசு அனைத்து காட்சிகளையும் திட்டமிட்டு அரங்கேற்று விட்டு, போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளி, நான்கு பேரை கொலை செய்துள்ளது என்று கருதவும் வாய்ப்பு உள்ளது.
பதற்றம் நீடிப்பதால் லேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லே உச்ச அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவாக, கார்கில் ஜனநாயக கூட்டணி  செப். 25 இல் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டம் வாபஸ்!

இந்​நிலை​யில் கலவரம் காரண​மாக சூழலியல் செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் தனது போராட்​டத்தை வாபஸ் பெற்​றார். “இது இளைஞர்​களின் கோபம், புரட்​சி. வன்​முறையை லடாக் இளைஞர்​கள் உடனடி​யாக நிறுத்த வேண்​டும். ஏனெனில் இது நமது நோக்​கத்​திற்கு தீங்கு விளைவிக்​கும், நிலை​மையை மேலும் மோச​மாக்​கும். லடாக்​கிலும் நாட்​டிலும் ஸ்திரமின்​மையை நாங்​கள் விரும்​ப​வில்​லை” என்று அவர் கூறி​னார்.
இந்​நிலை​யில் லடாக் போராட்​டத்​தில் காங்​கிரஸ் கவுன்​சிலர் பன்ட்​சாக் ஸ்டான்​சின் செபாக் வன்​முறையை தூண்​டிய​தாக பாஜக குற்​றம் சாட்டி​யுள்​ளது. ஆனால் இதனை சோனம் வாங்​சுக் மறுத்​துள்​ளார்.

கோரிக்கையை நிறைவேற்றாமலேயே துப்பாக்கிச்சூட்டின் மூலம் போராட்டத்தை வாபஸ் பெற வைத்திருக்கும் வழிமுறை அபாயகரமானது. இதை பாசிச பாஜக தான் ஆளும் பிற மாநிலங்களுக்கும் விரிவாக்கும். இதற்கு ஒன்றிய அரசின் பேச்சுக்களே சான்றாகின்றன.

இந்தியாவிலிருந்து நாங்கள் பிரிவினையை கேட்கவில்லை; எங்களுக்கு தனி மாநில தகுதியும், வடகிழக்கைப்போல் சிறப்பு உரிமைகளும் தான் கேட்கிறோம் என்கின்றனர். இதை மோடிஅரசு தவறாக கையாளும் பட்சத்தில், அதன் தீவிர தன்மைக்கு ஏற்ப லடாக்கியர்களின் கோறிக்கையும் மாறக்கூடும். அதற்கு ஒன்றிய மோடி அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.

பழிபோடும் பாஜக அரசு!

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணம் சூழலியல் ஆர்வலரான சோனம் வாங்சுக் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. அதாவது லடாக்கில் நடந்த வன்முறைப் போராட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தூண்டுதலே காரணம் என கொலைப்பழியை சுமத்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

சோனம் வாங்சுக்கின் தூண்டுதல் பேச்சுகள், குறிப்பாக அரபு வசந்தம் மற்றும் நேபாளத்தின் ‘ஜென் Z’ போராட்டங்கள் குறித்த அவரது கருத்துகள், ஒரு கும்பலை வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகவும், இதனால் தீவைப்பு, பெரிய அளவிலான மோதல்கள் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசைப்பொருத்த வரையில் மொத்த நாட்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதில் வெறிகொண்டு நிற்கிறது. லடாக்கியர்களின் மீது எவ்வித வாஞ்சையும் சங்கிகளுக்கு இல்லை. அங்கு இந்து அல்லது பவுத்த – முஸ்லீம்  பிரச்சினையும் இல்லை. இந்திய துருப்புகள் தளம் அமைத்து தங்கவும், காரகோரம் எல்லைகளுக்கு செல்லவும் மட்டுமே லடாக் பயன்படுகிறது. லடாக்கில் புதிதாக போடப்படும் சாலைகளும் இரணுவ நோக்கத்துக்கானவையே.

இந்தியாவின் வடகோடியில் உள்ள லடாக்கில் மீடியாக்களின் வெளிச்சம் மிகவும் குறைவாகவே படும் சூழலில், இணையதள தடை, எதிர்க்கட்சிகளை முடக்குவது என காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்கனவே அரசு பயங்கரவாதம் கோலோச்சி வரும் சூழலில், நமக்கு உண்மை விவரங்கள் வெளிவருவதற்கான, விரைவாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

தீர்வு என்ன?

குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை, அதாவது தமது கருத்தை வலியுறுத்தி போராடுவதற்கான உரிமைகளை மதித்து நடப்பதாக ஒன்றிய பாஜக அரசு இல்லை. தனது பாசிச எதிர் நடவடிக்கைகளின் மூலம் போராட்டங்களை நசுக்கி, முன்னணியாளர்களை படுகொலை செய்து, எஞ்சியவர்களை சிறைகளில் அடைத்து மயான அமைதியை நிலைநாட்டுவதையே வழக்கமாக செய்து வருகிறது.  அதுதான் லடாக்கிலும் தற்போது எதிரொலிக்கிறது.

தமக்கான சிறப்பு உரிமைகளை கேட்பதற்கான அறவழிப் போராட்டம் இனி அதிகார வர்க்கத்தின் ஒன்றிய பாசிச பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாக வேறு வடிவம் கொள்கிறது. ஒன்றிய பாசிச பாஜகவினால் அடக்கப்படும் அனைத்து மொழி, இன மக்களும் ஓரினியில் திரண்டு பாசிசத்துக் எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டியமைக்க வேண்டி உள்ளது. அவ்வாறில்லாமல் மாநில அளவிலான, பிரதேச அளவிலான, தனித்த தீர்வுகள் சாத்தியம் இல்லை என்பதையே  நிலைமைகள் மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகின்றன.

கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஒரு வலிமையான ஐக்கிய முன்னணியும், மக்கள் முன்னணியும் தேவை. மாநில அளவிலாக நிற்காமல், நாடுதழுவிய அளவில் ஒன்றுபட வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து இறுதியாக்கி ஒன்றுபட்டு களமாடுவதன் தேவையைப்பற்றி  எதிர்க்கட்சிகளும், ஜனநாயகவாதிகளும், நாட்டுப்பற்றுடன் போராடும் மக்களும் சிந்தித்தாக வேண்டும்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here